அகழாய்வு - மதக் கலவரத்தைத் தூண்டவா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

அகழாய்வு - மதக் கலவரத்தைத் தூண்டவா?

வடக்கில் இஸ்லாமியர் வழிபாட்டுத்தலங்களை தோண்டி அங்கு இந்து அடையாளம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது தொடர் நடவடிக்கையாகவே மாறிவிட்டது, 

 ஜனவரி முதல் மார்ச்சு வரை உத்தரப்பிரதேச தேர்தலை கருத்தில் கொண்டு வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் உள்ளது என்று கூறி ஹிந்து அமைப்புகள் பெரும் போராட்டம் நடத்தின. அங்கு சென்று வழிபடவும், தொடர் பூஜைகள் நடத்தவும் தொடர்ந்து தேதிகள் அறிவித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தினர். 

இந்த நிலையில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஹிந்து அமைப்புகள் வழக்கு தொடுத்தன. ஆயிரக்கணக்கான வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் போது இஸ்லாமிய வழிபாட்டுத்தலத்திற்குள் சென்று வழிபட்டு பூஜை செய்ய, அங்கு சிவலிங்கம் உள்ளதா என்று ஆய்வு செய்ய நீதிமன்றம் உடனடியாக உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, அவர்களும் அகழாய்வு நடத்தலாம் என்று உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கு அகழாய்வு நடந்துகொண்டு இருக்கும் போதே மசூதிக்குள் சிவலிங்கம் உள்ளது என்று பாஜக ஆதரவு வட இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிட வட இந்தியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

அகழாய்வு முடிவுகளை இதுவரை வெளியிடாமல் ரகசியம் காப்பது ஏன் என்று தெரியவில்லை. 

இந்த நிலையில், மீண்டும் பதற்றத்தைத் தூண்டும் விதமாக மதுராவில் உள்ள மிகவும் பழைமையான ஷாஹி ஈத்கா மசூதியை அகழாய்வு செய்ய அலகாபாத் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மேலும் வட இந்தியாவில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இது போன்ற வழக்குகளை ஹிந்து அமைப்புகள் தொடர்கின்றன. சமூக அக்கறை கொண்ட விசாரணை அமைப்புகள் இதன் உள் நோக்கத்தை உண்மைத் தன்மையைக் கருதி முடிவை எடுக்கவேண்டும். ஆனால் சமூகப்பதற்றத்தைத் தூண்டும் வகையில் செயல்படுபவர்களுக்கு ஆதரவாகவே எல்லாம் நடக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கற்பிக்கும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக்கோரி, மதுரா நீதிமன்றத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை கடந்த மே மாதம் மதுரா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. அதே போல் சில ஹிந்து அமைப்பு களால் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. மதுராவில் மறைக்கப்பட்டுள்ள இந்து மதம் தொடர்பான தொல் பொருட்கள், பழங்கால கல்வெட்டுகள் உள்ளிட்டவை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஞானவாபி மசூதியைப் போலவே, ஷாஹி ஈத்கா மசூதியிலும் கள ஆய்வு செய்து, காட்சிப் பதிவு செய்ய உத்தரவிட்டது.  ஆய்வு தொடர்பான அறிக்கையை 4 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் வட இந்தியாவில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது, 

உத்தரப்பிரதேசத்தில் ரதயாத்திரை நடத்திய அத்வானி - ராமர் கோவில் மட்டுமல்ல, எங்கள் இலக்கு ஞானவாபி மசூதி, ஈத்காமசூதி உள்ளிட்ட பழைமையான அனைத்து இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களும் இந்துக் கோவில்கள் தான் என்பதை நிரூபிக்கும் வரை எங்கள் பயணம் நிற்காது என்று கூறியிருந்தார். அதன் பிறகு நடந்த கலவரங்கள், உயிரிழப்புகள், இதன் தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்பு, குஜராத் கலவரம் போன்றவைகளை உலகமே பார்த்து வேதனைப் பட்டது. அந்த கலவரங்களால் ஏற்பட்ட பாதிப்பால் இந்தியா தொடர்ந்து அனைத்துவளர்ச்சியிலும் பின்னடைவைச் சந்தித்துக்கொண்டே வருகிறது. 

 இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலனுக்கு எதிரான பிஜேபி தனது அரசின் நடவடிக்கைகளை மடைமாற்றும் வகையில், மீண்டும் ஹிந்து முஸ்லீம் பிரச் சினையைக் கையில் எடுத்துள்ளது. அதன் முன்னோட்டமாகத் தான், பழைமையான மசூதிகளை அகழாய்வு செய்து இந்து மத அடையாளங்களை எடுப்போம் என்ற பெயரில் தற்போது புறப்பட்டுள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்குமுன் இருந்த நிலை நீடிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது எல்லாம் காற்றில் பறந்து விட்டதா?

மக்களிடத்தில் மதவாதத் தீ பிடிக்காமல் இருக்கும் வகையில் தீர்ப்புகளை வழங்குவதுதான் நீதிமன்றத்தின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே!

No comments:

Post a Comment