பிள்ளையார் ஊர்வலமா? அரசியல் ஆயுதமா? மத சம்பந்தப்பட்ட வழக்குகளையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். உணர்வுள்ள ஒரு நீதிபதியிடமே அனுப்புவானேன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

பிள்ளையார் ஊர்வலமா? அரசியல் ஆயுதமா? மத சம்பந்தப்பட்ட வழக்குகளையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். உணர்வுள்ள ஒரு நீதிபதியிடமே அனுப்புவானேன்?

பிள்ளையார் ஊர்வலத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது சரியா? குறிப்பிட்ட மத சம்பந்தம்பற்றிய வழக்குகளையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை உடைய குறிப்பிட்ட நீதிபதியிடமே விசாரணை செய்ய அனுப்புவதன் பின்னணி என்ன? என்ற வினாவை எழுப்பி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

பிள்ளையார் சதுர்த்தி என்பது முன்பெல்லாம் வெறும் பக்திக்காகத்தான் கொண்டாடப்பட்டது.

பிள்ளையார் ஊர்வலமும் - அரசியல் நோக்கமும்!

சனாதனத்தை அரசியலில் புகுத்தி, பிரிட்டிஷ் அரசின் பிளேக் தடுப்பு முயற்சியைக்கூட அரசியல் மூல தனமாக்கி, வைதீகத்தை நிலைநாட்டினார் பாலகங்காதர திலகர். பாமர மக்களிடையே, ‘‘மராத்தியத்தில் பெண் களைப் படிக்க வைத்தால் அவர்கள் பிறருடன் ஓடிவிடுவர்'' என்ற அரிய வாதத்தினைக்(?) கூறி, ஜோதிபாபூலே போன்றவர்களின் சமூக சீர்திருத்தத்திற்கு எதிராக வாதாடியவர் பாலகங்காதர திலகர் என்ற இந்த மராத்திய சித்பவன் பார்ப்பனர்! பிள்ளையார் அரசி யலைத் தொடங்கியவர் அவர்!

முன்பு பக்திக்குப் பயன்பட்ட பிள்ளையார் ஆர்.எஸ்.எஸ்.காரர்களால், இப்போது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது நாடறிந்த உண்மையாகும்!

2 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கும் களிமண் பிள்ளையார் சிலைகளை விலைக்கு வாங்கி வந்து, அதனை வீட்டில் வைத்து கும்பிட்டுவிட்டு, பிறகு கிணற்றிலோ, குளத் திலோ போட்டுவிடும் பழக்கம் பக்திக்காரர்களுக்கு அன்றுமுதல் இன்றுவரை.

ஆனால், இதே பிள்ளையார் இன்று பக்திக்குப் பதிலாக, அரசியல் கட்சி, மத வெறுப்பினைப் பரப்ப, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டிலும் மதக் கலவரத்தைத் தூண் டும் அரசியல் ஆயுதமாக பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸை வளர்க்கவே ஒரு கோடி ரூபாய் செலவில் பிள்ளையார் சிலைகள் தமிழ்நாட்டை ‘‘ஆக்கிரமிக்கின்றன;'' இது பிள்ளையார் அரசியல் - அரசியல் கட்சிகளை அச்சுறுத்த ஒரு புது வழி!

நமக்கு ஏற்படும் அய்யங்கள்!

இதனையொட்டிய இரண்டு முக்கிய செய்திகள், தகவல்கள் வெளிவந்துள்ளன.

1. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்

விநாயகர் சதுர்த்தி வழக்குகளை 

விசாரிக்க தனி நீதிபதி நியமனம்!

‘‘விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை மற்றும் பேரணி தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனி நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆக.31-ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யவும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அனுமதி கோரி உயர்நீதிமன்றக் கிளை யில் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த கோரிக்கைக்காக ஆட்சியர் மற்றும் வருவாய் அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து ரிட் மனுவாகவும், போலீஸாரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து குற்றவியல் மனுக்களாகவும் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால் விநாயகர் சதுர்த்தி தொடர்பான மனுக்கள் இரு வேறு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்படு கின்றன. இரு நீதிபதிகளும் வெவ்வேறான உத் தரவு பிறப்பிக்கும்போது அந்த உத்தரவை நிறை வேற்றுவதில் வருவாய்த் துறைக்கும், காவல் துறைக்கும் இடையே நிர்வாக ரீதியான பிரச் சினைகள் ஏற்படுகின்றன.

இதனால் விநாயகர் சதுர்த்தி தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒரே நீதிபதி விசாரிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷிடம் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், உயர்நீதிமன்றக் கிளையில் குற்ற வியல் நடைமுறைச் சட்டம் 482-ன்கீழ் தாக்கல் செய்யப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் விநாயகர் சிலை பிரதிஷ்டை தொடர்பான மனுக் களை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது.

2. இதற்கான சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சம்பந்தமாக கீழ்க்காணும் தகவல் ஆணை (Notification)  மதுரையில் உள்ள சென்னை உயர்நீதி மன்றக் கிளையின் பதிவாளர்மூலம் வெளியிடப் பட்டுள்ளது.''

- ‘இந்து தமிழ்த்திசை', 28.8.2022, மதுரை பதிப்பு

NOTIFICATION NO. 220/JUDL/2022

''It is hereby notified that Criminal Original Petitions filed under section 482 Cr.P.C in respect of matters relating to 'Vinayagar Chaturthi Processions and Installation of Idols', will be listed before the Hon'ble Mr.Justice G.R.Swaminathan, with effect from 26.08.2022.''

//BY ORDER //

MADURAI BENCH OF N.VENKATAVARADAN

MADRAS HIGH COURT REGISTRAR (JUDICIAL) 

DATED: 26.08.2022

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில், விநாயகர் சதுர்த்தி வழக்குகளை விசாரிக்க தனி நீதிபதியை நியமித்து, தலைமை நீதிபதி அறிவிப்பு ஏதும் வெளியிட வில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலே கண்ட தகவல்கள் அடிப்படையில், நமக்கு சில அய்யங்கள் ஏற்படுகின்றன. நமக்கு மட்டுமல்ல, அண்மைக்காலங்களாக அங்கே நடைபெற்ற சில வழக்குகளில் இதற்கென எல்லா வழக்குகளையும் ஒரே நீதிபதியே விசாரிக்க வேண்டி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஏன் கேட்டார்? அது தமிழ்நாடு அரசையோ, சட்டத் துறையையோ, காவல்துறையின் தலைமை யையோ அல்லது ஆட்சிக்குரிய தலைமைச் செயலாளர் அவர்களையோ, சட்ட அமைச்சரையோ கலந்து பேசாமல் - உணர்ச்சி, சர்ச்சைகளையும் - சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும் உண்டாக்கும் இதில், எப்படி நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்தார் என்பது நமக்கும், நம்மைப் போன்ற மதச்சார்பின்மை கொள்கையாளர்களுக்கும் விளங்காததாக இருக்கிறது!

குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பான வழக்குகள் எல்லாம் ஒரே நீதிபதியிடம் அனுப்புவானேன்?

அடுத்து, இதற்கான அறிவிப்பு ஆணையை, நிர்வாகப் பொறுப்பில் உள்ள மூத்த நீதிபதி மாண்புமிகு பி.என்.பிரகாஷ் அவர்கள், விநாயகர் சதுர்த்தி சம்பந்த மாக அந்த கிளைப் பிரிவில் ஏற்படும் வழக்குகளை (குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482 கிரிமினல் குற்ற வழக்குகள்) மாண்புமிகு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களே விசாரிப்பார் என்று வெளியிட்டு, அது 26.8.2022 முதலே அமல்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

அதே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், இத்தகைய கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்கென்றே ஒரு நீதிபதி பொறுப்பில் உள்ளார். (மாண்பமை ஜஸ்டிஸ் சிவஞானம் அவர்கள் என்று அறிகிறோம்) (Portfolio Judge) அவரிடமிருந்து அதை மாற்றிட ஒரே நீதிபதியிடம் விநாயகர் சதுர்த்தி சிலைகள் ஊர்வலம் பற்றியும் வரும் வழக்குகளை போட சொல்லப்பட்ட காரணம் சரியா?

பல வழக்குகள் வந்தால், அவை ஒரே மாதிரியா னவையா? வெவ்வேறு சூழல், வெவ்வேறு நடப்புக்காகத் தானே, தன்மையானதாகவோ தானே இருக்க முடியும்?

இந்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மாண்புமிகு ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் இதற்குமுன் கொடுத்த தீர்ப்புகளில், குறிப்பாக ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட பல வழக்குகளில் எழுதிய தீர்ப்புகள் சர்ச்சைக்குரியதாகவும், தான் முந்தைய அமர்வில் மாற்றப்படுவதற்கு ஒரு நாள் முன்புகூட, அவசரமாக உடனே விசாரித்து, உடனே ஜாமீன் என்றெல்லாம் தந்து பலவகை விமர்சனங்களுக்கு ஆளான நீதிபதி அல்லவா?

ஆர்.எஸ்.எஸ். உணர்வாளர்

காரணம் வெளிப்படை. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். உணர்வாளர். வழக்குரைஞராக இருக்கும்போது அவர் எந்தக் கொள்கையை உடையவராக இருந்தாரோ நீதிபதி யான பிறகும், அதே உணர்வுடன் தீர்ப்புகள் ஒரு சார்பாகவும், தேவையற்று பெரியாரைப்பற்றியும், மற்றவர்பற்றியும் வலிந்து எழுதப்பட்ட குற்றச்சாற்றுகளில் மக்கள் மன்றத்தில் விமர்சிக்கப்பட்டவர்.

நீதிபதியான பிறகு, தனது உணர்வை வெளியே அப்பட்டமாகக் காட்டிக் கொள்ளும் வகையில், இப்படி நடந்துகொண்ட ஒருவரிடம் வழக்குகள், அதுவும் ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வழக்குகள் போடப்பட்டால், அதில் சரியான நியாயம் கிடைக்குமா? அரசின், காவல் துறையின் நடவடிக்கைகளை முடக்க இப்படி ஒரு திட்டம்.

தற்போது சென்னை உயர்நீதிமன்ற உயர்ஜாதி நீதிபதிகளின் எண்ணிக்கை நாளும் கூடி வருவதோடு, ஆர்.எஸ்.எஸ். தகுதியே பிரதானமாகி நியமனம் பெறும் நிலையும் வரும் (செப்டம்பரில்) ‘வளர்பிறையாகிறது.' அதனால், சமூக அநீதியே ஏற்படக்கூடும்.

மற்றொன்றும் கூட முக்கியம். இன்னும் சில நாள்களில் அமர்வுகளும் மாறக்கூடிய நிலையிலும், தலைமை நீதிபதி ஓய்வு பெறவிருக்கும் நிலையிலும், அவசர அவசரமாக - வழக்குகளே அது சம்பந்தமாக வராத நிலையிலும், ஏன் இதில் இவ்வளவு வேகம் - இந்த பிள்ளையார் வழக்குகளில் ஏன்?

மனச்சாட்சி உள்ளவர்கள் பதில் கூறவேண்டும்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.8.2022

No comments:

Post a Comment