குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஜோதிடமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஜோதிடமா?

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் கொலைக் குற்ற வாளியைப் பிடிக்க ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று  குற்றம் செய்யாதவரை குற்றவாளி எனச் சொல்லி கைதுசெய்த காவல்துறை அதிகாரி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் விளம்பரம் பெற்ற  சாமியார் பாண்டேகர் சர்கார்; இவர் எதிர்காலத்தைக் கணித்துச்சொல்வதில் புகழ் பெற்றவராம், இவரிடம் மத்தியப் பிரதேச முதலமைச்சர், அவரது மனைவி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் - ஒன்றிய அரசில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர்களாக இருக்கும் சிலரும் தங்கள் எதிர்காலம் குறித்து ஆலோசனை கேட்டுள்ளனர். 

 இந்த நிலையில் சத்தர்பூர் அருகில் பாமிடா என்ற ஊரில் சிறுமி ஒருவர் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஒருவர் அழுத்தம் கொடுத்தார்.  இந்தக் கொலை குறித்து விசாரணைக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் எஸ்.எஸ். அனில் சர்மா முதலில் மூன்று இளைஞர்களைக் கைதுசெய்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் "அந்த சிறுமி பல இளைஞர்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தார். அதனைக் கண்டித்த அவரது சித்தப்பா பின்னர் சிறுமியை தனியாக அழைத்துச்சென்று கொலை செய்ய திட்டமிட்டார்" என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து அவரது சித்தப்பாவை விசாரித்த போது அவர், "கொலை செய்யும் முன்பு பாலியல்வன்கொடுமை செய்து பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசி விட்டேன்" என்று  கூறியதாகக் காவல்துறை அவரைக் கைதுசெய்தது, 

இந்தக் கைது குறித்து சிறுமியின் குடும்பம் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது, காரணம் அவரது சித்தப்பா நல்ல மனிதர் - சிறுமியின் மீது அன்பு வைத்தவர். அவர் கொலை செய்ய எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. மேலும் சிறுமி ஒழுக்கமில்லாதவர் என்று கூறியதையும் குடும்பத்தினர் ஏற்கவில்லை,காரணம் சிறுமிக்கு வயது வெறும் 12 மட்டுமே; கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். ஆகவே சிறுமி அவ்வளவாக வெளியே செல்வது கிடையாது - அப்படி இருக்க சிறுமி மீது பழி சுமத்தியது  மட்டுமல்ல; சித்தப்பாவையும் கொலைகாரர் என்று கூறி கைது செய்ததை ஏற்க மறுத்தனர். 

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் காட்சிப் பதிவு ஒன்று வெளியானது அதில் காவல்துறை ஆய்வாளர் எஸ்.எஸ். அனில் சர்மா  சாமியாரும், ஜோதிடருமான பாண்டேகர் சர்காரிடம் சிறுமி கொலை குறித்தும் குற்றவாளி குறித்தும், பேசுகிறார். உடனே அந்த சாமியார் மந்திரம் ஒன்றை ஓதி காற்றிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து காவல்துறை அதிகாரியிடம் கொடுக்கிறாராம்.

 அந்தக் காகிதத்தில் சிறுமி ஒழுக்கமில்லாதவர் என்றும், பலருடன் பழகியதால் அவரது சித்தப்பா அவரைக் கொலை செய்தார் என்றும் எழுதி இருந்தது. இதனை அடுத்தே அவரது சித்தப்பாவை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.   எப்படி இருக்கிறது?

இந்தக் காட்சிப் பதிவு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பார்வைக்கு அனுப்பப்பட்ட பிறகு ஆய்வாளர் எஸ்.எஸ். அனில் சர்மா வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.  இதன் பிறகு இந்தக் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கியது. அதில் அந்த ஊருக்கு சமீபத்தில் வயல்வேலைக்கு வந்த ஒருவர் சிறுமி காலைக்கடன் கழிக்க வந்த போது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கதிர் அரிவாளால் சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.  பின்னர் அவர் அந்த ஊரை விட்டுச் சென்று விட்டார். 

இது தொடர்பாக அந்த ஊரில் சமீப காலமாக வந்து சென்றவர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மைக் குற்றவாளி யார் என்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியைப் பிடிக்கக் காவல்துறை முயன்றுவருகிறது, பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சிறுமியின் சித்தப்பா விடுதலை செய்யப்பட்டார். கொலைக்குற்றம் தொடர்பாக சாமியாரிடம் ஆலோசனை நடத்தி அவர் கொடுத்த ஜோதிடத் தகவலின் மூலம் குற்றமற்றவரை கொலைகாரர் என்று கூறி கைது செய்தவிவகாரம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போகிற போக்கைப் பார்த்தால் பிரதமர் நாற்காலியில் ஜோதிடர் ஒருவரையே அமர வைத்து விடுவார்கள் போலும்!

ஜோதிடத்துக்கும், அறிவுக்கும், அறிவியலுக்கும் சம்பந்த மில்லை. குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டனை வாங்கித் தர வேண்டிய காவல்துறையே ஜோதிடரை நாடுகிறது என்றால் இந்தக் கீழ்த் தரத்தை என்னவென்று சொல்லுவது!

ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பகுத் தறிவாளர்களாக, விஞ்ஞான மனப்பான்மை உள்ளவர்களாக இல்லாவிட்டால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் - எச்சரிக்கை! இது ஒருபுறம் இருக்கட்டும். அந்த ஜோதிடரைத் தண்டிக்காதது ஏன்?


No comments:

Post a Comment