பவள விழா சுதந்திரத்தின் இலட்சணம் இதுதானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

பவள விழா சுதந்திரத்தின் இலட்சணம் இதுதானா?

கோயிலில் இருந்து பொதுமக்களுக்காக வைத் திருந்த உணவுப் பொருளை எடுத்தான் என்று கூறி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு சிறுவனை  அர்ச்சகன் மரத்தில் கட்டிவைத்து அடிக்கும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்தக் காட்சிப் பதிவு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மரத்தில் கட்டப்பட்டு அடிவாங்குபவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து எதற்காக சிறுவன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளான், யாரால் கட்டி வைக்கப்பட்டான் என்ற விவரங்கள் தெரிய வந்தன. அதில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஹர் பகுதியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக ராகேஷ் என்பவன் பணியாற்றி வருகிறான்.

பூஜை முடித்துவிட்டு பொதுமக்களுக்காகப் பிரசாதம் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சிறுவன் அர்ச்சனைத் தட்டில் இருந்த பிரசாதத்தை எடுத்து விட்டான். இதனால் கோபமடைந்த அர்ச்சகன் ராகேஷ் சிறுவனை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக அடித்துள்ளான். சிறுவன்  தன்னை விட்டுவிடும்படி கதறியுள்ளான். ஆனாலும் அர்ச்சகன் அதைக் கேட்கவில்லை. இதனிடையே சிறுவனை விட்டுவிடும்படி, அர்ச்சகனிடம் ஒருவர் அறிவுறுத்திய போது, 'உன் வேலையை மட்டும் பார்' என்று ஆவேசமாகக் கூறுகிறான் அர்ச்சகப் பார்ப்பான்.

இதனிடையே சமூக வலைதளங்களில் அதன் காட்சிப் பதிவு வெளியாகி வேகமாக பரவிய நிலையில், அந்த சிறுவனின் தந்தை மோதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், கோயில் அருகே நின்றுகொண்டிருந்த போது பிரசாதத்தை திருடியதாக தன்மீது குற்றம்சாட்டி, மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகவும், தன்னை மரத்தில் கட்டுவதற்கு இன்னொரு நபர் உதவி புரிந்ததாகவும் சிறுவன் கூறியது தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மோதி நகர் காவல்துறையினர் அர்ச்சகன் ராகேஷ் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அர்ச்சகன் ராகேஷ் இதுவரை கைது செய்யப்பட வில்லை. அர்ச்சகன் சிறுவனை கட்டிவைத்து அடித்த செயல் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர இந்தியாவின் பவள விழா கோலாகலமாக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பேசிய - மனித சுதந்திரம்  - அளவிடற்கரியது!

ஆனால் நாட்டு நடப்பு என்ன? ஓர் அறியாச் சிறுவன் பிரசாதத்தைத் தொட்டான் என்பதற்காக ஓர் அர்ச்சகப் பார்ப்பான் அச்சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடிக்கிறான் என்றால், இந்த ஜாதித் திமிர் எங்கே இருந்து வந்தது?

கேட்டால் அவர்கள் சொல்லக் கூடும். "குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் குடும்பத் தார்களையே கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்த வர்கள் நாங்கள். அதை வைத்துப் பார்க்கும்போது இந்தச் சிறுவன் எம்மாத்திரம்" என்பார்களோ!

இந்த இலட்சணத்தில் ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கப் போகிறார்களாம். 'தீண்டாமை க்ஷேமகரமானது' என் றாரே மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்  சந்திர சேகரேந்திர சரஸ்வதி, அதனை இலட்சனையாக வைத்தாலும் வைப்பார்கள் - யார் கண்டது?


No comments:

Post a Comment