திருப்பத்தூரில் ஒரு திருவிழா... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

திருப்பத்தூரில் ஒரு திருவிழா...

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை விடுதலை சந்தா தொகை வழங்கி அசத்திய திருப்பத்தூர் மாவட்டம்.

'பயணங்கள் முடிவதில்லை' வெற்றிகரமாக ஓடிய ஒரு திரைப்படத்தின் பெயர்.அதே நேரத்தில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சொற்றொடர்.

9 வயதில் தொடங்கிய  அவருடைய பொதுவாழ்க்கை சுற்றுப்பயணம் 89 முடிந்து 90 ஆம் ஆண்டு தொடங்கு கின்ற இந்த காலகட்டத்திலும், முடிவுறாத நெடும் பயணமாக இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து வரும் அந்த நெடும் பயணத்தில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அய்யா மேற்கொண்டிருக்கும் பயணம் 'விடுதலை'  சந்தா சேர்ப்புக்கான சுற்றுப்பயணம்.

1962இல் தொடங்கி கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக, தான் ஆசிரியராக பணியாற்றிய விடுதலை இதழுக்கான சந்தா சேர்ப்பு சுற்றுப்பயணத்தில் ஆசிரியரே ஈடு பட்டுள்ள சிறப்புமிக்க சுற்றுப்பயணம்.

ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்கும் ஆசிரியர்

இன்னும் சில மாதங்களில் 90 வயதை நெருங்குகின்ற இந்த நிலையிலும் ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்துக் கொண்டிருக்கிறாரே என்று எங்களைப் போன்ற இயக்கத் தொண்டர்கள், ஆசிரியர் மீது மாறாத அன்பும் பாசமும் வைத்துக்கொண்டிருக்கும் சான்றோர் பெரு மக்கள் எல்லாம் கவலையோடு நினைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.. கரோனா கூட  வந்து ஆசிரியரை ஒருமுறை  நலம் விசாரித்துவிட்டு சென்றிருக்கிறது.

ஒருமுறை மருத்துவர்களாக இருக்கின்ற எங்கள் பிள்ளைகள் ,மற்றும் அவர்களுடைய மருத்துவ நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபொழுது,நான் இந்த கவலையைஅவர்களிடம் வெளிப்படுத்தினேன்.

அப்பொழுது என் மகன் சொன்னார், "அம்மா நீங்கள் கவலைப்படுவது இயற்கைதான். ஆனால் அதனால் பயன் ஒன்றும் கிடையாது. அவர் இயக்க ஓட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. 

ஏனென்றால் உலகில் பொதுவாழ்க்கைக்கு வந்த தலைவர்களில் யாருக்குமே இல்லாத ஒரு வாழ்க்கை வரலாறு ஆசிரியர் அய்யாவுக்கு மட்டுமே இருக்கிறது. ஒன்பது வயதில் பொது வாழ்க்கைக்கு வருகிறார்  .தந்தை பெரியாரை சந்திக்கிறார்.

தன்னுடைய தந்தைக்கு அடுத்ததாக மிகப் பெரிய ஆளுமையாக தந்தை பெரியாரை ஆராதிக்க தொடங்கி விடுகிறார்.

ஏற்கெனவே தாயை இழந்த நிலையில் நெருக்கமான தாயாகவும் தந்தை பெரியாரையே நினைக்கிறார். 

பள்ளி நேரங்கள் தவிர்த்து அதிகமான நேரங்களில் நெருக்கமான தோழராக தந்தை பெரியார் உடனேயே இருக்கிறார்.

தந்தை பெரியாரின் ஒவ்வொரு அசைவுகளும் நடவடிக்கைகளும் சிறுவனாக இருக்கின்ற பொழுதிலிருந்தே அவருடைய மனதில் அழுத்தமாக பசுமரத்தாணி போல் பதிந்து போய் இருக்கின்றன.

அய்யாவின் அடிச்சுவட்டில்தான்...

ஆசிரியர் அய்யா 9 வயது சிறுவராகவும், தந்தை பெரியார் 64 வயது முதியவராகவும் இருக்கின்ற கால கட்டத்தில் தொடங்குகின்ற இந்த பந்தம் அய்யா அவர் கள் 1973 ஆம் ஆண்டு இறக்கும் வரை தொடர்ந்திருக் கிறது,

அய்யா அவர்கள் மறைந்த பிறகும் தமிழர் தலைவர் அவர்கள் வைத்த ஒவ்வொரு அடியும் அய்யாவின் அடிச்சுவட்டில் தான்.

அந்த அடிப்படையில் பார்த்தால் தன்னுடைய 80களில் தந்தை பெரியார் எப்படி உழைத்துக் கொண்டி ருந்தாரோ அதே போலதான் ஆசிரியர் அய்யா அவர்களும் தன்னுடைய எண்பதாவது வயதிலும் உழைத்து இருந்திருப்பார்,

அதே நிலைதான் இன்றும் 89ஆவது வயதில் தந்தை பெரியார் அவர்கள் எப்படி இருந்தாரோ அப்படியேதான் ஆசிரியர் அய்யா அவர்கள் இப்பொழுது இருக்கிறார். நாளையும் இப்படித்தான் இருப்பார். 

Because Thanthai Periyar is not only his philosophical father but also his permanent Role Model, admiring hero since his childhood days.

அவருடைய இந்த இயக்க ஓட்டத்தை  உங்கள் யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று என் மகன் சொன்னார்.

நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். தமிழர் தலைவர் அவர்களின் பயணத் திட்டங்களை நேர ஒதுக்கீடுகளை ஒழுங்குபடுத்தும் தோழர் வீ.அன்புராஜ் அவர்களின் பணி என்பது எவ்வளவு ஒரு கடுமையான அதேநேரத்தில் சவாலான பணி என்று. கரோனா காலகட்டத்தில் மட்டும் தான், வேறு வழியின்றி காணொலி வழியாக மட்டும் தோழர்களை சந்தித்து இயக்கப் பணிகளை தொடர்ந்துகொண்டு இருந்தார்.

தமிழர் தலைவர் அடைந்த மகிழ்ச்சி!

கரோனா தடைக்காலம் முடிந்த உடனேயே ஆரம் பித்த இயக்கப் பணி, மாநாடுகளாய் ஆர்ப்பாட்டங்களாய் போராட்டங்களாய், நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தொடர் சுற்றுப்பயணமாக தொடர்ந்த நிலையில்,  விடு தலை சந்தா சேர்ப்பு சுற்றுப் பயணத்தை அவசரமாக மேற்கொண்டு வந்த நேரத்திலே 14/8/2022 அன்று திருப்பத்தூரில்  நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை தமிழர் தலைவருக்கு தந்திருக்கின்றது..

பொதுக்குழு முடிந்த ஓரிரு நாட்களில் 29/7/2022 அன்று ஓசூரில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களும் ,அமைப்புச் செயலாளர் ஜெயராமன் அவர்களும் ஓசூர் திராவிடர் கழகத் தோழர்களும் இணைந்து 'விடுதலை' சந்தா சேர்ப்புப் பணியை துவக்கி நடத்தினார்கள்.

தொடர்ந்து தருமபுரி கிருஷ்ணகிரி கழக மாவட் டங்கள் சிறப்பான முறையில் முதல்கட்ட சந்தா சேர்ப்பை  முடித்தார்கள்.

2/8/2022 அன்று நடைபெற்ற 'விடுதலை' சந்தா சேர்ப்பு அவசர கலந்துரையாடல் கூட்ட முடிவின் படி தமிழர் தலைவரின் சுற்றுப்பயணம், மாநில மண்டல பொறுப்பாளர்கள் உள்ளடக்கிய  சுற்றுப்பயண குழுக் கள் அறிவிக்கப்பட்டன.

11/8/2022 அன்று ஈரோட்டில் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர் அவர்கள் 14/8/2022 அன்று திருப்பத்தூரில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

அதுவரையிலும் எந்த கழக மாவட்டத்திலும் சேர்க்காத அளவிற்கான விடுதலை சந்தா தொகையை, மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன்,  மாநில மகளிர் அணி பொருளாளர் சகோதரி அகிலா எழிலரசன் அவர்கள் தலைமையிலான திருப்பத்தூர் மாவட்ட தோழர்கள் அய்யா அவர்களுக்கு  வழங்கி மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறார்கள்.

தமிழர் தலைவர் எடைக்கு ரூ.20,15,000 அளித்து அசத்தினர்

தமிழ்நாட்டில்  உள்ள பல மாவட்டங்கள் அதிக அளவில் விடுதலை சந்தாக்களை அளித்து இருந்தாலும் அவை எல்லாம் ஒரு மணிமகுடத்தில்  தங்கக் கற்களாக, மாணிக்க கற்களாக  ஜொலித்தாலும், அவைகளுக்கும் மேலாக கிரீடத்தின் மேல் முகப்பில் வைக்கப்பட்டு கண்கள் கூசும் அளவில் பிரகாசமான ஒளி வீசும் ஒற்றை வைரக்கல்லாக திருப்பத்தூர் மாவட்டம் ஜொலிக்கிறது.

உலகில் வேறு எந்த தலைவருக்கும் வழங்கப்பட்டி ருக்காத பொது வாழ்க்கைப் பரிசாக, தமிழர் தலைவரின் எடைக்கு எடை, அவர் ஆசிரியராக இருந்த விடுதலை இதழுக்கு சந்தா தொகையை நீதிக் கட்சியின் சின்னமாக விளங்கிய தராசில் அவரை அமர வைத்து அசத்தி இருக்கின்றனர்  திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழ கத் தோழர்கள்.

தமிழர் தலைவர் மேற்கொண்ட சுற்றுப் பயணங் களின் அத்தனை களைப்பையும் அயர்ச்சியையும் போக்குகின்ற அருமருந்தாக ரூபாய் 20 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் சந்தா தொகை அளித்து இருக்கின்ற திருப்பத்தூர் கழக மாவட்ட தோழர்களுக்கு மிகுந்த நன்றி! நன்றி! நன்றி என்று எத்தனை நன்றி சொன்னாலும் தகும் என்று நம்முடைய நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

கூட்டம் முடிந்து ஆசிரியர் அவர்கள் கிளம்புகிற நேரத்தில், ஒரு தந்தையைக் கவனித்துக் கொள்ளும் மகளைப் போல எப்பொழுதும் அவருக்கு சரியான முறையில் அக்கறையோடு உணவு தயாரித்து வழங்கும் அகிலா, ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி, ஆசிரியருக் கான உணவையும் அவருடைய வண்டியிலேயே வைத்து அனுப்பினார்கள்.

உணவகமாக பெட்ரோல் நிலையம்

ஆசிரியர் அவர்களின் வாகனத்தோடு வந்த வேறு ஒரு வண்டியில் நாங்கள் சென்னை  வந்து கொண்டிருந்த பொழுது ஆசிரியர் அவர்கள் எந்த இடத்தில் உணவு எடுத்துக் கொள்வாரோ என்று நினைத்துக் கொண்டே வந்தேன் .

இரவு 10 மணிக்கு மேல் சாலையோரம் இருந்த ஒரு பெட்ரோல் பங்க் அருகே ஆசிரியர் அவர்களின் வாகனம்   நின்றது.

நான் சிறுமியாக இருந்த பொழுது ஒரு சினிமாப் பாடலை  என் அம்மா பாடுவார்கள்.

ஆனாக்க அந்த மடம்!

ஆகாட்டி சந்த மடம்!

அதுவும்கூட இல்லாட்டினா 

பாட்டு பாட இந்த இடம்!

என்று தான் நிற்கின்ற இடத்தையே தன் சொந்த இடமாக நினைத்து  நடனம் ஆடுகின்ற கூத்தாடி பெண் பாடுவதாக அந்த பாடல் இருக்கும்.

அதைப்போல பெட்ரோல் நிலையத்தையே ஒரு உணவகமாக எடுத்துக் கொண்டு ஆசிரியர் அவர்கள் வாகனத்திற்கு உள்ளேயே  உடை மாற்றிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

நாங்கள் எல்லாம் வெளியே நின்று சாப்பிட்டோம். எனக்கு மட்டும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

பிராட்லா மற்றும் ஓட்டுநர் தோழர்கள் எல்லாம் பலமுறை அனுபவம் பெற்றவர்கள் போல அவர்கள் பாட்டுக்கு இயல்பாக எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தார்கள் .

எனக்கு வியப்பாக இருந்தது.

எனக்கு ஏற்கெனவே இது போன்ற ஒரு அனுபவம் உண்டு.

ஒருமுறை பெங்களூருவில் காலையில் ஆசிரியர் அவர்கள் நிகழ்ச்சி.

அதே நாள் மாலையில் தஞ்சாவூரில் நிகழ்ச்சி.

பெங்களூரு நிகழ்ச்சி முடிந்து  உடனடியாக ஆசிரியர் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். பெங்களூரு வில் இருந்து  தஞ்சாவூர் செல்லும் வழியில் தருமபுரி வரை தமிழர் தலைவர் அவர்களின் வாகனத்தில் பயணித்தோம்.

நேரப் பற்றாக்குறை காரணமாக மதிய உணவை பெங்களூருவிலேயே சாப்பிட முடியாத நிலைமை. 

ஆசிரியருக்கு என்று தனியாக வீட்டு சமையல் செய்ய முடியாத அளவிற்கான ஒரு சூழல்.

பெங்களூரு தோழர்களிடம் விடை பெறுகின்ற பொழுது ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள், "தோழர்களுக்கு கொடுத்து அனுப்புகின்ற உணவு பொட்டலங்களோடு சேர்த்து எனக்கு ஒரு தயிர்ச்சோறு பொட்டலத்தையும்   அனுப்புங்கள். நான் வழியில் எங்கோ ஒரு இடத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன்" என்று சொன்னார்கள்.

காவேரிப்பட்டினம் தாண்டியதும் ஓரிடம்.

அந்த இடத்திலேயே அவர்கள் வண்டியை நிறுத்தி வண்டிக்குள்ளேயே அமர்ந்து கொண்டு அவருக்கான அந்த தயிர்ச் சோறு பொட்டலத்தை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

நாங்களும் பொட்டலங்களை பிரித்து மர நிழல்களில் அமர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தோம்.

ஆசிரியர் அவர்கள் அந்த தயிர்ச்சோறு பொட்ட லத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாப்பிடுவதைப் பார்க்க பார்க்க எனக்கு அழுகையே வந்துவிட்டது.

அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அன்று இரவு முழுக்க இதை நினைத்து நினைத்து நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை.

அருகில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தோழர் ஜெயராமன் அவர்களை எழுப்பி இதனை பகிர்ந்து கொண்ட பொழுது அவர் சொன்னார் ,"செல்வி ஏதோ ஒரு நாள் வந்து பார்த்து அதற்கு எவ்வளவு வருத்தப்படு கிறாய். எங்களுக்கெல்லாம் கூட முதலில் பார்க்கும் போது அப்படித்தான் இருந்தது .. பிறகு பார்த்து பார்த்து பழகி விட்டது" என்று  சொல்லிவிட்டு உறங்க ஆரம் பித்து விட்டார். உறங்குவதில் அவர்  மன்னர். அதே நேரத்தில் தமிழர் தலைவர் அவர்களை ரயில் நிலையங் களில் இரவு நேரங்களில் அழைக்க செல்லும் போதும் சரி. மாநாடுகள்  நடத்துகின்ற நேரங்களிலும் சரி. இரவு முழுக்க முழுக்க விழித்து இருக்கின்ற பழக்கமும் அவரிடம் உண்டு  .

ஆசிரியர் அவர்களைப் போன்ற ஒரு எளிமையான தலைவரை, கடுமையாக உழைக்க கூடிய ஒரு தலை வரை நாம் பெற்றிருக்கிறோம் என்பதை நினைத்து நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது.

ஆசிரியரின் கடும் உழைப்பு

ஆசிரியர் அய்யா அவர்களின் இந்த கடுமையான உழைப்பு யாருக்காக ?

யாருக்காக? இது யாருக்காக?

இந்த மாளிகை வசந்த மாளிகை!

யாருக்காக?

நம் தமிழர் தலைவரின் உழைப்பு என்பது, இந்த நாட்டில், மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் குடிசைகளிலும் குப்பைக் கூளங்களிலும், வீதிகளிலும்,  மட்டுமே வசிக்கும் படி வைக்கப்படிருக்கும் லட்சக் கணக்கான வறிய மக்களை, கல்வியறிவாலும், வேலை வாய்ப்புகளாலும்  மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று அவர்களையும் வசந்த மாளிகைகளில் வாழ வைப்பதற்காகத்தான்.

இன்னொருபுறம் நம்முடைய துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் இந்த விடுதலை இதழுக்காக இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் கூட கவிஞர் அவர்களிடம் சொல்லுவோம், "அய்யா உங்களுக்கு இரண்டு வாழ்விணையர்கள். முதலாமவர் அக்கா வெற்றிச்செல்வி. இரண்டாவது விடுதலை இதழ். இரண்டாவது இணையரோடு தான் அய்யா நீங்கள் நீண்ட நேரம் செலவிடுகிறீர்கள்" என்று.

கவிஞர் உடல் நலம் சரியில்லாத நிலையிலும் கூட தன்னுடைய மகள் வீட்டிலிருந்தபடியே விடுதலை இதழுக்காக உழைத்துக் கொண்டே இருந்தார். 

தமிழர் தலைவர் அவர்களும் துணைத் தலைவர் கவிஞர் அவர்களும் 'விடுதலை' இதழில்  எழுதுகின்ற கருத்துகள், அறிக்கைகள், எல்லாம் யாருக்காக எழுதப்படுகின்றன என்றால் அடித்தட்டு மக்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்.  என்னும் பேரபாயத்தால் எளிதாக, அவர்களுக்கு இரையாகும் ஆபத்தில் உள்ள கிராமப்புற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காகவும் எழுதப்படுகின்றன.

காலம் நமக்கு அளித்துள்ள பணி!

'விடுதலை' இதழின் அத்தனை விளைச்சலும், எங்கு சென்றடைய வேண்டுமோ அங்கு சென்றடைய, விடுதலை இதழைப் பரப்ப வேண்டியது ஒரு முக்கிய வரலாற்றுக் கடமை.

எனவே 'விடுதலை' இதழ் சந்தா சேர்ப்புப் பணியில் ஒவ்வொருவரும் தங்களை சர்வபரித் தியாகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு முழுமையாக ஒப்படைத் துக் கொண்டு பணியாற்ற வேண்டியது ,ஆர்எஸ்எஸ் என்னும் பேரபாயம் நாட்டை சூழ்ந்து கொண்டுள்ள இந்தக் காலம் நமக்கு அளித்துள்ள பணி.

அதனை மிகச் சரியாக உணர்ந்து விடுதலை சந்தா சேர்ப்பில் முதலிடம் வகிக்கின்ற திருப்பத்தூர் கழக மாவட்ட தோழர்களுக்கும் அவர்களை மிகச் சிறப்பாக வழி நடத்தும் மாவட்ட தலைவர் கே.சி எழிலரசனுக்கும் தோழியர் அகிலாவுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

திருப்பத்தூர் காட்டிய திசைவழியில் செல்வோம். 

வீடுதோறும் ‘விடுதலை'

ஆசிரியர் அய்யா அவர்களுக்கு விடுதலை சந்தா தொகையை அவருடைய எடைக்கு எடைக்கு வழங்கியதை பார்த்து பொறுக்கமாட்டாத சங்கிகள் வயிறு எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்வது போல நம்முடைய எதிரிகளும் இந்த விடுதலை சந்தா சேர்ப்பதற்கான விளம்பரத்தை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

'வீடு தோறும் விடுதலை 

மக்கள் உள்ளம் தோறும் பெரியார்' 

என்ற தமிழர் தலைவரின் 

விடுதலைப் பதாகையை 

வெற்றிப் பதாகை ஆக்குவோம்.

ஆயிரமாயிரமாய் ,இறுதியில் அறுபதாயிரமாய் வந்து குவியட்டும் விடுதலை சந்தாக்கள்...

வாழ்க பெரியார்

வளர்க அவர்தம் பகுத்தறிவு..


No comments:

Post a Comment