சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள்

சென்னை,ஜூலை23- சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதன்படி, 10ஆம் வகுப்பில் 94.4 சதவீதம், பிளஸ் 2 தேர்வில் 92.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நடப்பாண்டு 10, 12ஆம்வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு, கரோனாவால் 2 பருவங்களாக நடத்தப்பட்டது. அதன்படி, முதல் பருவத் தேர்வுகள் கடந்த நவம்பர், டிசம்பரிலும், 2ஆம் பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களிலும் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் நேற்று (22.7.2022) வெளியிடப்பட்டன.

பிளஸ் 2 தேர்வை நாடுமுழுவதும் 15,079 பள்ளிகளைச் சேர்ந்த 14 லட்சத்து 35,336 மாணவ, மாணவிகள் எழுதினர். அதில் 13 லட்சத்து 30,662 (92.71%) பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2020ஆம் ஆண்டைவிட 3.9 சதவீதம் அதிகம்.கரோனா பரவலால் 2021இல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்துசெய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது. மண்டல வாரியான தேர்ச்சியில் 98.8 சதவீதம் பெற்று திருவனந்தபுரம் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த 2, 3-ம் இடங்களில் பெங்களூரு (98.1%), சென்னை (97.79%) உள்ளன.

அதேபோல, 10ஆம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 22,731 பள்ளிகளைச் சேர்ந்த 20 லட்சத்து 93,978 மாணவர்கள் எழுதினர். அதில் 19 லட்சத்து 76,668 (94.40%) பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2020ஆம் ஆண்டைவிட 2.9 சதவீதம் அதிகம்.

பத்தாம் வகுப்பிலும் மண்டல அளவில் திருவனந்த புரம் 99.68 சதவீதம் பெற்று, முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (99.22%), சென்னை (98.97%)ஆகியவை 2, 3ஆம் இடங்களைப் பிடித்துள்ளன.

பிளஸ் 2 தேர்வில் 33,432 பேரும், 10ஆம் வகுப்பில் 64,908 பேரும் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்ப் பதற்காக நடப்பாண்டு தேர்ச்சியில் முதல்3 இடங்கள் பிடித்த மாணவர்களின் விவரம்வெளியிடப்படவில்லை. தோல்வி அடைந்தவர்களுக்கான முன்னேற்றத் தேர்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment