இதுதான் பக்தி வளர்த்த பண்பாடு! தேர்த்திருவிழாவை நடத்துவதில் மோதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

இதுதான் பக்தி வளர்த்த பண்பாடு! தேர்த்திருவிழாவை நடத்துவதில் மோதல்

ஆத்தூர்,ஆக.3- சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த   கிராமத்தில் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா நடத்தப்படுவது தொடர்பாக ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  மூன்றா வது முறையாக நடத்தப்பட்ட சமா தானக் கூட்டத்தில் இரு தரப்பினரி டையே மோதல் ஏற்பட்டது. இதை யடுத்து சாலைமறியல் செய்தவர்கள் காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு வில் ஈடுபட்டனர். 

சேலம் ஆத்தூர்  அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு  

தோறும் ஆவணி மாதம் இந்த கோவில் தேர்த்திருவிழாவை, ஒரு தரப்பினர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோவில் தேர்த்திருவிழாவை தங்கள் தரப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என வருவாய்த்துறையினரிடம் மனு அளித்திருந்தனர். 

இரு தரப்பினரையும் ஏற்கெனவே இரு முறை அழைத்து ஆத்தூர் வட் டாட்சியர் மாணிக்கம் மற்றும் வருவாய் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

நேற்று (2.8.2022) மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தை ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட் டாட்சியர் மாணிக்கம் முன்னிலையில் செல்லியம்பாளையம் தேர்த்திருவிழா தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பை சேர்ந்த தலா 7 பேர் வீதம் 14 பேர் அழைக்கப்பட்டு இருந் தனர். சமாதான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தபோது திடீ ரென இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் எதிர்த்தரப்பை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்

பொதுமக்கள் ஓட்டம் 

இரு தரப்பினரின் மோதலைத் தொடர்ந்து, ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் கிடைத் ததும் ஆத்தூர் நகர காவல்துறை ஆய் வாளர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப் படுத்தி காயம்பட்டவர்களை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சாலைமறியல் 

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் மருத் துவமனை முன்பு மீண்டும் இரு தரப் பினரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இருதரப்பினரும் கைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

காவல்துறையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு,  மருத்துவமனைக்குள் செல்லுமாறு கூறியதுடன், மற்றவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதை யடுத்து அங்கிருந்து கலைந்து சென்றவர்கள் ஆத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சேலம்-ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறிய காவல் துறையினருடனும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் செல்லியம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் முன்பு காவல்துறை உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மோதலில் ஈடுபட்டதாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் கிராம நிர்வாக அலுவலர் கலைச் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் 54 பேர் மீது ஆத்தூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment