''அரசமைப்புச் சட்ட சமூகநீதி சரத்துகள், காகிதப் புலி அல்ல; தனக்கானதை எடுத்துக்கொள்ளும் காட்டுப் புலி!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

''அரசமைப்புச் சட்ட சமூகநீதி சரத்துகள், காகிதப் புலி அல்ல; தனக்கானதை எடுத்துக்கொள்ளும் காட்டுப் புலி!''

சட்டப் பிரிவுகளை விருப்பம்போல விளக்கிக் குழப்பிடும் நீதித் துறையின் போக்கை ஆவணப்படுத்திய எல்.ஜி.ஹாவனுர் ஆணையப் பொன் விழா பெங்களூரு மாநாட்டில்

தமிழர் தலைவர் உரிமைப் போர் முரசு!


தொகுப்பு: வீ.குமரேசன்

பொன் விழா நிகழ்ச்சியில் தமிழர் தலைவருக்கு சிறப்பு

பெங்களூரு, ஆக.9- அரசமைப்புச் சட்ட சமூக சரத்துகள், காகிதப் புலி அல்ல; தனக்கானதை எடுத்துக்கொள்ளும் காட்டுப் புலி'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கருநாடகத்தில் எல்.ஜி.ஹாவனுர் ஆணையம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் (1972-2022) ஆன நிலையில், அந்த ஆணையம் அமைக்கப்பட்டதன் பொன் விழாவினைப் போற்றிக் கொண்டாடிடும் வகை யில், நேற்று (8.8.2022)  பெங்களூரு மாநகரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெங்களூரு மில்லர் சாலை, வசந்த் நகர் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் பவ னில் கருநாடக மாநில பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் கூட்டமைப்பினர் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் 

கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். பொன்விழா நிகழ்ச்சியினை கருநாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், மேனாள் முதல மைச்சருமான சித்தராமையா தொடங்கி வைத்தார்.

 கருநாடக மாநிலத்தின் முதலமைச்சராக தேவராஜ் அர்ஸ் இருந்தபொழுது முதன்முதலாக கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் நோக்க ஆணையம் அமைக்கப் பட்டது. 1972 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆணை யத்தின் தலைவராக அரசமைப்புச் சட்ட வல்லுநரும், சீரிய வழக்குரைஞருமான எல்.ஜி.ஹாவனுர் நியமிக்கப் பட்டார். கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் அறிக்கை 1975 ஆம் ஆண்டில் மாநில அரசிடம் அளிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நிலைமை, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு குறித்து அறிவியல் பூர்வமாக ஆணையத்தின் அறிக்கை இருந்தது. நாட்டின் சமூகநீதி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹாவனுர் ஆணையத்தின் அறிக்கை விளங்கியது.

நிகழ்ச்சியில், ஹாவனூரிடம் இளநிலை வழக்குரை ஞராகவும், பின்னர் கருநாடக மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் மற்றும் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் தலைவராகவும் இருந்த பேராசிரியர் ரவிவர்ம குமார் முக்கிய உரையினை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு கருநாடக மாநில பிற்படுத்தப்பட் சமு தாயத்தினர் கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரப்பா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில மேனாள் அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா மற்றும் மாநில சட்ட மன்ற மேலவையின் மேனாள் எதிர்க்கட்சித் தலைவர் வி.ஆர்.சுதர்சன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பொன்விழா நிகழ்ச்சிக்கு வந்தோரை வரவேற்று பெங்களூரு பல்கலைக் கழக மேனாள் பதிவாளரும், 47 பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை உள்ளடக்கிய கருநாடக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் கூட்டமைப்பின் மதிப்புறு தலைவருமான பேராசிரியர் பி.கே.ரவி உரையாற்றியதற்குப் பின்னர், சிறப்பு விருந்தினரான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கருத்தாழமிக்க, வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய வகையில் அரியதொரு உரை ஆற்றினார்.

தமிழர் தலைவரின் உரை

தமிழர் தலைவர் உரையில் முக்கியமாகக் குறிப் பிட்டதாவது:

நீண்ட காலமாக இருளில் மூழ்கிக் கிடந்த பிற்படுத்தப் பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தது ஹாவனுர் ஆணையத்தின் அறிக்கை ஆகும்.

பூட்டி வைக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டிற்கான வழி திறக்கப்பட்டது. ஹாவனுர் தலைமையிலான ஆணையம் அளித்தது அறிக்கை என்ற அளவில் சுருங்கிவிடவில்லை. அரியதொரு  ஆவ ணமாக - கருநாடக மாநிலத்திற்கு மட்டுமல்ல; தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல - இந்திய துணைக் கண்டம் முழு வதற்கும் வழிகாட்டிடும் வகையில் படைக்கப் பட்டது. அதுவரை அடக்கப்பட்டுக் கிடந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் படித்து, அதிகாரமிக்க நல்ல நிலைமைக்கு - பதவிகளுக்கு வரக்கூடிய சூழல்கள் உருவாகின.

1975 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட ஹாவனுர் ஆணையத்தின் அறிக்கையின் நகலினை கருநாடக மாநில மேனாள் அமைச்சர் பசவலிங்கப்பா அவர்கள் 24.5.1978 அன்று சென்னைக்கு வந்தபொழுது, அவரது சமூகநீதிபற்றிய உணர்வினை வெளிப்படுத்தி கையொப் பமிட்டு எமக்கு அளித்தார். எல்.ஜி.ஹாவனுர் அவர்கள் சென்னை - பெரியார் திடலுக்கு 8.3.2003 அன்று வருகை தந்தபொழுது கையொப்பமிட்டுக் கொடுத்த ஆவணமும் எம்மிடம் உள்ளது. அரிய ஆய்வுகள் நடத்தி, களப்பணி செய்து, சமூகநீதிபற்றிய கலங்கரை விளக்கமாக இன்றும் அந்த ஆணைய அறிக்கை ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அறிவியல்பூர்வமாக ஒரு ஆணைய அறிக்கை எப்படி அமைந்திட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. மாநில அளவிலான ஆணையத்தின் ஆய்வுடன் கூடிய செயல்பாடு, பின்னர் பிற்படுத்தப் பட்டோர் உரிமையினை ஒன்றிய அரசுக்குப் பரிந் துரைத்த மண்டல் ஆணையத்திற்கு ஒரு முன்னோடியாக - முன்மாதிரியாக அமைந்தது.

அன்றைய முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் அவர் களுக்கு சமர்ப்பித்த முன்னுரை கடிதத்தில் சமூகநீதி பற்றிய புரிதலை வெகுசிறப்பாக, நேர்த்தியாக ஹாவனுர் குறிப்பிட்டுள்ளார்.

Language of the Constitution, in so far as it relates to backward classes, is simple and unambiguous. But the language of the judiciary in interpreting the Constitutional provisions is highly ambiguous and complicated. In giving meaning to the expression ‘backward classes’, in suggesting the criteria for social and educational backwardness and in prescribing a maximum extent of reservation, judiciary did not assign reasons based on sufficient relevant material.

ஆங்கிலக் குறிப்பின் தமிழாக்கம்:

''பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதிபற்றிய அரச மைப்புச் சட்ட சொல்லாடல்கள் எளிமையானவை; தெளிவானவை. ஆனால், அரசமைப்புச் சட்டப் பிரிவுகள்பற்றிய நீதித் துறை விளக்கிடும் சொல்லாடல்கள் தெளிவில்லாமலும், குழப்பம் தருபவையாகவும் உள் ளன. 'பிற்படுத்தப்பட்டோர்' எனும் சொல்லுக்கு 'சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர்' எனக் குறிப்பிடுவதிலும், எந்த அளவு வரை இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது குறித்தும் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகளில் எந்தவித ஆதாரமும், அதற்குரிய ஆவணக் குறிப்புகளும் காட்டப்படவேயில்லை.''

நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் சமூகநீதிபற்றிய குறிப்புகள் வெளிப்படையாக - தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்கிய வர்கள் தெளிவின்மைக்கு இடமில்லாத வகையில் சமூகநீதிபற்றிய பிரிவுகளை வெகு பொருத்தமாகக் குறிப் பிட்டுள்ளார். ஆனால், அரசமைப்புச் சட்டப் பிரிவு களுக்கு விளக்கமளிக்கின்ற உயர் நிலையில் உள்ள நீதிபதிகள் சமூகநீதிபற்றிய குழப்பமான தங்களது கருத்துகளைக் கூறி வருகின்றனர். அத்தகைய கருத்து கள் சமூகநீதியின் பயணத்தை திசை திருப்புவதாக உள்ளது என ஹாவனுர் குறிப்பிடுகிறார்.

நாட்டிற்கே சமூகநீதிபற்றிய ஒரு நடைமுறையாக இட ஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தினா லும், இதுநாள் வரை உயர்நீதிமன்றங்களிலோ, உச்சநீதி மன்றத்திலோ நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இன்றைக்கு உயர்நீதிமன்றங் களிலும், உச்சநீதிமன்றத்திலும் பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சார்ந்த நீதிபதிகள் எத்தனை பேர் உள்ளனர்? எவ்வளவு எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின நீதிபதிகள் உள்ளனர்? நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என அரசமைப்புச் சட்டத்தில் உள்ளதா? அடக்கப்பட்ட மக்களாகிய நாம் கேட்பது உரிமையே தவிர, கருணை அல்ல; பிச்சைப் பாத்திரம் ஏந்துவது நமது பணியல்ல.

நீதிமன்றப் பணிகளில் ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதித்துவம் எந்த அளவிற்கு உள்ளது என ஹாவனுர் ஆணையம் கேட்ட விளக்கத்திற்கு, அன்றைய கருநாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதிலே அளிக்க வில்லை. உரிமை மறுக்கப்பட்ட நிலைமையை ஒப்புக் கொள்ளும் மனநிலையில் அன்றைய நீதிபதிகள் இல்லை என்பதை ஹாவனுர் மிகச் சரியாகவே தனது அறிக்கை ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். வருங்கால சந்ததியினருக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

நீதித்துறை நியமனங்களில் இட ஒதுக்கீடு என்பது பணியாளர்களுடன்,  தொடக்க நிலை நீதிபதி பதவிகளு டன் முடிவடைவதில்லை. உயர்நீதிமன்றங்கள், உச்சநீதி மன்ற நீதிபதிகள் நியமனங்களிலும் தொடரவேண்டி யவை.

விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டிய நிலையில், அரசமைப்புச் 'சட்டத்திற்குப் புறம்பாக (Ultra vires Constitution)' என ஒற்றை வரியில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.

தந்தை பெரியார் போராடிப் பெற்ற, பாபா சாகேப் அம்பேத்கர் வடிவமைத்த,  நேரு பெருமகனார் வழங்கிய சமூகநீதிப் பிரிவு 15(4) இல் தெளிவாகவே 'சமூக ரீதியாக, கல்வி ரீதியாக' பிற்படுத்தப்பட்டோர் என்ற நிலையில், வலுக்கட்டாயமாக 'பொருளாதார ரீதியாக' என்ற சொற்றொடர் இப்பொழுது திணிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டமே 'பெரும்பான்மை' என்பதன் பெயரால், பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் உரிமையைப் பறிக்கின்ற வகையில் திருத்தப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டோருக்கான சமூகநீதி உரிமை எப்படி மாற்றம் செய்யப்படுகிறது? ஆண்டு அனுபவித்தவர்களே தொடர்ந்து அனுபவித்து வரும் நிலைகள் 'அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக' முன்னேறிய ஜாதியினருக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத் திருத்தம் சரியானதுதானா? என்ற வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.

உரிமைக்கு உரிய மக்கள் விழிப்பாக இருந்தால்தான், ஒடுக்கப்பட்டோர் எச்சரிக்கை உணர்வுகளோடு இருந்தால்தான், கிடைக்கப் பெற்ற சமூகநீதி உரிமைகள் தொடர்ந்திடும். இதுவரை உரிமை கிடைக்கப் பெறாத தளங்களிலும், உரிய பிரதிநிதித்துவம் கிடைத்திடும்.

'Eternal vigilance is the price of Liberty'  -  நமக்குக் கிடைத்திருக்கும் விடுதலைக்கான  விலை என்பது எப் பொழுதும் கவனமாக உரிமைபற்றிய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதே ஆகும்.

தமிழ்நாடு தந்தை பெரியாரின் கொள்கையில், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியினைத் தொடர்ந்து, 'திராவிட மாடல்' ஆட்சியாக நடத்திவரும் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முக..ஸ்டாலின் காலத்தில் சமூகநீதிப் போர் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

எல்.ஜி.ஹாவனுர் கண்ட கனவுகள் கருநாடகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடைமுறையாக்கிட, ஆட்சி அதிகாரத்தில் அமருவோர் சமூகநீதிபற்றிய சரியான, முறையான புரிதலுடன் பணியாற்ற வேண்டும். அப்படி புரிதலுடன் கூடிய சமூகநீதியாளர்கள் ஆட்சி அதிகாரத் திற்கு விரைவில் வரவேண்டும். அத்தகைய சூழலை உருவாக்க வேண்டியது மக்கள் கையில் - குறிப்பாக ஒடுக்கப்பட்டோர் வசம்தான் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சமூகநீதி சரத்துகள் காகிதப் புலி அல்ல; காட்டில் உலாவும் புலி - தனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளும் புலி; அதுபோல, ஒடுக்கப்பட் டோரும், உரிமை வேட்கையுடன் பயணப்படுவோம். சமூகநீதி உரிமைத் தளத்தினை விரிவாக்குவோம். வெற்றி நமதே! 

வாழ்க பெரியார், வளர்க எல்.ஜி.ஹாவனூரின் சமூகநீதிக் கனவுகள்!

- இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

பங்கேற்றோர்

பெங்களூரு மாநாட்டிற்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன், அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெய ராமன், கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் ஜானகி ராமன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், ஓசூர் மாவட்டத் தலைவர் வனவேந்தன் மற்றும் திரளான தோழர்கள் வருகை தந்திருந்தனர்.

கருநாடக வாழ் தமிழர்கள் மற்றும் பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள், பிற்படுத்தப் பட்டோர் இதழாளர் சங்கத்தின் முனைவர் மணி மற்றும் பல தோழர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற அம்பேத்கர் பவனம் முழுவதும் பார்வை யாளர்களால் நிரம்பி வழிந்தது; சமூகநீதிபற்றிய உணர் வுகள் மக்களிடம் பெருகி வருகின்றன என்பதை பறைசாற்றிடும் வகையில் இருந்தது. 

No comments:

Post a Comment