காமராசர் என்ற கல்வி வள்ளல் என்றும் வாழும் ஏந்தல்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

காமராசர் என்ற கல்வி வள்ளல் என்றும் வாழும் ஏந்தல்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

''காமராசர் என்ற கல்வி  வள்ளல் என்றும் வாழும் ஏந்தல்'' என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

இன்று (ஜூலை 15) கல்வி வள்ளல் காமராசரின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. 

காமராசர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப் பேற்று, துணிவுடனும், தூய்மையுடனும் செய்த ஆட்சியின்மூலம், ஆச்சாரியாரின் குலதர்மக் கல்வித் திட்டம் என்ற கொடுமை ஒழிக்கப்பட்டது; அதுமட்டுமா? அவர் மூடிய 6,000 ஆரம்பப் பள்ளிகளைத் திறந்ததோடு, அதற்கு மேலும் பள்ளிகளைத் திறந்தார்; கல்வி நீரோடை நாடெலாம் பாய்ந்து, வாய்ப்பற்ற வறண்ட மக்கள் கல்வி கற்று, பசுமை பெற்று, சமூகநீதியால் பலன் பெற்று உயர்நிலைக்கு வந்தார்கள்!

காமராசரை, ‘ரட்சகர் காமராசர்' என்று அதனாலேயே தந்தை பெரியார் வர்ணித்ததோடு, அவரது ஆட்சிக்குக் காவலராகவும் தம்மையும், தம் இயக்கத்தையும் ஆக்கி மகிழ்ந்தார்.

அந்த சமதர்ம வீரரை, கர்ம வீரரை அவரது இல்லத்தில் - டில்லியில் உயிருடன் எரித்துக் கொல்ல முயன்றது, பசுவதைத் தடுப்பு என்ற போர்வையில் நிர்வாண சாமியார்களையும் டில்லித் தலைநகரில் ஊர்வலம் விட்ட காவிக் கூட்டம்!

திராவிடர் இயக்கமும், அதன் தலைவருமே அதற்குக் கண்டனம் எழுப்பி, அதை ஒரு வரலாற்று நூலாக வெளியிட்டு, மக்களை எச்சரித்தார்! (‘‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்!'').

காமராசரின் கல்விப் புரட்சி திராவிடத்தின் எழுச்சி யில் ஒரு திருப்பம் ஆகும்; அதனால்தான், தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர், காமராசர் பிறந்த நாளை கல்வி நாளாகக் கொண்டாடிட தனிச் சட்டமே இயற்றி பெருமைப்படுத்தினார்!

காமராசர் என்றென்றும் வாழ்வார்!

காமராசர் புகழ் ஓங்குக!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.7.2022


No comments:

Post a Comment