திராவிட இயக்கத்தின் பணி, ஆசிரியரின் கருத்துகளை நாடெங்கும் கொண்டு செல்ல ‘விடுதலை'யைப் பரப்புவீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 1, 2022

திராவிட இயக்கத்தின் பணி, ஆசிரியரின் கருத்துகளை நாடெங்கும் கொண்டு செல்ல ‘விடுதலை'யைப் பரப்புவீர்!

அரியலூரில் அமைச்சர் சா.சி.சிவசங்கரின் உரை வீச்சு

அரியலூர், ஆக. 1- திராவிட இயக்கத்தின் பணி, ஆசிரியரின் கருத்துகளை நாடெங்கும் கொண்டு செல்ல ‘விடுதலை’யைப் பரப்புவீர்  என்றார் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள்.

கடந்த 30.7.2022 அன்று மாலை அரியலூரில் நடை பெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடாக - திறந்தவெளி மாநாடாக நடைபெறுகின்ற இந்த எழுச்சிமிகு மாநாட்டிற்குத் தலைமையேற்று இருக்கின்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் சகோதரர் மானமிகு இளந்திரையன் அவர்களே,

வரவேற்புரையாற்றி இருக்கின்ற சகோதரர் அறிவன் அவர்களே,

அன்பிற்குரிய அண்ணன் விடுதலை நீலமேகம் அவர்களே, பொன்.செந்தில்குமார் அவர்களே,

தொடக்கவுரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் அய்யா ஜெயக்குமார் அவர்களே,

இங்கே உரைவீச்சை நடத்தியிருக்கின்ற திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு அய்யா துரை.சந்திர சேகரன் அவர்களே,

திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு அய்யா அறிவுக்கரசு அவர்களே,

திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு அய்யா கவிஞர் அவர்களே,

நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியிருக்கின்ற அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பிற்குரிய அண்ணன் சின்னப்பா அவர்களே,

ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பிற்குரிய சகோதரர் கண்ணன் அவர்களே,

மாநில சட்டத் திட்டக் குழுத் திருத்துநர் அன்பிற்குரிய அண்ணன் சுபா.சந்திரசேகர் அவர்களே,

பகுத்தறிவின் நம்பிக்கையாகத் திகழ்கின்ற மானமிகு ஆசிரியர் அய்யா!

இறுதியாக இந்த மாநாட்டின் எழுச்சியுரையை, பேரு ரையை ஆற்றவிருக்கின்ற நம்முடைய பகுத்தறிவின் நம்பிக்கையாகத் திகழ்கின்ற மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களே,

திராவிடர் கழகத்தின் இந்த நிகழ்ச்சி இன்றைக்கு அரியலூருக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்திருக்கின்றது.

ஒரு சில காலமாக மதவாத சக்திகள் தாங்கள் இருப்ப தைப் போல் காட்டிக் கொள்வதற்காக, சில சதி செயல்களைப் புரிந்துகொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அதற்கு மாற்று மருந்தாக, ஆசிரியர் அய்யா அவர்கள் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டினை நடத்தி, அதில் மிகச் சிறப்பாக அணிவகுப்புப் பேரணியை நடத்தி, இன்றைக்கு மிகுந்த உற்சாகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஆசிரியர் அய்யா அவர்களோடு என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்

அய்யா கவிஞர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, எழுச்சிமிகு ஊர்வலத்தைப் பார்வையிட்ட பிறகு, நான் ஆசிரியர் அய்யா அவர்களோடு என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.

புதிய இளைஞர்கள், குறிப்பாக முழக்கம் எழுப்பி வந்த வீரர்கள், வீராங்கனைகள் எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

பள்ளிப் பருவத்திலே என்னுடைய தந்தையாரோடு திருச்சியில் அய்யா பெரியார் அவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தைப் பார்த்தபொழுது, ஏற்பட்ட அந்த உணர்வு இன்றைக்கு எனக்கு ஏற்பட்டு இருக்கிறது.

என்னுடைய தந்தையார் மறைந்த எஸ்.சிவசுப்பிரமணியம்

இங்கே நண்பர் செந்தில் அவர்களும், அண்ணன் நீலமேகம் அவர்களும் குறிப்பிட்டார்கள். என்னுடைய தந்தையார் மறைந்த எஸ்.சிவசுப்பிரமணியம் அவர்கள், வழக்குரைஞராக அரியலூரில் பணியாற்றிய நேரத்தில், அய்யா பெரியாரை அழைத்து வந்து ஒரு மிகச் சிறப்பான மாநாட்டினை நடத்தினார்கள்.

இன்றைக்கு நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் கலந்துகொண்டிருக்கின்ற இந்த மாநாட்டிலே நானும் கலந்துகொள்வதை எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்.

என்னுடைய தந்தையார் அவர்கள் நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுக்குக் கல்லூரியில் இளையவர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள் சுற்றுப்பயணம் வருகின்ற நேரத்தில் எல்லாம் அவரோடு சென்று, அந்தப் பயணத்தில்தான் இருப்பார்கள் என்று, என்னுடைய தந்தையாருடைய நண்பர்கள் என்னிடத்திலே குறிப்பிடு வார்கள்.

அப்படி கல்லூரி காலத்திலிருந்து, பொது அரசியலுக்கு வரும்வரை திராவிடர் கழகத்தில் முழு நேரம் பணியாற்றி, அந்த உணர்வோடுதான் இன்றைக்கும் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அதேபோல, நம்முடைய சகோதரர் கண்ணன் அவர் கள் குறிப்பிட்டதைப்போல, அவருடைய தந்தையா ருக்குப் பிறகு இங்கே நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக் கின்றோம்

அமைச்சர் க.பொன்முடி,  மேனாள் துணைவேந்தர் சபாபதிமோகன்

ஆசிரியர் அய்யா அவர்கள், ஊர்வலத்தைப் பார்வை யிடுகின்ற மேடையில் இருக்கும்பொழுது சொன்னார்கள், அமைச்சர் பொன்முடியும்,  மேனாள் துணைவேந்தர் சபாபதிமோகன் அவர்களும் இதேபோல ஊர்வலத்தில் முழக்கம் எழுப்பி வந்தவர்கள்தான். இன்றைக்கு நம் முடைய பிரதிநிதிகளாக இருக்கிறார்கள் என்ற அந்த உணர்வோடு நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னார்கள்.

நேரிடையாக ஊர்வலத்தில் பங்கேற்காவிட்டாலும், மானசீகமாக உங்களோடுதான் இருக்கிறோம்

நாங்கள் தந்தையார் காலத்திலிருந்து திராவிட முன் னேற்றக் கழகத்தில் இருந்த காரணத்தினால், நேரிடையாக ஊர்வலத்தில் பங்கேற்காவிட்டாலும், மானசீகமாக உங் களோடுதான் இருக்கிறோம் என்பதை மீண்டும் வெளிப் படுத்தும் விதமாகத்தான் இன்றைக்கு நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கேற்கின்ற வாய்ப்பு - இந்த மாநாட்டில் பங்கேற்கின்ற வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றோம்.

இன்றைக்கு இந்த மாநாடு, இந்த ஊர்வலம் எந்த அளவிற்குத் தேவை என்பதை நாம் உணரவேண்டும்.

இந்தக் காலகட்டத்திலேயே நாம் இவ்வளவு எதிர்ப்பு களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். 

தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு முழக்கங்களை எழுப்பியபோது, எவ்வளவு எதிர்ப்புகளை, சனாதன சக்திகளின் எதிர்ப்புகளைச் சந்தித்திருப்பார். ஆதிக்கச் சக்திகளின் எதிர்ப்புகளைச் சந்தித்திருப்பார் என்பதை நாம் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு நாம் மானமுள்ள மனிதர்களாக விளங்குகின்ற வாய்ப்பு!

அப்படி அவர் உழைத்த காரணத்தினால்தான், இன்றைக்கு நாம் மானமுள்ள மனிதர்களாக விளங்குகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம்.

இதைக்கூட சட்டப்பேரவையில் நான் சொல்லுகின்ற பொழுது, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது, 2011  ஆம் ஆண்டு தொடக்கக் காலகட்டத்தில், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்பொழுது.

சட்டப்பேரவையில் இவ்வளவு பேர் தமிழர்கள் உள்ளே வருவதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் என்று சொன்னதைக் கூட நீக்கிய ஒரு காலகட்டமும் இருந்தது.

ஆனால், இன்றைக்கு ஒன்றிய அரசின் பிரதம அமைச்சர் வந்திருக்கின்ற மேடையில், இது திராவிட நாடு, இது ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று சொல்லுகின்ற முதலமைச்சர் தலைமையில் நாம் இருக்கின்றோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று, கடலூரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்ற பொழுது, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி அவர்களை வைத்துக்கொண்டு, அந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் சொன்னேன்,

இந்துத்துவா சித்தாந்தத்திற்கு,  மாற்று சித்தாந்தம் திராவிட சித்தாந்தம்தான்!

‘‘இன்றைக்கு ஒன்றிய அரசில், இரண்டாம் முறையாக பாரதிய ஜனதா வந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில், புதுவை உள்ளிட்ட 39 தொகுதிகளில் கழகக் கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது. இது எதை எடுத்துக்காட்டுகிறது என்றால், இன்றைக்கு இருக்கின்ற இந்துத்துவா சித்தாந்தத் திற்கு, மாற்று சித்தாந்தம் திராவிட சித்தாந்தம்தான் என்பதை நம்முடைய இந்திய ஒன்றியத்திற்கு எடுத்துக் காட்டுகின்ற வாய்ப்பாகத்தான் இது அமைந்திருக்கிறது.

எனவே, இந்திய ஒன்றியத்திற்கு இந்த மாற்று சித்தாந் தத்தை முழுவதும் கொண்டு செல்லுகின்ற பணிதான் இனி நம்முடைய கழகத் தலைவருக்கு இருக்கின்றது” என்று சொன்னேன். இன்றைக்கு அதுதான் நடைமுறைக்கு வந்திருக்கின்றது.

இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது

மாண்புமிகு தலைவர் தளபதி அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகு, எங்கே வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கே எல்லாம் ‘திராவிட மாடல்’, ‘திராவிட மாடல்’ என்று உச் சரித்து, இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.

நம்முடைய அய்யா பெரியாருடைய கொள்கையை இன்றைக்கு மற்றவர்கள்தாம் கற்கவேண்டும்; அதை தாம் உணரவேண்டும் என்கின்ற ஒரு சிந்தனைப் பிறந்திருக் கின்றது.

இந்த நேரத்தில்தான் திராவிடர் கழகத்தினுடைய பங் களிப்பு, மிக முக்கியமான ஒரு பங்களிப்பாக திகழ்கின்றது.

இங்கே நம்முடைய துணைப் பொதுச்செயலாளர் அவர்கள் உரையாற்றும்பொழுது குறிப்பிட்டார்கள், மாணவி அனிதா குறித்து, 

‘நீட்' தேர்விற்கு எதிராக தன்னுடைய இன்னுயிரை ஈந்தவர்  இந்த மண்ணின் புதல்வி அனிதா அவர்கள்.

திராவிடர் கழகம்  நீட் தேர்விற்கு எதிராக முதன்முதலாக நடத்திய போராட்டம்!

அந்த அனிதா, முதன்முதலாகப் போராட்டத்திற்கு வந்தது திராவிடர் கழகம்  நீட் தேர்விற்கு எதிராக நடத்திய அந்தப் போராட்டம் என்கிற வரலாற்றை இந்த நேரத்தில் நாம் உணரவேண்டும்.

இந்த மேடைக்குப் பின்புறமாகத்தான், நீட் தேர்விற்கு எதிராக திராவிடர் கழகத்தின் சார்பாக, மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டத்தில், அரியலூர் மாவட் டத்தில் என் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, அனிதாவினுடைய சகோதரர் தம்பி மணிரத்தினம், தன்னுடைய தங்கையை அழைத்து வந்து அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அந்த அனிதாவினுடைய போராட்டத்திற்குப் பிறகு தான், அனிதா போன்றவர்கள், பிளஸ் டூ வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம், நீட் தேர்வில் தோல்வி அடைகின்ற சூழல் ஏற்பட்டு இருக்கின்றது என்பதை நான் உணர்ந்து, வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தேன்.

அப்படி வெளியுலகத்திற்கு வந்த பிறகுதான், எல்லோரும் உணர்கின்ற சூழல்  - அனைத்துக் கட்சித் தலைவர்களும் உணருகின்ற சூழல் ஏற்பட்டது.

நீட் தேர்விற்கு எதிரான ஒரு பெரிய எழுச்சியை, தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது

திராவிடர் கழகம் நடத்திய அந்தப் போராட்டம்தான், நீட் தேர்விற்கு எதிரான ஒரு பெரிய எழுச்சியை, தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது என்பதை இந்த நேரத்தில் நாம் நினைவுகூரவேண்டும்.

எனவே, அரசியல் இயக்கமாக இல்லாமல், தேர்தலிலே போட்டியிடுகின்ற இயக்கமாக இல்லாமல், ஒரு சமுதாய இயக்கமாக இருக்கின்ற திராவிடர் கழகத்தினுடைய பங்கு, பணி எத்தகைய முக்கியம் என்பதை நாம் அதன்மூலமாக உணரவேண்டும்.

அதைத்தான் நம்முடைய கவிஞர் அவர்கள் இங்கே ஒரு தீர்மானத்தையும் குறிப்பிட்டார்கள். மிக முக்கியமான தீர்மானமாகும் அது.

நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்  எழுப்பியிருக்கின்ற வினா!

நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் எழுப்பியிருக்கின்ற அந்த வினா - ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று சொல்லுகின்றவர்கள், ஒரே ஜாதி என்று சொல்லுவார்களா? என்று எழுப்பியிருக்கின்ற வினா மிக முக்கியமான வினா.

இதற்குத்தான் திராவிடர் கழகத்தினுடைய பணி இன்னும் தேவை  - இனியும் தேவை என்பதை இந்த மாநாடு நமக்கு உணர்த்துகிறது. அதைத்தான் நம்முடைய தமிழர் தலைவர் பணி நமக்குத் தேவை என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.

எனவே, இங்கே கூடியிருக்கின்ற இளைஞர்கள், வந்திருக்கின்ற வீராங்கனைகளுக்கெல்லாம் நான் வைக்கின்ற அன்பு வேண்டுகோள்,

உங்களைச் சுற்றியிருக்கின்றவர்களை நீங்கள் அரசியல் மயப்படுத்துங்கள்; அவர்களுக்குப் பகுத்தறிவு கருத்துகளைப் புகட்டுங்கள்.

பகுத்தறிவுதான் முக்கியம் என்றார் முதலமைச்சர்!

அண்மையில் இரண்டு நாள்களுக்கு முன்பு, அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடியை வைத்துக்கொண்டே நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்,

என்ன கல்வி கற்றிருந்தாலும், பகுத்தறிவுதான் முக்கியம் என்று சொன்னார்கள்.

அந்த உணர்வைத்தான் நாம் மீண்டும் மீண்டும் புகட்டவேண்டிய இடத்தில் இருக்கின்றோம்.

இந்த மேடையில்கூட, சிவப்பு சட்டையோடு, நெற்றி யில் திருநீறோடு ஒருவர் அமர்ந்திருக்கின்றார். காங்கிரஸ் காரர், வெளி மாவட்டத்திலிருந்து வந்திருக்கின்றார்; அவர் பழுத்த ஆத்திகவாதி - பெரியவர் பாலகிருஷ்ணன்.

அவர் இந்த திராவிடர் கழகத்து மேடையில் வந்து அமர்ந்திருக்கின்றார் என்றால், திராவிடர் கழகத்தினுடைய தேவை என்ன என்பதை, அவரும் உணர்ந்திருக்கின்றார்; அவரைப் போன்றவர்களும் உணர்ந்திருக்கின்றார்கள்.

‘இந்து நாடு’ என்கிற மாய்மாலத்தை ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார்கள்

இதை உணராத சங்கிகள்தான், ஆதிக்கசக்திகள்தான், இந்துத்துவாவாதிகள்தான், தமிழ்நாட்டில், கோவிலுக்குப் போகிறவர்கள் எல்லாம் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள்; ஆத்திகவாதிகளாக இருக்கின்றவர்கள் எல்லாம் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்று நம்பி ஏமாந்து கொண்டு, இது இந்து நாடு, இந்து நாடு என்கிற மாய்மாலத்தை ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார்கள்.

ஒருக்காலும் அதை நடக்கவிடாமல் தடுக்கவேண்டிய இடத்தில் நாம் இருக்கின்றோம். அந்த பணி நமக்கு மிகப்பெரிய பணியாகக் காத்திருக்கின்றது.

நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு முறையும், புதிய முடிவுகளை எடுக்கும்பொழுதெல்லாம், பெரியார் திடலுக்குச் சென்று, நம்முடைய ஆசிரியர் அவர்களோடு கலந்தாலோசனை செய்துதான் அறிவிப்பார்கள்.

பலருக்கும், தலைவர் கலைஞர் அவர்களின் மறை விற்குப் பிறகு பெருத்த சந்தேகம் இருந்தது. தலைவர் கலைஞர் அவர்களைப்போன்று, திராவிட சித்தாந்தத்தில், பெரியாருடைய வழியில், நம் கழகத் தலைவர் தளபதி அவர்கள் நடைபோடுவாரா? என்கின்ற சந்தேகம் இருந்தது.

ஆனால், அவை அத்தனைக்கும் அழுத்தம் திருத்தமாக தொடர்ந்து பதில் கூறிக் கொண்டிருக்கின்றார் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி அவர்கள்.

திராவிடத்தை ஒருவரும் தொட்டுப் பார்க்க முடியாது!

இந்தத் திராவிடத்தை ஒருவரும் தொட்டுப் பார்க்க முடியாது என்று அவர் என்றைக்குக் குரல் கொடுத்தாரோ, அன்றிலிருந்தே பா.ஜ.க.விற்கு வேப்பங்காயை சாப்பிட் டதைப் போல, நம்முடைய முதலமைச்சரைக் கண்டால், ஆகாமல் போகின்ற சூழல்தான்.

எனவே, இன்றைக்கு இருக்கின்ற சூழலில், நாம் அதற்குக் கடுமையாகப் பணியாற்றவேண்டும்.

ஊர்வலத்திலே தீச்சட்டியை ஏந்தி வந்த தோழர்கள், ஆசிரியர் அய்யா அவர்களிடம் அந்தத் தீச்சட்டியை அளித்தார்கள். அந்தத் தீச்சட்டி, இடறிவிடக் கூடாது என்பதற்காக நான் கைகொடுத்தேன். 

‘‘தீச்சட்டியில் நீங்கள் கை வைக்கவேண்டாம்’’ என்றார் ஆசிரியர்!

ஆசிரியர் அய்யா அவர்கள் சொன்னார், இதில் நீங்கள் கை வைக்காதீர்கள், நீங்கள் இப்பொழுது அமைச் சர்; இதற்கு முன்பு இருந்தது வேறு; அமைச்சராக இருந்து பணியாற்றவேண்டிய பல்வேறு பணிகள் இருக்கின்றன. ஆகவே, நீங்கள் கை வைக்கவேண்டாம் என்று சொன்னார்கள்.

திராவிடர் கழகத்து வீட்டுப் பிள்ளைகளாகத்தான் நாங்கள் இருக்கின்றோம்!

இதற்கு நேற்றைக்கு நான் ஒரு பதில் சொல்லியிருக்கிறேன்.

நம்முடைய தோழர்கள், இளைஞரணி மாநாட்டிற்காக சிவன் கோவில் சுவரில் விளம்பரம் எழுதியிருந்தார்கள். அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து எழுதுகிறார்கள்; சுவரில் விளம்பரம் எழுதிய திராவிடர் கழகத் தோழரைக் குறித்து கண்டனத்தில் தெரிவிக்கவில்லை; திராவிடர் கழகத்தைக் குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த விளம்பரத்தை உடனே அகற்றாவிட்டால், சிவசங்கர் வீட்டை முற்றுகை யிடுவோம் என்று அவர்கள் மிகத் தெளிவாக அறிவித் திருக்கிறார்கள் என்றால், இங்கே கண்ணன் குறிப்பிட்ட தைப்போல, திராவிடர் கழகத்து வீட்டுப் பிள்ளைகளாகத் தான் நாங்கள் இருக்கின்றோம் என்பதற்குத்தான் இது அடையாளம்.

கடவுள் மறுப்பாளனாக, சனிக்கிழமையன்று திரு மணம் செய்துகொண்டவனாக என்னை ஏற்றுக்கொண்டு தான், இந்தத் தொகுதி மக்கள் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக என்னை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

மக்களைப் பொறுத்தவரை....

மக்களைப் பொறுத்தவரை அவர்கள் கடவுள் மறுப்பாளன் - கடவுள் எதிர்ப்பாளன் என்றெல்லாம் பார்ப்பதில்லை. மக்களுக்கான பணிகளை செய்கிறார்களா என்று பார்த்துத்தான் வாக்களிக்கிறார்கள். அதற்கு மிகப்பெரிய சாட்சி, தலைவர் கலைஞர் அவர்கள். அய்ந்து முறை முதலமைச்சர் - 13 முறை தொடர்ந்து தோல்வியே பார்க்காத, வெற்றியையே மட்டும் பார்த்த ஒரு மகத்தான தலைவர்.

எனவே, அந்த தைரியத்தோடு, நாங்கள் தொடர்ந்து இந்தப் பணியிலே எங்களை ஈடுபடுத்திக் கொள்வோம்.

இந்தியத் துணைக் கண்டத்தை இந்துத்துவா விழுங்கத் துடிக்கின்ற நேரம்!

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், இந்த இந்திய தீபகற்பத்தை, இந்தியத் துணைக் கண்டத்தை இந்துத்துவா விழுங்கத் துடிக்கின்ற நேரம்.

எப்படியாவது தமிழ்நாட்டில் அவர்கள் உள்ளே நுழைந்து பிடித்துவிடலாம் என்று துடிக்கின்ற நேரம்.

இதை ஒட்டுமொத்தமாகத் தடுத்து நிறுத்தவேண்டிய பணி, தமிழ்நாட்டைச் சேர்ந்த நமக்குத்தான் இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இருக்கலாம்; பல்வேறு மாநிலங்களில் இருக்கலாம்; அந்த மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக பல்வேறு கட்சிகள் இருக்கலாம்.

ஆனால், பா.ஜ.க.வை கொள்கை ரீதியாக எதிர்க்கின்ற ஒரு இயக்கம் என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான் இன்றைக்கு இருக்கின்ற இயக்கம்.

அது மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜியின் இயக்கமாக இருந்தாலும், லாலுபிரசாத் யாதவ் இயக்கமாக இருந்தாலும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அகிலேஷ் யாதவினுடைய இயக்கமாக இருந்தாலும், பா.ஜ.க.விற்கு எதிராக இருக்கலாம்.

கொள்கை ரீதியாக, இந்துத்துவாக் கொள்கைக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம்!

ஆனால், கொள்கை ரீதியாக, இந்துத்துவாக் கொள் கைக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம்; மதவாத சக்திகளுக்கு எதிராக நாங்கள் நிற்கின்றோம்; மதச்சார்பின்மையைக் காப்பதற்காக நாங்கள் நிற்கின்றோம் என்று துணிந்து அறிவித்து, செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தலைவராக நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி  அவர்கள்தான் இருக்கிறார்கள்.

ஆசிரியர் அய்யா அவர்கள் வழியில்தான் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்!

எனவே, அவருடைய வழியிலே, இன்றைக்கு நாம் தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், ஆசிரியர் அய்யா அவர்கள் எந்த கொள்கையை முன்னிறுத்தி செயல்படுகிறாரோ, அந்த வழியில்தான் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

நாம் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்!

எனவே, வந்திருக்கின்ற தோழர்களுக்கு நான் வைக்கின்ற வேண்டுகோள்,

இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நம்முடைய தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற முதலமைச் சராகத் திகழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த வேளையில், நாம் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து முன் னெடுக்கவேண்டும்.

அய்யா ஆசிரியர் அவர்களும்,  மேடையில் அமர்ந்து பேரணியைப் பார்க்கின்றபொழுது, திரும்பத் திரும்பச் சொன்னார்கள்; “நம்முடைய பிரச்சாரத்தை நாம் தொடர்ந்து எடுத்துச் செல்லவேண்டும். பொதுக்கூட் டங்கள் வாயிலாக, தெருமுனைப் பிரச்சாரங்கள் வாயிலாக தொடர்ந்து நாம் நம்முடைய கருத்துகளை மக்களிடத்திலே சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்“ என்று வலியுறுத்தினார்கள்.

அவர்களை முறியடிக்கவேண்டும் என்றால், நம்முடைய பிரச்சாரம்தான் முக்கியம்!

காரணம், இன்றைக்கு எதிரணியில் இருக்கின்றவர்கள், ஒன்றிய அரசினுடைய ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு, பெரும் பணத்தை கையில் வைத் துக்கொண்டு, தங்களுடைய இயக்கத்தில் ரவுடிகளை இணைத்துக்கொண்டு, அதன்மூலமாக அச்சுறுத்தல் மூலமாக, பணத்தின் மூலமாக தங்களுடைய இயக்கத்தை வளர்க்கலாம்; மற்றவர்களை மிரட்டலாம் என்று எண்ணியிருக்கின்ற சூழல்.அவர்களை முறியடிக்கவேண்டும் என்றால், நம்முடைய பிரச்சாரம்தான் முக்கியம்.

இல்லாத பொய்யை, அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.  எப்படியாவது ஒரு நாள் அந்தப் பொய் உண்மையாகிவிடும் என்கின்ற நம்பிக்கையில்.

நாம் உண்மையைத்தான் சொல்கிறோம்.

நாம் சொல்லுகின்ற உண்மையை, மக்களுக்குத் திரும்பத் திரும்ப அழுத்தி வலியுறுத்திச் சொல்லவேண்டிய கட்டாயம் இன்றைக்கு இருக்கிறது.

அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்தவரை இன்றைக்குப் பிதற்ற விடுகிறார்கள்!

அவர்கள் புதிது புதிதாக ஆட்களைப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள்; சினிமாவிலிருந்து ஆளைக் கொண்டு வருவது எடுபடவில்லை என்றவுடன், அய். பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவரைக் கொண்டு வந்து, இன்றைக்கு அவரைப் பிதற்ற விடுகிறார்கள்.

என்ன பேசுகிறோம்? ஏது பேசுகிறோம்? என்று தெரியாமல், ஒரு மாநில பா.ஜ.க. தலைவர் - அய்.பி.எஸ். படித்தாரா? படிக்கவில்லையா? என்று ஒரு சந்தேகம் வருகின்ற அளவிற்கு இன்றைக்கு அவர் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்.

வட இந்தியாவில்தான் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி, மக்களை ஏமாற்ற முனைவார்கள். அதே பணியைத்தான் இன் றைக்கு இங்கே இருக்கின்ற அந்தக் கூட்டம் முனைகிறது.

அவர்கள் முன்னெடுக்கின்ற பிரச்சாரத்தை நாம் முறியடிக்கவேண்டும் என்றால், நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுடைய வழியிலே செயல்பட வேண்டும்.

ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து எழுதுகின்ற செய்தி, மக்களை வந்து சேரும்!

இங்கே விடுதலை பத்திரிகைக்காக 60 ஆயிரம் சந்தாக்கள் சேர்க்கின்ற பணியை சொல்லியிருக்கின்றா கள். அதை முழு மூச்சாக நாம் கொண்டு சேர்க்கவேண்டும். கீழே இருக்கின்ற இளைஞர்களுக்கு அதைக் கொண்டு சேர்த்தால்தான், ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து எழுது கின்ற செய்தி, மக்களை வந்து சேரும்.

அரசியல் ரீதியாக மாத்திரமல்லாமல், பகுத்தறிவு ரீதியாக, அறிவியல் ரீதியாகத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தை முன்வைக்கின்ற நம்முடைய ஆசிரியருடைய அந்த செய்திகளை மக்களிடத்திலே கொண்டு சேர்ப்பதற்கு, முதலில் நாம், நம் வீட்டுப் பிள் ளைகள், நம் அக்கம் பக்கத்தில் இருக்கின்ற நம்முடைய நண்பர்கள், புதிய இளைஞர்களிடம் விடுதலை பத்திரி கையை கொண்டு சேர்க்கின்ற பணியை செய்யவேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, விடைபெறு கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment