சிறை இலக்கியம் படைத்த சிந்தனைச் செல்வர் தோழர் பாலன் (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

சிறை இலக்கியம் படைத்த சிந்தனைச் செல்வர் தோழர் பாலன் (2)

சிறைச்சாலையில் தண்டனை அடைந்தவர்கள் அதற்காக வருந்தி வாடிக் கொண்டிருக்காமல் - கிரிமினல் குற்றவாளிகளைக் கூறவில்லை; (அவர்களிலும் கூட பலர் தங்களது அவசரப் புத்தி காரணமாகவோ அல்லது அடக்க முடியாத அறிவற்ற அசாத்திய கோபம் காரணமாகவோ தாங்கள் அதீதமாக நடந்து கொண்டு இன்று தண்டனையை அனுபவிப்பது பற்றி வருந்தியும், அதன் பிறகு திருந்தியும் வாழும் மனிதர்கள் பலரைப் பாராட்ட வேண்டும்).

அரசியல் காரணங்களுக்காக, கொண்ட கொள்கை லட்சியங் களுக்காக சிறைத் தண்ட னையை, கொள்கைக்குத் தர வேண்டிய கொள் முதல் விலையாகவே எண்ணி மகிழ்வுடன் ஏற்று வாழும் சிறை வாழ்வின்போது, சோம்பலை விரட்டி, சுறுசுறுப்புடன் சிந்தனை, செயலாக்கம், உடலும், உள்ளமும் நல்ல பயிற்சிகளோடுகூடிய கட்டுப்பாடு, வளர்ச்சி என்று - ஆனால் சிறைச்சாலை உண்மையாகவே அவர்களுக்கு "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை"யாகவே திகழுவது உண்மை - இதற்குச் சரியான எடுத்துக்காட்டுதான் 'தோழர் பாலன்' என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட தோழர் கே. பாலதண்டாயுதத்தின் இந்த அரிய இலக்கியம் ஆகும்.

இலக்கு + இயம் = இலக்கியம் என்பதை ஏற்றால், இவரது கொள்கையான கம்யூனிச சித்தாந்த நடைமுறையே இவரது இலக்கு - அதற்கான கடுமையான போராட்ட வாழ்வை நடத்துவதே அவரது பாராட்டத்தக்க இந்தப் பங்களிப்பு ஆகும்!

படிக்க வேண்டும்; சிந்தித்தவற்றை தொகுக்க வேண்டும் என்ற திடசித்தத்துடன் அந்த தீரன் முடிவெடுத்த பின்னும், அவர் தொடர்ந்து தனது கருத்துகளை அன்றாடம் பதிவு செய்யத் தவற வில்லை!

இதோ மற்றொரு நாள் குறிப்பு:

23.08.1958, சனிக்கிழமை

“படிக்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். ஓயாமல் படிக்க வேண்டும்” என்ற கார்க்கியின் கருத்து இன்று என் மனதில் திடீரென்று பளிச்சிட்டது. இதற்கு இணையாக அவ்வைப்பாட்டி, “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” என்றாள். இந்த சிறந்த கருத்து எனக்குப் புதிதல்ல. ஆனால் சோம்பல் மோகினி இக்கருத்தையும் தன்வயப் படுத்தி விட்டாள். நாள் முழுதும் என்னால் படித்துக் கொண்டிருக்க முடியும், யாந்திரீகமாக. படித்து முடிந்ததும் என்ன படித்தாய் என்று கேட்டால் ஒன்றும் தெரியாது. 

இதற்குப் பரிகாரம் கேட்டால், படிப்பதற்கெல்லாம் குறிப்பு எடுப்பது. குறிப்பு எடுத்து தான் படிப்பது. இதற்கு இரண்டு தடங்கல்கள். 1) மெத்தையில் சாய்ந்து கொண்டு குறிப்பு எடுக்க முடியாது. ஏனெனில் அதுதான் சுலபமாகத் தூக்கத்தில் வழுக்கி விழுவதற்கு மிக மிக வசதியான ஏற்பாடு 2) குறிப்பு எடுக்க அதிக நேரம் பிடிக்கிறது. இதற்கு முறையான பதில் என்னவாயிருக்க முடியும், படுக்கும் பொழுதுதான் மெத்தையில் சாய வேண்டும்; குறிப்பு எடுக்கும் பழக்கத்தைப் பெற முடியும். அப்படியானால் முடிவு தெளிவு; 1) படுக்கும் பொழுது தான் படுக்கை 2) அனைத்துக்கும் குறிப்பு 3) முடிவுகள் நடைமுறைக்கு.

வெளி உலகத்திலிருந்து தகவல் இல்லாமல் இருப்பது உற்சாகக் குறைவுக்குக் காரணமாயி ருக்கிறது. மாதம் நெடுகிலும் வெளித்தகவல் வந்து கொண்டிருக்க வழி செய்வது எப்படி ? அடுத்த மாதம் முடியாது. ஏனெனில் 1-ஆம் தேதி இந்த மாதம் வந்து குவிந்திருக்கும் கடிதங்கள் கொடுக்கப் படும். பின் அம்மாதக் கடைசிவரையில் பின் கடிதங்கள் இல்லை. இதைத் திருத்த வேண்டுமானால் இம்மாதக் கடிதங்களை இழக்கத் தயாராக வேண்டும். தியாகங்களின்றி எதையும் திட்டப்படி சாதிக்க முடியாது.

செர்வாண்டிஸ் அசகாய சூரன்; டான்குய்க் ஸாட்டுக்கு இணை குய்க்ஸாட்டுத்தான். அந்தக் காலத்தில் சின்னஞ்சிறு ஸ்பெயினில் இத்தகைய மாபெரும் அமர இலக்கிய சிருஷ்டிகர்த்தா இருந்தான் என்பது வியப்பைத் தருகிறது.

மனித சுபாவத்தை அப்படியே நமக்குப் படம் பிடித்துக் கொடுத்து விட்டார். அவ்வளவு பெரிய நவீனம். எங்கும் தங்கு தடையின்றி ஓடுகிறது. சரித்திரத்தின் திருப்பத்தைச் சுட்டுகிறது. மார்க்ஸ், செர்வாண்டிசை தலைசிறந்த Romantistஆக பால்சாக்குடன் இணைத்துக் கூறியது முற்றிலும் பொருந்தும். 

சிறைதான் சோம்பலின் உறைவிடம்; சோம் பலைப் போல் மனிதனுக்கு வேறு விபத்தே கிடையாது, எனலாம். எல்லா விஷயங்களிலும் அது ஊடுருவிப் பாய்ந்து உருக்குலைத்து விடுகிறது. எனக்கு சமீப காலத்தில் எழுந்துள்ள புதிய சபலங்கள் எல்லாம் சோம்பல் பிறப்பிப்பவை. ஆதலின் ஒவ்வொன்றிலும் சோம்பலின் கைத் திறனை துருவித் துருவி ஆராய்ந்து அறிந்து களைந்தெறிய வேண்டும். அதுவே, பழைமை யிலிருந்து முறித்துக் கொள்வதாகும். அடுத்தபடி ஏறுவதாகும்."

'அடுத்தபடி ஏறுவது' என்று அவர் குறித்ததைப் படித்தபோது, ஒரு சிந்தனை என்னுள் பளிச்சிட்டது! அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

"படிக்கட்டுகள் உயரே செல்வதற்குத்தானே ஒழிய - உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கல்லவே" என்பதே அது!

எவர் படிக்கட்டில் கால் வைத்து உயரே செல்ல முனைகிறார்களோ அவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் ஆகிறார்கள். உட்கார்ந்து ஓய்வெ டுக்க முனைவோர் தாங்களும் உயராது, படிக் கட்டின் பயனையும் பாழடிக்கிறார்கள் - இல்லையா?

(நாளையும் வரும்)


No comments:

Post a Comment