மூடநம்பிக்கையின் முடைநாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்

இறந்தவர் பிழைப்பார் என்று கங்கை நீரை இறந்தவர்மீது இரண்டாண்டு தெளித்த மூடத்தனம்!

கான்பூர், செப்.24  இறந்தவர்மீது கங்கை நீரைத் தெளித்தால் உயிர் பிழைப்பார் என்று  இரண்டு ஆண்டுகள் கங்கை நீரைத் தெளித்த மூடத்தனம் வடமாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விம்லேஷ் குமார், வருமானவரித் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர், கரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு நவம்பரில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 

 இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அவரது உடலை கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல், வீட் டார்கள் எடுத்துச்செல்ல மருத்துவ மனை நிர்வாகம் கூறிவிட்டது. 

ஆனால், உள்ளூர் சாமியார் ஒருவர், ‘‘இவர் உடலில் இருந்து ‘ஆத்மா' பிரியவில்லை. கங்கை நீரை தெளித்துவந்தால் ஆத்மா  மீண்டும் அவரை உயி ரூட்டும்'' என்று கூறினார். 

இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர். அருகில் உள்ள வர்கள் கேட்டபோது ‘‘அவர் கோமாவில் உள்ளார். ஆகவே, அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது'' என்று கூறியுள்ளனர். 

 இதனை அடுத்து வீட்டின் ஓர் அறையில் இறந்த விம்லேஷ் குமாரின் உடலை வைத்து, நாள்தோறும் பால் மற்றும் கோவில் பிரசாதம் போன்றவற்றை பிணத்தின் வாயில் திணித்துள்ளனர். 

பின்னர் உடலில் கங்கை நீரை தொடர்ந்து தெளித்து வந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆனதால் உடல் அழுகி வறண்டு காய்ந்து விட்டது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து பூஜைகள் செய்து வந்தனர்.  

உடல் நலம் சரியில்லை என்றால் அதற்கு விடுப்பு விண்ணப்பம் எதுவுமே கொடுக்காமல் இருந்தது தொடர்பாக விம்லேஷ்குமாரின் அலுவலகத்தில் இருந்து,  பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. இதனால் மேலதிகாரிகள் இவரிடம் நேரில் சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டனர். 

 இந்த நிலையில் அதிகாரிகள் குழு இவரது வீட்டிற்குச் சென்று பார்த்த போது, ‘‘அவருக்கு கோமா சிகிச்சை அளிக்கிறோம் என்று சொல்கிறீர்களே, ஆனால், மருத்துவமனை அறிக்கையின்படி அவர் 2020 நவம்பரில் இறந்துவிட்டார் என்று உள்ளதே'' என்று கூறினர். 

மேலும் அதிகாரிகளை வீட்டிற்குள் விடாமல் பிரச்சினை செய்யவே, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து காவல் துறையினர் வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது, கருவாடு போல் விம்லேஷ் உடல் கிடத்தப்பட்டு- அவரது உடலைச்சுற்றி மாலை, கோவில் பிரசாதம் உள்ளிட்ட பல பொருட்கள் இருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

 இதனை அடுத்து அவரது உடலைக் கைப்பற்றி மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் மனநல சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகள் பரிந்துரை செய் தனர்.   கான்பூர் மாநகராட்சி அதிகாரிகள் வீட்டைச் சுற்றி கிருமிநாசினி தெளித்து, அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment