ஆம்னி பேருந்து கட்டணம் போக்குவரத்துத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

ஆம்னி பேருந்து கட்டணம் போக்குவரத்துத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு

சென்னை, ஆக.20 "பல்வேறு புகார் களில் ஆம்னி பேருந்துகளுக்கு 11 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிக ளிடம் வசூலிக்கப்பட்ட 68 ஆயிரத்து 90 ரூபாய் கூடுதல் கட்டணம் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது" என்று தமிழ் நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்.சி.சிவசங்கர் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்நேற்று (19.8.2022) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கடந்த ஆக.16ஆ-ம் தேதி வரை தொடர் விடுமுறை இருந்த காரணத்தால், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட் டணங்கள் வசூலிக்கப்பட்டதாக வந்த தொடர் புகார்களின் அடிப்படையில், போக்கு வரத்து ஆணையர்கள் முன்னிலையில்,  பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டன.

இந்த ஆய்வின் மூலம் 953 பேருந் துகளுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதல் கட்டணம் வசூலித்ததாக அந்த வாகனங்களில் ஆய்வு செய்தபோது, புகார் தெரிவித்த 97 பேருக்கு கட்ட ணங்களை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறு திரும்ப வழங்கப்பட்ட தொகை 68 ஆயிரத்து 90 ரூபாய். இதில் 4 ஆம்னி பேருந்துகள் முறையான பெர்மிட் இல்லாமல் செயல்பட்டதால், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 11 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், நேற்று முதல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. வரும் 22-ஆம் தேதி வரை இந்த ஆய்வுகள் தொடரும். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அந்தக் கட்டணத்தை மீண்டும் பயணிகளிடம் கொடுப்பதற்காகவும், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை ஒவ்வொரு முறையும் தொடர்ந்து எழுவதால், இப்பிரச்சினையில் அடுத்தக்கட்ட தீர்வை எட்டுவதற்காக உயர் அலுவலர் களுடன் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, தீபாவளி வருவதால், அந்த நேரத்திலும் தொடர் விடுமுறைகள் வரவுள்ளன. அதையொட்டி இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்


No comments:

Post a Comment