ராஜா சர். முத்தையா செட்டியார் 118 ஆம் பிறந்தநாள் விழாவில் தமிழர் தலைவரின் விளக்க உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

ராஜா சர். முத்தையா செட்டியார் 118 ஆம் பிறந்தநாள் விழாவில் தமிழர் தலைவரின் விளக்க உரை

 நீதிக்கட்சிக் கொடியைத் தோளில் சுமந்து  ஒரு மைல் நடந்தவர்!

‘விடுதலை’க்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்

‘விடுதலை’ ஏட்டுக்கும் - செட்டி நாட்டரசருக்கும் உள்ள தொடர்பு

சென்னை, ஆக.9 ‘‘ராஜா சர். முத்தையா செட்டியார்  அவர்கள் நீதிக்கட்சிக் கொடியைத் தோளில் சுமந்து  ஒரு மைல் நடந்தவர்! ‘விடுதலை’க்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்'' என்றும், ‘விடுதலை’ ஏட்டுக்கும் - செட்டி நாட்டரசருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விளக்கினார் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் - நிகர் நிலைப் பல்கலைக் கழக வேந்தர், டாக்டர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 5.8.2022 அன்று  ராஜா சர். முத்தையா செட்டியார் 118 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாநிலக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். இச்சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் எஸ்.ராஜராஜன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சங்கத்தின் தலைவர் எம்.ரூஸ்வெல்ட் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர்.ராமன் தலைமை ஏற்று உரையாற்றினார். பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப  நிறுவனம்- நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர், டாக்டர் கி.வீரமணி அவர்கள் இறுதியில் தலைமை விருந்தினர் உரை நிகழ்த்தினார்.

7.8.2022 அன்று 'விடுதலை'யில் வெளிவந்த  தலைமையுரையின் தொடர்ச்சி வருமாறு:

இன்றைய திராவிடர் இயக்கம் - திராவிட மாடல், திராவிட மாடல் என்ற சொல் இப்பொழுது உங்களுக் கெல்லாம் அதிகமான அளவிற்குப் பழக்கமாக இருக் கிறது. அந்தத் திராவிட மாடலுக்கு முன்னோடியாக இருக்கக்கூடிய நீதிக்கட்சி - அந்த நீதிக்கட்சி நான்கு முறை ஆட்சியில் இருந்தது. கடைசியாக தோல்வியைத் தழுவியது - 1937-1938 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்.

எதிர்க்கட்சியாக நீதிக்கட்சி இருக்கிறது. ராஜகோபா லாச்சாரியார் இந்தியைத் திணித்த நேரத்தில், பெரியார் அதனை எதிர்த்து சிறைச்சாலையில் இருக்கிறார்.

ராஜா சர் முத்தையா போன்றவர்கள் எல்லாம் இருந்த நீதிக்கட்சிக்கு, யார் தலைவராக வந்தால், அந்தக் கட்சியை நடத்த முடியும் என்று சொன்னபொழுது, 

வெற்றிக்கு ஆங்கிலத்தில் ஒரு பழமொழி  உண்டு - வெற்றிக்குப் பல பேர் ஹீரோக்களாக வருவார்கள்; தோல்வி என்பது ஒரு அனாதையாக ஆகிவிடும் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

‘‘Victory has so many Heroes (claim). But Defeat is nothing but is an orphan’’

என்று சொல்வார்கள்.

தோல்வி என்று வரும்பொழுது, அந்தத் தோல்விக்கு நான்தான் பொறுப்பு என்று யாரும் வரமாட்டார்கள்.

அது அனாதை போன்றது.

ஆனால், வெற்றிக்கு நான்தான் காரணம் என்று பலரும் போட்டி போட்டு முன்வருவார்கள்.

அந்தக் காலகட்டத்தில், தோல்வி அடைந்து யாரும் வராத சூழ்நிலையிலே, பெரியாரைத்தான் தலைவராக வந்தால், நீதிக்கட்சிக்குப் புது வாழ்வு வரும் என்கிற எண்ணத்தோடு, அவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அப்பொழுது அவர் பெல்லாரி சிறைச்சாலையில் இருக்கிறார்.  இங்கே இருக்கின்ற தலைவர்களான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மற்ற தலைவர்கள் எல்லாம் பெரியார்தான் நீதிக்கட்சித் தலைவர் என்று சொல் கிறார்கள்.

அதற்குப் பிறகு பெரியாரிடம் சொல்கிறார்கள்.

முதல் மாநாடு சென்னை கடற்கரையில் நடைபெறு கிறது. சிறையில் இருக்கும் பெரியார் அவர்கள் எழுதிக் கொடுத்த உரையை, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அந்த மேடையில் படிக்கிறார்.

அதைப் படிப்பதற்கு முன்பாக - பெரியார்தான் அந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்கு அடையாளமாக, பெரியார் சிறையில் இருப்பதுபோன்று உருவத்தைப் போட்டு, அந்தப் படத்தை மேடையில் வைத்திருக் கிறார்கள்.

நீதிக்கட்சிக் கொடியைத் தோளில் சுமந்து ஒரு மைல் நடந்தவர்!

அதற்கு முன்பு, ஊர்வலம். ஏறத்தாழ ஒரு மைலுக்கு மேலே இந்தப் பகுதியிலிருந்து செல்லும் பொழுது, நீதிக்கட்சிக் கொடியை தன்னுடைய தோளிலே தூக்கிக்கொண்டு ஒரு மைல் நடந்தவர் யார் என்றால், இப்போது படமாக இருக்கின்ற டாக்டர் சர் ராஜா முத்தையா அவர்களாவார்.

அவருடைய சிறப்பு என்னவென்றால், அவர் ஒரு பெரிய பணக்காரர்; ராஜாவாக இருந்தவர். அதற்கு முன்பு கல்வி அமைச்சராக இருந்தவர் அவர். 

ஆனால், அவர் அன்று நடைபெற்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் நடந்து வந்தார். கடைசி வரையில் மொழிக் கொள்கையில் அவர் தெளி வாக இருந்தார்.

இதுதான் அவருடைய சிறப்பில், மிக முக்கியமான தனித்தன்மையானதாகும்.

இன்னொரு செய்தி என்னவென்றால்,

பல்கலைக் கழகத்தில், அவருடைய தொண் டால் படித்து, இன்றைக்கு உருவான அளவிற்கு, ஒரு பல்கலைக் கழகத்தின் வேந்தராக வரக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நான் வந்திருக்கின்றேன் என்று சொன்னால், அது அவருடைய கல்வித் தொண்டு இல்லாவிட்டால், நான் வந்திருக்க முடியாது என்ற அந்த நன்றி உணர்ச்சி.

இது ஒரு பக்கம்.

‘விடுதலை’ ஏட்டுக்கும் - 

செட்டி நாட்டரசருக்கும் உள்ள தொடர்பு

இங்கே என்னை அறிமுகப்படுத்தும்பொழுது, ராஜ ராஜன் அய்யா அவர்களும் சரி, நம்முடைய எம்.ரூஸ்வெல்ட் அவர்களும், நம்முடைய முதல்வர் ராமன் அவர்களானாலும், இங்கே என்னைப்பற்றி சொன் னார்கள் - ‘‘ஆசிரியர், ஆசிரியர்'' என்று. ‘விடுதலை’க்கு ஆசிரியர் என்று.

இந்த ‘விடுதலை’க்கும், செட்டிநாடு அரசருக்கும், இங்கே படமாக இருக்கின்றவருக்கும் என்ன தொடர்பு?

இது மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம்.

அதுவும் நான் நன்றி செலுத்தவேண்டும் என்று சொல்லும்பொழுது, வெறும் கல்விக்காக மட்டுமல்ல. நான் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்று, இந்த மாதத்தில் 60 ஆண்டுகள் ஆகக்கூடிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

இப்படிப்பட்ட இந்த வாய்ப்பிலே, ‘விடுதலை' யினுடைய வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது மூன்று செய்திகளை சொல்லவேண்டும்.

‘விடுதலை’ நாளிதழ் 88 ஆண்டுகளாக நடைபெறு கின்ற ஒரு நாளிதழ்.

எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு நாளிதழ்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல், துணிந்து சொல்லி, அதற்காகப் பல தழும்புகளை - விழுப்புண்களை ஏற்றுக் கொண்ட ஒரு கொள்கை ஏடு.

1939 ஆம் ஆண்டு, ஈரோடு ‘விடுதலை’ அலுவல கத்தில், அண்ணா அவர்கள் விடுதலை ஆசிரியராக இருக்கின்றார். திராவிட இயக்க வரலாற்றிலே இவை யெல்லாம் பதிவாகாத செய்திகள்.

எதையும் ஆதாரப்பூர்வமாகச் சொல்லிப் பழக்கப் பட்டவர்கள் நாங்கள்.

‘விடுதலை’க்காக சட்டமன்றத்தில் 

குரல் கொடுத்தவர்

அந்த வகையிலே வருகிறபொழுது நண்பர்களே, 1939 இல், ராஜாகோபாலாச்சாரியாரின் இந்தித் திணிப்பு எதிர்ப்பைத் தாக்கி எழுதப்படுகிறது என்று சொன்ன வுடன், 'விடுதலை' அலுவலகத்தை சோதனை செய்யச் சொல்லி, காவல்துறையினரை அனுப்புகிறார் - அடக்குமுறை.

அப்போது ராஜா சர் முத்தையா அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். துணைத் தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்.

அன்றைய காலகட்டத்தில்  ஒரு பெரிய மொழிப் போர் நடந்துகொண்டிருக்கின்ற நேரத்தில், கருத்துச் சுதந்திரம் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டது? என்பதற்கு ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

‘‘சென்னை அசம்பெளியில், எதிர்க்கட்சித் தலைவர் குமாரராஜா முத்தையா செட்டியார் அவர்கள், கீழ்க் கண்ட ஒத்தி வைப்பு பிரேரணையை கொண்டு வந்தார்.

ஈரோட்டில் உள்ள ‘விடுதலை', ‘குடிஅரசு' பத்திரிகை அலுவலகங்களில் போலீசார் சோதனை செய்த விஷயம், பொதுஜனங்கள் அறிய வேண்டியது அவ சியமும், அவசரமும் ஆனபடியால், மேற்படி விஷயத் தைக் குறித்து விவாதிக்க இச்சபையை ஒத்தி வைக்கத் தீர்மானிக்கிறது.

இது சட்டத்திற்குப் புறம்பானதா? உட்பட்டதா? என்று தலைவர் கேட்டார்.

எந்தச் சந்தர்ப்பத்தில் சோதனைக்கு உத்தரவிடப் பட்டது என்று தங்களுக்குத் தெரியாதா? என்று குமார ராஜா முத்தையா செட்டியார் தெரிவித்தார்.

நியாயம் - விரோதம் இல்லாமல் நடவடிக்கை எடுக் கப்பட்டு இருந்தால், தீர்மானத்தை தம்மால் அனுமதிக்க முடியாது என்று சட்டமன்றத் தலைவர் பதில் அளித்தார்.

அப்படி சட்டத்திற்கு மீறி ஏதாவது நடந்திருக்குமே யானால், எதிர்க்கட்சித் தலைவர் சொல்லத் தயாராய் இருந்தால், தமக்கு ஆட்சேபணை இல்லை என்றும் பிரதம மந்திரி தெரிவித்தார்.

(பிரதம மந்திரி ராஜகோபாலாச்சாரியார் - இராஜாஜி).

மிகக் கோபமாக ஒருமுறை சொன்னார், ‘‘இந்தியை எதிர்க்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்று சொல்கிறீர்களே, யார் எதிர்க்கிறார்கள்? எனக்குத்தான் மக்கள் ஆதரவு இருக்கிறது; நீங்கள் எதிர்ப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்’’ என்று கேட்டார்.

அப்போது சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் எழுந்தார்.

‘‘நீங்கள் இரண்டு பேர்தானே இங்கே உட்கார்ந் திருக்கிறீர்கள். (ராஜா சர் முத்தையா செட்டியார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்) - நீங்கள் இரண்டு பேர் எதிர்த்துவிட்டால், எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்று அர்த்தமா?’’ என்று ராஜாஜி கேட்கிறார்.

உடனே பன்னீர்செல்வம் சொல்கிறார், ‘‘ஆமாம், நாங்கள் இரண்டு பேர் எதிர்க்கிறோம்; நீங்க ஒருத்தர்தான் ஆதரிக்கிறீர்கள்; ஆகவே, நாங்கள்தான் மெஜாரிட்டி; நீங்கள் மைனாரிட்டி'' என்று சொன்னவுடன்,

அதற்குமேல் ராஜாஜியால் பதில் சொல்ல முடிய வில்லை.’’

‘விடுதலை’யைப் பொறுத்து, அன்றைய கால கட்டத்தில் சட்டசபையில் இந்தப் பிரச்சினையை எழுப்பியவர் ராஜா சர் முத்தையா அவர்கள்.

இரண்டாவது,

மிக விரிவாகச் சொல்லவில்லை. சென்னை சிந்தா திரிப்பேட்டை, பாலகிருஷ்ண பிள்ளை தெருவில் விடுதலை அலுவலகம் இருந்தது.

1941 இல் தொடங்கும்பொழுது, மீண்டும் விடுதலைப் பத்திரிகையை ஆரம்பித்தபொழுது, அதைத் தொடங்கி வைத்தவர்கள் யார்? யார்? என்ற ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. அந்தப் பட்டியல் முழுவதையும் நான் சொல்லப்போவதில்லை.

ஆனால், ‘விடுதலை’யைத் தொடங்கி வைத்து, தலைமை தாங்கியவர் யார் என்றால், இன்றைக்கு 88 ஆவது ஆண்டாக நடைபெறக்கூடிய இந்த விடுதலை, சென்னையிலிருந்து ஈரோடு சென்று - ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்தது; ஏனென்றால், நீதிக்கட்சியினுடைய அதிகாரப்பூர்வமான ஏடு விடுதலை.

‘விடுதலை’ ஆரம்ப விழாவுக்குத் 

தலைமை வகித்தவர்

மீண்டும் பெரியார் அவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்தது என்று சொன்னால் நண்பர்களே -  1.6.1941 ஆம் ஆண்டு மாலை, சிந்தாதிரிப்பேட்டை பாலகிருஷ்ணபிள்ளை 2 ஆம் எண் கட்டடத்தில், விடுதலை பிரசுர ஆரம்ப விழா தொடங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், தலைமை வகித்துப் பேசியவர் யார் என்றால், செட்டிநாட்டுக் குமாரராஜா முத்தையா செட்டியார் அவர்கள்தான்.

எனவே, அவருடைய பிறந்த நாள் விழாவிற்கு என்னை எப்படி அழைத்திருந்தாலும், அவருக்கும், 'விடுதலை'க்கும், எனக்கும் இருக்கிற தொடர்பு இயல் பாகவே சேரக்கூடிய அளவில் இருக்கிறது.

கல்வி ஒரு பக்கம் - அரசியல் ரீதியாக இருக்கக்கூடிய செய்திகள் என்பது இன்னொரு பக்கம் என்ற அளவிலே,

இப்படி நிறைய செய்திகளைச் சொல்லலாம்.

அதுமட்டுமல்ல, அவரிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய செய்தியை சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ராஜா சர் அவர்கள், பெரிய அரசர் என்று சொல்லக் கூடிய அளவில்,  செட்டிநாடு பேலஸ் (அரண்மனை) என்றுதான் சொல்வார்கள். அங்கே யார் சென்றாலும், உபசரிப்புக்கு ஒன்றும் பஞ்சமே இருக்காது.

(தொடரும்)

தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்த அறிஞர் பெருமக்கள் - மாணவர்கள்


No comments:

Post a Comment