தேனீக்களாகப் பறப்போம்!'விடுதலை'த் தேனடையைக் கொண்டு வந்து சேர்ப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

தேனீக்களாகப் பறப்போம்!'விடுதலை'த் தேனடையைக் கொண்டு வந்து சேர்ப்போம்!

கவிஞர் கலி.பூங்குன்றன்

பொறுப்பாசிரியர், விடுதலை

சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஈடு இணை இல்லை என்பார் தந்தை பெரியார்! அதுபோன்றே ‘விடுதலை' என்ற சொல்லும் விவேகமும், வேகமும், வீரமும், முந்துறும் சொல்லாகும்.

தந்தை பெரியார் தாம் நடத்திய ஏடுகளுக்குச் சூட்டிய பெயர்களே பொருளும், புதுமையும் கொண் டவைதானே!

‘குடிஅரசு', ‘விடுதலை', ‘புரட்சி', ‘பகுத்தறிவு', ‘உண்மை' என்ற பெயர்களே அதன் இலட்சியத்தைப் பறைசாற்றும்.

‘விடுதலை' பொன்விழா மலரில் (1985) ‘நினைவிடம் நோக்கி...!' என்று மலரைப் புரட்டியவுடன் முதலில் நம் கண்களை ஈர்க்கும் அந்தப் பகுதியில் நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் எழுத்துகள் இதோ:

‘‘பெரியாரே - நம் ஒளி!

‘விடுதலை'யே நம் வழி!!

பொன்னான தலைவருக்கு - 107

கண்ணான ‘விடுதலை'க்கு - 50

காலத்தை வென்று கருத்துகள்

படைத்திட்ட காவியங்கள் இவை!

தமிழன் இல்லத்தின் அடையாளங்கள்

வீடுதோறும் ‘விடுதலை' - நாடு

தோறும்  இனமானம்!

இலட்சியக் கணக்கில் லாபத்தில் ‘விடுதலை'

லட்சக் கணக்கில் நட்டத்தில் ‘விடுதலை'

அய்யா அருட்கொடை இப்படி!

மாற்ற வாரீர் - சமுதாயத்தை!

மாற்ற வாரீர் ‘விடுதலை' நட்டத்தை -

ஏற்ற வாரீர் பெரியார் ஒளியை!''

என்று 37 ஆண்டுகளுக்கு முன் நமது ஆசிரியர் எழுதினார். இன்றைக்கும் ஏறத்தாழ அதே நிலைதானே!

இலட்சக்கணக்கில் ‘விடுதலை' ஏட்டைப் பரப்ப முடியாதா? ஏன் முடியாது? அது எளிதான காரியமே!

ஆனால், இலட்சியங்களைக் காவு கொடுக்கத் தயா ராக இருக்கவேண்டும்; இலட்சியத்துக்காக உயிரையும் துச்சமாகத் தூக்கி எறியும் இயக்கமாயிற்றே!

‘விடுதலை'யின் 88 ஆண்டுகாலப் பயணத்தில் எத்தனை எத்தனை விழுப்புண்கள் - எத்தனை எத்தனை நெருப்பாற்று எதிர்நீச்சல்.

எத்தனை எத்தனை அடக்கு முறைகள் அரசுகளால்! வெள்ளைக்காரன் ஆட்சியில் மட்டுமல்ல - சுதந்திரக் காரன் ஆட்சியிலும் ஜாமீன் தொகை கேட்கப்பட்ட துண்டு.

‘விடுதலை'யின் குரல்வளையை நெரித்துவிட்டால், மீண்டும் மனுதர்மக் கொடியை விண்ணுயர பறக்க விடலாம் என்பது ஆரியத்தின் எண்ணம்.

1976 இல் நெருக்கடி நிலையை நாம் பார்க்க வில்லையா? ஆரிய விஷக் கத்தரிக்கோல் கண்ட துண்டமாக ‘விடுதலை'யை நறுக்கிடவில்லையா?

கத்தரிக்கோலையும் சந்தித்து, கருத்தாயுதம் தாங் கியே போரிட்ட கருஞ்சட்டைப் படை நாம்!

‘விடுதலை'யின் ஒரு பெட்டிச் செய்திகூட எதிரி களின் கபாலங்களைப் பிளக்கும். ‘இது உண்மையா?' என்று கட்டம் கட்டி வரும் தகவல்கூட - அரசாங்கக் கோட்டையின் இரும்புக் கதவைப் பதம் பார்க்கும்.

‘விடுதலை' அறிக்கைகளும், தலையங்கங்களும் இருட்டையும் பகலாக்கும்.

சமூகப் புரட்சி ஏடுதான் - ஆனாலும், அரசியல் பாட்டையை வகுத்துக் கொடுக்கும் ஆசானாகப் பரிணமிக்கும்.

அதிகம் சொல்லுவானேன் - சங்கராச்சாரிகளும் அன்றாடம் படிக்கும் ஏடு ‘விடுதலை'. புனை சுருட்டல்ல - மறைந்த சின்னக்குத்தூசியும் (மானமிகு தியாகராசன்), எழுத்தாளர் ஞானியும், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் அழைப்பின் பெயரில் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அந்தத் தகவலைச் சொன்னவர் சங்கராச்சாரியார்.

ஆம், நம் எதிரிகள் நம்மைக் கண்காணிக்கிறார்கள். நாமே நம் எதிரிகளைக் கண்காணிக்கிறோம்.

‘‘இந்தியன் வங்கியா? அக்கிரகாரமா?'' என்று ‘விடுதலை'யில் வெளிவந்த கட்டுரையை நாடாளு மன்றத்தில் மானமிகு தா.கிருட்டிணன் ‘விடுதலை'யை விரித்துக்காட்டி, விரியன் பாம்புகளைப் படம்பிடித்துக் காட்டியதுண்டே! அதற்காகத் தனி அதிகாரி நியமிக் கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டதும் உண்டு.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேட்கவே வேண்டாம் ‘விடுதலை'யின் கருத்துகள் விரிவாக விவாதிக்கப்பட்ட துண்டு. மானமிகு முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ‘விடுதலை' ஏட்டை சட்டமன்றத்தில் விரித்துக்காட்டி, படித்துக் காட்டி இதற்கு என்ன பதில்? என்று எதிரிகளுக்கு விலாவில் அம்பாக எய்திய துண்டே!

தற்போதைய விடுதலை அச்சு இயந்திரம்!


ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் பாதிப்பா? அரசு அலுவலகங்களில் பார்ப்பனர் அல்லாதார் பாதிப்பா? பட்டாக் கத்தியாகப் பாய்ந்து சழக்கர்களின் சூழ்ச்சிக் குடலை அறுத்து எறிந்ததுண்டே!

மளிகைக் கடையில் பொட்டலங்கட்டி வந்த ‘விடு தலை'யை எதிர்பாராமல் படித்து, பகுத்தறிவாளர்களாக ஆனவர்கள் உண்டு!

பாளையங்கோட்டைச் சிறையில் ஆயுள் கைதியாக இருந்த பக்கிரி முகம்மது என்ற தோழர், எனக்கு சிறை யிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை; ஆனாலும், அன்றாடம் எனக்கு ‘விடுதலை' (ஏடு) கிடைத்துக் கொண்டிருக்கிறது - மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! என்று ‘விடுதலை' ஆசிரியருக்கு அஞ்சலட்டை எழுதிய சேதி தெரியுமா?

இதுபோல் இன்னும் எத்தனை எத்தனையோ சுவையூட்டும் - அதிர்ச்சியூட்டும் சுனையான செய்தி களுக்கு ‘விடுதலை'யில் பஞ்சமில்லை.

இந்த வாரம் ‘துக்ளக்' பார்ப்பன இதழில் (17.8.2022, பக்கம் 9) ஒரு கேள்வி - பதில்.

கேள்வி: நீங்கள் ‘விடுதலை', ‘முரசொலி' படிப் பதுண்டா?

பதில்: ‘விடுதலை'யை அவ்வப்போது பார்ப்ப துண்டு. ‘முரசொலி'யை அவ்வப்போது படிப் பதுண்டு.

குருமூர்த்தி அய்யர்வாள் எழுதியிருப்பதுதான் இது.

அறிவுநாணயமற்ற முறையில் நாம் அப்படிக் கூறமாட்டோம்.

‘துக்ளக்'கை வாராவாரம் படிக்கிறோம் - வரிக்கு வரி படிக்கிறோம் - வரி பிளந்து பதில் அடியும் கொடுக் கிறோம்.

‘விடுதலை'யை அவ்வப்போது பார்ப்பதுண்டாம் - அதாவது படிப்பதில்லையாம்! இது உண்மையா? பார்ப்பதற்கான பத்திரிகையா ‘விடுதலை'? பார்ப்பான், பார்ப்பான் ‘விடுதலை'யைப் படிக்கவும் செய்வான் - பதில் அளிப்பதற்கு மட்டும் சரக்குக் கிடையாது.

‘துக்ளக்'கின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் இருந்ததில்லை. ‘விடுதலை'க்குப் பதில் அளிக்கும் துப்பு ‘துக்ளக்'குக்குக் கிடையாது.

அருமைத் தோழர்களே!

மதவாதமும், ஜாதீயவாதமும் தலைதூக்கி நிற்கிறது. மத்தியில் அதிகாரப் பீடத்தில் மனுதர்மவாதிகள், காவிகளும், கார்ப்பரேட்டுகளும் ஆட்டம் போடு கிறார்கள்.

சித்தாந்த ரீதியாக அவர்களைச் சிதைக்கும் ஒரே ஏடு ‘விடுதலை'யே! வெகுமக்கள் மத்தியில் காவி களுக்கு எதிரானவற்றைக் கொண்டு செல்லும் ஆற்றல் ‘விடுதலை'க்கு மிக்குண்டு.

‘விடுதலை' பரவுவது ‘விடுதலை'க்காக அல்ல; மக்களின் விடுதலைக்காக! அறியாமையிலிருந்து விடுதலை - ஜாதி, மத சழக்குகளிலிருந்து விடுதலை - ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை- சமூக அநீதியிலிருந்து விடுதலை - பெண்ணடிமைத்தனத் திலிருந்து விடுதலை.

எதிலும் விடுதலை - எங்கும் விடுதலை!

‘விடுதலை' இன்றேல் கெடுதலையே!

88 ஆண்டு ‘விடுதலை'யில் 60 ஆண்டு ஆசிரியர் நம் தலைவர்! எந்த ஏடு - எந்த இதழிலும் இத்தனை ஆண்டுகள் ஆசிரியராக இருந்தவர் எவருமிலர்.

ஆம், நமது ஆசிரியர் ‘கின்னஸ்' சாதனை புரிந் துள்ளார். 60 ஆண்டு ஆசிரியருக்கு 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்கள் என்பதும் மேலும் ஒரு ‘கின்னஸ்' சாதனையாக வேண்டாமா?

நாம் எடுத்த முடிவை ஈடேற்ற வேண்டாமா? இலக்கை முடிக்க இறக்கையைக் கட்டிக்கொண்டு பறக்கவேண்டாமா?

‘‘தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை''' என்றாரே நமது தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

தமிழன் வீடெல்லாம் செல்வோம் - ‘விடுதலை'யால் ஏற்பட்ட விளைச்சலை எடுத்துக் கூறுவோம்.

நமது தலைவரின் வரலாற்றுக் கரங்களில் 60 ஆயிரம் சந்தாக்களை வாரிக் கொடுத்து, அவரை அக மகிழச் செய்வோம். அந்த மகிழ்ச்சி அவருக்கு ஊட்டச் சத்தாக - ஊக்கச் சக்தியாகட்டும் - அது நூற்றாண்டாக அவர்தம் ஆயுளைக் கூட்டட்டும் - அதன்மூலம் நமது சமூகம் வளமையும், வலிமையும் பெறட்டும்!

பறப்பீர்! பறப்பீர்!

தேனீக்களாகப் பறப்பீர்!

விரைவீர்! விரைவீர்!

சிட்டுக்களாக விரைவீர்!

வெற்றி நமதே!

வெல்க ‘விடுதலை'யே!

No comments:

Post a Comment