60 ஆண்டு 'விடுதலை' பணியில் சில நினைவுகள் நிகழ்வுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

60 ஆண்டு 'விடுதலை' பணியில் சில நினைவுகள் நிகழ்வுகள்!

கி.வீரமணி

"விடுதலை" நாளிதழின் வீர வரலாற்றில், அது பிறப்பதிலிருந்தே எதிர்நீச்சல்தான் - என்பது வாசகப் பெரு மக்கள் அறிந்ததே!

பொது நலம் - சமூகத்தில் நிலவிய அநீதிகள், அக்கிரமங்கள் பற்றி அறிந்தும், பல ஏடுகளும் அதன் நிறுவனர்களும் - ஏன் நாட்டின் பெரிய தலைவர்களும்கூட அலட்சியமாய் இருந்த நிலை உண்டு!

ஆனால், மகத்தான பிறவிப் போராளியான தந்தை பெரியாரோ - அநீதிகளைக் கண்டால் உடனே, விளைவுகளைப் பற்றி சிறிதும் அஞ்சாமல், துஞ்சாமல், போராட்டக் களத்திற்குத் தனது பேச்சு, எழுத்து மூலம் மக்களுக்கு அறிவுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தி களமாடவும் சிறை செல்லவும்கூட அஞ்ச மாட்டார்.

நீதிமன்றங்களும், சிறைச்சாலைகளும் இந்த தலைவருக்கும் அவரது போராயுதமான விடுதலை ஆசிரியர்களுக்கும் - பண்டித முத்துசாமிப் பிள்ளை காலம் தொட்டு இன்று வரை - சென்று திரும்பும், 'தற்காலிக குடியேற்றங்களாகவே' திகழ்ந்துள்ளன - தண்டனைகள் அவர்களுக்கு 'தாலாட்டுகளாகி' விட்டன!

தந்தை பெரியார் அவர்களால் 'விடுதலை' ஆசிரியராக 1946 முதல் 1978 வரை இருந்த அன்னை மணியம்மையார் - அவர் செய்யாத குற்றங்களுக்காக ஏற்ற பொறுப்பின் காரணமாக, பலமுறை தண்டனை  பெற்று சிறைச்சாலைக்கு சென்ற பத்திரிகை ஆசிரியராவார்!

அதில் ஒன்று, திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஆர்.எஸ். மலையப்பன் அவர்கள்பற்றி, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு பார்ப்பன நீதிபதிகளின் ஓரவஞ்சனைப் பார்வையும் - எழுதிய தீர்ப்புகளில் சம்பந்தமில்லாமல், அவரது உத்தியோக உயர்வை ஒழிக்கும் வகையில் வலிந்து எழுதிய கண்டன எழுத்துக்களும் கண்டு வெகுண்டெழுந்தார் தந்தை பெரியார்!

அய்க்கோர்ட் கண்டனத்தை திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் 4.11.1956 அன்று உரை நிகழ்த்தினார். அய்க்கோர்ட் அவமதிப்பு சிஷீஸீtமீனீஜீt ஷீயீ சிஷீuக்ஷீt சட்டம் அவர்மீது பாய்ந்தது!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் பி.வி. இராஜமன்னார், ஜஸ்டீஸ் ஏ.எஸ்.பி. அய்யர் அய்.சி.எஸ். இருவரது அமர்வுக்கு முன் ஒரு அறிக்கை தாக்கல் செய்து படித்தார்.

நம் நாட்டின் மனுதர்ம நீதிப் போக்கினை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியது அவர் வாசித்த  பல பக்க அறிக்கை - நீதித்துறையில் பார்ப்பனர் ஆதிக்கத்தை பட்டரங்கமாகப் பகிரங்கப்படுத்தியது.

"பார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடேயாகும்; நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால் ஓரிருவர் அடிபடவும் சாகவும் தயார்" என்று பிரகடனப்படுத்தி தண்டனையை ஏற்றார்!

இதற்குமுன் ராஜாஜி என்று அழைக்கப்பட்டது சி. இராஜகோபாலாச்சாரியார் ஆட்சியில் ஹிந்தி எதிர்ப்பால் கைது செய்யப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் கொடுத்த அறிக்கையின் துணிச்சல் - மற்றவர்கள் படிக்கக் கூட பயப்படுவர். (எல்லாம் நூல்களாக இன்றும் கிடைக்கின்றன).

தந்தை பெரியாரும் - அன்னை மணியம் மையாரும் பேசியவை - அப்பேச்சுகளை விடுதலையில் வெளியிட்டுப் பரப்பியது என்ற முறையில் அதன் ஆசிரியர் அன்னை மணியம்மையாரும் தண்டனை பெற்றார்.

அய்யா 6 மாத கடுங்காவல் தண்டனை - வேறு வழக்கில் தண்டிக்கப்பட்டு சென்னை சிறைச் சாலையில், அரசு பொது மருத்துவமனையில் இருந்தபோது, அன்னை மணியம்மையார் விடுதலை ஆசிரியராக இருந்த நிலையில் "இளந் தமிழா புறப்படு போருக்கு" என்ற ஒரு கட்டுரை - சி.என். நெடுமாறன் என்ற ஒரு மாணவ இளைஞர் விடுதலையில் (19.1.1958) எழுதிய கட்டுரையை  - பிரசுரித்ததிற்காக அன்னையார் சென்னை பிரதம மாகாண மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் (153ஏ) ஒரு மாதம் தண்டிக்கப்பட்டு சிறைக்குப் போனார்.

இப்படி பலப் பல - அதே நேரத்தில் அது போன்ற சிறைவாசங்கள் அவர்கள் துணிவினை முனை மழுங்கி விடச் செய்ததில்லை.

நான் நிர்வாக ஆசிரியர் பொறுப்பேற்று (அப்போதும் அன்னையார் தான் அதிகாரபூர்வ ஆசிரியர்) சென்னை  தலைமை நீதிபதியாக இருந்த ராமச்சந்திர அய்யர் தனது பிறந்த தேதியை குறைத்துத் தந்து பதவியில் நீடித்த மாபெரும் ஊழல் நடவடிக்கையை விடுதலைதான் முதன் முதலில் துணிந்து எழுதியது; தந்தை பெரியாரும் சென்னை கடற்கரையில் பொதுக் கூட்டம் (30.10.1960) போட்டு கண்டனம் தெரிவித்த பிறகு அவரை பார்ப்பனர்கள் - ராஜினாமா மட்டும் செய்து எந்தவித சட்ட நடவடிக்கையும் இன்றிக் காப்பாற்றப்பட்டு பதவி ஓய்வு பெற்றார். 

அந்தக் கண்டனப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் என்னைப் பற்றிக் குறிப்பிட்டார். "திரு கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர்போல, குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசி விட்டார். திரு. கி.வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல. அவர் ஒரு வக்கீல், எவ்வளவோ நல் வாய்ப்புகள் அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால், நமக்கு நல்லதாகி விட்டது என்றுதான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு முழு நேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசைதான். இப்போது அவர் தொண்டு அரை நேரம். இனி முழு நேரமாகி விடலாம்" என்று தந்தை பெரியார் பேசினார்.

வழக்குரைஞரான அவரது தம்பி ராஜகோ பாலய்யர் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடி விட்ட நிலையிலும் - பிறகு அவரது அண்ணனான இவர் தொடர்ந்து பதவியில் இருந்த மோசடியை 'விடுதலை' விளக்கி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அம்பலப்படுத்தியது!

ஆனால் எந்தவித சேதாரமோ, தண்டனையோ இன்றி அன்று அவர் காப்பாற்றப்பட்டு பதவியை ராஜினாமா செய்து, வீட்டுக்கு வழியனுப்பப்பட்டார். 'ஓய்வா? - விலகலா? விலக்கப்படுதலா?' என்ற தலைப்பில் விடுதலை எழுதிய கேள்விக்கு இன்றுவரை பதில் ஏதும் இல்லை.

இது போன்ற பல நிகழ்வுகள் உண்டு.

அதனால்தான் கவிஞர் கண்ணதாசன் தந்தை பெரியார் பற்றி கவிதை எழுதியபோது - 

"நீதிமன்றின் நீதிக்கும்

நீதி சொல்வார்

நெறிகெட்டு

வளைந்ததெல்லாம்

நிமிர்த்தி வைப்பார்

ஆன்றவிந்த பெரியார்க்கும்

பெரியார் எங்கள்

அய்யாவுக்கிணை எவரே

மற்றோர் இல்லை!" என்று எழுதினார்.

ஆம். நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்லும் ஏடு 'விடுதலை'தான் அன்றும் - இன்றும் - என்றும்!

இந்தப் பணியின் சிறப்புக்கு இவைகளைவிட வேறு  என்ன 'சன்மானம்' வேண்டும் - இனமானம் காக்கும் பணி அல்லவா அவைகள்!


No comments:

Post a Comment