கச்சத் தீவை மீட்டிடுக: இலங்கை ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி! இலங்கைப் பிரச்சினைக்குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

கச்சத் தீவை மீட்டிடுக: இலங்கை ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி! இலங்கைப் பிரச்சினைக்குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு

புதுடில்லி, ஜூலை20 - இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி குறித்து டில்லியில் நேற்று (19/07/2022) புதுடில்லியில் ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒன்றிய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பங்கேற்ற திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கூட்டத்தில் பேசிய கருத்துகள் விவரம் வருமாறு : 

இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம் 

“பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 133 வகை அத்தியாவசிய மருந்துகள் ஆகி யவை அனுப்பப்படும்” என அறிவித்தி ருந்தார். இதற்கென, தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 18-5-2022 அன்று சென்னை துறைமுகத்தில் இருந்து முதல் பேட்ச் நிவாரணப் பொருட்கள் அடங் கிய கப்பல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. 

இக்கப்பல் 9000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர், 25 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்கள் என 45 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது. நிவாரணப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க இலங்கை அரசு கால அவகாசம் கோரியதால், இரண்டாம் பேட்ச் கப்பல் 22-6-2022 அன்று தூத்துக் குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 14,700 மெட்ரிக் டன் அரிசியும், 250 மெட்ரிக் டன் பால் பவுடரும் 39 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்களும் என 65 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

தற்போது, கடைசி பேட்ச் ஆக 16,300 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 45 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்கள் 23 ஜூலை 2022 அன்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். இதன் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் ஆகும். கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் வழியாக இப்பொருட்கள் இலங்கை அரசிடம் விநியோகத்திற்காக ஒப்படைக்கப்படும். 

இந்தியா வரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக... 

பொருளாதார நெருக்கடியின் கார ணமாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாக வும் இலங்கைத் தமிழர்கள் இராமநாத புரம் மாவட்டம் இராமேசு வரத்துக்குத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வரத் தொடங்கியுள்ளனர். 22- 03-2022 அன்று முதல் குழு வந்தடைந்தது. இதுவரை 43 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் வந்து சேர்ந்துள்ளனர். உரிய விசா  ரணைக்குப் பின், புதிதாக வந்த மக்கள் மனிதநேய அடிப்படையில் மண்டபம் தற்காலிக முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான இட வசதியும், மூன்று வேளையும் சமைக்கப்பட்ட உணவும் வழங்கப்பட்டு வருகிறது. மிகக் குறைவான பொருட் களுடன் கடல் கடந்து வந்த அவர் களுக்குத்  தலா 1500 ரூபாய் மதிப்பில் பாத் திரங்கள் உள்ளிட்ட 16 அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை 

1983 முதல் 2009 வரை இலங்கையில் நீடித்த போர்ச்சூழலில் இருந்து பாதுகாப்பு வேண்டி வந்த இலங்கைத் தமிழர்கள் சுமார் 1 இலட்சம் பேர் தற்போது தமிழ்நாட்டில் வாழ்ந்து வரு கின்றனர். 39 ஆண்டுகளாக அவர் களுக்குப் பாதுகாப்பும் உதவியும் அளித் துத் தமிழ்நாடு விருந்தோம்பி வருகிறது. அவர்களுக்குக் கண்ணியத்துடன் கூடிய வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தித் தந்திட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 317 கோடி ரூபாய் மதிப்பிலான 12 நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. நிதி உதவி, பாத்திரங்கள் வாங்கிக் கொள்வதற்கு உயர்த்தப் பட்ட நிதி உதவி, இலவச எரிவாயு இணைப்பு, மானிய விலையில் எரிவாயு உருளைகள், அரிசி, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை உயர்வு, மருத்துவம் தவிர்த்த தொழிற்படிப்புகள், முதுநிலைப் படிப்பு களில் இலவசக் கல்வி, வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிகள், முகாம்கள் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதி களின் மேம்பாட்டுக்காக வருடாந்திர உதவித் தொகை உயர்வு என அவர் களுக்குப் பல்வேறு உதவிகள் வழங்கப் பட்டு வருகின்றன. மேலும், முதலமைச்சர் அவர்கள் இலங்கைத் தமிழர் குடும்பங் களுக்காக 7,500 வீடுகளைக் கட்டித் தருவதாகவும் அறிவித்துள்ளார்.

 பாக் நீரிணைப் பகுதியில்  மீன்பிடி உரிமையைப் பாதுகாத்தல்  

பன்னாட்டு கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி, தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரியமான பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக் கையில் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் நீண்ட காலம் சிறை வைக்கப்படுவதும், அவர்களது மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசால் கைப்பற்றப் படுவது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பதற்றத் தையும் அச்சவுணர்வையும் ஏற்படுத்துகிறது.  தமிழ்நாட்டு மீனவர் களுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் பல சிக்கல் களையும் சரிசெய்ய 25-3-2022 அன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டப் பட்டது. அரசுத் துறைகள் மூலமாக தொடர்ந்து மேற் கொண்டு வரும் முயற்சிகளையும் மீறி, இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப் படுவதும் படகுகள் பிடிக்கப்படுவதும் தொடரவே செய் கிறது. இது மீனவர்களின் பெருங்கவலை யாக உள்ளது. 

ஆகையால், இந்தியப் பிரதமர் அவர்கள் இலங்கை அரசிடம் பேசி நமது மீன வர்கள் கைது செய் யப் படுவதற்கும் படகுகள் கைப் பற்றப்படு வதற்கும் முடிவு காண வேண்டும்.

கச்சத்தீவு மீட்பு மற்றும் தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுத்தல் 

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திரு வாரூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுக்குரிய பாக் நீரிணைப் பகுதியில், குறிப்பாகக் கச்சத் தீவைச் சுற்றித் தொன்று தொட்டு மீன்பிடித்து வருகின்றனர். 3500க்கும் மேற்பட்ட இயந்திர விசைப் படகுகளும் 9000 பாரம்பரிய படகுகள் பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடித் தொழிலில் உள்ளன. பன்னாட்டு கடல் எல்லையைத் தாண்டு வதாகக் காரணம் காட்டி நமது மீனவர்கள் அடிக்கடி இலங்கையால் கைது செய்யப்படுவது இரு நாட்டு உறவு களைப் பாதிக்கிறது. ஆகவே, கச்சத்தீவை இந்தியா மீட்டு, பாக் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு 

இலங்கைக்கு மனிதநேய அடிப் படையில் உதவி செய்திடும் அதே வேளை யில், அங்கு நிலவும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிட, தமிழர்கள் மிகுதியாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணங்களுக்கு அதிகத் தன்னாட்சியையும் அதிகாரப் பகிர்வையும் வழங்கும் வகை யில் இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது சட்டத்திருத்தத்தை நடை முறைப் படுத்த உண்மையான அக்கறையுடன் இந்திய அரசு இலங் கையை வலியுறுத்த வேண்டும். 

-இவ்வாறு அக்கூட்டத்தில் தி.மு. கழகத்தின் சார்பில் கருத்துகள் எடுத்து ரைத்து வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment