மதுரை படைத்தது வெறும் வரலாறு அல்ல - ஒரு சிலாசாசனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 26, 2022

மதுரை படைத்தது வெறும் வரலாறு அல்ல - ஒரு சிலாசாசனம்!

 கவிஞர் கலி. பூங்குன்றன்

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மதுரை மாநகரில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம் (25.6.2022) மதுரை தெப்பக்குளம் நோட் புக் மண்டபத்தில்  தோழர் சடகோபன் கடவுள் மறுப்புடன் தொடங்கப்பட்டது. அமைப்புச் செயலாளர் வே. செல்வம் வரவேற்புரையாற்றினார்.

பொதுக்குழு கூட்டத்திற்கு கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு தலைமை வகித்தார்.

திராவிடர் கழகத் தலைவரும் சரி, செயலவைத் தலைவரும் சரி- இதே மதுரையில் 1946 மே 11,12 ஆகிய நாள்களில் வைகை ஆற்றுப் பாலத்தின்கீழ் நடைபெற்ற முதலாவது மாகாண கருஞ்சட்டைப் படை மாநாட்டைக் குறிப்பிட்டனர்.

மதுரை புகைவண்டி நிலையத்திலிருந்து 20 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்கள் அணி வகுக்க, நடிகவேள் எம்.ஆர். இராதாவும், பாவலர் பாலசுந்தரமும் கறுப்புச் சட்டை உடையில் குதிரைகள்மீது அமர்ந்து அணி வகுப்பை நடத்தினார்கள்.

இரட்டைக் குதிரைச் சாரட்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அர்ச்சுனன், தந்தை பெரியாரின் தங்கை கண்ணம்மாளின் மகள் எஸ்.ஆர். காந்தி,  நெடுஞ்செழியன் ஆகியோர் அமர்ந்து வந்தனர்.

முதல் நாள் மாநாட்டின் எழுச்சி அண்டத்தைப் புரட்டியது - ஆரியத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது. எப்படியும் இரண்டாம் நாள் மாநாட்டை நடத்தவிடக் கூடாது என்று ஆரியம் திட்டமிட்டது; உள்ளூர் காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதய்யர் தலைமையில் கூடி அழி - பழி திட்டங்கள் தீட்டப்பட்டன.

முதற்கட்டமாகக் கருஞ்சட்டைத் தோழர்கள்மீது அபாண்டமான பழிகள் - வதந்திகள் கிளப்பப்பட்டன. "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற பெண் பக்தர்களைக் கேலி செய்தனர் - தவறாக நடக்க முயன்றனர்" என்றெல்லாம் அவதூறுகளை அள்ளி விட்டனர்.

இராமாயண காலத்திலிருந்து நம் எதிரிகளான பார்ப்பனர்கள் நம்மீது பழி  சுமத்தியே பழக்கப்பட்டவர்களாயிற்றே!

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதைபோல கடைசியில் மாநாட்டுப் பந்தலுக்கே தீ வைத்தனர்.

அந்தச் சூழலைத் தந்தை பெரியார் எப்படி கையாண்டார் -  சமாளித்தார்?  வன்முறைக்கு வன்முறை என்ற எதிர் வியூகத்தை வகுக்கவில்லை. கழகக் குடும்பத்தினரைப் பத்திரமாகத் தத்தம் ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில் கவனம் செலுத்தினார்.

மதுரை ஜங்ஷன் வழியாக அனுப்பி வைத்தால் அங்கேயும் கூலிகளையும், காலிகளையும் ஏவி விடக் கூடும் என்று கணித்துக் கொடைரோடு இரயில் நிலையத்திற்கு அனுப்பி அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

எதிரிகளின் காட்டு விலங்காண்டித்தன நடவடிக்கையைக் குறித்து "குடிஅரசு" இதழில் தந்தை பெரியார் "மதுரை கலவரம்" எனும் தலைப்பில் எழுதிய தலையங்க வரிகள் ஓர் இயக்கத்தை எப்படி நடத்திச் செல்ல வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் திசை விளக்காகும்.

"மதுரையைப் போல் இன்னும் பல தொல்லைகளை நாம் அனுபவிக்க நேரிடும். அந்த அனுபவத்தின் மூலம்தான் நாம் மனிதத் தன்மையைப் பெற்றுத் திராவிடத்தைப் பெறப் போகிறோம். ஆகவே நாம் செய்ய வேண்டியது, யாவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும், எங்கும் கறுப்புக் கொடி பறக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும், உடையிலும் கறுப்புக் கொடி சின்னம் தொங்க வேண்டும். இந்தக் காலம்தான் மதுரையைக் கண்டு பயந்தோமா, துணிவும், வீரமும் கொண்டோமா என்பதை உறுதிப்படுத்தும்" என்றதோடு நிற்கவில்லை அய்யா.

"மதுரை சம்பவம் நமக்கு மொத்தத்தில் கணக்குப் பார்த்தால், சிலர் அடிபட்டாலும், பலனில் லாபமே தவிர நட்டமில்லை. நமது இயக்கமும், கறுப்புச் சட்டைப் படை அமைப்பும் இந்தியா முழுவதும் பரவி விட்டது. நமது கொள்கைகளும் இந்தியாவெங்கும் தெரிந்து விட்டது. இது எதிர்பாராமல் நமக்குக் கிடைத்த லாபமாகும்" என்று எழுதினார் இனநலப் பாதுகாவலர் நமது அய்யா.

அய்யா சொன்ன மாதிரியே, கறுப்புச் சட்டை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்ட ஒரு வார இடைவெளியிலேயே கும்பகோணத்தில் கழக மாநாடு நடத்தப்பட்டது.

ஆம். அய்யாவின் மதுரைக் கலவரம் பற்றிய அறிவிப்பு எதிர்காலத்தில் இயக்கம் நடத்துநர்களுக்கான நடை வண்டியாகும். 

அய்யா சொன்னபடியே அதே மதுரையில் எத்தனை எத்தனைக் கழக நிகழ்ச்சிகள். தந்தை பெரியாருக்குச் சிலை திறப்பு என்ன? தமிழர் தலைவர் ஆசிரியருக்கு 'வேன்' அளிப்பு நிகழ்ச்சி என்ன? மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு என்ன, பேரணி என்ன?

நகரின் நடுநாயகமாக உள்ள பேருந்து நிலையத்திற்குப் பெயரே "தந்தை பெரியார் பேருந்து நிலையம்" என்பதாகும்.

அந்த மதுரையில் நேற்று நடைபெற்ற பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானம் உள்பட எட்டு அரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் முத்திரை பொறித்த தீர்மானம், 88 ஆண்டு வரலாறு படைத்த 'விடுதலை' ஏட்டுக்கு 60 ஆண்டு கால ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் என்பது 'கின்னஸ்' சாதனைதான் என்பதாகும்.

இது ஒரு சாதனை என்பது ஒரு பக்கம் இருந்தாலும்  இந்த 60 ஆண்டு 'விடுதலை'யின் சாதனை - அதனால்  மக்கள் பெற்ற பலன் பற்றி பட்டியல் போடத்தான் முடியுமா?

தந்தை பெரியார் காலத்தில் நமக்குக் கிடைத்த இடஒதுக்கீடு 49 விழுக்காடு என்றால், தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு இன்று நம் மக்கள் அனுபவிக்கும் இடஒதுக்கீடு  69 விழுக்காடு (வெறும் ஆணை அல்ல - 76ஆவது சட்டத் திருத்தம் - 9ஆம் அட்டவணைப் பாதுகாப்பு).

1940 ஆகஸ்டு 4ஆம் தேதி திருவாரூரில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க 15ஆம் மாகாண மாநாட்டின் 19ஆம் எண் தீர்மானம் என்ன கூறுகிறது?

"சென்னை மாகாணத்தில் சர்க்கார் உத்தியோகங்களுக்காக ஏற்படுத்தியிருக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது சர்க்கார் உத்தரவாக மாத்திரம் இல்லாமல், சர்க்கார் சட்டத்திலேயே ஒரு விதியாகக் குறிக்கப்பட வேண்டுமென்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

தற்போதுள்ள வகுப்புவாரி பிரதிநிதித்துவ எண்ணிக்கை திராவிடர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்கும் குறைவாக இருப்பதால்  ஜன சங்கியைக்கு அவ்விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும், அவ்விகிதப்படி உத்தியோகங்கள் அடைந்திருக்கும் கூட்டத்தாருடைய நியமனம் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென்றும் சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.

இந்த முறை இந்திய சர்க்கார் உத்தியோகங்களிலும் கையாளப்பட வேண்டுமென்று இந்திய சர்க்காருக்குத் தெரிவித்துக் கொள்வதுடன், வரப் போகும் சீர்திருத்த சட்டத்திலேயே இது குறிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது." - என்கிறது அத்தீர்மானம்.

இதில் கூர்மையான வாசகத்தை, ஆழமான கருத்தைக் கவனிக்கத்தவறக் கூடாது. மாநில அரசோடு இடஒதுக்கீடு நின்று விடாமல் இந்திய சர்க்காரின் உத்தியோகங்களிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது ஒன்று; அது வெறும் உத்தரவாக (ஆணையாக - G.O.) இல்லாமல் சட்டமாகவே ஆக்கப்பட வேண்டும் என்று எவ்வளவுத் தொலைநோக்கோடு இன்றைக்கு 82 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் கணித்ததை என்ன சொல்ல!

இன்றைக்கு 69 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருப்பது என்பது வெறும் ஆணையல்ல. இன்றைக்கு 82 ஆண்டுகளுக்குமுன்  தந்தை பெரியார் சொன்னது - சட்டமாகவே நடந்து வருகிறது. ஒருபடி மேலே சென்று 76ஆம் சட்டத்தோடு ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்போடு நம் மக்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கவில்லையா?

1940 - திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றினார்களே இந்திய அரசாங்கத்தின் உத்தியோகங்களிலும், இடஒதுக்கீடு; சட்டம் கட்டாயம் தேவை என்பது  - இப்பொழுது செயல்பாட்டுக்கு வந்து விடவில்லையா?

மண்டல் குழு பரிந்துரை - சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது 27 விழுக்காடு இடஒதுக்கீடு இந்திய அரசின் உத்தியோகங்களிலும் கிடைக்கவில்லையா?

இதனை நிறைவேற்றுவதற்கு திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடந்த வில்லையா? நமது 'விடுதலை' பேராயுதத்தின் பணியும், பங்கும் இதில் சாதாரணமானதுதானா? இவற்றை எல்லாம் தலைமை ஏற்று சாதித்துக் கொடுத்தவர் நமது ஒப்பற்ற தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அல்லவா!

பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி. மண்டல்) சென்னை பெரியார் திடலில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் - "எங்களால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பரிந்துரைகளை அளிக்கத் தான் முடியும். அது செயல்பாட்டுக்கு வருவது தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டின் கையில்தான் இருக்கிறது. பெரியார் இயக்கத்தை வழி நடத்தும் வீரமணியின் கையில்தான் இருக்கிறது" என்று சொல்லவில்லையா?

"வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் நான் சமூகநீதி உணர்ச்சியைப் பெறுகிறேன்" என்று சமூகநீதிக் காவலர் மாண்புமிகு விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) சொல்லவில்லையா?

இந்த அரும் பெரும் வரலாறுகளை நமது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டாமா?

அதற்காக அரும்பாடுபட்ட திராவிடர் கழகத்தையும், அதன் தன்னிகரற்ற தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பற்றியும் வரலாற்றில் கல்வெட்டாகப் பதிக்க வேண்டாமா?

மதுரையில் கூடிய கழகப் பொதுக் குழுவில் 60 ஆண்டாக 'விடுதலை' ஆசிரியராக இருந்து அரும்பணி ஆற்றியமைக்காக 60 ஆயிரம் சந்தாக்கள் அளிப்பது என்ற முடிவு என்பது இயக்க வரலாற்றில் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றில் வைரத் தூணில் செதுக்கப்பட்ட சிலாசாசனம்.

முடிவெடுத்தது கழகம் என்றால் அதனை முடிக்காமல் அதன் கண் இமைகள் உறக்கத்தை நாடுமா?

செயல் முடிப்போம் தோழர்களே! வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பொதுக் குழுவையும், அதனை ஒட்டிய பொதுக் கூட்டத்தையும் பீடுறு வகையில் கூட்டி, அனைத்துத் தரப்பினரையும் மூக்கின் மேல் விரலை வைக்குமாறு செய்த மதுரைக் கழகத் தோழர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

மறவாதீர்! மறவாதீர்!!

60 ஆயிரம் 'விடுதலை' சந்தாவை!


No comments:

Post a Comment