அமர்நாத் யாத்திரைக்கு முடிவு எப்போது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

அமர்நாத் யாத்திரைக்கு முடிவு எப்போது?

"இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப் பிட்ட சில மாதங்களில் அற்புத சிவலிங்கம் ஒன்று தோன்றி காட்சியளிக்கிறது என்றும், பின் அது தானே மறைந்து விடுகிறது என்றும், பக்தர்கள் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள். ஆண்டுதோறும் இந்த 'அற்புத சிவலிங்க'த்தைக் கண்டு வணங்கி வழிபாடு நடத்துவதற்காக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் அந்த இடத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள். 

சிவனும் - பார்வதியும் வாழ்ந்த குகை அதுவென்றும், அந்தக் காலத்தில் பார்வதிதேவி வழிபாடு செய்து வந்த சிவலிங்கமே அதுவென்றும் கதைகள் புனைந்து பரப்பி வருகின்றார்கள். 

காஷ்மீரில் உள்ள வழிபாட்டு மய்யமான அமர்நாத்திற்கு பகல்ஹாமில் இருந்து கந்தன்வாடி வழியாக 38 கிலோமீட்டர் செல்ல வேண்டும். 12,729 அடி உயரத்தில் உள்ள இந்த குகையில் இருந்து, புகழ்பெற்ற கோல்ஹாய் பனிச்சிகரம் அதிக தொலைவில் இல்லை. 

அமர்நாத்தில் உள்ள அந்தக் குகையில் குளிர்காலத்தின் தொடக்கத்தில் தோன்றுகின்ற ஒரு பனிக்கட்டியின் வடிவத்தைத்தான் சிவலிங்கமாகக் கருதி வழிபடுகிறார்கள். 

குகையின் மேல்புறத்தில் உள்ள ஒரு இடுக்கு வழியாக கசிந்து வருகின்ற தண்ணீர் துளித்துளிகளாக கீழே விழுகின்றது. பனிக் காலத்தின் கடும் குளிரில் தண்ணீர்ப் பனிக்கட்டியைத்தான் சிவலிங்கமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். 

நானும் ஒருமுறை பயணம் செய்து அந்தக் குகைக்குச் சென்றேன். அதைப் பார்வையிட்டேன். அப்போது அந்தப் பனிக்கட்டி லிங்கத்தை நிழற்படமும் எடுத்து வந்தேன். அந்த ஆண்டில் அப்போது நிலவிய குளிரின் தன்மைக்கேற்ப அமைந்த பனிக்கட்டியின் வடிவமே ஒளிப்படத்தில் பதிவானது.

குகைக்கு மேலேயிருந்து விழுகின்ற தண்ணீரின் அளவும், அன்றைய சூழ்நிலையில் உள்ள குளிரின் தன்மைக்கு ஏற்பவும் சிவலிங்கத்தின் வடிவம் சிறியதாகவோ, பெரியதாகவோ தோற்றம் அளிக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் சுற்றுப்புறச் சூழ்நிலை சூடாக - வெப்பமாக மாறும்போது பனிலிங்கம் உருகி, இல்லாமலேயே போய்விடுகிறது. டிசம்பர், சனவரி மாதங்களில் அந்தப் பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டுக் கிடக்கிறது. 

அமர்நாத் குகையில் உள்ள சிவலிங்கத்தின் அருகே ஒரு மின் வெப்பக் கருவியை (ஹீட்டர்) வைத்துப் பார்க்கட்டுமே. அப்போது தெரியும், அது கரைந்து தண்ணீராக மாறிப் போவதை! இப்படிப்பட்ட சிவலிங்கங்களை நாம் குளிர்சாதனப் பெட்டியில் (ஃபிரிஜ்)கூட உருவாக்கலாம்"   - என்று ஜோசப் எடமருகு அவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி அம்பலப்படுத்தினார். 

உண்மை இவ்வாறு இருக்க, அமர்நாத்தில் பனிலிங்கம் இருப்பதாகவும் அதைச் சென்று வழிபட்டால் தீராதவினை எல்லாம் தீரும் என்றும், வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என்று நம்புவதும் எல்லாம் இந்த 2022ஆம் ஆண்டிலும் நடக்கிறது என்றால், இதைவிட வெட்கப்படத்தக்க அறியாமை வேறு ஒன்றும் உண்டோ!

சரி, ஏதோ ஒரு அறியாமை, மூடநம்பிக்கையால் இப்படி நடக்கிறது, பக்தர்களும் செல்லுகிறார்கள் என்றுகூட விட்டுத் தள்ளிவிடலாம்.

இயற்கையாக நடக்கும் ஓர் உருவத்தை வழிபடுவதற்காக, பருவ நிலை மோசமாக இருக்கும் ஒரு கால கட்டத்தில், வெள்ளத்தில் சிக்கி, மனித உயிர்கள் பலியாகின்றன என்பதை நினைக்கும் பொழுது, கண்டும் காணாமல் இருக்க முடியுமா? பக்தர்கள் தானே செத்து மடியட்டும் என்று மனிதநேயம் இல்லாமல் வறிதே இருக்க முடியுமா?

கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கி 43 நாட்கள் இந்தப் பக்தி யாத்திரை நடக்கிறதாம். ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்களாம். பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 20 பக்தர்கள், தற்போது பலியாகி இருக்கிறார்களே - இதற்கு யார் பொறுப்பு?

பனிலிங்கேஸ்வரன்தான் பொறுப்பு என்று அவனைத் தண்டிக்க முடியுமா? அது ஒரு அஃறிணைப் பொருள். அதன் மீது கோபித்து என்ன பயன்?

மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒன்றிய, மாநில அரசுகள்தான் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். 

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்துக் கொண்டு  (51A-h) அமர்நாத் லிங்கம் என்றும், புனித யாத்திரை என்றும் அனுமதிப்பதை எப்படி ஏற்க முடியும்?

ஆத்திகமா? நாத்திகமா? என்பதை ஒரு பக்கத்தில் நிறுத் துங்கள் - மக்கள் உயிர்ப் பலியாகிறதே அதற்கு என்ன பதில்?

புத்தி கொள் முதல் என்று சொல்லுவதுண்டு; இப்படி பக்தி என்ற போர்வையில் நிகழும் உயிர்ப் பலிகளுக்குக் காரணமாக இருக்கும் மூடத்தன நிகழ்வுகளைத் தடை செய்ய வேண்டாமா? என்பதுதான் மனித உயிர்கள் மீது அக்கறை உள்ள நல்லெண்ணம் .உள்ளவர்களின் கேள்வியாகும்.

அரசு விழிக்குமா? உரிய நடவடிக்கைகளை எடுக்குமா? மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தினால் மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இருக்க முடியாது - நினைவிருக்கட்டும்!

No comments:

Post a Comment