வெற்றியின் ரகசியம் - இதோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

வெற்றியின் ரகசியம் - இதோ!

 வெற்றியின் ரகசியம் - இதோ!

எப்போதும் நிதானமாகவும், கட்டுப்பாடுடன் நாளும் இடையறாது உழைத்து வருவதை ஒரு ‘பழக்கமாக'த் துவங்கி, ‘வழக்கமாக' ஆக்கிக் கொள்ளுபவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

உழைப்பு வீண் போகவே போகாது என்பது உறுதி..

அடுத்தவரைக் கண்டு பொறாமைப்படுவதினால் - ஆத்திரப்படுவதினால் எப்போதும் எவரும் முன்னேறி விட முடியாது.

அதுமட்டுமல்ல; ஒரு மனிதனைக் கெடுப்பதற்கு, அவனுள்ள - மன அமைதியின்மையை ஏற்படுத்தி, குடைச்சலைத் தருவதற்கு இந்தப் பொறாமை என்ற தீப்பொறியே போதும். முழுமையாக எரித்துச் சாம்பல் மேடாக அவனையும், அவனது வாழ்வை யும் ஆக்கிவிடும். மற்றவர்கள் வளர்ச்சி கண்டு நாம் ஏன் வருந்த வேண்டும்?

விடா முயற்சியோடு எதையும் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்

ஒருமுறை, இருமுறை தோல்வியைக் கண்டு சளைத்து, களைத்து ஒதுங்கி விடாதீர்!

தொடர்ந்து மேலும் மேலும் நம்பிக்கையோடும், உறுதிப்பாட்டுடனும் உழைக்கப் பழகிக் கொள் ளுங்கள்; அது பெரும் அளவுக்குப் பயன்தரும். தொடர்ந்து - நாளும் உழைத்து, அதன் பலன், நாம் விரும்பிடும் இலக்கை அடைந்தே தீருவோம்.

எடுத்த செயல் எதுவானாலும் நம்பிக்கை தளராமல், இலக்கையே குறி வைத்து அதற்கு இராணுவ வீரர்களைப் போல் என்றும் உழைக்கப் பழகிவிட்டால் நாம் எய்யும் அம்பு, இலக்கைக் குறி வைத்துத் தாக்கி வெற்றியை நம் காலடியில் கொண்டு வந்து குவிப்பது உறுதி என்பதை மறவாதீர்!

இந்திய மண்ணின் தலைசிறந்த முதல் பகுத்தறிவாளரான புத்தர் கூறிய அறிவுரைகளில் மிகவும் முக்கியமானதும், எளிமையைப் புரிந்து செய்யக்கூடியதுமான ஒன்று என்ன தெரியுமா?

திரும்பத் திரும்ப,. விடாமல் - தொய்வின்றித் தொடர்ந்து செய்து கொண்டே வரும் பழக்கமுடை யவர்களாக நீங்கள் ஆகும் போது, மற்ற எதுவும் உங்களுக்குக் கடினமானதாகவே தோன்றாது - நிச்சயமாக!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. 'If you don't use it, you will lose it'  - 'எதையும் எப்போதும் பயன்படுத்திக் கொண்டே இருங்கள்; பயன்படுத் தாமல் நீங்கள் விட்டுவிடுவீர்களானால் அதனை நீங்கள் இழந்துவிடுவீர்கள்' என்பது அதன் பொருள்.

சாதனையாளர்கள் அனைவரும் அத்துறை சாதனைகளை இடையறாமல் திரும்பத் திரும்ப செய்தலை நாளும் விட்டு விடாமல் பழகுவதன் மாண்பே அவர்கள் வெற்றிக்கு அடிப்படையாகும்.

ஓர் எளிய உதாரணம்.

நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் பழக்கத்தை உடையவர்கள் தொடர்ந்து உரிய அளவுக்குரிய நேரத்தைப் பயன்படுத்தி நடைப் பயிற்சியை மேற்கொண்டு வந்தால், அதைவிடப் பாதுகாப்பான உடற்பயிற்சி - உடலின் ரத்த ஓட்டம் தொடர்ந்து அனைத்து உறுப்புகளும் பயன்படும் - பலப்படும் வகையில் நமக்கு உதவும்.

சில நாள் விட்டு விட்டீர்கள் எனில், நடுவில் சோம்பேறித் தனம் ஊடுருவ நாம் அனுமதித்து விட்டால் அதன்பிறகு அது நம்மை கைதியாக்கி விடும். கைவிட வேண்டிய பழக்கமாகவும் கூட ஆக்கிவிடக் கூடும்.

ஒவ்வொருவருள்ளும் திறமைகள் புதைந்தே இருக்கின்றன. நம், நமது கடும் உழைப்பினால் மட்டுமே அதை வெளியே கொண்டு வர முடியும். மற்றவர்கள் எவ்வளவு ஊக்கப்படுத்தி நம்மை உற்சாகப்படுத்தினாலும் உழைக்கும், ஆற்றலும், கடமையும் நம்மாடுதான் உள்ளன; ‘பிறர்தரவாரா', மறவாதீர்!

எவ்வளவு சிறந்த மருத்துவர் மருத்துவம் பார்த்தாலும் அந்தப் பெண்மணியானதாய்தானே குழந்தைப் பெற்றெடுக்க முடியும்? டாக்டர்களும், நர்சுகளுமா பெற்றெடுக்க முடியும்! அதுபோல ஊக் கப்படுத்துபவர், ஓராயிரம் என்றாலும் உழைத்துப் பிழைக்க வேண்டியது நமது கடமை என்பதை மறவாதீர்!¤

உழைப்பீர்! ஊக்கம் மலரும்!

வெற்றி வந்து உங்கள் காலடியில் விழுவது உறுதி!

No comments:

Post a Comment