கருநாடகாவிலும் ஹிந்தி எதிர்ப்புப் போர்க் கொடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

கருநாடகாவிலும் ஹிந்தி எதிர்ப்புப் போர்க் கொடி!

"ஹிந்தி திவஸ்" நாளில் பிரதமர் மோடி விடுத்துள்ள அறிக்கையில்,

"ஹிந்தி இந்தியாவை உலக அரங்கில் மிகவும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அதன் எளிமை, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை, ஹிந்தி கற்பவர்களுக்கு அதன் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.  ஹிந்தியை மக்களிடையே கொண்டு செல்ல அரும்பாடுபட்ட அனைவருக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும் - ஹிந்தி என்னும் கடலில் நதிகளைப் போல் கலந்து அதனை உயிர்ப் பித்துவரும் பணிசெய்யும் அனைவரும் தங்கள் கடமையைச் செய்துள்ளனர்" என்று கூறியுள்ளார்

ஹிந்தி எதிர்ப்பில் எப்போதும் தமிழ்நாடுதான் முன் கை நீட்டி போர்க் குரல் கொடுத்து வந்திருக்கிறது. அது வெறும் மொழி மட்டுமல்ல; ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு என்பதுதான் முக்கியம்.

இந்த ஹிந்தி எதிர்ப்பில் இப்பொழுது கருநாடகமும் கலகக் கொடி தூக்கியுள்ளது.

கருநாடகாவில் ஹிந்தி நாள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில மேனாள் முதலமைச்சரும் மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி - விதான் சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு தனது கட்சி சட்டமன்ற உறுப் பினர்களோடு சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார்.

கருநாடகா முதலமைச்சரான பசவராஜ் பொம்மைக்கு அவர் எழுதிய கடிதத்தில், "செப்டம்பர் 14ஆம் தேதி ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி நாள் கொண்டாட திட்டங்களை தீட்டியுள்ளது. இதை ஏற்று கருநாடக மாநில அரசு செயல்படுத்தினால் அது கன்னடர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்."

"மாநில மக்களின் வரிப் பணத்தை வைத்து கருநாடகா அரசு ஹிந்தி தினம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. ஆயிரக்கணக்கான மொழிகள், 560 சமஸ்தானங்கள், பன்முகத்தன்மை கொண்ட சமூக கலச்சார பண்பாடுகள் ஆகியவை தான் இந்தியாவை சிறந்த ஒன்றியமாக வைத்துள்ளது. அப்படிப்பட்ட நாட்டில், ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடுவது அநீதியாகும். மக்களிடம் மொழியை திணிக்கக் கூடாது. இது கண்டனத்திற்கு உரியது. எனவே, கருநாடக பாஜக அரசு ஹிந்தி நாள் கொண்டாடுவதைக் கைவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மைசூருவிலும்  அரங்கம் ஒன்றில் மாநில அரசு சார்பாக ஹிந்தி நாள் கொண்டாட்டம் நடைபெற இருந்தது, இந்த நிகழ்வை ரத்து செய்யக்கோரி கன்னட அமைப்பினர் முற்றுகை இட்டனர். இதனை அடுத்து கலைநிகழ்ச்சியை நடந்த இருந்த கலைஞர்கள் கன்னடத்தில் பாடல்கள்பாடி அங்கிருந்து அகன்றுவிட்டனர். 

 அதிகாரிகள் யாருமே மேடை ஏறாததால் ஹிந்தி நாள் கொண்டாட்டம் மைசூரில் ரத்துசெய்யப்பட்டது.

ஒரு பக்கத்தில் மதவெறி, இன்னொரு பக்கத்தில் மொழி வெறி என்று இந்திய ஒன்றிய பிஜேபி அரசு வெகு மக்கள் எதிர்ப்பு என்ற சவக்குழியைத் தனக்குத்தானே தோண்டிக் கொண்டுள்ளது.

'சமஸ்கிருத வாரம்' கொண்டாடக் கூறி வாங்கிக் கட்டிக் கொண்ட நிகழ்வும் உண்டு.

மொழி உணர்வு, பண்பாட்டு உணர்வு என்பது எல்லாம் மின்சார ஓட்டம் உடைய கம்பி போன்றது. அதில் கை வைத்துப் பார்க்கலாம் என்று ஆசைப் பட்டால் அவற்றின் பலனை அனுபவிக்க வேண்டியது தான்.

No comments:

Post a Comment