கரோனா - பூஸ்டர் தவணை தடுப்பூசி செப்டம்பர் 4 ஞாயிறுகளிலும் சிறப்பு முகாம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

கரோனா - பூஸ்டர் தவணை தடுப்பூசி செப்டம்பர் 4 ஞாயிறுகளிலும் சிறப்பு முகாம் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

 


சென்னை,செப்.3- பூஸ்டர் தவணை தடுப்பூசியை விரை வாக செலுத்தும் வகையில், இம் மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமை களிலும் மெகா கரோனா தடுப் பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுண்கதிர் பிரிவு நுண்கதிர் நிறுவன மாக தரம் உயர்த்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் மய்யத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (2.9.2022) தொடங்கி வைத்தார். சுகாதாரத் துறைச் செயலர் பா.செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சாந்திமலர், நுண்கதிர் துறைத் தலைவர் தேவி மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறிய தாவது: அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிகப் பெரிய சாதனையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள நுண்கதிர் துறை தற்போது நுண்கதிர் நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே இந்த தரம் உயர்த்தப்பட்ட நிறுவனம் உள்ளது.

உலகிலுள்ள 17 நபர்களில் ஒருவருக்கு புற்றுநோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இவை பொதுவாக நுண்கதிர் துறையின் மூலம்தான் சாத்தியமாகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்கவும், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கவும், மாவட்டத்துக்கு ஒரு செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைக்க வேண்டும் எனவும், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க இருப்பதால் அது தொடர்பாகவும் ஒன்றிய அமைச்சர்களிடம் பேசவுள்ளோம்.

நீட் தேர்வு முடிவுகள் வந்தஉடனே மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்புவெளியிடப்படும். சித்தா பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் சில குறிப்புகளை கேட் டுள்ளார். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி சில தினங்களில் விளக்கம் அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் இதுவரை 12 கோடியே 31 லட்சத்து 55,552 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 4 கோடியே 11,45,950 பேருக்கு பூஸ்டர் செலுத்த வேண்டி யுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக செலுத்த, வரும் 4, 11, 18, 25 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி ஓர் இயக்கமாகவே மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment