பார்ப்பன ஆதிக்கத்தைத் தகர்த்த கொக்கூர்! முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி பேசுகிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

பார்ப்பன ஆதிக்கத்தைத் தகர்த்த கொக்கூர்! முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி பேசுகிறார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் கொக்கூர். சுமார் 160 வேலி நிலத்தைக் கொண்டது. 160 வேலி நிலமும் நான்கு பார்ப்பனர்கள் வசம் இருந்தது. அந்த ஊரில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். சில தெருக்களில் மற்றவர்கள் நட மாடக்கூட முடியாது. சுயமரியாதை இயக் கம் முகிழ்த்த பின்னர்தான் சற்று மாறுதல் ஏற்படத் தொடங்கியது. 1950 களில் திரா விடர் கழகத்தின் கிளை கொக்கூரில் தொடங்கப்பட்டதும் தலைகீழ் மாற்றம் நடந்தது.  பெரும்பாலான குடும்பங்கள் பெரியார் கொள்கை வழிக் குடும்பங்களாக மாறின. இப்போது சென்றாலும் பல வீடு களில் திராவிடர் கழக கொடியும் திராவிட முன்னேற்ற கழக கொடியும் இணைந்தே பறப்பதைக் காண முடியும். 1957 லேயே தந்தை பெரியாரை அழைத்து பொதுக் கூட் டம் நடத்திய ஊர் கொக்கூர். கொக்கூர் பஞ்சாயத்து தலைவர்களாக பல ஆண்டுகளாக பெரியார் கொள்கையாளர்களே கோலோச் சியிருக்கிறார்கள். தற்போதைய குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் சா.முரு கையன் அவர்கள் இரண்டு முறையும் அவரைத் தொடர்ந்து பெரியார் தொண்டர் ச.கோவிந்தசாமி அவர்கள் ஒருமுறையும்  கொக்கூர் பஞ்சாயத்து தலைவர்களாக வெற்றிபெற்றிருக்கிறார்கள். கொக்கூர் ச.கோவிந்தசாமி அவர்கள் 1924ஆம் ஆண்டு பிறந்தவர். நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார். குத்தாலம் ஒன்றிய திரா விடர் கழகத்தின் சார்பில் இன்று (20.8.2022) சனிக்கிழமை குத்தாலத்தில் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்து அவருக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது. விடுதலை  ஞாயிறு மலருக்காக அவரை சந்தித்தோம்.

அய்யா வணக்கம்! விடுதலை ஞாயிறு மலருக்காக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.தமிழ்நாடு முழுவதும்  உங்களைப் போன்ற பெரியார் தொண்டர்கள், கடவுள் மறுப் பாளர்கள் பலபேர் நூற்றாண்டு காணும் நாயகர்களாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். தாங்களும் நூறு வயதை எட்ட இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வில் நடந்த இயக்க தொடர்பான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டால் வருங்கால இளைஞர்களுக்கு அந்த வரலாறு ஒரு உந்து சக்தியாக இருக் கும் என்ற வகையில் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். கொக்கூரைப் பற்றியும் உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்கள்

விவசாயக் குடும்பம்

எங்கள் குடும்பம் சாதாரண விவசாயக் குடும்பம். கிராமத்தில் விவசாயக் கூலி வேலை செய்த நான் வேலை தேடி 22 வயதில் சிங்கப்பூர் சென்றுவிட்டேன். இரண்டாம் வகுப்புவரைதான் படித்தேன். சிங்கப்பூர் சென்றதும் மலாய் மொழி தமிழை ஒட்டியே இருந்ததால் சுலபமாக கற்றுகொண்டேன்.  இங்கிலீஷில் பேச சிர மப்பட்டேன். நான் பணிபுரிந்த இடங்களில் பின் மலாய், ஆங்கில மொழிகளில் சரள மாக பேச என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன். நான் வசித்த இடத்தில் இலங்கை தமிழர்கள்தான் அதிகமாக பணி புரிந்தார்கள். நான் தமிழன் என்பதால் அவர்கள் எனக்கு பேருதவியாக இருந் தார்கள். என் வயது கருதி ஆரம்பத்தில் கடுமையான வேலைகளை எனக்கு கொடுப்பதை தவிர்த்தார்கள். நான் தங்கிய இடத்திலிருந்து வேலைக்கு செல்ல சில மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தது. பின்னர் நியூட்டன் சர்க்கிள் என்ற இடத்தில் ஒரு வெள்ளைக்காரர் கம்பெனியில் ஆபீஸ் பாயாக வேலைக்கு சேர்ந்துவிட்டேன்.

திராவிடர் கழகம் சிங்கப்பூரில் அறிமுகம்

நான் கொக்கூரை விட்டு செல்லும்போது இங்கு இயக்கம் பெரிய அளவில் இருந்ததாக சொல்ல முடியாது. எனக்கு திராவிடர் கழக அறிமுகம் சிங்கப்பூரில்தான் கிடைத்தது. மாதிரிமங்கலம் என்.டி.சாமி அவர்களின் மாப்பிள்ளை வீரையன் என்பவர் சிங்கப் பூரில் திராவிடர் கழக தலைவராக இருந்தார். இங்கே பக்கத்து ஊர்க்காரர் என்பதால் என்னை எப்படியோ கேள்விப்பட்டு தேடிவந்து இயக்கத்தில் சேர்த்து விட்டார். சிங்கப்பூரில் இயக்கத்தில் நான் மெம்பராக இருந்தேன். அதன் பிறகு சிங்கப்பூரில் நடக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவேன். சிங்கப்பூர் தமிழ்முரசு ஆசிரியர் சாரங்கபாணி அங்கு தலைவர் களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவார். அந்தக் கூட்டங்களுக்கெல்லாம் போய் வருவேன். தமிழ் முரசு பத்திரிகையை தொடர்ந்து படித்து வந்தேன.

கொக்கூரில் சட்ட எரிப்பில் கைது செய்யப்படாததால் மீண்டும் குத்தாலம் சென்று சட்டத்தை எரித்து கைதான தோழர்கள்!

நான் சிங்கப்பூரில் இருந்த காலத்தில் கொக்கூரிலும் திராவிடர் கழக கிளை தோன்றிவிட்டது. எனது தம்பி குஞ்சித பாதம்தான் கொக்கூர் திராவிடர் கழகத் திற்கு  தலைவர். 1957இல் சட்ட எரிப்பு போராட் டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப் பட்டு ஆறு மாதத்தில் விடுதலையாகி விட்டார். அவரோடு கைது செய்யப்பட்ட எஸ்.சுந்தரேசன், மற்றொரு சுந்தரேசன், ராசாங்கம் போன்றவர்கள் எட்டு மாதம் சிறைத் தண்டனை அனுபவித்தார்கள். கொக் கூரில் சுமார்  இருபது தோழர்கள் சேர்ந்து சட்டத்தை எரித்தார்கள். அதில் நமது ஒன்றியத் தலைவர் முருகையனும் சிறு வனாக கலந்துகொண்டிருக்கிறார். காவல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை இவர்களை கைது செய்ய வில்லை. கைது செய்யவில்லை என்றதும் உடனே குத்தாலம் சென்று அங்கே நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சட் டத்தை எரித்தார்கள். அதில் நான்கு பேர் மட்டும் காவல்துறையால் கைது செய்யப் பட்டார்கள்.

கொக்கூருக்குப் பெரியார் வருகை

1958இல் கொக்கூருக்கு பெரியாரை வர வழைத்து பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். நச்சினார்குடி அருகே இடக்கியத்திலிருந்து பெரியார் அவர்களை இரண்டு குதிரை பூட்டிய பீட்டனில் (சாரட் வண்டி) அமரவைத்து ஊர்வலம் நடந்தது. ஆசிரியர் அவர்களுக்கு அப்போதுதான் திருமணம் நடந்த புதிது. இருவரும் அய்யா வோடு வந்து கலந்து கொண்டார்களாம். புதூர் ராவணன்-ராவணன் வேடமிட்டு வந்தார். சிலம்பாட்டம், கம்பு சுத்துதல் போன்ற பலரையும் அழைத்துவந்திருந்தார். நச்சினார்குடியிலிருந்து கொக்கூருக்கு வரும் வழியில் பெரியபாதி பண்ணை இருந்தது. அந்த பண்ணை ஒரு அய்யருக்கு சொந்தமானது. அந்த  வழியை அவர் களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மரத்தை வைத்து பெரிய முட்டுக்கட்டை போட்டிருப்பார்கள். பெரியார் வந்தபோது என் தம்பிதான் அதை உடைத்து எறிந்தார் என்று சொன்னார்கள். பெரியார் வந்து சென்றதும் முட்டு மரத்தை ஒட்டி மேற்படி பாதைக்கு இடையூறாக இருந்த கோயிலையும் தோழர்கள் தரைமட்டமாக்கி அந்த பாதைக்கு ஜல்லி போட்டுவிட்டார்கள். என் தம்பி மிகவும் வலுவாகவும் கோபக்காரனா கவும் இருப்பார்.

சட்ட எரிப்பு போராட்ட ஆறு மாத சிறைத் தண்டனையில் தம்பிக்கு உடல் நலம் சற்று சரியில்லாமல் போனதால் 1959இல் நான் சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு திரும்பி விட்டேன். எனக்கு முன்னரே என் தம்பிக்கு திருமணம் நடந்துவிட்டது. முப்பத்தைந்து வயதில், நான் இங்கு வந்த பின்னால் தான் எனக்கு திருமணம். திராவிடர் கழக தலைவர் திருவிளையாட்டம் சவுரிராஜன் அவர்கள் தலைமையில்தான் திருமணம் நடைபெற்றது. சுயமரியாதைத் திருமணம் தான். தாலி வேண்டாம் என சொல்லிப் பார்த்தேன். குடும்பத்தினர் பக்குவப்படாத தால் அவர்கள் ஏற்பாட்டில் தாலி மட்டும் கட்டினேன். கொக்கூரில் மகாலிங்கம் என்று ஒரு பேச்சாளர் இருந்தார். இந்த பகுதியில் கூட்டம் நடந்தால் அவரையும் பேசச் சொல்வார்கள். அவரும் என் திரு மணத்தில் கலந்து கொண்டு பேசினார். இஸ்லாமிய தோழர்கள் நிறைந்த பகுதி இது. மீரா, கபீர் போன்றவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். நான் திருமணம் செய்த நேரத்தில் என்.டி.சாமி சிறையில் இருந்ததால் கலந்துகொள்ள வில்லை. இங்கு வந்த பிறகு இயக்க நிகழ்ச்சிகள் மாநாடுகள் போராட்டங்கள் எல்லாவற் றிலும் பெரும்பாலும் கலந்துகொள்வேன். இந்தி அழிப்பு, அஞ்சலகம் முன் மறியல் இப்படி பல போராட்டங்களிலும் கலந்திருக் கிறேன். ஒரு முறை திருச்சி சிறையில் தோழர்களோடு 15 நாட்கள் இருந்தேன். ஆரம்ப காலத்தில் வெளியூர்களில் நடக் கும் மாநாடுகளுக்கு டிராக்டரில்தான் செல் வோம். டிப்பரில் மணல் நிரப்பி அதன்மேல் வைக்கோல் பரப்பி ஜமுக்காளம் விரித்து அமர்ந்துகொள்வோம். கோமல் நடராஜன், கொக்கூர் சீனிவாசன், சுந்தரேசன், ராஜ சேகரன் மூன்று பேரும் சகோதரர்கள். பிறகு கலியமூர்த்தி, போன்றவர்களெல்லாம் இந்தப்பகுதியில் இயக்கத்திற்காக கடுமை யாக உழைத்தவர்கள். சுந்தரேசன், ராஜ சேகரனெல்லாம் பெரிய அளவில் பொருளாதார உதவி செய்வார்கள். எங்கள் அம்மா நன்றாக சமைப்பார்கள். அதனால் இயக்க நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு எங்கள் வீட்டில்தான் அசைவ உணவு தயாராகும். பெரும்பாலும் மீன் குழம்பு, அல்லது கோழி சமையலாக இருக்கும். மார்கழி மாதத்தில் கோயிலில் பஜனை பாட்டு போடுவார்கள். நாங்கள் பதிலுக்கு பெரியார் பாட்டு போடுவோம். பெரிய அளவில் கோயில் நிகழ்ச்சியெல்லாம் இந்த ஊரில் கிடையாது. இப்போதுதான் சில இடங்களில் இதெல்லாம் நடைபெறுகிறது.

குரங்குக்கு கோயிலா?  குத்தாலத்தில் முறியடிப்பு!

பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டி குத்தாலத்தில் குடியிருந்த காலத்தில் குத் தாலம் பேருந்து நிலையத்தில் சுற்றிக்கொண் டிருந்த குரங்கு ஒன்று செத்துவிட்டது. பிறகு சிலர் அங்கே ஒரு சிறு கோயிலை கட்டிவிட்டனர். குத்தாலம் பேருந்து நிறுத் தமே சிறிய இடம். போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதி. அங்கே கட்டிய கோயிலை அப்புறப்படுத்த வேண்டும். அப்புறப்படுத்த வில்லையென்றால் அருகிலேயே பெரியார் படிப்பகத்தை ஏற்படுத்துவோம் என்று சொல்லி நானும் எனது உறவினர் துரைராஜ் மற்றும் சில நண்பர்களும் பஞ்சாயத்து தலைவரை சந்தித்து மனு கொடுத்தோம். இந்த செய்தி தீயாய் பரவ கலவரம் எழும் சூழல் ஏற்படவே பஞ்சாயத்து தலைவர் எஸ்.பி க்கு தகவல் கொடுத்துவிட்டார். பின் எஸ்.பியின் தலையீட்டில் அந்த கோயில் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டு விட்டது.

திராவிடர் கழக கொடியும், திராவிட முன்னேற்ற கழக கொடியும்!

கொக்கூரில் திராவிடர் கழகம் மட்டும் தான் உண்டு. மறைந்த மேனாள் அமைச் சர் கோ.சி.மணி அவர்கள் கூட திராவிடர் கழக உறுப்பினர்தான். அண்ணா முதல மைச்சராகி தந்தை பெரியார் அவர்களை சந்தித்த பின்னர்தான் நம்ம ஊரிலும் ஒரு அரசியல் அமைப்பு வேண்டும் என்று தி.மு.க வை தொடங்கினோம். அதன் பின்னர்தான் பல வீடுகளில் திராவிடர் கழக கொடியும் திமுக கொடியும் வாசல் கேட்டு களில் பொறிப்பது, வீட்டுச்சுவர்களில் சிமெண்ட்டில் பதிந்து வண்ணம் தீட்டுவது போன்றவை நடந்தது. எங்கள் வீட்டு வாசல் நிலையில் கூட இதோ பெரியார், அண்ணா, கலைஞர், ஆசிரியர் ஆகியோர் உருவப் படங்கள் வரையப்பட்ட கண்ணாடியை பொருத்தியிருக்கிறோம். எங்கள் வயல் போர் கட்டடத்தில் இரண்டு கொடியும் சிமெண்டால் பதியப்பட்டு வண்ணம் பூசப்பட்டிருப்பதை நீங்கள் போகும் வழியில் பார்க்கலாம்.

1979 இல் தமிழர் தலைவர் கி.வீரமணி வருகை!

திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுடைய மூத்த சகோதரர் மா.க.கிருட்டிணமூர்த்தி அவர்கள் கூட்டுறவு வீட்டு வசதி அதிகாரி யாக பணியாற்றியபோது கொக்கூரில் சுமார் 30 வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்தார். பெரும்பாலும் இயக்கத் தோழர் களுக்கே அந்த வீடுகள் ஒதுக்கப்பட்டி ருந்தது. இதனால் அவர் மீது மொட்டை பெட்டிஷனெல்லாம் போட்டார்கள். அதையெல்லாம் அவர் சாமர்த்தியமாக எதிர்கொண்டு காரியத்தை கச்சிதமாக முடித்தார்கள். அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி. நமது கழக ஒன்றிய தலைவர் முருகையன் அவர்கள் தான் கொக்கூர் பஞ்சாயத்து தலைவர். அந்த வீடுகளை திறக்க தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர் கள்தான் வரவழைக்கப்பட்டார்கள். ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், தீமிதி என அமர்க்களப்பட்டது. ஒவ்வொரு வீட்டை யும் திறந்து வைத்து நிகழ்ச்சி முடிய இரவு வெகு நேரமாயிற்று.

பெண்கள் கலந்துகொண்ட மூடநம்பிக்கை ஒழிப்பு தீமிதி!

ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். எனது தாயாரும் அதில் கலந்து கொண்டு தீ மிதித்தார். அவருக்கு அப்போது 90 வயது இருக்கும். என் தம்பி இயக்கத்திற்கு வந்த பின்னால் எங்கள் அம்மா சிவபாக்கியத்தம்மாளும் கொஞ்சம் கொஞ்சமாக பெரியார் கொள் கைக்கு மாறிவிட்டார்கள். நிகழ்ச்சிகளில் கருப்பு புடவையோடு கலந்து கொள் வார்கள்.  அவரோடு வேறு சில பெண்களும் கலந்து கொண்டார்கள். இதைக்கண்டு ஆசிரியர் அய்யா மிகவும் பூரித்துப் போனார்.

 எனது தாயார் உடல் நிலை குன்றிய நிலையில் இருந்த போது நான் இறந்தால் எனது உடலுக்கு கழக கொடி போர்த்தி கிழக்கு நோக்கி எடுத்துச் செல்லுங்கள் என்றார். இறுதி ஊர்வலம் மேற்கு நோக்கி பயணிப்பதுதான் அய்தீகம். அப்படி அவர் சொல்ல காரணம் கிழக்கே அக்ரஹார தெரு வழியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். 1979இல் அவர் இறந்தபின் அவர் சொன்னபடியே அந்த இறுதி ஊர் வலம் கிழக்கு நோக்கி அக்ரஹார தெருக்கள் வழியாகத்தான் நடத்தப்பட்டது. பின்னர் எனது தாயார் படத்திறப்பிலும் ஆசிரியர் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்கள்!

தந்தை பெரியார் அவர்கள் எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பெயர் சூட்டி யிருக்கிறார். எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நாங்கள் தமிழிலேயே பெயர் சூட்டுகிறோம். இளங்கோவன், மணிவண்ணன், இளஞ்சேரன், தமிழன்பன், தமிழ்ச்செல்வி, தமிழ் இலக்கியா, இளஞ்செழியன், இளமாறன், எழிலரசி, கரிகாலன், தமிழ் நிலா, தமிழ் மாறன், தமிழ்பாவை, தமிழினி, தமிழமுதன் இவையெல்லாம் எங்கள் வீட்டு பிள்ளை களின் பெயர்கள். இதில் தமிழமுதன் மருத்துவர். அதே போல் ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையில்தான் தமிழ்முரசு-எழிலரசி, கருணாநிதி-அங்கயற்கண்ணி, மணிவண்ணன்-லட்சுமி, இளமாறன்-தமிழரசி ஆகியோர் திருமணம் நடை பெற்றது. இவையெல்லாம் சிறப்பான நிகழ் வுகள். இன்றளவும் எங்கள் பிள்ளைகளும் பெரியார் கொள்கை வழிநின்று வாழ்ந்து வருவதுதான் மகிழ்ச்சி தரக்கூடியது. நன்றி. வணக்கம்.

பேட்டி கண்டவர்:

கி,தளபதிராஜ், திராவிடர் கழக மாவட்டச்செயலாளர், மயிலாடுதுறை.

No comments:

Post a Comment