பிஜேபி ஆளும் மாநிலங்களில் கல்வியில் நுழைக்கப்படும் நஞ்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

பிஜேபி ஆளும் மாநிலங்களில் கல்வியில் நுழைக்கப்படும் நஞ்சு

அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் சமஸ் கிருதத்தை மூன்றாம் மொழியாகக் கற்பிக்க கருநாடக அரசு தீர்மானித்துள்ளது. மனுஸ்மிருதி மற்றும் பூத-சாங்க்யா, கடபயாதி-சாங்க்ய, பத்தாதி போன்ற பண்டைய எண் முறைகளை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.

 புதிய கல்விக் கொள்கையின் வழி அறிமுகப் படுத்தப்படும் பள்ளிப் பாடத் திட்டத்தில், “பிதாகரஸ் தேற்றம், நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுதல் போன்ற போலிச் செய்திகள் எவ்வாறு உருவாக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகின்றன” என்று கேள்வி கேட்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் பாடத் திட்டக் கட்டமைப்பு குறித்து  ஒன்றிய அரசுக்கு மாநில அரசு சமர்ப்பித்த சில பரிந்துரைகள் குறித்து கரு நாடகாவில் உள்ள கல்வியாளர்கள் கவலை தெரி வித்துள்ளனர்.

புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடிக்க காரணமாக இருந்தது நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் பிதாகரஸ் தேற்றம் ஆகியவை “போலி செய்தி” என்று ஒன்றிய அரசுக்கு கருநாடக அரசு பள்ளிக்கல்வித்துறை  பணிக் குழுவின் தலைவர் மதன் கோபால் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, “இது குழுவின் விளக்கம். புவியீர்ப்பு மற்றும் பிதாகரஸ் ஆகியவை வேத கணிதத்தின் வேர்களைக் கொண்டுள்ளன. இது ஒரு இந்திய மய்ய அணுகுமுறை. கூகுளில் இதைப் பற்றிய பல தகவல்கள் உள்ளன. உதாரணமாக, பவுதயன் வேத நூல்களில் பிதாகரஸ் தேற்றத்தை வகுத்ததாக நம்பப்படுகிறது. இது ஒரு கண்ணோட்டம். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வி குறித்த  புதிய பாடங்களைத் தயாரிக்க 26 குழுக்களை கருநாடக மாநில அரசு அமைத்தது.

“மதச்சார்பின்மை என்ற போர்வையில் நமது மூதாதையர்களின் சாதனைகள் மறைக்கப்பட் டுள்ளன.   இதை நீக்கி நமது பாரம்பரியத்தை மீட்கவே புதியக் கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது" என்று அந்தக்குழு கூறியுள்ளது.

“ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ள நாட்டில் மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் மற்றொரு இந்திய மொழியைக் கற்க வேண்டும். அந்த மொழிகளில் நமது பழைமையான மொழியான சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. நமது நாட்டை நீண்ட காலமாக அந்நியர்கள் ஆட்சி செய்த காரணத்தால் நமது வரலாறுகள் மற்றும் இதிகாசக் கருத்துகள்  இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனின் அறிவு வளர்ச்சியால், சிந்தனைப் பலத்தால் மானுடம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

இது பழைமைவாதிகளின் ஆதிக்க வேர்களின் மீது வீசப்படும் அணுகுண்டாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இந்தப் பழைமைவாதிகள் இந்த அறிவியல் வளர்ச்சியின் சாதனங்களைப் பயன்படுத் தவும் தவறுவதில்லை.

ஆனால் பாடத் திட்டங்களில் பழைமை வாதத்தைத் திணிப்பது மிகப் பெரிய ஆபத்தாகும்.

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் சமஸ் கிருதத்தைத் திணிப்பது ஏன்? பார்ப்பனக் கலாச்சாரத்தைத் திணிப் பதே அதன் நோக்கமாகும்.

பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சி மாநிலங்களில் அமைந்தாலும் சரி, ஒன்றியத்தில் அமைந்தாலும் சரி அது மிகப் பெரிய ஆபத்தே - நாட்டின் வளர்ச்சிக்கும் கேடே!

 

No comments:

Post a Comment