தமிழுக்கு உரிய தகுதியைக் கொடுங்கள் என்று சொல்ல எங்கள் முதலமைச்சருக்கு உரிமையில்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

தமிழுக்கு உரிய தகுதியைக் கொடுங்கள் என்று சொல்ல எங்கள் முதலமைச்சருக்கு உரிமையில்லையா?

இராஜபாளையம் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்

இராஜபாளையம், ஜூன் 13- தமிழுக்கு உரிய தகுதியைக் கொடுங்கள் என்று சொல்ல எங்கள் முதலமைச்சருக்கு உரிமையில்லையா? எங்களது உரிமையைக் கேட்கிறோம். அரசியல் சட்டப்படிதான் கேட்கிறோம் என இராசபாளையத்தில் நடைபெற்ற மாநில உரிமை மீட்பு விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் முழங்கினர்.

இராஜபாளையம் பொன்விழா மைதானம் அருகில் நடைபெற்ற மாநில உரிமை மீட்பு விளக்க பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இல.திருப்பதி தலைமை வகித்தார். இராஜபாளையம் நகர தலைவர் பூ.சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். மாநில ப.க.துணைத் தலைவர் கா.நல்லதம்பி மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன், பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி மாவட்ட ப.க.அமைப்பாளர் பி.அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றிய பின் ம.தி.மு.க.மாநில வெளியீட்டு அணி செயலாளர் நவபாரத் டாக்டர் நாராயண ராஜா தொடக்கவுரையாற்றிட திராவிட இயக்க சொற் பொழி வாளர் நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார்.

குஜராத்தில் நடைபெற்ற  ஊழலெல்லாம் தெரியாதா? 

அவர் தனது உரையில்

என்னுடைய கண்களை திறந்த ஆசிரியர் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். 1986 ஆம் ஆண்டில் கோட்டாறு சுயமரியாதை விழாவில் உரையாற்றிய கல்லூரி மாணவனாகிய நான் இன்றும் ஆசிரியரின் மாணவராக இருக்கிறேன். திராவிடர் கழகத்தின் தேவை தி.மு.க.ஆட்சியில் இருந்தாலும் சனாதனிகள் சதித்திட்டம் தீட்டும் வேளையில் மிகவும் தேவைப்படுகிறது.

தி.மு.க.ஆட்சியை ஊனப்படுத்துவதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கொட்டுகிறார்கள். ஊடகங்களை மிரட்டு கிறார்கள். புதிதாக வந்தவர்கள் ஊழல் ஊழல் என்கிறார்கள். குஜராத்தில் நடைபெற்ற ஊழலெல்லாம் இவர்களுக்கு தெரியாதா? மிகப்பெரிய பட்டியலே உள்ளதே?

இவ்வாறு அவர் பேசினார்.

நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

தொடர்ந்து இந்த இராஜபாளையம் நகருக்கு வந்து கொண்டிருக்கிறோம். இடைவிடாமல் நிகழ்ச்சியை நடத்தக் கூடிய துடிப்பு மிகு செயல்வீரர் திருப்பதி அவர்கள். ஆம்! திருப்பதியே எங்களிடத்தில் தான் இருக்கிறது.(கைதட்டல்). 

ஒரு காலத்தில் திராவிடர் கழகக் கூட்டம் நடத்தவே பலத்த எதிர்ப்பு இருந்தது. ஆனால் இப்போது தி.மு.க. தலைமையிலான நகர்மன்றம் அமைந்துள்ளது என்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது. 

பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று நீதிக்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் வரலாறு. இன்றைக்கு பெண்கள் அய்ம்பது விழுக்காடு உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்து விட்டார்கள். இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் என்பதற்கு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நமது நிதியமைச்சர் சொன்னார். சுயமரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இந்த நான்கையும் வலியுறுத்தி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் எழுத்தும் சிந்தனைகளும் நம்மை வழிநடத்தும் என்று தெளிவாக சொன்னார். 

தமிழுக்கு உரிய தகுதியை கொடுங்கள் என்று சொல்ல எங்கள் முதலமைச்சருக்கு உரிமையில்லையா? எங்களது உரிமையை கேட்கிறோம். அரசியல் சட்டப்படி தான் கேட்கிறோம். கல்வி, மருத்துவம், சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருந்தது‌. இப்போது ஒத்திசைவு பட்டியலில் உள்ளது. அதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறோம். அது தவறா?

இந்த பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தி.மு.க.தெற்கு நகர செயலாளர் இராம மூர்த்தி, தி.மு.க.வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா, நகர்மன்றத் துணைத் தலைவர் கல்பனா குழந்தைவேல், ம.திமு.க.மாவட்ட பொருளாளர் விநாயக மூர்த்தி, சி.பி.எம்.நகர செயலாளர் மாரியப்பன், சி.பி.அய் நகர செயலாளர் விஜயன், ம.தி.மு.க நகர செயலாளர் மதியழகன், சோழபுரம் பாவாணர் கோட்டம் நெடுஞ்சேரலாதன், மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் சுமதி இராமமூர்த்தி,  நெல்லை மண்டல தலைவர் தூத்துக்குடி காசி, சிறீவில்லிபுத்தூர் நகர செயலாளர் பழக்கடை கோவிந்தன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் பாண்டி முருகன் நன்றி கூறினார்.

அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக இராஜபாளையம் நகர்மன்றத்தை கைப்பற்றிய தி.மு.க. உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அனைவருக்கும் "வாழ்வியல் சிந்தனைகள்" நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கினார்.


No comments:

Post a Comment