நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு ராகுல் காந்தி பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு ராகுல் காந்தி பெருமிதம்

திருவனந்தபுரம்,செப்.26- பாரத ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நடைப் பயணம் தொடங்கினார். இந்த நடைப் பயணம் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை எர்ணாகுளம் மாவட்டங்கள் வழியாக 300 கி.மீ தூரத்தை கடந்து 15-ஆவது நாளில் திருச்சூர் மாவட்டம் சாலைக்குடியில் நிறைவடைந்தது.  நேற்று (25.9.2022) 17-ஆவது நாள் நடைப் பயணம் திருச்சூர் தோப்பு மைதானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. 

இதில்  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்துகொண்டனர். அவர்களுடன் ராகுல் காந்தி உற்சாகமாக தனது பயணத்தைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் பட்யாட்ரா பகுதியில் முடிந்தது. பின்னர் மாலை 4.30 மணி அளிவில் மீண்டும் வடக்கஞ்சேரி பகுதியில் இருந்து நடைப் பயணம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அப்போது அவர்கள் எரிவாயு விலை உயர்வு குறித்த பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு சென்றனர். நடைப் பயணத்தில் பங்கேற்ற சிறுமிகள் மற்றும் பெண்களிடம் நலம் விசாரித்தப்படி ராகுல் காந்தி நடந்து சென்றார். அப்போது சிறுமி ஒருவர் மேனாள் பிரதமர் இந்திரா காந்தி வேடமணிந்து நடைப் பயணத்தில் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினார். அப்போது ராகுல்காந்தி, 'இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம் உள்ளது' என தெரிவித்தார். மாலை 7 மணி அளவில் செருத்துருத்தி பகுதியில் நடைப் பயணத்தை நிறைவு செய்தார். மேலும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் அங்கிருந்து நடைப் பயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்வார் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஒரே நாளில் 7 லட்சத்து 75 ஆயிரம் 

பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி 

சென்னை,செப்.26-தமிழ்நாடு முழுவதும் நேற்று (25.9.2022) ஒரே நாளில் 7 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப நல்வாழ்வு நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மய்யங்கள், சத்துணவு மய்யங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றது. இதில் 12 வயதிற்கு மேற்பட்ட 7,75,193 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணையாக 29,729 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 1,49,804 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 5,95,660 பயனாளிகளுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.59% பேருக்கு முதல் தவணையாகவும் 91.61% பேர்களுக்கு இரண்டாம் தவணையாகவும் கரோனா தடுப்பூசிகள் வழங்கப் பட்டுள்ள. இதுவரை நடைபெற்ற 37 மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 43 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். இன்று (26.09.2022) கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment