ராஜா சர். முத்தையா செட்டியார் 118 ஆம் பிறந்தநாள் விழாவில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

ராஜா சர். முத்தையா செட்டியார் 118 ஆம் பிறந்தநாள் விழாவில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழர் தலைவர் உரை

 நகரத்தார் பெரும்பாலும் கோவிலைக் கட்டியவர்கள்தான்; 

அதை மாற்றிக் கல்விப் பணியைச் செய்தவர் செட்டி நாட்டு அண்ணாமலை அரசர், சர் முத்தைய வேள் குடும்பம்!


சென்னை, ஆக.10 ''நகரத்தார் பெரும்பாலும் கோவில் களைக் கட்டுவார்கள்; மாறாகக் கல்விப் பணியைச் செய்தவர்கள் அண்ணாமலைச் செட்டியார், அவரின் மகன் முத்தையவேள் ஆகியோர்தான். தொண்டறத் திலும், உபசரிப்பிலும் சிறந்த குடும்பம்'' என்றார் 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் - நிகர் நிலைப் பல்கலைக் கழக வேந்தர், டாக்டர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 5.8.2022 அன்று  ராஜா சர். முத்தையா செட்டியார் 118 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாநிலக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். இச்சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் எஸ்.ராஜராஜன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சங்கத்தின் தலைவர் எம்.ரூஸ்வெல்ட் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர்.ராமன் தலைமை ஏற்று உரையாற்றினார். பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப  நிறுவனம் - நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர், டாக்டர் கி.வீரமணி அவர்கள் இறுதியில் தலைமை விருந்தினர் உரை நிகழ்த்தினார்.

நேற்றைய தலைமை உரையின் தொடர்ச்சி வருமாறு:

நாங்கள் எல்லாம் மாணவர்களாக இருக்கும்பொழுது, கிட்டே செல்லாமல் எட்டி நின்று பார்த்தவர்கள். பிறகு எங்களைப் பார்த்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமானார். எங்களை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினார்.

என்னைப்பற்றி பெரியாரிடமே

பெருமையாகப் பேசுவார்!

நான் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, தந்தை பெரியாரை சந்திப்பதற்காக, பெரியார் திடலுக்கு வருவார். அப்படி வரும்பொழுது, என்னுடைய கையை வேகமாகப் பிடித்து இழுப்பார்.

‘‘அய்யா, வீரமணி எங்கள் ஸ்டூடண்டுதான்; நல்லா பேசுவார் தெரியுமா உங்களுக்கு?'' என்று சொல்வார்.

தெரியும், தெரியும் என்று பெரியார் தலையை ஆட்டுவார்.

அதைவிட இன்னொரு செய்தி என்னவென்றால், அவருடைய நினைவு வன்மை.

ஒரு நல்ல தலைவர், நல்ல சிந்தனையாளர் அவர்.

இளைஞர்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண் டிய செய்தி என்னவென்றால், இங்கே படமாக இருக்கக் கூடியவரின் நல்ல பண்பாடு, உபசரிப்பு, யாரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடியவர்; தன்னுடைய நிலை, பெரிய நிலை என்று அவர் நினைக்கமாட்டார். பெரிய அளவில் அவர் பதவியில் இருந்தபொழுதும், எங்களைப் போன்ற மாணவர்கள் அவரைச் சந்திக்கச் சென்றால், கையைப் பிடித்துக்கொண்டு, சாப்பிட்டீங்களா? என்ன செய்கிறீர் கள்? என்று எல்லா விஷயங்களைப்பற்றியும் கேட்பார்.

தந்தை பெரியாரிடம் அவர், ‘‘வீரமணி எங்க ஸ்டூண்ட் டுன்னு உங்களுக்குத் தெரிந்திருக்கும்; இன்னொரு செய்தி உங்களுக்குத் தெரியுமா? அவர் ஃபஸ்ட் ரேங்க் வாங்கின ஸ்டூண்ட்டுன்னு தெரியுமா உங்களுக்கு?’’ என்பார்.

திருச்சி - பெரியார் சிலை திறப்பு விழாவில்!

திருச்சியில்தான் முதன்முதலில் தந்தை பெரியாருக்குச் சிலை திறந்தார்கள். 

அப்பொழுது முதலமைச்சராக இருந்த அண்ணா, தந்தை பெரியாரை நீண்ட இடைவெளிக்குப் பின்னால் சந்தித்தார். காலையில், பெரியார், அண்ணா ஆகியோர் ஊர்வலத்தில் சிறப்பாக வந்தார்கள்.

மாலையில், காமராஜர்; அந்நாள் முதலமைச்சராக அண்ணா கலந்துகொண்டார்; காமராஜர் முன்னாள் முதலமைச்சர்.

ஆனால், முன்னாள் - இன்னாள் என்பதைப்பற்றி கவலையில்லை.

திருச்சியில் இருக்கின்ற சிலையை, காமராஜர் திறந்து வைத்தார். 

டாக்டர் குமாரராஜா அவர்கள் இணைவேந்தர் -

தலைவர்கள் பலர் அந்த விழாவில் பங்கேற்றனர்.

டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி அவர்கள்,  கல்வியாளர் ஏ.இராமசாமி முதலியார் அவர்களுடைய மகன் மிகப் பெரிய அளவிற்கு ஆங்கிலத்திலே நிபுணர். கல்வி அறிஞர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் இங்கே துணைவேந்தர். அந்த இரட்டையர்களில் ஒருவர்தான் டாக்டர் ஏ.இராமசாமி முதலியார். அவருடைய மூத்த புதல்வர் டாக்டர் கிருஷ்ணசாமி, யுனைடெட் நேஷன்ஸ் - அய்.நா. சபை போன்ற இடங்களுக்குப் போய், இந்தியாவின் சார்பில் மிகப்பெரிய அளவிற்கு, இந்தக் குழுவினுடைய தலைவராக இருந்த பெருமை - அவருடைய ஆற்றல், எழுத்து, பேச்சு - ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர்.

அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகிறார்; எங்களுடைய ராஜா சர் செட்டி நாட்டு அரசரும் இருக்கிறார்; காம ராஜரும் இருக்கிறார். திருச்சியில் பெரியாருக்கு சிலை திறப்பு நிகழ்ச்சியில்.

டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் 

ஆங்கில உரையும் - என் மொழி பெயர்ப்பும்!

டாக்டர் கிருஷ்ணசாமியை நாங்கள் அழைத் தோம்; அவர் எப்பொழுதும் ஆங்கிலத்தில்தான் பேசுவார். அவருடைய பேச்சை மொழி பெயர்த்து சொல்லவேண்டும். அவருடைய ஆங்கில உரையை மொழி பெயர்ப்பதற்கு யாரும் அவ் வளவு சுலபத்தில் முன்வரமாட்டார்கள். ஏனென் றால், அவருடைய ஆங்கிலம் அவ்வளவுக் கடுமையான ஆங்கிலமாக இருக்கும்; ஆங்கிலப் புலமை வாய்ந்தவர். அப்பொழுது என்னை மொழி பெயர்க்கச் சொன்னார்கள்.

அவர் ஒரு அய்ந்து நிமிடம் உரையாற்றிவிட்டு, உரையை நிறுத்திவிடுவார். அவருடைய பேச்சை நான் எந்தவித குறிப்பும் எடுக்காமல், மனதில் வாங் கிக்கொண்டு, மொழி பெயர்த்துச் சொன்னேன்.

குமாரராஜா சர் முத்தையா செட்டியார் அவர் கள் மேடையிலேயே என்னைக் கட்டி பிடித்துச் சொன்னார், ‘‘மொழி பெயர்ப்பு என்பது சாதாரணமானதல்ல; நன்றாக நீங்கள் மொழி பெயர்த்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது’’ என்று சொன்னார்.

அதற்குப் பிறகு என்னை அவர் எந்த நிகழ்ச்சியில் சந்தித்தாலும், எனக்கு ஓர் இக்கட்டான சூழ்நிலையை உண்டாக்கிவிடுவார்.

அது என்னவென்றால்,

‘‘இவர் யார் தெரியுமா?

வீரமணி

உங்களுக்குத் தெரியும்.

அது முக்கியமல்ல; அவர் எங்களுடைய மாணவர் என்பதையும் தெரிந்து வைத்திருப்பீர்கள்; அவர் நன் றாகப் பேசுவார் என்பதையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், இவர் சிறப்பாக மொழி பெயர்ப்பார் என்பது தெரியுமா?

சர்.ஏ.இராமசாமி முதலியார் தெரியுமா? அவருடைய மகன்.  கிருஷ்ணசாமி அவருடைய பேச்சை யாராலும் மொழி பெயர்க்க முடியாது. இவர் மொழி பெயர்த்தார்; ஒரிஜினலாக அவர் பேசியதைவிட, இவர் மொழி பெயர்த்துச் சொன்னது அதைவிட நன்றாக இருந்தது என்பது தெரியுமா உங்களுக்கு’’ என்று சொல்வார்.

எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருக்கும்.

எதற்காக இதை சொல்கிறேன் என்றால், என்னுடைய பெருமைக்காக அல்ல நண்பர்களே! தன்னுடைய மாண வன், ஒரு சாதாரணமான இளைஞனாக இருந்தாலும், திறமை எங்கே இருந்தாலும், அந்தத் திறமையை ஊக்கப் படுத்தி, உற்சாகப்படுத்தி, மற்றவர்களை உயர்த்துவது என்பது இருக்கிறதே, இதை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த மனிதப் பண்புகள் மிக முக்கியம்.

அவர் மிகப்பெரிய செல்வந்தர், தொண்டறம் செய்தவர்.

அவருடைய தந்தையார் அண்ணாமலை அரசரும் சரி, இவரும் சரி - ஒரு திருப்பத்தைக் கல்வித் துறையில் ஏற்படுத்தினார்கள்.

என்ன திருப்பம்?

நகரத்தார்களில் 

கல்வியை வளர்த்த குடும்பம்!

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் எல்லாம் வணிகத் தில் மிகச் சிறந்தவர்கள். வெளிநாட்டிற்குச் சென்று நிறைய சம்பாதித்தார்கள். பர்மா போன்ற இடங்களில் சிக்கல்கள் வந்தன; மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றார்கள்; மற்ற நாடுகளுக்குச் சென்றார்கள்.

ஆனால், அவர்கள் வெளிநாடுகளில் சம்பாதித்து, சம்பாதித்து என்ன செய்தார்கள் என்றால், தமிழ்நாட்டில் கோவில்கள் கட்டினார்கள். பழைய கோவில்களை எல்லாம் புதுப்பித்தார்கள். குடமுழுக்கு செய்தார்கள். இதுபோன்ற பணிகளைத்தான் செய்தார்கள்.

ஆனால், அதை அறவே மாற்றி, சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் 1925 இல் உருவாக்கி, இன உணர்வை உண்டாக்கியவுடன்,

கல்விக் கண்கள் மிக முக்கியம்.

‘‘அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் 

புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு 

எழுத்தறிவித்தல்’’ என்று பாரதியாருடைய பாட்டில் இருக்கும்.

‘‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்பதுதான் மிக முக்கியம். அதைத்தான் ‘புண்ணியம்’ என்று சொன்னார். ‘புண்ணியம், பாவம்’ பிறகு. ஆனால், யாரும் அதை செய்யாத நேரத்தில், அண்ணாமலை அரசர்தான் முதன்முதலில் கல்லூரி ஆரம்பித்து, படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

சிதம்பரத்தில் தொடங்கப்பட்ட கல்லூரிக்கு மீனாட்சிக் கல்லூரி என்று பெயர் கொடுத்தார். அதற்குப் பிறகுதான் அது அண்ணாமலை பல்கலைக் கழகமாக வளர்ந்தது.

அப்படிப்பட்ட அளவிற்கு அந்தக் கல்லூரி இன் றைக்குப் பெரிய அளவில் வளர்ந்து, எங்களைப் போன்ற வர்கள் மட்டுமல்ல - அந்தப் பல்கலைக் கழகத்தில் படித்த ஆயிரக்கணக்கானவர்கள் இன்றைக்கு அரசிய லில், பொருளாதாரத்தில் மேதைகளாக, விஞ்ஞானிகளாக உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்றால், அந்த உணர்விற்கு அடிப்படையானது அவருடைய தொண்டறம் என்பது மிகவும் முக்கியம்.

உபசரிப்பில் உயர்ந்தவர்கள்

செட்டிநாட்டு அரண்மனைக்கு யார் சென்றாலும், அவர்களை வரவேற்று உபசரிப்பார்கள். எங்களைப் போன்ற மாணவர்களாகிய நாங்கள், இணைவேந்தராக இருந்த அவரைப் போய்ப் பார்த்துவிட்டுப் புறப்படும் பொழுது, வாசல் வரைக்கும் வந்து வழியனுப்புவார்.

இந்தப் பண்பாடுதான் மனிதர்களை உயர்த்துவது.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கள்பண்பு இல்லா தவர்.

மக்கள் பண்பு என்பது இருக்கிறதே, அதில் மிகவும் சிறப்பானது மனிதநேயம். ராஜா சர் முத்தையா அரசர் அவர்கள் 6 அடி உயரத்திற்குமேல் இருப்பார். எங்கள் தோள்மீது கை போட்டுக்கொண்டு வருவார்; நாங்கள் எல்லாம் அவரை நிமிர்ந்து பார்க்கிற அளவில் இருக்கும். கார் கதவை அவர் திறந்துவிட்டு, உள்ளே போய் அமருங்கள் என்று சொல்வார்.

செல்வமல்ல முக்கியம் - 

தொண்டறமே சிறந்தது!

எனவே, அவரை செல்வத்தால் அளக்கக்கூடாது; தொண்டறத்தால் அளக்கவேண்டும்; அதையெல்லாம் விட பண்பால் அளந்தால், அவரைவிட உயர்ந்தவர் வேறு எவரும் கிடையாது என்று சொல்லத்தக்க வகையில், அவ்வளவு மனிதநேயத்தோடு இருந்தவர்.

எனவே, அவருடைய 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறோம் என்று சொன்னால், அவர் ஒரு பெரிய செல்வந்தர் என்பதற்காக அல்ல - ஒரு பெரிய தொழிலதிபர் என்பதற்காக அல்ல - ஆயிரம் தொழிலதிபர்கள் இருக்கிறார்கள் - தொழிலதிபர்களுக்கே சிறப்பு என்னவென்றால், வருமான வரி ரெய்டு என்பது தானே தவிர, வேறொன்றும் கிடையாது. இதுபோன்ற சிறப்புகள் அவருக்குக் கிடையாது.

ஆனால், யாருக்காகவும் தொண்டறம் என்பதை அவர்கள் விட்டதே கிடையாது.

முத்தைய வேள் பற்றி புரட்சிக்கவிஞர்!

அவரைப்பற்றி ஒன்றை மட்டும் சொல்லி, நான் என்னுரையை முடிக்கிறேன். ஏனென்றால், நம்முடைய இளைஞர்கள் அதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், ‘‘செட்டி நாட்டு அரசர் முத்தையா’’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

பெரியார் அவர்கள் எப்படி தேவையில்லாமல் ஒரு வரைப் பாராட்டமாட்டாரோ அதேபோன்று, புரட்சிக் கவிஞரும், யாரையும் விட்டு வைக்கமாட்டார்; கடுமை யாகச் சொல்லவேண்டிய நேரத்தில் கடுமையாக சொல்வார்.

மாணவச் செல்வங்கள், ஆசிரியர்கள், இந்தக் கவி தையை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்று தெரியாது.

இந்தக் கவிதையைச் சொல்லி, என்னுடைய உரையை நான் நிறைவு செய்ய விரும்புகின்றேன்.

அண்ணாமலை அரசருக்குப் பிள்ளையாக நம்மு டைய முத்தைய வேள் பிறந்தார் என்பதை எப்படித் தொடங்குகிறார் பாருங்கள்.

அவர் முதலில் நிறுவுநர்; அவர் இணைவேந்தர்; அவருக்குப் பிறகு இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினுடைய இணைவேந்தர். அதிலிருந்து தொடங் குகிறார்.

துப்பாக்கியின் வயிற்றில் பீரங்கி தோன்றியது

மெய்ப்பாக்கி வேந்தர் அண்ணாமலையார் -- இப்பார்க்கு

முத்தையா வைத்தந்தார் மூத்தோரும் என் அறிவின்

சொத்தையா என்னும் படி.


செட்டிநகர் வேந்தர் அறிவுநீர்த் தேக்கத்தை

எட்டி நகராமல் இயற்றினார் -- ஒட்டி

அரசர் முத்தையா அதுகாப்பாரானார்

இருவிழியைக் காக்கிமை போல்.


அண்ணா மலைப்பல் கலைக்கழகம் அன்றளித்த

அண்ணா மலையரசர் ஆசையினைக் -- கண்ணாகக்

கொண்டுநிறை வேற்றிவரும் கோமகன், முத்தையாவின்

தொண்டென்றும் தூண்டா விளக்கு.


தமிழிசைஇ ராசா சர் அண்ணா மலையார்

அமிழ்திவர் ஆயினும் நாட்டில் -- கமழும்

கலைத்தோட்டக்காரர்; கருங்குளவிச் சாதி

அலைத்தோட்ட அஞ்சா தவர்.


வாணிகத்தில் எவ்வெத் துறைகள்? வடித்ததமிழ்

மாணவர்க் கெவ்வெத் துறைகள்? எலாம் -- பேணுகென்றே

அப்பா உரைத்தார், அதனை முத் தையாவோ

முப்பதுபங் காக்கினார் மூத்து


துணைவேந்தர், தூய இணைவேந்து யார்க்கும்

அணைவேந்தி ஆட்சியைக் காக்கத் -- துணையேந்தும்

வில்லுக்கும் வேந்தர், பொருள்வேந்தர், முத்தையா

கல்விக்கும் வேந்தரே காண்.


கடுநிலைமை எத்தனை அத்தனை யுள்ளும்

நடுநிலைமை நல்லுயிரே என்பர்-வடுவற்ற

இன்சொல் உடையார்; எழிலரசர் முத்தையா

வன்சொல் வழங்கலறி யார்,


பயிரும் பயனுழவும் போல் முத்தை யா தம்

உயிரும் தமிழ்மொழியும் ஒன்றென்று -- அயராது

நாளும் உழைப்பவர்; நாம்தமிழர் எல்லாரும்

கேளும் கிளையுமே என்று.


தங்கா தியங்கியிலே தம் துரைத்த னப்பணியாய்

எங்கே பறந்தாலும் இங்கிருப்பார் -- மங்காத

அண்ணா மலைப்பல் கலைக்கழகம் முத்தையா

எண்ணாத நேரமிராது.


செட்டிநாட் டண்ணல் திருமகனார் முத்தையச்

செட்டிநாட் டண்ணல் திறம்வாழ்க -- அட்டியின்றிப்

பல்லாண்டு வாழ்கவே, பன்மக்கள் பேரர்கள்

செல்வம் புகழிற் சிறந்து.

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார்.

எனவேதான், இந்த வாழ்த்தோடு என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தர், டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment