‘விடுதலை’ நாளேட்டினை ஆதரியுங்கள்; நாடெங்கும் பரப்புங்கள் என்று சொல்வது ‘விடுதலை’க்காகவோ - வருவாய்க்காகவோ அல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

‘விடுதலை’ நாளேட்டினை ஆதரியுங்கள்; நாடெங்கும் பரப்புங்கள் என்று சொல்வது ‘விடுதலை’க்காகவோ - வருவாய்க்காகவோ அல்ல!

‘விடுதலை’ சொல்லுகின்ற கருத்தையும், துணிவையும் மற்றவர்கள் சொல்லமாட்டார்கள் என்பதற்காகத்தான்!

அரியலூர்: திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

அரியலூர், ஆக.20 - ‘விடுதலை’ நாளேட்டினை நீங்கள் ஆதரியுங்கள்; அதனை நாடெங்கும் பரப்புங்கள் என்று நாங்கள் சொல்வது, ‘விடுதலை’க்காகவோ - வருவாய்க் காகவோ அல்ல - அது சொல்லுகின்ற கருத்தையும், துணிவையும் மற்றவர்கள் சொல்லமாட்டார்கள்; காரணம், மற்றவர்களுக்கு சில இக்கட்டுகள் இருக் கின்றன; சில வரைமுறைகள் இருக்கின்றன. நாங்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறோம்; சிறைச்சாலைக்குப் போகவேண்டுமா? தயாராக இருக்கின்றோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அரியலூர்: திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாடு

கடந்த 30.7.2022 அன்று அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

நேற்று வெளிவந்த உரையின் தொடர்ச்சி வருமாறு:

சரி, அதை வரவேற்கிறோம்.

அரசியல் யுக்தி அது. கொள்கைக்காக அதை அவர்கள் செய்யவில்லை.

ஒரே ஒரு கேள்வியை கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லுங்கள்.

சனாதனம் இருந்தால், இதை ஏற்றுக்கொள்ளுமா?

சனாதன தர்மப்படி அந்த அம்மையார் குடியரசுத் தலைவராக ஆவதற்கு சனாதனம் ஏற்றுக்கொள்ளுமா?

இல்லையே!

சனாதனம் ஏற்றுக்கொள்ளாததற்கு உதாரணம், வேறு எங்கும் போகவேண்டாமே - வடநாட்டில் பெண்களை தீயில் எரிய வைத்து சதி மாதா கோவில்கள் கட்டினார்கள்.

பாராட்டுகிறோம், வரவேற்கிறோம்!

இன்றைக்கு அதே பெண், காலத்தின் கட்டாயம், சனாதனம் வெற்றி பெறாது - விஞ்ஞானம்தான் வெற்றி பெறும் - சமூக விஞ்ஞானம்தான் வெற்றி பெறும் என்ப தற்கு அடையாளம் என்னவென்றால், அந்த அம்மையார் தான், இன்றைக்கு இந்தியாவினுடைய முதல் குடிமகள். பாராட்டுகிறோம், வரவேற்கிறோம். 

தேர்தல் முக்கியமல்ல - தேர்தல் ஒரு சாதாரண நிகழ்ச்சி.

ஏன் இன்றைக்கு மாறவேண்டிய அளவிற்கு வந்திருக் கிறது. இன்றைக்கு அவர்களால் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்க முடியவில்லையே! சனாதனம் என்றால், நாமெல் லாம் கட்டை வண்டியில்தான் போகவேண்டும். சனாதனம் என்றால், பேனாவில் எழுதலாமா?

விமானத்தில்தானே பறந்து கொண்டிருக்கின்றோம்.

சனாதனம் என்று சொன்னால், இராமாயணத்தில் போர் நடந்தபோது, இராமன் போர் ஆயுதமாக எதைக் கையாண்டான்?

அம்பு, வில், ஈட்டி போன்றவைதானே!

இன்றைக்கு நாம் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுக ளோடு எல்லையில் பிரச்சினை என்றால், இராமன் வழியிலேயே போகவேண்டும்; அதுதான் சனாதனம் என்று சொல்லாமல், எதற்காக ரஃபேல் விமானத்தை வரவழைக்கின்றோம்.

சனாதனம் வெற்றி பெறாது - அது இயற்கைக்கு விரோதமானது!

சனாதனம் தோற்றுப் போய்விட்டது - சனாதனம் வெற்றி பெறாது - ஏனென்றால், அது இயற்கைக்கு விரோதமானது.

அழகாக புத்தரும் சொன்னார், காரல் மார்க்சும் சொன்னார் - மாறுதல் என்பதுதான் மாறாதது.

அந்தக் காலத்தில் ‘‘ஒலி பெருக்கி உண்டு’’ என்றால்,  அது பெரிய கூட்டம்!

பழைய தோழர்களுக்குத் தெரியும் - அந்தக் காலத் தில் கூட்டம் போட்டார்கள் என்றால், ஒன்றுக்கு (ஒரு அடி) 32 என்ற அளவில்தான் போஸ்டர் ஒட்டுவார்கள். இந்த அளவிற்குப் போஸ்டர் அடித்தாலே, பெரிய கூட்டம் என்று அர்த்தம். அதைவிட பெரிய கூட்டம் என்று எப்படி கண்டுபிடிப்பது என்றால், ‘‘ஒலி பெருக்கி உண்டு’’ என்று குறிப்பிடுவர்.

ஒலி பெருக்கி உண்டு என்று போட்டு ஒரு தலைவர் பேசினார் என்றால், அவர் பெரிய தலைவர்.

காரணம், நாங்கள் எல்லாம் மெகபோன் வாலா -  எங்களுக்காகவே கண்டுபிடித்ததுபோன்று இரும்பிலே அடித்து தகரத்தில் வைத்திருப்பார்கள். மெகபோன் வைத்துக்கொண்டுதான் சத்தமாகப் பேசுவோம்.

ஆனால், இன்றைய நிலை என்ன?

மேடையில் பேசுகின்றவர்களே சரளமாகப் பேசுகிறார்கள்;  எப்படி இவ்வளவு சரளமாகப் பேசுகிறார் கள் என்று நினைத்தால், அவர் என்னமோ சொல்லிக் கொண்டு இருக்கிறார். திடீரென்று  ஆஃப் ஆகிவிட்டால், அவரால் பேச முடிவதில்லை.

சிரிக்காதீர்கள்; நடைமுறையில் பார்க்கவேண்டும்.

விஞ்ஞான விந்தைகளுக்காக நான் சொல்கிறேன்.

காணொலியை எடுத்துக்கொள்ளுங்களேன் - கரோனா தொற்று காலகட்டத்தின்போது, எங்கே இருக்கி றோமோ அங்கிருந்தபடியே கூட்டங்களில் பேசுகிறோம்; உலகில் உள்ள அனைவரும் அதைப் பார்க்கக்கூடிய கேட்கக்கூடிய வாய்ப்பு.

என்னங்க, முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒரு பயலுக்காவது இது தெரியுமா? சத்ய சாய்பாபா கையைத் தூக்கினார், பொத்தென்று விபூதி கொட்டியது என்று முன்பு சொன்னார்களே, அதுபோன்று, சத்ய சாய்பாபா வால் நடந்ததா இது? இல்லையே!

அன்றைய காலகட்டத்திலேயே நம்மாட்கள் கேட் டார்கள், ஏங்க, விபூதி மட்டும் கொட்டுதே, ஒரு பரங்கிக் காயை விழச் சொல்லுங்களேன் பார்ப்போம் என்றார்கள்.

ஏனென்றால், பரங்கிக்காய் உள்ளே அடங்காது!

ஏன்? எப்படி? என்று கேட்பதுதான் பகுத்தறிவு!

அதைத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்ட மளிப்பு விழாவில் ஆற்றிய பேருரையில் சொன்னார்.

‘‘பகுத்தறிவுச் சுடரேந்துவீர்!’’ என்றார் அண்ணா!

நாங்கள் எல்லாம் படித்து, எங்களையெல்லாம் உருவாக்கிய அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அண்ணா அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார்,

You Graduate be the torch bearers of Rationalism

என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

‘‘பகுத்தறிவுச் சுடரேந்துவீர்!’’ என்று சொன்னார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் அண்ணா ஆற்றிய பேருரை இருக்கிறதே - அதனுடைய எதிரொலியாக நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா மேடையில் ஒரு பக்கம் நம்முடைய மேதகு பிரதமர் அவர்களையும், மேதகு பிரதமருக்கு உறுதுணையாக இருக்கின்ற நம்முடைய ஆளுநர் அவர்களையும் வைத்துக்கொண்டு,

பகுத்தறிவை மறந்துவிடாதீர்கள்; விஞ்ஞானத்தை மறந்துவிடாதீர்கள்!

‘‘மாணவர்களே பட்டம் வாங்கிவிட்டீர்கள்; பெருமையாக இருக்கிறது. என்னுடைய பட்டமளிப்பு விழாவிற்குப் பிரதமர் வந்தார் என்று நீங்கள் சொல்லி சொல்லி மகிழ்வீர்கள்; அது உங்களுக்குப் பெருமைதான்; அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை. ஆனாலும், பகுத்தறிவை மறந்துவிடாதீர்கள்; விஞ்ஞானத்தை மறந்துவிடாதீர்கள்’’ என்று சொன்னார் பாருங்கள், 

அதுதான் ‘திராவிட மாடல்’ - 

அந்தத் துணிவிற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’

அந்தத் தெளிவிற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்!’

இன்றைக்கு எத்தனையோ பிரச்சினைகள் நாட்டில் -  22 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டைப் பாருங்கள், எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்தோம் என்று கணக்குகள் போட்டுக்  காட்டுகிறார்கள். முடிந்த அளவிற்கு நம்மு டைய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கவேண் டும் என்று திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வெளி மாநிலங்கள், வெளிநாட்டிலிருந்து முதலீடு செய்ய வருகிறார்கள் என்றால், வெறும் பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது நண்பர்களே, தமிழ்நாடு அமைதிப் பூங்கா - இங்கே சட்டம் ஒழுங்கு அமைதி நிலவுகிறது. இங்கே மதக்கலவரமோ, ஜாதிக் கலவரமோ கிடையாது. இதற்காகத்தான் இங்கே மிகப்பெரிய அளவிற்கு தொழில் தொடங்குவதற்கு வருகிறார்கள் என்றால், அந்தப் பெருமை ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு உண்டு.

எனவேதான், மகளிருக்கு முன்னுரிமை, எல்லாத் துறைகளிலும் முன்னுரிமை.

இன்றைக்கு முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டு கிறோமே - இந்த இயக்கம் இல்லை என்றால், வந் திருக்குமா?

என்னுடைய பாட்டனுக்கு இருந்த கதி, எனக்கு இல்லையே, இன்றைக்கு மாறியிருக்கிறதே என்று சொன்னார் பாருங்கள்,  அந்த நன்றி உணர்ச்சி மட்டுமல்ல நண்பர்களே, இதுதான் அப்பட்டமான உண்மை - இது தான் திராவிடர் கழகம் - இதுதான் திராவிடர் இயக்கம் - இதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி!

ஒரு துளி ரத்தம் சிந்தாமல் மிகப்பெரிய புரட்சி!

அதன் காரணமாகத்தான், நூறாண்டு காலத்தில் இவ்வளவு பெரிய புரட்சி நடைபெற்று இருக்கிறது என்றால், ஒரு துளி ரத்தம் சிந்தாமல் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

மற்ற நாடுகளில் புரட்சி நடைபெற்று இருக்கிறது என்றால், ரத்தம் சிந்தித்தான், ஆயுதங்களை எடுத்துத் தான் வந்திருக்கிறது.

ஆனால், இங்கே தூக்கியது ஒரே ஆயுதம்தான் - அறிவாயுதம். அந்த அறிவாயுதம்தான், திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் என்ற பேராயுதம். 

அதற்கு அடித்தளம் கொடுப்பதுதான் - நம்முடைய அமைச்சர்கள் சொன்னதுபோன்று, கருத்துகளைச் சொல்லி, எடுத்துச் சொல்லுவதற்குத்தான் தந்தை பெரியார் கொடுத்த ஆயுதம் ‘விடுதலை’ நாளேடு ஆகும்.

60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களைத் திரட்ட வேண்டும் - நாடெங்கும் ‘விடுதலை’யைப் பரப்பவேண் டும் என்று சொல்வது எங்களுக்காக அல்ல நண்பர்களே - உங்களுக்காக - ‘விடுதலை’யில் வருகின்ற பல செய்திகள், மற்ற நாளேடுகளில் வெளிவராது.

பகுத்தறிவுக் கருத்துகள் உள்பட பல செய்திகளை எடுத்துச் சொல்கிறோம் என்றால், அது ‘விடுதலை’ ஏட்டில்தான்.

மூடநம்பிக்கை நோய்களை ஒழிப்பதற்காகப் பாடுபடக் கூடிய இயக்கம் - ஏடு!

ஜோதிடத்தைப்பற்றி போடாமல், சினிமா செய்தி களைப் போடாமல், பரபரப்பு செய்திகளைப்பற்றி போடாமல், அறிவியலைப்பற்றி, அகண்டமாக இருக்கக் கூடிய சாதனைகளைப்பற்றி, மக்களுக்குத் தேவையான சமூக நலன்பற்றி, மனநோய்கள் என்று சொல்லும்பொழுது, மூடநம்பிக்கைதான் மிகப்பெரிய நோய் என்று கருது கின்ற நேரத்தில், அவற்றை ஒழிப்பதற்காகப் பாடுபடக் கூடிய இயக்கமும், அதற்காக ஒரு ஏடும் இருக்கிறது.

எனவே நண்பர்களே, அம்பேத்கர் அவர்கள் சொன் னதை, காலை நிகழ்விலும் சொன்னேன்; மீண்டும் அதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

ஓர் இயக்கத்தின் கொள்கையை, இலட்சியத்தை மட்டும் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது; அந்த லட்சியத்தை அடைவதற்கு வழிமுறைகள் என்ன? அதற்குரிய கருவிகள் என்ன? என்று பார்க்கும்பொழுது, அந்தக் கருவிதான் நம்முடைய ஏடுகள்.

சிறைச்சாலைக்குப் போகவும் தயாராக இருக்கிறோம்!

எனவேதான், ‘விடுதலை’ நாளேட்டினை நீங்கள் ஆதரியுங்கள்; அதனை நாடெங்கும் பரப்புங்கள் என்று நாங்கள் சொல்வது, ‘விடுதலை’க்காகவோ - வருவாய்க் காகவோ அல்ல - அது சொல்லுகின்ற கருத்தையும், துணிவையும் மற்றவர்கள் சொல்லமாட்டார்கள்; காரணம், மற்றவர்களுக்கு சில இக்கட்டுகள் இருக் கின்றன; சில வரைமுறைகள் இருக்கின்றன. 

நாங்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறோம்; சிறைச் சாலைக்குப் போகவேண்டுமா? தயாராக இருக்கின்றோம்.

எங்களுக்கு வெளியில் இருந்தாலும் ஒன்றுதான்; சிறைச்சாலையில் இருந்தாலும் ஒன்றுதான். 

ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், வெளியில் இருந்தால், நேரத்திற்குச் சாப்பிடுவதில்லை. சிறையில் இருந்தால், தாயினும் சாலப் பரிந்து - சாப்பிட வில்லையென்றால் விடமாட்டார்கள் - அதிகாரி வந்து ஊட்டுவார் என்கிற அளவிற்கு இருக்கும்.

ஆகவேதான் நண்பர்களே, நம்முடைய இயக்கத் திற்கு இளைஞர்கள் வருகிறார்கள் என்றால், அவர்களை உச்சிமோந்து வரவேற்கின்றேன்.

அரியலூரில் வரலாறு படைத்திருக்கின்றீர்கள்!

இவ்வளவு பெரிய ஆதரவைக் கொடுத்திருக் கின்ற உங்களுக்கு, அரியலூரில் வரலாறு படைத்திருக்கின்ற உங்களுக்கு நன்றி தெரிவித்து,

மாண்புமிகு அமைச்சர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி,  இங்கே வந்து சிறப்பான கருத்துகளை சொல்லிய தற்கு நன்றி,

இந்த மாநாட்டிற்காக ஏராளமான தோழர்கள் கடும் உழைப்பை அளித்திருக்கிறார்கள்; அத் துணை தோழர்களுக்கும் என்னுடைய தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டு! பாராட்டு!! பாராட்டு!!!

‘விடுதலை’ நாளிதழைப் பரப்புவதற்கு இந்த அரியலூர் மாவட்டம் ஒரு வரலாறு படைக்கவேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரையும் அணுகவேண்டும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதன்மூலமாக ஒரு பெரிய எழுச்சியை உருவாக்க வேண்டும் என்று கேட்டு,

பாராட்டு! பாராட்டு!! பாராட்டு!!! என்று கூறி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! 

வளர்க பகுத்தறிவு!

வளர்க திராவிட மாடல் ஆட்சி!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.


No comments:

Post a Comment