'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்!

இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா?

சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே!

கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’

நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பாட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!

ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.

விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -

வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!

அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி  - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.

சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!

படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!

1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?

அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு! 

இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?இதுகுறித்துக் குறிப்பிடும் பெரியார்.

"காங்கிரசுக்குப் பலப் பத்திரிகைகள் இருக்கின்றன. அவைகள் பெரிதும் பார்ப்பனர்களாலும் அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகளாலும் நடத்தப்படு கின்றன. பார்ப்பனர்கள் பணமும் காங்கிரஸ் பணமும் அவைகளுக்குத் தாராளமாய் உதவப்பட்டு வருகிறது.

ஆதலால், பார்ப்பனரின் வசம், சூழ்ச்சி, பொய், விஷமம் ஆகியவைகளை மனதார மறைத்து அவர்கள் திருப்திக்கும், கூலிக்கும் பார்ப்பனரல்லாதார் கட்சியையும், சமூகத்தையும், அவர்களுக்காக வேலைசெய்யும் பத்திரிகைகளையும் வைதும், பழி கூறியும் விஷமப் பிரச்சாரம் செய்துவருகின்றன.

ஜஸ்டிஸ் கட்சித் திட்டத்தைப் பற்றிப் பழிகூறுவதும், அவர்களால் ஏற்பட்ட தன்மைகளைத் திரித்துக் கூறு வதும், அவர்களுக்குச் சம்மந்தமில்லாத காரியத்தைப் பற்றிப் பழிகூறுவதுமே தொழிலாய்க் கொண்டிருக் கின்றன. பாமர மக்கள் இதையெல்லாம் சுலபமாக நம்பி ஏமாந்துபோகிறார்கள்.

ஜஸ்டிஸ் கட்சிக்கும், பார்ப்பனரல்லாதார் சமூக நலனுக்கும் இன்று தினசரிப் பத்திரிகை இல்லை . வாரப் பத்திரிகைகளும் வெகு சிலவே.

ஆதலால், ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார் ''குடிஅரசு', "விடுதலை", "நகரதூதன்" முதலியப் பத்திரிகைகளை ஜில்லாக்கள் தோறும் தாராளமாய்ப் பரவும்படிச் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்'' (குடி அரசு, 15.12.1915) எனக் குறிப்பிடுகிறார்.

இங்ஙனம் பெரியாரின் எழுத்துகளில் பிராமண ரல்லாதவர்களால் நடத்தப்படுகின்ற இதழ்களை மக்கள் ஆதரிக்க வேண்டியதன் தேவையை வலி யுறுத்தும் செய்திகளையும், கட்டுரைகளையும், தலை யங்கங்களையும் அதிகமாகப் பார்க்கமுடிகிறது.

தந்தை பெரியார் மிகக் கடுமையானச் சொற்களைப் பயன்படுத்துவதாக ஒரு கருத்து முன்வைக்கப் பட்டபோது அதனைக் கடந்துபோகாமல் அல்லது தவிர்க்காமல் அல்லது பதிலளிக்காமல் அல்லது நழு வாமல் அதற்கானக் காரணத்தையும், விளக்கத்தையும் தமது இதழிலேயே பதிவுசெய்துள்ளார். அச்செய்தியின் ஒரு பகுதி பின்வருமாறு,

"நமது மக்களுக்கு பிராமண சூழ்ச்சியை அறிய சக்தியில்லை. பிராமணர்களின் வெகுகாலத்திய சூழ்ச்சிப் பிரசாரத்தால் அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் "பக்தி" காரணமாய் நமது பதங்கள் சிலருக்குக் கடினமாகக் காணப்படுகிறது. அவர்களால் நமது குடிகெடுவது நமக்குக் கடினமாய்த் தோன்றுவதில்லை. நாமும் முதலில் மரியாதையாகத்தான் எழுதுகிறோம். அவர்களுக்கு அது சரியானபடி தைக்காததால் தைக் கும்படி எழுதுகிறோம். அதிலும் பிரயோஜனமில்லை. ஆதலால், நமது மக்களுக்குத் தெரியும்படி எழுதுகி றோம். "குடி அரசு" எவருடைய தயவுக்கோ , முகஸ் துதிக்கோ, சுயநல வாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடை பெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக் கூடிய காலம்வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால் தானே மறைந்து விடுமேயல்லாமல் மானங்கெட்டு விலங்குக ளைப் போல் உயிர்வாழாது. "குடி அரசு" தோன்றியப் பிறகு அது ராஜீய உலகத்திலும் சமூக உலகத்திலும் பெரிய மாறுதல்கள் ஏற்படுத்தியிருக்கிறது என்று பலர் நமக்கு எழுதியிருப்பதை நாமும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறோம்" (குடி அரசு, 02.05.1926) எனக் கூறும் பெரியார் இது குறித்து வாசகர்களே இறுதி முடிவை எடுக்கட்டும் என்கிறார்.

அதுபற்றிக் குறிப்பிடுகையில் "நமது நேயர் குறிப்பிடும் சுதேசமித்திரன் நிருபரைப் போன்ற பலர் அப்பத்திரிகைக்கு நிருபர்களாயிருக்கின்றளர். இவர் கள் அயோக்கியத்தனமாகவும், சின்ன புத்திக்கொண் டும், உண்மையைத் திரித்தும் ரிப்போர்ட் செய்வதை நாம் பலத் தடவைகளில் கண்டித்திருக்கிறோம். இங் கனம் கண்டிப்பதில் கடினப் பதங்கொண்டிருக்கின்ற தென சிலர் கூறுகின்றனர். இத்தகைய நிரூபர்களுக்கு நாம் உபயோகிக்கும் வார்த்தைகள் தகுதிதானா அல் லது இன்னும் அதிகக் கடினபதம் வேண்டுமாவென்னும் விஷயத்தைப் பொதுஜனங்களே நிர்ணயம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்" (குடி அரசு, 15.11.1925) என்கிறார் பெரியார்.

பிராமண இதழ்களை எதிர்த்தல், பிராமண இதழாளர்களை அம்பலப்படுத்துவது என்ற நிலையில் பெரியார் தனக்கே உரிய வேகத்தையும் உறுதிப் பாட்டையும் தமது இதழ்களில் வெளிப்படுத்துவதன் மூலம் தமது வாசகர்களுக்கான கொள்கைத் தடத்தை நேர்த்தியாக வடிவமைத்து வந்துள்ளார். தமது கடுமையானச் சொல்லாடல்கள் குறித்து எழுதும்போது கூடப் பிராமணர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளுக் குத் தாம் பயன் படுத்தப்படும் சொற்கள் கண்ணியக் குறைவானவை அல்ல எனக்கூறி வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறார். 

- தொடரும்


No comments:

Post a Comment