அண்ணாவின் மூன்று முத்தான சாதனைகள்: அண்ணா வெறும் படமல்ல - வழிகாட்டும் பாடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

அண்ணாவின் மூன்று முத்தான சாதனைகள்: அண்ணா வெறும் படமல்ல - வழிகாட்டும் பாடம்!

பெரியாரின் திராவிட மண்ணில் காவிகள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்!

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, செப்.15 பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்து வழிகாட்டிய மண்ணில் காவிகள் படையெடுக் கலாம், வாலாட் டலாம் என்று நினைத்தால், அந்த வால் ஒட்ட நறுக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

அண்ணாவின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2022) அண்ணா சாலையில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

அண்ணாவின் முப்பெரும் சாதனைகளுடைய விளக்கம் - விரிவாக்கம் இப்பொழுது அதிகமாகத் தேவைப் படுகிறது

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுடைய 114ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவான இன்று - முன்பு எப் பொழுதும் தேவைபட்டதைவிட, அண்ணா அவர்களின் முப்பெரும் சாதனைகளுடைய விளக்கம், விரிவாக்கம் இப்பொழுது அதிகமாகத் தேவைப்படுகின்ற காலகட்டம்.

அண்ணா அவர்கள் ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு அடித்தளம் வகுத்தார்கள். நீதிக்கட்சி ஆட்சியினுடைய தொடர்ச்சி தன்னுடைய ஆட்சி என்று அடக்கத்தோடும், உரிமையோடும் எடுத்துச் சொல்லி, அதனைத் தொடர்ந்தார்கள்.

அண்ணா அவர்களுடைய ஆட்சியினுடைய முப் பெரும் சாதனைகள் அதனுடைய விளைவுகள் - அதனுடைய தாக்கங்கள் இன்றைக்கும் தேவைப் படுகின்றன.

உதாரணத்திற்கு, தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்கள்.

பெரியார் மண்ணை - காவி மண்ணாக ஆக்கிவிடவேண்டும் என்கிற தீவிர முயற்சிகள் நடைபெறுகின்றன

ஆனால், தமிழ்நாடு, பெரியார் மண்ணாக, திராவிட மண்ணாக இருப்பதை காவி மண்ணாக ஆக்கிவிட வேண்டும் என்பதற்குத் தீவிரமான முயற்சிகள் நடைபெறுகின்ற காலகட்டத்தில், அண்ணா அவர்கள் படமல்ல - பாடம் இன்றைய காலகட்டத்திற்குத் தேவை!

அதேபோலத்தான் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுத்து, ஓர் அருமையான பண்பாட்டுப் புரட்சியை அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள் சட்ட ரீதியாக. தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட விளக்கம் கண்டார்.

இன்று அவற்றிற்கெல்லாம் கேள்விக் குறிகளாக, சனாதன படையெடுப்பு நடைபெறுகின்றது.

அதுபோலவே, இருமொழிக் கொள்கை என்று, தமிழும் - ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டில். இங்கே வேறு மொழிக்கோ, மூன்றாவது மொழிக்கோ இட மில்லை. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். மொழி திணிப்புக்கு இங்கே இடமில்லை என்பதைத் தெளி வாக்கினார் அண்ணா அவர்கள்.

ஆனால், இன்று வருகின்ற செய்தி என்ன?  இந்திதான் இந்தியாவை இணைக்கும் என்று கூறுகிறார் ஒன்றிய அமைச்சராக இருக்கும் ஒருவர்.

இந்தி, இந்தியாவை இணைக்குமா? அல்லது பிளக்குமா? என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், அந்த சுவ ரெழுத்தைக் கூடப் படிக்கத் தவறுகிறார்கள்.

எனவேதான், அண்ணா இப்பொழுது தேவைப் படுவது வெறும் படமாக அல்ல - அண்ணா அவர் களுக்கு நாம் புகழ்மாலை சூட்டுவது மட்டும் போதாது - மலர்மாலைகளை அவருடைய சிலைக்கு அணிவிப்பது மட்டும் போதாது - அண்ணாவினுடைய கொள்கைகளை நாம் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

சட்டமன்றம், நாடாளுமன்றம், வீதி மன்றம் இவற்றையெல்லாம் தாண்டி, மக்கள் மன்றம் தீர்ப்பளிக்கக்கூடிய உணர்வை உருவாக்கத் தந்தை பெரியார் வழியில், அண்ணா வழிகாட்டினார் - கலைஞர் தொடர்ந்தார்; இன்றைய ‘திராவிட மாடல்' ஆட்சி ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது.

ஆகவே, இது தொடரவேண்டுமானால், அண் ணாவை நாம் போற்றவேண்டும் என்பது வார்த்தைகளால் அல்ல - செயல்களால்தான்.

செய்தியாளர்: பெரியார் சிலை பீடத்தில் உள்ள கடவுள் இல்லை வாசகம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் சொல்லியிருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அந்த வழக்கே இன்னும் அனுமதிக்கப்பட்டதா என்று சந்தேகத்தில் இருக்கிறது. 

அந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு, காலாவதியாகக் கூடிய சூழலில், அதற்கு அனுமதி கொடுக்கவேண்டுமா? இல்லையா? என்று கேட்டு இருக்கிறார்கள். வழக்கு வரட்டும், முழு விவரங் களை உங்களுக்குப் பிறகு சொல்கிறேன்.

 காவிகள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்

செய்தியாளர்: தமிழ்நாட்டில் பெரியார் சிலை மற்றும் பெரியார் சார்ந்த சில சர்ச்சைகள் எழுகின்றனவே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: காவி படையெடுப்பு இங்கே வருகிறது; காவி படையெடுத்தால், அதன்மூலம் காலிகள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்; மக்களாலும் தடுக்கப்படும். நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.


No comments:

Post a Comment