‘சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு' என்பது தேர்தலுக்காக நடத்தப்படுகின்ற மாநாடோ, பிரச்சாரமோ அல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

‘சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு' என்பது தேர்தலுக்காக நடத்தப்படுகின்ற மாநாடோ, பிரச்சாரமோ அல்ல!

மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய மாநாடு!

‘சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு' என்பது தேர்தலுக்காக நடத்தப்படுகின்ற மாநாடோ, பிரச்சாரமோ அல்ல!

மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய மாநாடு!

திருவாரூர் செப்.29  சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு என்பது தேர்தலுக்காக நடத்தப் படுகின்ற மாநாடோ, பிரச்சாரமோ அல்ல; இன்றைக்கு நம்முடைய நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? அவ்வாறு செல்லுவது தவறா? சரியா? அதைத் தடுத்து நிறுத்தவேண்டுமா? வேண்டாமா? என்ற ஒரு முக்கிய மான பிரச்சினைக்காக நடத்தப்படுகின்ற மாநாடு; மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய மாநாடாகும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள்.

திருவாரூர்: சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு

கடந்த 4.9.2022 அன்று மாலை திருவாரூரில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

திராவிடர் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டிற்குத் தலைமையேற்று, நிறைவாக உரையாற்றவிருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர் பெருமதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர் அவர்களே,

இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றவிருக் கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் 

அமைப்புச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் ஆர்.எஸ்.பாரதி அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் பேரன்பிற்குரிய தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

வருகை தரவிருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமா அவர்களே,

மிகச் சிறப்பாக உரையாற்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு மய்யச் செய லாளர் அன்புச் சகோதரர் செந்திலதிபன் அவர்களே,

இம்மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்திய திராவிடர் கழகத்தின் திருவாரூர் மாவட்ட  தலைவர் அன்பிற்குரிய வீ.மோகன் அவர்களே,

நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக் கின்ற திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை 

இரா.ஜெயக்குமார் அவர்களே,

இந்த மாநாடு மிக வெற்றிகரமாக நடப்பதற்கு மிகக் காரணமாக விளங்கக்கூடிய திருவாரூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிகு செயலாளருமான அன்புத்தம்பி பூண்டி கலைவாணன் அவர்களே,

நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பிற்குரிய சகோதரர் என்.கவுதமன் அவர்களே,

தமிழ்நாடு அரசு தாட்கோ தலைவரும், மேனாள் அமைச்சருமான வழக்குரைஞர் பேரன்பிற்குரிய தோழர் மதிவாணன் அவர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மாநாட்டில் பங்கேற்க இயலாத நிலையை ஆசிரியர் அவர்களிடத்தில் சொல்லியிருக்கின்றேன்; அவருக்குப் பதிலாக இங்கே உரையாற்றிய சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் மாரிமுத்து அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழக திருவாரூர் நகர செய லாளர் வாரை எஸ்.பிரகாஷ் அவர்களே,

திராவிடர் கழக நாகை மாவட்டத் தலைவர் மானமிகு வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் அவர்களே, செயலாளர் பூபேஷ்குப்தா அவர்களே,

மற்றும் மாவட்ட அமைப்புகளின் சார்பில் பங்கேற்று இருக்கின்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சகோதரர் எஸ்.எம்.கே.துரைவேலன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ்  அவர்களே,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செய லாளர் அவர்களே,

மாநாட்டில் பங்கேற்று இருக்கின்ற பெரியோர்களே, நண்பர்களே, தோழர்களே, தோழமைக் கட்சித் தோழர் களே, பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின் றேன்.

இந்த மாநாடு ஏற்கெனவே திட்டமிட்ட தேதியில் நடந்திருந்தால்கூட இவ்வளவு வெற்றிகரமாக நடந்தி ருக்குமா? என்று தெரியவில்லை. 

மழை பெய்தாலும் பெய்யட்டும்; 

கொட்டகை போட்டு ஏற்பாடு செய்கிறேன் என்றார் பூண்டி கலைவாணன்

இந்த மாநாட்டை ஒத்தி வைக்கின்றபொழுது, ஆசிரியர் உள்பட நாங்கள் அனைவரும் கலந்து பேசியபொழுது, செப்டம்பர் மாதம் முழுவதும் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வாளர் சொல்லுகிறார். எந்த நாளிலும் மழை பெய்யாது என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று மிகத் துல்லியமாகச் சொன் னார். அதுபற்றி பேசிக்கொண்டிருந்தபொழுது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்,  ஆற்றல்மிகு மாவட்டச் செயலாளர் தம்பி கலைவாணன் அவர்கள்,

‘‘மழை பெய்தாலும் பெய்யட்டும்; நான் கொட்டகை போட்டு ஏற்பாடு செய்கிறேன்; மாநாட்டை நடத்திவிட லாம்; இல்லையென்றால், அக்டோபர், நவம்பர் என்று தள்ளிக்கொண்டே போகும்'' என்று மிகத் துணிச்சலாக சொன்னார்.

அதனால், 4 ஆம் தேதி மாநாட்டை நடத்தலாம் என்று முடிவு செய்தோம். இன்றைக்கும் மழை பெய்யாமல் இல்லை; சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது; இங்கேயும் மழை லேசாகத் தூறிக்கொண்டுதான் இருக்கிறது.

ஆகவே, இந்த மாநாட்டை காலத்தே மிக வெற்றி கரமாக நடத்தவேண்டும் என்று மிகுந்த பொறுப்பெடுத்து, சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அரு மைத் தம்பி கலைவாணன் அவர்களுக்கு நமது அனை வரின் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

காலமறிந்து நடத்தப்படக்கூடிய மாநாடு

ஏனென்றால், இந்த மாநாடு காலமறிந்து நடத்தப்படக் கூடிய மாநாடாகும். இது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அல்ல. தேர்தல் வரும், போகும் அது வேறு விஷயம்.

தேர்தலுக்காக நடத்தப்படுகின்ற மாநாடோ, பிரச் சாரமோ அல்ல; இன்றைக்கு நம்முடைய நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? அவ்வாறு செல்லுவது தவறா? சரியா? அதைத் தடுத்து நிறுத்தவேண்டுமா? வேண்டாமா? என்ற ஒரு முக்கியமான பிரச்சினைக்காக நடத்தப்படுகின்ற மாநாடாகும்.

கவுதமன் உரையாற்றும்பொழுது நாகப்பட்டினத் திலும் மாநாடு நடத்தப்படவேண்டும் எல்லோரும் வாருங்கள் என்று சொன்னார்.

நாட்டு மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்!

நாகப்பட்டினத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் சிற்றூர்கள் உள்பட இதுபோன்ற மாநாடுகள் தொடர்ச்சி யாக நடத்தப்படவேண்டும்.  நாட்டு மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்.

தமிழ்நாட்டு அரசியல் எவ்வளவு அநாகரிகமாக சென்று கொண்டிருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய செந்திலதிபன் பேசுகின்றபொழுது அதைப்பற்றிக் குறிப்பிட்டார்.

செருப்பு வீசுகிற அரசியலாக இன்றைக்கு அது மாறியிருக்கிறது. செருப்பு வீசுவது மட்டுமல்ல, அதை நியாயப்படுத்திப் பேசக்கூடிய ஒரு தலைவரை, தமிழ் நாட்டில் உள்ள ஒரு கட்சி பெற்றிருக்கிறது.

எப்பொழுதுமே இதுபோன்ற ஓர் அசம்பாவித சம்பவம் நடைபெற்றால், அக்கட்சியின் தலைவர், அந்த சம்பவத்தைக் கண்டிப்பார்; அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கட்சியை விட்டு நீக்குவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் அரசியல் பண்பாடு

சென்னையில் திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சி ஒன்று  நடைபெறுகிறது.  அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் யாரோ சிலர் ஒரு கடைக்குச் சென்று தகராறு செய்து விடுகிறார்கள். அது செய்தியாக வெளிவருகிறது.

அந்தச் செய்தியைப் பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், அந்தக் கடைக்கே  நேரிடையாகச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, தகராறு செய்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்.

இதுதான் ஒரு அரசியல் கட்சித் தலைவரின் பண்பாடு.

கலகத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் பெறவேண்டும் என்று நினைக்கிறார்கள்

ஒரு அரசியல் தலைவர் என்றால், இப்படித்தான் இருக்கவேண்டும். அதற்கு நேர்மாறான ஓர் அரசியல், சமீபகாலமாக, மிக வேகமாக, மிகத் தீவிரமாக வன் முறையை எப்படியும் தூண்டவேண்டும்; கலகத்தை உருவாக்கவேண்டும். கலகத்தின்மூலமாக அரசியல் ஆதாயம் பெறவேண்டும் என்கிற ஓர் அற்பப் புத்தியோடு ஒரு கூட்டம் தொடர்ந்து முயற்சி செய்கிறது.

சுதந்திர தின விழாவில், 8 கோடி தேசிய கொடிகள் வீடுகளில், அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்டதாக ஏடுகளில் செய்திகள் வெளிவந்தன.

வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கதுதான். 8 கோடி யல்ல; 16  ஆயிரம் கோடி கொடிகள் ஏற்றவேண்டும். ஆனால், அதே தேசியக் கொடி பறக்கின்ற கார்கள் மீதுதான் செருப்பும் வீசப்படுகிறது.

பிரதமருடைய படம் தமிழ்நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் ஒட்டப்படுகிறது. சுதந்திர தினத்திற்கு ஒரு மரியாதை செய்யப்படுவதாக அந்தப் படம் ஒட்டப்படு கிறது. அதற்கு நேர் மாறான முறையில் செருப்பு வீச்சு சம்பவமும், அதை நியாயப்படுத்துவதும் நடைபெறுகிறது.

இதற்காக இந்த மாநாடு நடைபெறவில்லை. இங்கே செந்திலதிபன் அவர்கள், ஒரு மாநாடு குறித்து குறிப்பிட்டார். சாமியார்கள் கூடி ஒரு மாநாட்டை நடத்தி, அதில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று, அவருக்கே உரிய முறையில், மிகச் சிறப்பான முறையில், அழகான முறையில் குறிப்பிட்டார்.

சுதந்திர தினத்தன்று 8 கோடி கொடிகள் ஏற்றப்பட்டன. செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றினார். இங்கே கோட்டைக் கொத்தளத்தில் நம்முடைய மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் என்றெல்லாம் செய்தி.

செங்கோட்டையிலும், கோட்டைக் கொத்தளத்திலும் காவிக் கொடி பறக்கவிடப்படுமாம்!

அந்த மாநாட்டில் சாமியார்கள் கூடி என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால், இந்த மூவர்ணக் கொடியை மாற்றி விட்டு, எதிர்காலத்தில் காவிக் கொடி பறக்கும். எங்கே? செங்கோட்டையிலும், கோட்டைக் கொத்தளத்திலும் காவிக் கொடி பறக்க விடப்படும் என்றுதான் அந்த மாநாட்டில் முடிவு செய்து, முதல் அறிக்கையையும் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அடுத்த மாதம் அது வெளிவரும்.

நாடு விடுதலை பெற்ற பிறகு, ஏற்கெனவே டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படவேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

நாடாளுமன்றத்தில் போராடுகின்றோம், சட்டமன்றத் தில் போராடுகிறோம்; வெளியில் போராடுகிறோம்; இதுபோன்ற மாநாடுகளை நடத்திப் போராடிக் கொண் டிருக்கின்றோம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பு

ஏனென்றால், நம்முடைய அரசமைப்புச் சட்டம், ஒரு சமத்துவத்தை வழங்குகிறது. 

நம்முடைய அரசமைப்புச் சட்டம் எல்லா மொழி களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

நம்முடைய அரசமைப்புச் சட்டம், ஒருவருடைய வாழ்க்கை - இந்தியக் குடிமகனுடைய வாழ்க்கை என்பது பிறர் போற்றத்தக்க வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது.

நம்முடைய அரசமைப்புச் சட்டம், சுயமாகச் சிந்திப் பதற்கு, சுயமாக சிந்தித்த கருத்தை வெளியிடுவதற்கு, பேசுவதற்கு, எழுதுவதற்கு, இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதற்கு நமக்கு உரிமைகளை வழங்கியிருக்கிறது.

ஆகவே, இந்த அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப் படவேண்டும் என்று நாம் சொல்கிறோம்.

இந்த அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக, வேறொரு அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படுகிறது. அந்த அரசமைப்புச் சட்டம்தான், மனுதர்மம் என்ற அர சமைப்புச் சட்டம்.

அந்த மனுதர்மத்தை, அரசமைப்புச் சட்டமாக்கப் போகிறோம் என்று சாமியார்களின் மாநாட்டில் அதுதான் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

நாம் இப்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கின்ற, பின் பற்றுகின்ற, போற்றுகிற, பாராட்டுகிற, இது காப்பாற்றப் படவேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்ற அரசமைப்புச் சட்டம் - தேசத்தில் வாழுகின்ற 130 கோடி யானாலும் அல்லது 140 கோடியானாலும் அனைவருக்கும் சமமான வாழ்க்கை - சமத்துவ வாழ்க்கை என்று சொல்கிறது.

நான்கு வருணக் கொள்கை நிலைநாட்டப்படவேண்டும் என்பதுதான் மனுதர்மம்!

ஆனால், மனுதர்மம் என்ன சொல்கிறது என்று சொன்னால்,

நான்கு வருணங்களாகப் பிரித்து, இங்கே கவுதமன் அவர்கள் குறிப்பிட்டார் - யார் யார் எங்கெங்கே பிறந்தார்கள் என்று. நான்கு வருணங்களாகப் பிரிக்கிறது. நான்கு வருணக் கொள்கை நிலைநாட்டப்படவேண்டும் என்பதுதான் மனுதர்மம்.

நான்கு வருணக் கொள்கை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அதனுடைய பொருள் என்ன?

ஏராளமான மாற்றங்களைப் பெற்றிருக்கின்றோம்; குறிப்பிட்ட காலம் வரை, கல்வி என்பது எல்லோருக்கும் அல்ல. குறிப்பிட்ட சாராருக்கு மட்டும்தான் கல்வி என்ற நிலை இருந்தது. நெற்றியில் இருந்து பிறந்தவனுக்கு மட்டும்தான் கல்வி என்று இருந்தது.

அந்த நிலை மாற்றப்பட்டு, இன்றைக்கு எல்லோ ருக்கும் கல்வி - அனைவருக்கும் கல்வி - நாட்டில் பிறந்த அத்துணை பேருக்கும் கல்வி.

எந்த மதம்?

எந்த ஜாதி?

எந்த இனம்?

என்கிற வேறுபாடு இல்லாமல், எல்லோருக்குமான கல்வி என்று நாம் சொல்கிறோம்.

ஆனால், மனுதர்மம் என்ன சொல்கிறது?

எல்லோருக்கும் கல்வி அல்ல - குறிப்பிட்ட சாராருக்கு மட்டும்தான் கல்வி.

குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமல்ல, அந்த சாராரில் இருக்கின்ற பெண்களுக்கும் கல்வி கிடையாது. வெறும் சூத்திரர்களுக்கோ, சூத்திரப் பெண்களுக்கோ மட்டு மல்ல - பிராமணப் பெண்ணாக இருந்தாலும் கல்வி கற்கக்கூடாது.

இங்கே தாய்மார்கள் எல்லாம் திரண்டிருக்கிறார்கள். மனுதர்மத்தை மேடையில் சொல்வதற்குக் கூச்சமாக இருக்கிறது; வெட்கமாக இருக்கிறது.

மனுதர்மம் பெண்களைப்பற்றி என்ன சொல்கிறது?

பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று சொல்கிறது?

குடும்பப் பெண்ணாக இருக்கவேண்டும்; குடும்பப் பணிகளைக் கவனிக்கவேண்டும்; குழந்தைகளைப் பராமரிக்கவேண்டும்; நன்றாக சமைக்கவேண்டும்; கூட்டுவது, பெருக்குவது, கோலம் போடுகின்ற வேலை களையெல்லாம் செய்யவேண்டும். இவற்றை மட்டும் செய்தால் போதாது - வேறொன்றையும் மனுதர்மம் சொல்லுகிறது -  தனது  கணவனுக்கு எப்பொழுதும் கவர்ச்சிக் கன்னியாக பெண்கள் விளங்கவேண்டும். அப்படியில்லை என்றால், கணவன் தவறு செய்வான்; வேறொரு பெண்ணை நாடுவான் - சொல்லுவது மனுதர்மம். நான் அல்ல!

தயவு செய்து மனுதர்மத்தை வாங்கி எல்லோரும் படியுங்கள். நம்முடைய ஆசிரியர் சொல்வார், சொல்வது மட்டுமல்ல எழுதியும் இருக்கிறார்.

மனுதர்மத்தை அச்சிட்டு யார் வெளியிடவேண்டும்? லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் யார் வெளியிட வேண்டும்? ஆர்.எஸ்.எஸ். வெளியிடவேண்டும்; பாரதீய ஜனதா கட்சி வெளியிடவேண்டும். ஆனால், ஆர்.எஸ்.எசோ, பாரதீய ஜனதாவோ வெளியிடுவ தில்லை; அதற்கு மாறாக திராவிட இயக்கங்கள் வெளி யிடுகின்றன; கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வெளியிடு கின்றன.

தனது சொந்தக் கொள்கையை பகிரங்கமாகச் சொல்லாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான்!

உலகில் உள்ள அரசியல் அமைப்புகளில், தனது சொந்தக் கொள்கையை பகிரங்கமாகச் சொல்லாத ஒரு கேடு கெட்ட இயக்கம் இருக்கிறது என்று சொன்னால், அது ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் - பா.ஜ.க.தான்.

திராவிடர் கழகம் தன்னுடைய கொள்கையைப் பகிரங்கமாகச் சொல்கிறது; கம்யூனிஸ்ட் பேரியக்கம் தன்னுடைய கொள்கையை பகிரங்கமாகச் சொல்கிறது. மேடையில் உள்ள அத்துணை அரசியல் கட்சிகளும் எங்களுடைய கொள்கை இதுதான், எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று பகிரங்கமாகச் சொல்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இதுபோன்று பகிரங்கமாகச் சொல்வார்களா?

பா.ஜ.க. பகிரங்கமாகச் சொல்லுமா?

ஏன் பகிரங்கமாகச் சொல்வதற்கு அச்சப்படுகிறார்கள்?

(தொடரும்)


No comments:

Post a Comment