முதலமைச்சரும், பிரதமரும் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் உரைகளைக்கொண்டு கூட்டணி மாறுகிறது என்று விஷமப் பிரச்சாரம் செய்வதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 1, 2022

முதலமைச்சரும், பிரதமரும் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் உரைகளைக்கொண்டு கூட்டணி மாறுகிறது என்று விஷமப் பிரச்சாரம் செய்வதா?

''எங்கள் கூட்டணி கொள்கைக் கூட்டணி-அது தொடரும்'' என்ற முதலமைச்சரின் உறுதியான கருத்து வரவேற்கத்தக்கது!

'மலையாள மனோரமா நியூஸ்' காணொலி வழி 

முதலமைச்சர் அளித்த பேட்டிபற்றி தமிழர் தலைவர் அறிக்கை

முதலமைச்சரும், பிரதமரும் பங்கேற்ற நிகழ்ச்சி களின் உரைகளைக்கொண்டு கூட்டணி மாறுகிறது என்று விஷமப் பிரச்சாரம் செய்வதா? எங்கள் கூட்டணி கொள்கைக் கூட்டணி - அது தொடரும் என்ற முதலமைச்சரின் உறுதியான கருத்து வரவேற்கத்தக்கது! 'மலையாள மனோரமா நியூஸ்' காணொலி வழி முதலமைச்சர் அளித்த பேட்டிபற்றி  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 30.7.2022 (இரண்டு நாள்களுக்கு முன்பு) சென்னையிலிருந்து திருச்சூரில் (கேரளாவில்) ‘‘மலையாள மனோரமா நியூஸ்'' சார்பில் நடைபெற்ற ‘‘இந்தியா-75'' என்ற தலைப்பிலான காணொலிக் காட்சி வாயிலாக  நிகழ்த்திய ஓர் உரை, பிரபலமான, மலையாள ஏட்டின் கருத்தரங்க உரை என்பதையும் தாண்டி, ஆழமான ஜனநாயகப் பாதுகாப்பு, அரசியல் சட்டப் பாதுகாப்பு, இந்திய நாட்டின் ஒற்றுமைக்கான வழிமுறைகள் - இவற்றிற்காகச் செய்ய வேண்டிய ஒன்றிய அரசின் கடமைகளை நினைவூட்டி, வலியுறுத்திய கருத்தியல் விளக்க ஆய்வு போன்றதொரு சிறப்புக் கொள்கைப் பிரகடன உரையாகும்!

ஒரு கல்லில் ‘பல மாங்காய்' அடித்த சாதுரியத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில், சிந்திக்கும் எவரும் உணரலாம்.

'தீய சக்தி'களுக்கு நாம் ஒருபோதும் 

இடமளிக்கக் கூடாது!

1. ‘‘பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு. ‘ஒன்றியம்' (Union) என்பது தவறான சொல் அல்ல; அரசமைப்புச் சட்டம் இந்தியாவை வரை யறுக்கப் பயன்பட்டதுதான்.

2. இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழியாக ஆக முடியாது. காரணம், இந்தியாவில் பல மொழிகள் உண்டு.

எப்படி எல்லோருக்கும் ஒரே மதம் இருக்க முடி யாதோ (காரணம் பல மத வழிபாட்டு முறைகள் உள்ளன) அதுபோன்றுதான்.

3. ஒற்றை மொழியை - ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள்.

இந்தத் தீய சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடம் அளிக்கக் கூடாது.

4. வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை. வலிமையான - வசதியான - தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களால் இந்தியாவுக்குப் பயன்தானே தவிர, குறைவு ஏற்படாது!

எடுத்துக்காட்டாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடாக இருப்பதால், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும்தானே நன்மை கிடைக்கிறது!

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில், தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு.

தமிழ்நாட்டின் பங்கு என்பது இந்தியாவுக்குத்தானே நன்மை?

மாநிலங்கள் தன்னாட்சி உரிமை 

கொண்டவையாக இருக்கவேண்டும்

5. மாநில அரசுகள் மிகச் சிறப்பாக மாநிலங்களை நடத்தி வருவதால், ஒன்றிய அரசு பலம் அடையுமே தவிர, பலவீனம் அடையாது.

இன்னும் சொல்லப்போனால், மக்களோடு நேரடி யாகத் தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள்தான்! மக்களின் அன்றாடத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. எனவே, மாநில அரசுகளைத் தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மாநிலங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இருக்கவேண்டும்.''

தெளிவுமிக்க, துல்லியம் மிகுந்த இந்த உரை, இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் ஆளுகின்ற முதலமைச்சர்களின் மனச்சான்றுப்படியான கருத்து முழக்கமாகவே அமைந்தால், அதுதான் இந்தியாவை வலிமை மிக்கதாக ஆக்கும் என்பதை பொதுவானவர்கள் எவரும் சரியாக மதிப்பிட்டுக் கூறுவர் என்பது திண்ணம்.

நமது முதலமைச்சரின் பதில் 

வரவேற்கத்தக்கது!

அங்கே கேள்வி கேட்டபோது, அந்த செவ்வி(பேட்டி)யில் இரண்டு, மூன்று நாட்களுக்குமுன் உலக ஒலிம்பி யாட் செஸ் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகை தந்தபோது, அவரை முறைப்படி வர வேற்று கடமையாற்றியதை வைத்துக்கொண்டு, உடனடி யாக சில விஷமத்தனத்தின் வித்துகளை விதைக்க விதண்டாவாத ஏட்டினர், ‘பி.ஜே.பி.யுடன் தி.மு.க. கூட்டணி' அமைக்குமா? என்று சந்தேகம், குழப்பத்தை - கூட்டணிக் கட்சிகளிடையேயும், அப்பாவி மக்களிட மும் பரப்ப முனைந்திருப்பதை முளையிலேயே கிள்ளி எறிகிற முறையில், நமது முதலமைச்சர் ஆணி அடித்த பதிலைச் சொல்லியுள்ளது மிகவும் வரவேற்கத்தகுந்தது!

‘‘தமிழ்நாட்டில் உள்ள எங்கள் கூட்டணி ஒரு கொள்கைக் கூட்டணி - லட்சியக் கூட்டணி. எப்போதும் போல தொடரும்'' என்று திட்டவட்டமாகத் தெளிவு படுத்தியுள்ளார்!

முதலமைச்சரின் உரை - கொள்கை விளக்க 

மாநில உரிமைச் சாசன உரை

பிரதமருக்குத் தந்த வரவேற்பு என்பது ஒரு முதலமைச்சர் (ஒருமுறை) உரிமைக்குக் குரல் கொடுத்து, (மறுமுறை) உறவுக்குக் கைக்கொடுப்பதும் இயல்பான கடமையாற்றுதலே தவிர, முன்பு எதிர்த்து முழங்குவ தாகவோ அல்லது இப்போது வளைந்து நெளிவதாகவோ யாரும் பார்க்கவேண்டியதில்லை.

தமிழ்ப் பண்பாடுபற்றி காட்சி விளக்கங்கள் - அண்ணா  பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா உரையில்  இரண்டும் ஒருசேர இருந்ததை பார்க்க ஏனோ தவற வேண்டும்?

எனவே, முதலமைச்சரின் உரை  கருத்தாழமிக்க உரை மட்டுமல்ல - கொள்கை விளக்க மாநில உரிமைச் சாசன உரையும் போன்றதாகும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.8.2022


No comments:

Post a Comment