குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 ‘பிரகலாதன்’ என்று புராண காலத்துப் பெயரை வைத்தார்கள்

நம் இயக்கத்திலே அவர் சேர்ந்து பணியாற்றியது பிரகலாதனாக அல்ல; இரணியனாக!

குருவரெட்டியூர், ஜூலை 18  ‘பிரகலாதன்’ என்று புராண காலத்துப் பெயரை வைத்தார்கள். ஆனால், அவர் நம் இயக்கத்திலே சேர்ந்து பணியாற்றியது - பிரகலாதனாக அல்ல - இரணியனாக பணியாற்றினார். எனவே, பிரக லாதனை, இரணியனாக்கியது இந்த இயக்கம். புராண காலத்துப் பிரகலாதன்கள் எல்லாம் பயன்படமாட்டார்கள். எப்படி விபீஷணர்களுக்கு ஒரு கெட்ட பெயர் இருக்கிறதோ, அதுபோல. ஆனால், இவர் அப்படியல்ல. வரலாற்றில் இரணியனைவிட, பலம் மிகுந்தவராக, இந்த இயக்கத்திற்குப் பயன்பட்டிருக்கிறார்.அதன் காரண மாகத்தான், நீங்கள் அத்தனை பேரும் இங்கே கட்சி வேறுபாடில்லாமல் திரண்டிருக்கின்றீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம்

கடந்த 3.7.2022 அன்று மாலை குருவரெட்டியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

குருவரெட்டியூரில் நீண்ட இடைவெளிக்குப் பின், அதாவது ஒரு 12 ஆண்டுகள் - வைதீகர்கள் மொழியில் சொல்லவேண்டுமானால், ஒரு ‘மாமாங்கத்திற்குப்’ பிறகு, ஒரு ‘மகாமகம்‘ 12 ஆண்டுகள் என்று சொல்வார்கள் - அப்படி நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. எதிர்பாராமல் இங்கே வரக்கூடிய வாய்ப்பும், ஏராளமான பெரியவர்கள், அனைத்துக் கட்சியைச் சார்ந்தவர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள், தாய்மார்கள், எல்லா கட்சியினரும் இணைந்த ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக, 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறக்கூடிய இந்தச் சுயமரியாதைச் சுடரொளி மானமிகு செயல்வீரர் பிரகலாதன் அவர்களுடைய நினைவுக் கல்வெட்டு, கொடிக் கம்பம் திறப்பு விழா - மற்றும் மாநில உரிமை பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஆகியவற்றை இணைத்து நடத்தக்கூடிய இந்த சிறப்புமிகுந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மாநில கழக அமைப்புச் செயலாளர் செயல்வீரர் ஈரோடு சண்முகம் அவர்களே,

இந்த சிறப்பான நிகழ்ச்சியில், வரவேற்புரையாற்றிய நம்முடைய நகர திராவிடர் கழக செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்களே,

சிறப்புமிகுந்த சிந்தனையாளர் அன்புச்சகோதரர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன்

ஓர் ஆய்வுக்குரிய, சிந்தனையைத் தூண்டக் கூடிய ஓர் அருமையான சிறப்பான உரையை ஆற்றிய அருமை சகோதரர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், என்றும் சுயமரியாதை உணர்விலிருந்து சற்றும் மாறாத சிறப்புமிகுந்த சிந்தனையாளர் அன்புச் சகோதரர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், சீரிய சுயமரியாதை வீரரும், சமூகநீதியாளருமான அன்பிற் குரிய அருமைச் சகோதரர் அந்தியூர் செல்வராஜ் அவர்களே,

ஈரோடு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செய லாளர் அருமைத் தோழர் என்.நல்லசிவம் அவர்களே,

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.எஸ்.வி.சரவணன் அவர்களே,

நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் அருமைத் தோழர்கள் வி.பி.சண்முகசுந்தரம் அவர்களே, என்.ஆர். கோவிந்தராஜன் அவர்களே,

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் ஏ.வி.வெங்கடாச்சலம் அவர்களே,

அம்மாப்பேட்டை ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் தோழர் சரவணன் அவர்களே,

அம்மாப்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் தோழர் விஜயகுமார் அவர்களே, தமிழ்ப் புலிகள் கட்சிப் பொறுப்பாளர் தோழர் பொன்னுசாமி அவர்களே,

காங்கிரஸ் கட்சியினுடைய மாநில பொதுச்செயலாளர் கல்லுப்பட்டி தோழர் பாலு அவர்களே,

பொதுக்குழு உறுப்பினர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பழனி.புள்ளையண்ணன் அவர்களே,

பகுத்தறிவாளர் பேராசிரியர் காளிமுத்து அவர்களே,

ஈரோடு மாவட்டத் தலைவர் சிற்றரசு அவர்களே, திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி அவர் களே, வழக்குரைஞரணி இணை செயலாளர் தோழர் பாண் டியன் அவர்களே, கோபி மாவட்ட தலைவர் சிவலிங்கம் அவர்களே, செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன் அவர்களே,

இயக்க உணர்விலே சற்றும் குறையாமல், உறுதியோடு...

ஈரோடு மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மணிமாறன் அவர்களே, திராவிட விவசாய கழகப் பொறுப்பாளர் நாத்திக தேவி அவர்களே, பிரகலாதன் குடும்பத்தைச் சார்ந்த, அவருடைய வாழ்விணையர் மிகப்பெரிய இழப்பிற்கு, நேரிடையாக ஆளாகி, அதையும் ஏற்றுக்கொண்டு, இயக்க உணர்விலே சற்றும் குறையாமல், அவருடைய பணியை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்கிற உறுதியோடு, எங்களுக்கெல்லாம் ஆறுதலாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரியார் மாதேசுவரி அவர்களே,

அவருடைய அருமைத் தங்கைகள், எங்களுடைய தங்கைகள் ஈசுவரி, கீதா, குள்ளம்மாள் அவர்களே,

அவருடைய அருமைச் சகோதரர் அடக்கமும், கொள்கை உறவும் எப்பொழுதும் சிறிதும் குன்றாத தோழர் சத்தியமூர்த்தி அவர்களே, அர்ஜூனன் அவர் களே, பாலசுப்பிரமணியம் அவர்களே, ஏனைய பெரி யோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு, இந்த ஊரிலே, இந்த இயக்கம் தோன்றியது

குருவரெட்டியூருக்கு வரும்பொழுதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு, ஒரு பெரிய ஆர்வத்தோடு, இங்கே உள்ளவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கெல் லாம் அப்பாற்பட்டுக் கொடுக்கின்ற வரவேற்பை சந்திக்கின்றபொழுது, ஒரு புத்துணர்ச்சியோடு செல்லக்கூடிய வாய்ப்பு, பல ஆண்டுகளாக எனக் குண்டு. அதுவும் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு, இந்த ஊரிலே, இந்த இயக்கம் தோன்றியது.

எங்களைப் போன்றவர்களுக்கு 

மிகுந்த மன வேதனை

ஆனால், இந்த முறை வருகிறபொழுது, மிகுந்த ஆர்வம் - கட்சி வேறுபாடு இல்லாமல், பிரகலாதன் அவர்களுக்குக் காட்டுகின்ற வீர வணக்க மரியாதை - இவற்றையெல்லாம் நினைக்கின்றபொழுது, இந்த இயக்கத்திலே தொண்டர்களுக்குத் தொண்டனாக, தோழர்களுக்குத் தோழனாக இருந்து பணியாற்றக்கூடிய எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த மன வேதனை.

ஒரு நல்ல படையை நடத்தவேண்டிய நேரத்தில், இங்கே நம்முடைய சகோதரர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களும், அதேபோல, செல்வராஜ் அய்யா அவர் களும், மற்ற தோழர்களும், மேடையில் இருக்கின்ற தலைவர்களும் சொன்னதைப்போல, மிக சிக்கலான ஒரு காலகட்டம் - அரசியலிலே, பொதுவாழ்க்கையில்.

பிரகலாதன் இன்றைக்கு வரலாறாகி விட்டார்

பெரிய அறைகூவல்கள், சவால்கள் நிறைந்த ஒரு காலட்டத்தில், பிரகலாதன் போன்ற ஓர் அருமையான பெரியார்  தொண்டர் - 

பிரகலாதன் ஒரு கட்டுப்பாடு மிகுந்த இராணுவத் தளபதிகளிலே ஒருவர் - அப்படிப்பட்ட ஒருவர் இன்றைக்கு வரலாறாகி விட்டாரே -

யார் நம்மை வரவேற்று, ஏற்பாடு செய்வார்களோ, அவர்கள் வரவேற்கக்கூடிய சூழல் இன்றைக்கு இல்லையே!

அவருடைய படத்தை, அவருடைய நினைவுக் கல்வெட்டை - அவருடைய கொடிக் கம்பத்தை நாம் திறந்து வைக்கக்கூடிய, தொடங்கி வைக்கக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருப்பது ஒரு கெட்ட வாய்ப்பாகும்.

‘‘இயற்கையின் கோணல் புத்தி’’

தந்தை பெரியார் அவர்கள், அவருடைய மொழி யிலே அடிக்கடி சொல்வார்கள் ‘‘இயற்கையின் கோணல் புத்தி’’ என்ற சொல்லாக்கம்தான் அது.

அப்படிப்பட்ட  இயற்கையின் கோணல் புத்தியால் தான், ஒரு நல்ல துடிப்பு மிகுந்த ஒரு செயல்வீரர், சுயமரியாதைச் சுடரொளியாக இன்றைக்கு ஆக்கப்பட்டு இருக்கின்ற சூழல்.

67 ஆண்டுகள்தான் அவருடைய வாழ்க்கை. இன்றைய காலகட்டத்தில் 67 வயது என்பது ஒரு வயதே அல்ல.

அருமைச் சகோதரர்கள் இங்கே சொன்னார்கள், சற்று முன்பு - நேற்றுதான் நூறாண்டு கண்டவரைப் பார்த்து, அந்த விழாவில் கலந்துகொண்டு விட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறோம்.

இப்படிப்பட்ட சூழலில், பிரகலாதன் போன்ற ஒருவர் இயக்கத்திற்குக் கிடைப்பது மிக எளிதல்ல. இயக்கச் செயல்வீரர் என்பதைவிட, அவரைப்பற்றி இங்கே அழகாக, நன்றாக அத்தனை பேரும் சொன்னார்கள். அதற்காக அவர்களுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்திக் கொள்கிறேன்.

ஆறுதல் பெற இந்த ஊருக்கு வந்திருக்கிறேன்

எப்பொழுது பெருமை என்று சொன்னால், நம் வீட்டுப் பிள்ளையை, மற்றவர்கள் பாராட்டும்பொழுது, ஒரு தந்தைக்கு என்ன மரியாதை, என்ன மகிழ்ச்சி ஏற்படுமோ, அந்த ஆறுதலை நான் உங்களுடைய வார்த்தைகளிலிருந்து பெறுகிறேன்.

எனவே, ஆறுதல் சொல்ல வருகிறேன் என்று சொல் வதைவிட, ஆறுதல் பெற இந்த ஊருக்கு வந்திருக்கிறேன் என்பதை உணர்ச்சிபூர்வமாக உங்களிடையே சொல்லு கிறேன்.

ஒரு நல்ல படைத் தலைவன் - கடுமையான கருத்தியல் போர் நடந்துகொண்டிருக்கின்ற நேரத்தில், ஒரு நல்ல படைத் தளபதியை இழந்தால், அது படைக்கு மட்டுமல்ல - படைத் தலைவனுக்கே மிகப்பெரிய இழப்பு தான். அதுபோன்றதே பிரகலாதன் அவர்களுடைய மறைவு.

அவருடைய மறைவைப்பற்றி தோழர் சண்முகம் போன்றவர்கள் தொலைப்பேசியில் சொன்னபொழுது, அந்த செய்தியை உள்வாங்க முடியவில்லை.

திடீரென்றுதான் இப்படி நடந்தது என்று அவர்கள் சொல்லும்பொழுது, மிகுந்த வேதனையாக இருந்தது. காரணம், இரண்டே வரிகளில் சொல்லுகிறேன்.

பிரகலாதனாக அல்ல - இரணியனாக 

அவர் பணியாற்றினார் இயக்கத்தில்!

அவருக்குப் பெயரிட்டவர்கள், புராண காலத்துப் பெயரை வைத்தார்கள். ஆனால், அவர் இந்த இயக்கத்திலே சேர்ந்து பணியாற்றியது - பிரகலாதனாக அல்ல - இரணியனாக பணி யாற்றினார்.

எனவே, பிரகலாதனை, இரணியனாக்கியது இந்த இயக்கம்.

புராண காலத்துப் பிரகலாதன்கள் எல்லாம் பயன்படமாட்டார்கள். எப்படி விபீஷணர்களுக்கு ஒரு கெட்ட பெயர் இருக்கிறதோ, அதுபோல.

ஆனால், இவர் அப்படியல்ல. 

வரலாற்றில் இரணியனைவிட, பலம் மிகுந்தவராக, இந்த இயக்கத்திற்குப் பயன்பட்டிருக்கிறார்.

அதன் காரணமாகத்தான், நீங்கள் அத்தனை பேரும் இங்கே கட்சி வேறுபாடில்லாமல் திரண்டிருக்கின்றீர்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் கோவிந்தராஜ் அவர்கள் உரையாற்றும்பொழுது, மிக அழகாக கருத்துகளைச் சொன்னார்.

வண்ணங்களால் நாம் பிரிந்திருக்கலாம்; ஆனால், எண்ணங்களால் ஒன்றுபட்டக் கூட்டம்

எங்களுக்குள்ளே எந்தவிதமான கட்சி வேறு பாடுகளும் கிடையாது. வண்ணங்களால் நாம் பிரிந் திருக்கலாம்; ஆனால், எண்ணங்களால் ஒன்றுபட்டக் கூட்டமாக இன்றைக்கு இருக்கின்றோம் என்பதுதான் மிக முக்கியம்.

திராவிடம் என்பது இருக்கிறதே, அதுதான் இன எதிரிகளுக்குப் பதில் சொல்லக்கூடியது.

இங்கே விற்கப்படுகின்ற புத்தகங்களில், ‘‘அசல் மனுதர்மம்’’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் இருக்கிறது. நாங்கள் புத்தகங்களைக் கொண்டு வருவது வியா பாரத்திற்காக அல்ல - தந்தை பெரியார் காலத்திலிருந்து. நாங்கள் பேசுகின்ற கருத்துகளுக்குச் சான்றுகள் இருக்கின்றன; ஆதாரத்தோடு நாங்கள் பேசுகின்றோம் - அதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற் காகத்தான், எளிய விலையில் அந்தப் புத்தகங்களைப் பரப்புகின்றோம். அதை நீங்கள் வாங்கவேண்டும், படிக்கவேண்டும், அதைப் பரப்பவேண்டும்.

விடுதலையைப்பற்றிக்கூட இங்கே அருமையாச் சொன்னார்கள்; உறுதியளித்தீர்கள், மிக்க நன்றி!

தந்தை பெரியார் கட்டளையிட்டால்...

தோழர்களே,  ‘விடுதலை’ ஆசிரியராக 60 ஆண்டுகாலம் நான் பணியாற்றுகிறேன் என்று குறிப்பிட்டார்கள். தந்தை பெரியார் கட்டளையிட்டால், இறுதிமூச்சு அடங்குகிற வரையில், அந்தப் பணியிலிருந்து எங்களுக்கு ஓய்வு கிடையாது.

நான், பெரியாருடைய வாழ்நாள் மாணவன்.

பெரியார் அவர்கள்  ‘விடுதலை’யில் எழுதியிருக் கின்றார்.

நம்முடைய கழகத் துணைப் பொதுச்செயலாளரும், காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்களும் இங்கே வேகமாகச் சொன்னார்கள் என்றால், எனக்காக அல்ல - தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் - என்னை உற்சாகப்படுத்துகிறீர்கள் - அது ஒரு யுக்தி - அது ஒரு முறை - அவ்வளவுதான்.

மருந்து சாப்பிடுகிற நேரத்தில், மருந்தை ஏன் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

டாக்டர் எழுதிக் கொடுத்துவிட்டார், அதனால் நான் மருந்துக் கடையில் சென்று மருந்து வாங்கி சாப்பிடுகிறேன் என்று சொல்வீர்களா?

அல்லது மருந்து கண்டுபிடித்தவரின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என்பதற்காக நான் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொல்வீர்களா?

அல்லது மருந்துக் கடைக்காரருக்கு வியாபாரம் ஆகவேண்டும் என்பதற்காக நான் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொல்வீர்களா?

இல்லை.

(தொடரும்)


No comments:

Post a Comment