நீட் தேர்வில் தொடர் மோசடி - ஒப்புக் கொண்ட சிபிஅய் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

நீட் தேர்வில் தொடர் மோசடி - ஒப்புக் கொண்ட சிபிஅய்

மதுரை, ஆக.30 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க ஃபேஸ் டிடெக்டர் முறையைக் கையாளலாம் என சிபிஅய் யோசனை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷித் கைது செய்யப்பட்டார். இவர் பிணை கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக பல்வேறு மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. என் பெயரை தவறுதலாக சேர்த்துள்ளனர். எனக்கு பிணை வழங்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீட் தேர்வில் முறைகேடு மற்றும் ஆள்மாறாட்டம் தடுக்க நவீன முறைகளைக் கையாள்வது குறித்து சிபிஅய் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ரஷீத்தின் மனு நீதிபதி நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஅய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நீட் தேர்வு மய்யத்தில் தேர்வு எழுத வருவோர் ஒவ்வொருவரையும் காட்சிப் பதிவு செய்ய வேண்டும். தேர்வு மய்ய கண்காணிப்பாளர், தேர்வரின் ஒளிப்படமும், அனுமதி சீட்டில் உள்ள ஒளிப்படமும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.விண்ணப்பிக்கும்போது பதிவு செய்யப்படும் கண் விழித்திரை பதிவு, கைரேகை பதிவை தேர்வு மய்யத்திலும், கலந்தாய்வின் போதும் சரிபார்க்க வேண்டும். 'ஃபேஸ் டிடெக்டர்' முறையை பயன்படுத்தி நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கலாம், தேர்வு மய்யங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து சோதனை முறைகளை எளிதாக்கி கண்காணிப்பை தீவிரப்படுத்தலாம்.

ஆதார் அமைப்புடன் இணைந்த ஒருங்கிணைந்த நீட் தேர்வு டேட்டா மய்யம் அமைக்கலாம். இதனால், ஆதார் மற்றும் பயோமெட்ரிக் ஒப்பீட்டுக்கு உதவியாக இருக்கும். தேர்வர்களின் ஒளிப்படங்கள், ஆவணங்களை ஆய்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க தேர்வு மய்ய பணியாளர்கள், கலந்தாய்வு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

7ஆண்டுகளாக மோசடியாக நீட் தேர்வு  தொடர்ந்து நடக்கிறது, மோசடிகளை இனிமேல் தான் தடுக்கப் போகிறார்களாம்! மோசடிமூலம் ஆயிரக்கணக்கானோர் மருத்துவர் ஆகியுள்ளனரே அவர்களை என்ன செய்யப்போகிறார்கள்.


No comments:

Post a Comment