அரசு பள்ளிகளில் தற்காலிகமாக 13,331 ஆசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 26, 2022

அரசு பள்ளிகளில் தற்காலிகமாக 13,331 ஆசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவு

சேலம், ஜூன் 26  தமிழ் நாட்டில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம், 13,331 ஆசிரியர்கள் தற்காலிக மாக நியமனம் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. இவர் களுக்கு மாதம் ரூ. 7,500 முதல் ரூ.12,000 வரை மதிப்பூதியம் வழங்கப் படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.  

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் தொடக்கக்கல்வி இயக் குநர் அறிவொளி ஆகியோர் சிஇஓக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:  தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 5,154 பட்டதாரி ஆசி ரியர் காலிப்பணியிடங்களை, பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை, ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 முடிய 10 மாதங்களுக்கும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஜூலை-2022 முதல் பிப்ரவரி- 2023 முடிய 8 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக, பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதி யில் உள்ள தகுதியுள்ள நபர்களை, பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படு கிறது. அவ்வாறு தேர்வு செய்யும்போது, இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர் களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடை நிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர் களுக்கு மாதம் ரூ.10,000, முது கலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும். காலிப்பணியிடங்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற நபர்களை மட்டுமே, எவ்வித புகார் களுக்கும் இடமின்றி நிரப்பிக் கொள்ளவேண்டும். இந்த காலிப்பணியிடங்களில் பணி புரியும் நபர்களுக்கு வழங்கப் படும் ஊதியத்திற்கான ஒப் புகைச்சீட்டு, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரால் பராமரிக்கப்பட வேண்டும். இது தணிக்கைக்கு உட்பட்டது.

சம்பந்தப்பட்ட பணியிடத் திற்கு, பதவி உயர்வு மூல மாக வோ அல்லது நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப் படின், பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரி யர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்யப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர் இருப்பின், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட் டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னு ரிமை  வழங்க வேண்டும்.

இதேபோல், முதுகலை ஆசிரியர்கள் நிலையில் ஆசி ரியர் தேர்வு வாரியத்தால் நடத் தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட வர்களுக்கும், அவ்வாறு இல் லையெனில், இல்லம் தேடி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment