வ.உ.சி. பிறந்த நாள் சிந்தனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 5, 2022

வ.உ.சி. பிறந்த நாள் சிந்தனை

இன்று வ.உ.சி. பிறந்த நாள் (1872) இக்கால கட்டத்தில் அவரைப்பற்றி சிந்திப்பதற்கான நியாயங்கள் ஏராளம் உண்டு. இணையற்ற தியாக வரலாறு ஒரு பக்கம் மற்றொரு பக்கம் இலக்கியத் தொண்டு.

திருக்குறளில் கடவுள்  வாழ்த்து எனும் அதிகாரம் மட்டுமல்ல,வான்  சிறப்பு, நீத்தார்  பெருமை ஆகிய அதிகாரங்களும் திருவள்ளுவர் எழுதியவை அல்ல - அவை பிற்காலத்தில் செய்யப்பட்ட இடைச்செருகல்களே என்று ஆய்வு செய்து கூறினார் வ.உ.சி. “அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்தைய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை யென்றும் யான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.

பரிமேலழகர் என்பவர் எழுதிய திருக்குறள் உரை ஆரியம் சார்பானதாக இருப்பதால் அதை  ஏற்க மறுத்து  - திருக்குறள் அறத்துப்பால் மணக்குடவர் பதிப்பு எனும் தலைப்பில் 140 பக்கங்கள் கொண்ட நூலை 1917 ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி.

1930 - 1932 களில் வெளிவந்த ''தமிழ்ப் பொழில்'' எனும் இதழில் பாயிர ஆராய்ச்சி எனும் தலைப்பில் (பக்கம்: 232-237) வெளிவந்த கட்டுரையில் வ.உ.சி. அவர்கள் இந்த ஆய்வுகளைத் தொடராக எழுதி யுள்ளார். பாயிர ஆராய்ச்சி எனும் ஆய்வுக் கட்டுரையில் வ.உ.சி அவர்கள் திருக்குறளின் இடைச் செருகல்கள் குறித்து எழுதியுள்ள கருத்துகளின் சாரம் :

திருக்குறளின் மூன்று அதிகாரங்களும் தற்காலத் தில் மிகவும் புகழ் பெற்றவை. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய இம் மூன்று அதிகாரங்களிலுமுள்ள முப்பது குறட்பாக்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது என்று இதற்கான காரணங்களை முன் வைக்கிறார் வ.உ.சி.

கடவுள் வாழ்த்து - வான் சிறப்பு - நீத்தார் பெருமை பாடல்களில் பிற பாடல்களைப் போல சொற்செறிவும் பொருட்செறிவும் இல்லை.

கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய பாடல்களின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.

மெய்யுணர்தல், துறவு என்ற தலைப்புகளில் நூலின் உள்ளே அதிகாரங்கள் இருப்பதால் இதற்கு முரணான தலைப்புகளான கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அதாவது பாயிரத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல.

மெய்யுணர்தல் எனும் தலைப்பிலுள்ள அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களைக் கொண்டு பார்க்கும்போது அவற்றையும் இம்மூன்று அதிகாரங் களையும் ஒருவரே எழுதி யிருக்க முடியாது. 

துறவு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டையும் ஒருவரே இயற்றியிருக்க முடியாது.

மழையைச் ‘சிறப்பிற்றணிப்பாருமில்லை - வரப்பிற்றறி வாருமில்லை.” எனவே, ‘வான் சிறப்’பைக் கூறுவதால் பயன் ஒன்றுமில்லை.

திருக்குறள் 10 என எண்ணிக்கையில் இருக்கும் போது 10இன் மடங்குகளாக 130 அதிகாரமும் 1300 குறள்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்கிறார் வ.உ.சி.

திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தை எழுதி இருக்கிறார் - கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டார் திருவள்ளுவர் எழுதிய கடவுள் சனாதனக் கொள்கைப்படி - என்று ஆளுநர் கூறுகிறார். ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுகின்றன.

இவ்வேளையில் கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருக்குறளே அல்ல. அவை திருவள்ளுவர் எழுதியவையும் அல்ல. இந்த 3 அதிகாரங் களும் இடைச் செருகல்களே என்கிற வ.உ.சி.அவர்களின் ஆய்வுக்கட்டுரையை நாம் மீள் வாசிக்க வேண்டியதும் அதனை பரப்புவதும் அவசியமாகும்.

வ.உ.சி. என்றால் கப்பலோட்டிய தமிழர் என்பதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. அதிலும் அவர் செய்த தியாகத்துக்கு ஈடாக இன்னொரு வரை எடுத்துக்காட்டவும் முடியாது. ஆனாலும் அவர் வறுமையிலேயே தன் முடிவைச் சந்திக்க நேர்ந்தது. என்ன செய்வது அவர் முதுகில் பூணூல் இல்லையே.

அவரது கடைசிக் கால கட்டத்தில் தந்தை பெரி யாரோடு இணக்கமாக இருந்ததோடு, சுயமரியாதை இயக்க மாநாடு களிலும் பங்கேற்று இனவுணர்வுடன் கூடிய கருத்துகளை முழங்கியதோடு வகுப்புரிமைக்கு வாதாடியதும்  குறிப்பிடத் தக்கவையாகும். 

No comments:

Post a Comment