கம்யூனிஸ்ட்டுக் கட்சி தடை செய்யப்பட்டபோது அவர்களை அரவணைத்து ஆதரவுக்கரம் நீட்டியது திராவிடர் கழகமும் - விடுதலையுமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

கம்யூனிஸ்ட்டுக் கட்சி தடை செய்யப்பட்டபோது அவர்களை அரவணைத்து ஆதரவுக்கரம் நீட்டியது திராவிடர் கழகமும் - விடுதலையுமே!

எழுத்தாளர் தோழர் ஓவியா கருத்துரை

சென்னை, செப்.4 கம்யூனிஸ்ட்டுக் கட்சி தடை செய்யப் பட்டபோது அவர்களை அரவணைத்து ஆதரவுக்கரம் நீட்டியது, திராவிடர் கழகமும் - விடுதலையுமே! என்றார் எழுத்தாளர் தோழர் ஓவியா அவர்கள்.

88 ஆண்டு விடுதலையின் 60 ஆண்டுகால ஆசிரியருக்குப் பாராட்டு விழா!

கடந்த 27.8.2022 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா அரங்கத்தில் நடை பெற்ற ‘‘பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்கள் பார்வை யில் 60 ஆண்டுகால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி; 88 ஆண்டு ‘விடுதலை'யின் 60 ஆண்டு ஆசிரியருக்குப் பாராட்டு விழா’’வில் எழுத்தாளர் தோழர் ஓவியா அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

உணர்ச்சிப்பூர்வமாகவும், ஒரு வரலாற்று நிகழ்வாகவும் நடந்தேறிக் கொண்டிருக்கக்கூடிய இந்த அருமையான அரங்கத்திற்குத் தலைமையேற்று பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்ற என்னுடைய அன்பு அண்ணன், ‘விடுதலை'  நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவருமான கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இங்கு நம் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்திச் சென்றிருக்கக் கூடிய ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்' இதழின் பொறுப்பாசிரியர் மரியாதைக்குரிய தோழர் அய்யா குமரேசன் அவர்களே,

இந்நிகழ்வை ஒருங்கிணைத்து சிறப்பித்துக் கொண் டிருக்கக்கூடிய அன்புத் தம்பி பிரின்சு அவர்களே,

எனக்குப் பின் இங்கு உரையாற்றவிருக்கின்ற மரியாதைக்குரிய ‘தீக்கதிர்' இதழின் ஆசிரியர் தோழர் மதுக்கூர்  இராமலிங்கம் அவர்களே,

‘கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சியின் தலை மைச் செய்தி ஆசிரியரும், பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம்கொண்ட எழுத்தாளர் அன்பு நண்பர் திருமா வேலன் அவர்களே,

தமிழகத்தினுடைய கழகக் குரலாய், தமிழர்களுக்கான நீதி கேட்கும் குரலாய், நெடுநாட்களாக தமிழ்நாட்டில் ஒலித்துக்கொண்டிருக்கக்கூடிய ‘நக்கீரன்' இதழ் ஆசிரியர் மரியாதைக்குரிய சகோதரர் கோபால் அவர்களே,

‘ஃப்ரண்ட் லைன்' இதழினுடைய மேனாள் ஆசிரியரும், இன்றைய தினம் மாற்று எழுத்துகளையும், சிந்தனைகளையும் கொண்டு வந்து கொண்டிருக்கக்கூடிய மூத்த பத்திரிகையாளர் மரியாதைக்குரிய விஜய்சங்கர் அவர்களே,

சிறுவயது முதல் என்மீது பரிவும், பாசமும் கொண்டிருக்கக்கூடிய தி.மு.க. மேனாள் அமைச்சரும், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அய்யா பொன்.முத்துராமலிங்கம் அவர்களே,

‘ஜனசக்தி' இதழின் ஆசிரியர் மரியாதைக்குரிய தோழர் சுப்பராயன் அவர்களே,

நன்றியுரை வழங்கவிருக்கக்கூடிய மூத்த செய்தியாளர் சிறீதர் அவர்களே,

இந்த விழாவின் நாயகராக, நம்முடைய தலைவராக, பாசத்திற்குரிய தந்தையாக நம் மத்தியில் வீற்றிருக்கக்கூடிய அய்யா ஆசிரியர் அவர்களே,

இங்கு கூடியிருக்கக்கூடிய அன்பிற்கினிய கழகத் தோழர்களே, பத்திரிகையாளர்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஆசிரியரை வாழ்த்துகின்ற 

வாய்ப்பைப் பெற்றது பெரும் பேறு!

உண்மையில், பிரின்சு சொன்னதுபோல அவர் வீட்டுப் பிள்ளையாக இருந்து, அவரை வாழ்த்துகின்ற ஒரு வாய்ப்பைப் பெற்றது என்பதை பெரும் பேறு என்றுதான் நான் சொல்லவேண்டும்.

அது எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமான ஒரு நிலையை எங்களுக்குத் தோற்றுவித்து இருக்கும் என்பதனையும் நீங்கள் எளிதாக உணர முடியும் என்று நான் நினைக் கின்றேன்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மிகப்பெரிய பெருமையை நான் அடைகின்றேன் என்பதனை முதலில் நான் பதிவு செய்கின்றேன்.

‘விடுதலை’ இல்லாமல் 

திராவிட இயக்கம் கிடையாது

‘விடுதலை’ என்பது எங்களுக்குத் தாய்.

‘விடுதலை’ இல்லாமல் திராவிட இயக்கம் கிடையாது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது காலை 10.30 மணியிலிருந்து 11 மணிவரை வீட்டிற்கு ‘விடுதலை’ வருகின்ற நேரம். ஏனென்றால், அப்பொழுதெல்லாம் அஞ்சல் வழியாகத்தான் ‘விடுதலை’ வரும்.

அந்த 10.30 மணியிலிருந்து 11 மணிவரை வீட்டி லிருக்கும் என் தாத்தாவிற்கு ஓர் எதிர்பார்ப்பு. எப்பொழுது தபால்காரர் ‘விடுதலை’யைக் கொண்டு வந்து கொடுக்கப் போகிறார் என்று வாசலிலே அமர்ந்திருப்பார் தாத்தா.

அப்படி திராவிட இயக்கத்தின், சுயமரியாதை இயக்கக் குடும்பத்தில், ‘விடுதலை’யின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்த அந்த நிகழ்வுதான் என்னுடைய நினை விற்கு வருகிறது.

‘விடுதலை’ இல்லாவிட்டால், நாங்கள் இல்லை

‘விடுதலை’ என்பது ஏதோ ஒரு பத்திரிகையல்ல; ஏதோ ஒரு காகிதம் அல்ல. அது எங்களுடைய உயிரை, உணர்வை வடிவமைத்த ஓர் ஆயுதம் என்று சொல்வதா? நான் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன், ‘விடுதலை’தான் எனக்குத் தாய் என்று. ‘விடுதலை’ இல்லாவிட்டால், நாங்கள் இல்லை.

அய்யா அவர்கள் இந்த இதழை ஆரம்பிக்கும்ª பாழுதும்  சரி, அதற்கு முன்பு வெளிவந்த ‘குடிஅரசாக' இருக்கட்டும். அவர் சொன்ன காரணங்கள், இன்றுவரை கூட பெரிதாக மாறிவிடவில்லை. நாங்கள் இந்த அரங் கத்திற்கு வருவதற்கு முன்பு கூட ஆசிரியர் அய்யா அவர் களுக்காகக் காத்திருந்த பொழுது, ஊடகவியலாளர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

அய்யா அவர்கள் என்ன காரணத்தைச் சொல்லி, ‘விடுதலை’ அல்லது ‘குடிஅரசை' தொடங்கினாரோ, அந்தக் காரணங்கள இன்றும் அப்படியே இருப்பதைப் பார்க்கிறோம்.

பிரச்சாரத்திற்குத்தான் 

உலகம் கட்டுப்பட்டதாக இருக்கின்றது

அவர் சொன்னார், ‘‘பார்ப்பனரல்லாதவர்களுக்கு என்ன இருக்கிறது? ஒரு பத்திரிகை இல்லை. ஏனென்றால், இந்த உலகம் பிரச்சாரத்திற்குக் கட்டுப்பட்டது. அவர்களே, அவர்களுடைய ஆதிக்கத்தை மந்திரத்திற்குள்ளே வைத்திருக்கிறார்கள். அதனுடைய பொருள் என்ன? இடைவிடாத பிரச்சாரம். உண்மையில் அவர்களுடைய ஆயுதம் பணம் அல்ல. அதை அவர்கள் பயன்படுத்து கிறார்கள். அரசியல் அதிகாரம் எல்லாம் இருக்கட்டும்; ஆனால், அதன்மூலமாக அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருப்பது என்னவென்றால், ஒரு பிரச்சாரம். அந்தப் பிரச்சாரத்திற்குத்தான் உலகம் கட்டுப்பட்டதாக இருக்கின்றது.

அப்பொழுது அய்யா அவர்கள், இந்தப் பிரச்சாரத்திற்கு எதிராக நம்மிடம் ஒரு குறுவாய் மாதிரியாவது ஒரு பத்திரிகை இருக்கவேண்டும். இந்தப் பத்திரிகை என்பது எங்கள் ஒவ்வொரு கையிலும் இருந்த ஆயுதம். எப் பொழுதும் நாங்கள் பாசமாக வைத்திருப்போம். இயக்கத்தி னுடைய ஒரு துண்டறிக்கை இருக்கும், ஏதோ ஒன்று இருக்கும்.

ஒரு 10 நிமிடம் யாரிடம் பேசினாலும், இதைப் படித்துப் பாருங்கள் என்று கொடுப்பதற்கு எங்களுக்கு ஓர் ஆயுதமாக இருந்ததுதான் எங்கள் இயக்க ஏடுகள் என்பதை இங்கு நான் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.

‘விடுதலை’ பத்திரிகையினுடைய சாதனைகளை சொல்லவேண்டும் என்று சொன்னால், நேரம் போதாது. குறுகிய கால நேரத்தில் நான் பேசவேண்டும் என்பதால், ஒரே ஒரு செய்தியை சொல்கிறேன்.

அகில இந்திய தலைமையால் 

நன்றி சொல்லப்பட்டது!

ஒரு கம்யூனிச இயக்கம் இந்த நாட்டிலே மிகப்பெரிய அபாயத்தை சந்தித்தபொழுது, அந்த இயக்கத்தை சாராத, அதற்கு வெளியில் இருக்கக்கூடிய ஓர் ஏடு, அவர்களுக் காகக் குரல் கொடுத்து, அவர்களுடைய அகில இந்திய தலைமையால் நன்றி சொல்லப்பட்டது என்று சொன்னால், அந்த வரலாறு ‘விடுதலை'க்கு மட்டும்தான் உண்டு.

இதை நான் ஓர் உதாரணமாகத்தான் சொல்கிறேன். ஏனென்றால், விரிவாகச் சொல்ல நேரம் கிடையாது.

ஆசிரியர் அய்யா அவர்களை, ‘விடுதலை’ பத்திரி கைக்குப் பொறுப்பேற்கச் சொன்ன அந்தத் தருணத்தைப் பற்றி இந்த மேடையில் நிறைய சொல்லப்பட்டு இருக்கிறது. இருந்தாலும், நானும் அதைச் சொல்லாமல் கடந்து போக முடியாது. ஏனென்றால், அது மிக முக்கியமான விஷய மாகும்.

பெரியார், அப்பொழுது ஆசிரியர் அவர்களிடம் ஆற்றிய அந்த உரையாடல் என்பதை எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட உரிமையை ஒரு தலைவர், ஒரு தொண்டனிடம் எடுத்துக்கொள்ள முடியும் என்று சொன்னால், அது மிக அற்புதமான விஷயமாகும்.

தலைவரும் தொண்டராகவே 

இருக்கின்ற ஓர் இயக்கம் திராவிடர் கழகம்!

இந்தக் கட்சியிலே தொண்டராக இருப்பது, இந்தக் கட்சியிலே தலைவராக இருப்பது - தலைவரும் தொண்ட ராகவே இருக்கின்ற ஓர் இயக்கம் இருக்கின்றது என்று சொன்னால், அதுதான் திராவிட இயக்கம் - அதுதான் திராவிடர் கழகம்.

இந்த வயதிலே நாடு முழுவதும் அவர் பயணம் செய்கின்றார். இன்றுகூட அவர் இந்த மேடையில் இருந்து இறங்கி, அவருடைய நண்பர்களைக் கவுரவிக்கச் சென்ற நிகழ்வைப் பார்த்து, அந்தப் பண்பாட்டைப் பார்த்து எங்களால் அதிராமல் இருக்க முடியவில்லை. அதுதான் இந்த இயக்கத்தினுடைய அடையாளம்.

10 வயதிலே ஒருவரை அடையாளம் காணக்கூடிய திறமை தலைவர் பெரியாருக்கு இருந்தது

பெரியார் அய்யா அவர்கள், இளையராக இருக்கக் கூடிய ஆசிரியரிடம் கேட்கிறார். வயதில் மிக இளைய வர். அவர்மீது அவ்வளவு பெரிய நம்பிக்கையை அவரால் வைக்க முடிந்தது. எனக்கு முன்பு உரை யாற்றிய கவிஞர் அய்யா அவர்கள்கூட சொன்னார்கள், 10 வயதிலே ஒருவரை அடையாளம் காணக்கூடிய திறமை தலைவர் பெரியாருக்கு இருந்தது என்று சுட்டிக்காட்டினார்.

‘விடுதலை’ பத்திரிகைக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களா? நீங்கள் ஆசிரியராக இருக்கிறீர்களா? என்று பெரியார் அய்யா கேட்கிறார்.

ஆசிரியர் அப்பொழுதுதான் வழக்குரைஞர் படிப்பை முடித்து, அந்தத் தொழிலுக்காக தன்னை ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றார். 

இன்றைக்கு வழக்குரைஞர் ஆவது என்பது வேறு விஷயம். இன்றைக்குத் தடுக்கி விழுந்தால், நிறைய பேர் சட்டம் படிக்கிறார்கள். ஆனால், அன்றையக் கால கட்டத்தில் வழக்குரைஞர் படிப்பு படிப்பது மிகச் சாதார ணமல்ல. அன்றைய காலகட்டத்தில் வழக்குரைஞராக இருந்தவர்கள், இன்று எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்துப் பார்த்தால், அன்றைய வழக்குரைஞர் தொழிலை விட்டுக் கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஆசிரியர் சொல்கிறார், நான் பாதி நாள் என் தொழிலைப் பார்த்துவிட்டு, மீதி நாள் இந்தப் பொறுப்பை பார்க்கிறேனே என்று.

அந்த சொல்லின் அர்த்தம் 

சாதாரணமானதல்ல!

ஆனால், பெரியார் அய்யா அவர்கள் சொல்கிறார், ‘‘ஏற்றுக் கொள்வதென்றால் முழுதாக ஏற்றுக்கொள் ளுங்கள்'' என்று.

அதற்கடுத்து பெரியார் சொன்ன வார்த்தைதான் மிக முக்கியமானதாகும். ஆசிரியர் அவர்களின்மேல் வைத்த நம்பிக்கையை பறைசாற்றுவது.

நீங்கள் ஏற்றுக்கொள்வதென்றால், இந்தப் பத்திரி கையை நடத்துகிறேன். இல்லையென்றால், நான் இதனை நிறுத்திவிடுகிறேன் என்று சொல்கிறார்.

அந்த சொல்லின் அர்த்தம் சாதாரணமானதல்ல; ‘விடுதலை’யை நிறுத்திவிடுகிறேன் என்று சொன்னால், என்ன அர்த்தம்?

அந்தக் கூற்றினுடைய பொருள் என்னவென்றால், அது ஒரு கட்டளை. இதை நீங்கள் செய்தே ஆகவேண்டும் என்ற ஒரு கட்டளை.

நான்கூட ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தேன், பெரியார் அய்யா அவர்கள், தன்னுடைய வாழ்க்கையை இந்த நாட்டிற்காகப் பணயம் வைக்கிறார்கள். அதேபோல, அன்னை மணியம்மையாருடைய வாழ்க்கையின்மீது அவர் அந்த அதிகாரத்தை செலுத்தியிருக்கிறார்.

‘‘அய்யாவினுடைய வாழ்க்கை வரலாற்றை'' நான் ஊன்றி கவனித்த வரையில்.

தன் வாழ்க்கை, அதன் பிறகு அன்னை மணியம் மையாருடைய வாழ்க்கை - இந்த இரண்டு பேருடைய வாழ்க்கையைத் தாண்டி, மூன்றாவது ஒருவருடைய வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டு, அதன்மீதும் அய்யா அதிகாரம் செலுத்தியிருக்கின்ற ஒரு கணத்தை, ஆசிரியர் அய்யா அவர்களுடைய வாழ்க்கை யிலேதான் பார்க்கிறேன் என்று நான் சொல்லியிருக்கி றேன்.

இல்லை, நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் வழக்குரைஞர் தொழிலை விட்டு விட்டு, இதில் முழுமையாகப் பணி செய்யுங்கள் என்று பெரியார் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பெரியாரின் நம்பிக்கையை இன்றுவரை ஆசிரியர் அய்யா அவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள்!

அவருடைய அந்த நம்பிக்கையை இன்றுவரை ஆசிரியர் அய்யா அவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். 88 ஆம் ஆண்டில் இந்த ‘விடுதலை’  காலடி எடுத்து வைக்கிறது.

‘விடுதலை’ பத்திரிகையை 88 ஆண்டுகள் நடத்துவது என்பது ஒரு சாதாரண விஷயமா? 

இப்பத்திரிகை பணத்திற்காக, வியாபார நோக்கத்திற் காக நடத்தப்படுகின்ற பத்திரிகையா? அப்படிப்பட்ட பத்திரிகைகளையே நடத்த முடியவில்லை!

ஆனால், முழுக்க முழுக்க கொள்கைக்காக நடத்து கின்ற ஓர் ஏட்டை, 88 ஆண்டுகளாக நடத்திக் கொண்டி ருக்கின்றார்கள என்றால், சாதாரணமா?

எதிரிகளுக்கு ‘விடுதலை’ இருக்கக்கூடாது என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரியும்

பெரியார் அய்யா அவர்களுக்குப் பிறகு, தமிழர்க ளுக்கு ‘விடுதலை’ எவ்வளவு முக்கியம் என்று தெரியுமோ, தெரியாதோ- தமிழர்களின் எதிரிகளுக்கு ‘விடுதலை’ இருக்கக்கூடாது என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

அதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் நிறைய உண்டு. நெருக்கடி காலத்தில் ‘விடுதலை’ பட்ட விழுப்புண்களைப் பற்றி  நம்முடைய கவிஞர் அய்யா அவர்கள் நிறைய சொல்வார்கள்.

வருமான வரி அலுவலகத்தின்மூலமாக தொல்லைகள் கொடுத்தபொழுதும், அவர்கள் படுத்திய சிரமத்திற் கெல்லாம், அவர்கள் கேட்ட விலை ஒன்றே ஒன்றுதான்,

‘விடுதலை’தான் அவர்களை 

எதிர்க்கின்ற ஆயுதம்

நீங்கள் உங்கள் கட்சி ஏடுகளைக் கைவிட்டுவிடுங்கள்; ‘விடுதலை’யை நிறுத்திவிடுங்கள் என்பதுதான்.

நம்முடையவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ - எதிரிகளுக்கு இந்தப் பத்திரிகை ஏன் நடந்துகொண்டி ருக்கிறது? என்ற எரிச்சல் இருந்து கொண்டே உள்ளது. இதுதான் அவர்களை எதிர்க்கின்ற ஆயுதம் என்று மிகத் தெளிவாகத் தெரியும்.

எனவே, அப்படிப்பட்ட விலைகளையெல்லாம் காப்பாற்றிக் கொடுத்தவர் ஆசிரியர் என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

ஒவ்வொரு இன்னலிலிருந்தும் ‘விடுதலை’யை அவர் காப்பாற்றியிருக்கிறார்.

‘விடுதலை’க்குத் தாயாக அவர் தன்னை மாற்றி உழைத்துக் கொண்டிருக்கிறார்!

‘விடுதலை’ எங்களுக்குத் தாய் என்று நான் சொன் னேன்; இவ்வளவு நாள்களாக ‘விடுதலை’க்குத் தாயாக அவர் தன்னை மாற்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். 

திராவிடர் இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும், அய்யா அவர்கள் எப்படிச் சொன்னாரோ - திருமணம் என்பது ஓர் ஏற்பாடு. நான் கட்சிக்காக என்னை முழுமையாக ஒப்படைக்க, இந்தக் கட்சி சொத்துகளைக் காப்பாற்ற, நான் ஓர் ஏற்பாடு செய்கிறேன். என்னையே பலி கொடுத்து அந்த ஏற்பாட்டைச் செய்கிறேன் என்று சொன்னார், அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அதேபோல, ஆசிரியர் அய்யா அவர்கள், 90 வயதை இப்பொழுது அவர் நெருங்குகிறார். அந்த வயது வரை, இவ்வளவு தூரம் முழுமையாகப் பணி செய்ததற்கு, அவருடைய குடும்பத்தினருடைய  ஒத்துழைப்பு. நிச்சய மாக அம்மா மோகனா அம்மையாருடைய ஒத்துழைப்பும், அவர்களுடைய பிள்ளைகளுடைய ஒத்துழைப்பும் - அவருக்காகவே, அவர்கள் முழுமையாக இயங்குவது என்பதும், ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.

ஆசிரியருடைய உழைப்பும், தியாகமும் இருப்பதை நாம் நினைவுகூர வேண்டும்!

எனவே, கவிஞர் அய்யா அவர்கள் சொன்னதை வழி மொழிந்து, இந்த ‘விடுதலை’ ஏட்டின் இத்தனை நாள் தொடர்ச்சியில், அவர்களுடைய உழைப்பும், தியாகமும் இருப்பதை நாம் நினைவுகூர வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லிக் கொள்கிறேன்.

அய்யா அவர்கள், இனி வரும் உலகத்திலே ஒன்றைச் சொல்வார்கள்.

“மனிதன் வாழ்வது கஷ்டமல்ல - சாவதுதான் கஷ்டமாகிவிடும். ஏனென்றால், அவ்வளவு விஞ்ஞான சாதனங்கள் வந்துவிடும்; அறிவியல் சாதனங்கள் வந்து விடும். மனித வாழ்நாள் நீண்டு விடும். 400, 500 வருஷங் கள் மனுஷன் வாழப் போகிறான்'' என்று பெரியார் எழுதியிருக்கிறார்.

எங்களுக்குத் தொடர்ந்து 

தலைமையேற்று இயங்கிடவேண்டும்!

அவருடைய அந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு முன்னுதாரணமாக, எடுத்துக்காட்டாக, எங்களுக்கு இன்னும் நீண்ட நாள் ஆசிரியர் அய்யா, இந்தப் பணியில், எங்களுக்குத் தொடர்ந்து தலைமையேற்று இயங்கிட வேண்டும் என்கின்ற என்னுடைய விருப்பத்தையே, என்னுடைய வாழ்த்தாகத் தெரிவித்து, வாழ்த்த வயதில்லை, இருந்தாலும், அந்தக் கடமை எனக்கு இங்கே அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடமையை நிறைவேற்றும் விதமாக என்னுடைய வாழ்த்தினை தெரியப்படுத்தி, வணங்கி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு எழுத்தாளர் தோழர் ஓவியா அவர்கள் கருத்துரையாற்றினார்.

No comments:

Post a Comment