அதிகரிக்கும் பாலியல் வல்லுறவு நிகழ்வுகள் ‘பாலியல் கல்வி’ தான் ஒரே தீர்வு மேனாள் நீதிபதி எஸ்.விமலா கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

அதிகரிக்கும் பாலியல் வல்லுறவு நிகழ்வுகள் ‘பாலியல் கல்வி’ தான் ஒரே தீர்வு மேனாள் நீதிபதி எஸ்.விமலா கருத்து

சென்னை, ஆக.23 இந்தியாவில் ‘போக்சோ’ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும்,பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு நிகழ் வுகள் நாள்தோறும் அதிகரித்து வருவதற்கு காரணம் சட்டம் பற்றிய சரியான புரிதல் இல்லாததே என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டு கின்றனர். அதேநேரம் ‘பாலியல் கல்வி தான் இதற்கு ஒரே தீர்வு’ என்கிறார் உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.விமலா.

கடந்த 1972ஆ-ம் ஆண்டு இந் தியாவில் சிறைக்காவலில் இருந்த மதுரா என்ற பழங்குடியினப் பெண், மகாராட்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்நிலைய வளா கத்தில் 2 காவலர்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களை உச்சநீதி மன்றம் விடுவித்த பிறகு, பொது மக்கள் நடத்திய போராட்டத் தால் குற்றவியல் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

போக்சோ சட்டம் 2012

அதேபோல கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில்நடந்த நிர்பயா பாலியல் வல்லுறவு நிகழ்வுக்குப் பிறகே பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ‘போக்சோ சட்டம் -2012’ பற்றிய விழிப் புணர்வு அதிகம் ஏற்பட்டது.ஆனால் நிர்பயா வழக்கில் கைதான 4 குற்ற வாளிகளும் தூக்கிலிடப்பட்ட பிறகும், இந்தியாவில் பாலியல் வல் லுறவு நிகழ்வுகள் குறைந்துள்ளதா என்றால் கேள்விக்குறியே மிஞ்சுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப் பகத்தின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தினமும் பெண்களுக்கு எதிராக 95 பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அரங்கேறி வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுவே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தினமும் 100-அய்த் தாண்டுகிறது.

கடந்த 2020இ-ல் மட்டும் நாடு முழுவதும் 73 ஆயிரத்து 721 பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 47 ஆயிரத்து 876 பேர் சிறுமிகள். 25 ஆயி ரத்து 845 பேர் வளரிளம் பருவத்தினர்.

அதேபோல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக கடந்த 2020இ-ல் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 531 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக்காக மட்டும் 38.8 சதவீத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2020 கணக்கெடுப்பின்படி நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 558 பாலியல் வல்லுறவு வழக்குகளில் 3 ஆயிரத்து 814 பேருக்கு மட்டுமே சட்டரீதியாக தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண் டரை வயது பெண் குழந்தைக்கு எதிரான ஒரு பாலியல் வழக்கில் ‘செமன்’ என குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘செம்மண்’ என காவல் துறையினர் ஆங்கிலத்தில் தவறு தலாக ஆவணங்களில் குறிப்பிட்ட தால், அதைப் பயன்படுத்தி குற்ற வாளி தண்டனையில் இருந்து தப்ப, அந்தத் தவறை உயர் நீதிமன்றம் சரிசெய்து குற்றவாளிக்கு சிறை தண்டனை விதித்தது.

ஒருவேளை அந்த பாதிக்கப் பட்ட குழந்தையின் தாயார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் திருக்காவிட்டால் அந்த குற்ற வாளிக்கு தண்டனை கிடைத்து இருக்காது. இதுபோல சட் டத்தில் உள்ள முரண்பாடுகள் அவ்வப் போது குற்றவாளிகளுக்கு சாதக மாகி விடுகிறது.

இந்தியாவில் சட்டங்கள் கடுமை யாக இருந்தும், அதற்கான உள் கட்டமைப்புகள் இருந்தும் சட்டம் பற்றிய புரிதல் படித்தவர்கள் மத்தி யிலும் சரியாக இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.விமலா கூறியதாவது:

பொதுமக்களிடம், சட்டம் பற்றிய புரிதல் இல்லை என ஒரேயடியாகக் கூறிவிட முடியாது. இதுபோன்ற வழக்குகளில் அரசு அதிகாரிகளின் பங்களிப்பு என்ன என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட வர்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கும், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கும் நீதிபதி களுக்கு நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

அடிப்படையிலேயே தவறு

மற்ற வழக்குகளைப் போல, பாலியல் வழக்குகளில் அரசு மருத் துவர்கள், காவல்துறை அதிகாரிகள் செயல்படக் கூடாது. 

ஆனால் போக்சோ சட்டம் ஜீரோ முதல் 18 வயது பெண்கள் வரை அனை வரையும் ஒன்றாக பாவிக்கிறது. உலகமே என்ன வென்று தெரியாத ஜீரோ வய தையும், உலகத்தை அறிந்து கொள்ளும் 18 வயதையும் இந்தச் சட்டம் ஒன்றுதான் எனக் கூறு கிறது. அது அடிப்படையிலேயே தவறானது.

பெண்களுக்கு 7 பருவங்கள் உண்டு. ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான புரிதல்கள் உண்டு. 16 வயது முதல் 18 வயதுக் குட்பட்ட இளம் பெண்கள் தொடர் பான பாலியல் வழக்குகளில் தான் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து எளிதாகத் தப்பித்து விடு கின்றனர். இதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் பிறழ் சாட்சியங்களே முக்கிய காரணம். இறுதியில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அநாதை இல்லங்களில் வளரும் அவலம் ஏற்படுகிறது.

எனவே 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட வளரிளம் பருவத் தின ருக்கு ‘பாலியல் கல்வி’ குறித்த விழிப் புணர்வு மிகவும் அவசிய மானது. மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாலியல் கல்வி மட் டுமே இதற்கு ஒரே தீர்வு. இந்த விஷயத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் கவனம் செலுத்தினாலே குற்ற வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும். இவ் வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment