ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்!

கடந்த 4.6.2022 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு 

கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் காலங் கருதி நிறைவேற்றப்பட்ட அரிய தீர்மானங்களாகும். 

கீழ்க்கண்ட முதல் இரண்டு தீர்மானங்களும் கவனிக்கத்தக்கவை.

தீர்மானம் 1: ஆட்சிக்கு வந்த உடனே துவங்கிய  ஹிந்தித் திணிப்பு!

திரு.நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவையும் பதவி ஏற்ற 4 நாள்களுக்குப் பிறகு மனித வளத்துறை அமைச்சகத்தின் மூலம் அத்துறையின் அமைச்சர் ஸ்மிரிதி இரானி அவர்களால் 2014ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், வெளியுறவுத் துறை உள்ளிட்ட எல்லா அமைச்சகங்களின் அதிகாரிகள் துவங்கி அலுவலர்கள் வரை சமூக வலைதளங்களில் அனைத்தையும் ஹிந்தியில் எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அடுத்து வெளியான ஒரு சுற்றறிக்கையில் இப்படி கண்டிப்பாகப் பின்பற்றும் முன்னணியான ஊழியர்களுக்குப் பரிசுத் தொகையையும் உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழி களையும் சமமாகப் பாவிக்க வேண்டும்; அனைத்தையும் ஒன்றிய ஆட்சி மொழிகளாக மாற்ற வேண்டும்; ஹிந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதன் மூலம், ஹிந்தி பேசாத இந்திய மக்களிடையே பேதங்களைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தர குடி மக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்ட வேலையை ஆட்சிக்கு வந்த உடனேயே துவங்கிவிட்டனர்.

ஒரு பக்கத்தில் தேசிய ஒருமைப்பாடு பேசிக் கொண்டே, இன்னொரு பக்கத்தில் மொழியின் பெயரால் நாட்டைப் பிளவு படுத்தும் முயற்சியை - வேலையை ஒன்றிய அரசு கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என்று இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: உள்துறை அமைச்சரின்  கண்டிக்கத்தக்க மொழி வெறி!

கடந்த ஏப்ரலில் டில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து ஆபத்தானது.

"நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். ஹிந்தி மொழியின் முக் கியத்துவத்தை நிச்சயமாக இது அதிகரிக்கச் செய்யும். ஒன்றிய அமைச்சரவையின் 70 சதவிகித நிகழ்ச்சி நிரல் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் - உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்.

9ஆம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு ஹிந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். ஹிந்தித் தேர்வுகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதே உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால், இந்தியாவை அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை. அதிகம் பேரால் பேசப்படுவதால் ஹிந்தி நாட்டின் பொது மொழியாக இருக்க வேண்டும். ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். ஹிந்தி மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்!

மேலும் "ஹிந்தி தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களுடைய தாய்மொழியை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். அதேபோல் ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும். காந்தி, வல்லபாய் படேல் கண்ட ஒரே நாடு ஒரே மொழி கனவை மக்கள் நனவாக்க வேண்டும்" என்று அமித்ஷா கூறியுள்ளார்.

இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் இவ்வளவுப் பச்சையாக இந்தியாவில் இருக்கக்கூடிய வளமான பாரம்பரிய மாநில மொழிகளை அலட்சியப்படுத்திவிட்டு, ஹிந்தி என்ற ஒரு மொழியை மட்டும் அதிகாரப்படுத்துவதை - முதன்மைப்படுத்துவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து - மொழியின் பெயரால் இந்தி யாவைப் பிளக்கக் கூடியதாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும், சம தகுதியும் அளிக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு திட்டவட்டமாக அறிவிக்கிறது - வலியுறுத்துகிறது. முதல் இரண்டு தீர்மானங்கள் இவை.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் Languages என்ற தலைப்பில் இடம் பெற்ற 22 மொழிகளும் சம அளவிலும், சம வாய்ப்புகளுடனும் மதிக்கப்பட வேண்டியவை.

ஆனால், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிகாரத்திற்கு வந்த 2014ஆம் ஆண்டு முதற் கொண்டே, மற்ற மாநில மொழிகளை எல்லாம் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து, ஹிந்திக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு வருவது வெளிப்படை.

அதுவும் கடந்த ஏப்ரலில் டில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆம் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து, ஹிந்தி திணிப்பில் அவரும் அவர் சார்ந்த அரசும் அவசரமும், ஆவேசமும் காட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஹிந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஹிந்தி, ஆங்கிலம் இரண்டும் அலுவல் மொழியாகத் தொடர வேண்டும் என்று பிரதமர் நேரு அவர்கள் அளித்த வாக்குறுதி என்னாயிற்று?

9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம், ஹிந்தி தேர்வுகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுவது எல்லாம் எதைக் காட்டுகிறது?

இதனைத்தான் திராவிடர் கழகம் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டின் 2ஆம் தீர்மானத்தின் இறுதிப் பகுதி எச்சரிக்கை விளக்கைக் காட்டுகிறது.

"உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து - மொழியின் பெயரால் இந்தியாவைப் பிளக்கக் கூடியதாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸின் கொள்கையை உள்வாங்கிய ஒன்றிய அரசு நடப்பதால் அதனைச் செயல்படுத்தும் நோக்கம்தான் உள்துறை அமைச்சரின் உள்ளடக் கமாகும்.

இந்தியா ஒரே நாடல்ல - ஒரு துணைக் கண்டமாகும். ஒரே மதம் உள்ள நாடும் அல்ல - பல மதங்கள், பல கலாச்சாரங்கள், மத நம்பிக்கையற்றவர்கள் வாழும் துணைக் கண்டமாகும்.

அதிக மக்களால் பேசப்படக் கூடிய மொழி ஹிந்தி என்பதும் உண்மைக்கு மாறானதாகும். மாநாட்டுக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தன் உரையில் குறிப்பிட்டதுபோல இந்திய யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களில் இந்தி பேசப்படுவதாகக் கூறுவது வெறும் 12 மாநிலங்களில் தான். 56 மொழிகள் தனித்தனியாகப் பேசப்படுகின்றன. இவற்றை எல்லாம் சேர்த்துதான், கலவையைத்தான் ஹிந்தி என்று கூறி ஊரை ஏமாற்றிக் கொண்டுள்ளனர்.

ஒரு பக்கத்தில் இந்திய ஒருமைப்பாடுபற்றி தொண்டைக் கிழிய கதறுவோர்களே, மொழியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்தப் போகிறார்கள்.

இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ஹிந்தி எதிர்ப்புக் கனல் குமுறிக் கொண்டு இருக்கிறது. இது வெடித்தால் இந்தியா தாங்காது எச்சரிக்கை!


No comments:

Post a Comment