துவாரகா பீடத்தைப் பாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

துவாரகா பீடத்தைப் பாரீர்!

துவாரகா சாரதாபீடத்தின் சங்கராச்சாரி சுவரூபானந்த சரஸ்வதி சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரண மடைந்தார். அவரது மறைவை அடுத்து சங்கராச்சாரியார் பதவிக்கு - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவிமுத்தேஷ்வானந்த் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் மறைந்த ஸ்வரூபானந்தாவிற்கு அடுத்த இடத்தில் இருந்தவர், துவாரகா பீடத்தின் அனைத்துப் பணிகளையும் சங்கராச்சாரியார் உடல் நலமின்றி இருந்த போது நிர்வகித்தவர். மிகவும் அனுபவமுள்ளவர் என்ற காரணத்தால் துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

 இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து சாமியார்களின் கூட்டமைப்பு பார்ப்பனர் அல்லாத ஒருவரை நாங்கள் சங்கராச்சாரியாராக ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். 

இது தொடர்பாக 'அகில பாரதீய அகாடாபரிஷத்' என்ற சாமியார்கள் கூட்டமைப்பின் தலைவர் மகந்த் ரவீந்திர பூரி கூறும் போது, ”சங்கராச்சாரியார்களுக்கு என்றே குறிப்பிட்ட ஆச்சார அனுஷ்டானங்கள் உண்டு, இது பிராமணர்களுக்கு மட்டுமே உரியது, 

இது குறித்து மேலும் விளக்கமாக கூறத் தேவையில்லை. ஒருவரை ஒரு பதவி தேடி வருகிறது என்றால் ஓடிப்போய் வாங்குவதற்கு முன்பு அதற்குத் தான் தகுதியாக இருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். இது ஒன்றும் படித்து வாங்கும் பட்டமோ அல்லது பதவியோ கிடையாது, ரிஷி முனிவர்களால் உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ் பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வருவது - 

 அப்படி இருக்க, தான் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்தும் அமிமுத்தேஷ்வானந்த் 'சங்கராச்சாரி' பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார் - அவர் திறமையானவர் என்பதில் எங்களுக்கு எந்த அய்யமும் இல்லை. இருப்பினும் அந்தப்பதவிக்கு அவர் தகுதியானவர் இல்லை. ஆகவே இந்திய சாதுக்களும் ஹிந்துக்களும் இவரை சங்கராச்சாரியாராக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சாஸ்திரம் அறிந்த அனைவருக்குமே ஹிந்துக்கள்  ஏற்கமாட்டார்கள் என்பதற்கான காரணம் தெரியும்,

எங்கள் கோரிக்கையை ஏற்று அவிமுத் தேஷ்வானந்த் தனது பதவியை பிராமணர் ஒருவருக்கு கொடுத்துவிட்டு மீண்டும் துவாரகா பீடத்தின் நிர்வாகத்தை சிறப்போடு நடத்தினால் நாங்கள் எங்களின் முழு ஒத்துழைப்பைக் கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் திருவாளர் மோகன் பாகவத் என்ன கூறப் போகிறார்? 'நாம் எல்லோரும் ஹிந்துக்கள் தான்!' என்று ஷில்லாங்கில் சில நாட்களுக்கு முன் அவர்தானே 'அகன்ற - விரிந்த(?) மனத்தோடு கூறினார்.

இந்த எண்ணத்தில் அவர் இருப்பது உண்மை என்றால் இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டாமா?

இங்கே தமிழ்நாட்டில் மானமிகு ஆ. இராசா எம்.பி. அவர்களின் அறிவார்ந்த - சுயமரியாதை உணர்வோடு பேசிய உண்மைக் கருத்துகளைத் திரிபுவாதம் செய்து 'சண்டப்பிரசண்டம்' செய்யும் பார்ப்பனர்கள், பார்ப்பன ஊடகங்கள், அண்ணாமலைகள் வாயைத் திறக்காதது ஏன்?

பிராமண, சூத்திர, பேதம் இன்று வரைக்கும் ஹிந்து  தர்மத்தில் இருக்கிறது என்பதை அறிவு நாணயத்தோடு ஏற்றுக் கொள்வார்களா?

துவாரகா பீடத்தில் சங்கராச்சாரியாகப் பொறுப் பேற்றுள்ளவர் நல்லவர்தானாம். திறமையானவர் தானாம் - ஆனால் பிறப்பால் அவர் 'பிராமணர்' அல்லாதவர் என்பதால் - சங்கராச்சாரியார் ஆக முடியாதாம்! காவிக் கொடி தூக்கும் பார்ப்பனர் அல்லாதார் சிந்திப்பார்களா?

 

No comments:

Post a Comment