செஞ்சி: பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டிற்காக உழைத்தவர்களுக்கு - ஒத்துழைத்தவர்களுக்கு - பங்கேற்ற அறிஞர் பெருமக்களுக்கு தலைதாழ்ந்த நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 24, 2022

செஞ்சி: பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டிற்காக உழைத்தவர்களுக்கு - ஒத்துழைத்தவர்களுக்கு - பங்கேற்ற அறிஞர் பெருமக்களுக்கு தலைதாழ்ந்த நன்றி!

 செஞ்சி ப.க. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை

செஞ்சி, ஜூன் 24   பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் என்ற முறையில், மாநாட்டிற்காக உழைத்தவர்களுக்கு, பங்கேற்று உரையாற்றிய பெருமக்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழக பொன்விழா 

நிறைவு மாநாடு

கடந்த 19.6.2022 அன்று மாலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரை யாற்றினார்.

அவரது தலைமையுரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், மன மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் நடைபெறும் சிறப்பான மாநாடாக, செஞ்சிக்கோட்டையில் வரலாறு படைத்த ஒரு மாநாடாக அமைந்த பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு நிறைவடையக் கூடிய நிலையில், இப்பொழுது வந்திருக்கக்கூடிய இந்தக் கட்டத்தில் சிறப்பாக வரவேற்புரையாற்றிய பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் துரை திருநாவுக்கரசு அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சுப்பராயன் அவர்களே, மாவட்ட அமைப்பாளர் கோபண்ணா அவர்களே,

வாழ்த்துரை வழங்கி சிறப்பித்துக் கொண்டிருக்கக் கூடிய, இந்த மாநாட்டினுடைய வெற்றிக்கு முழுக் காரணமாக இருக்கக்கூடிய - அன்பிற்கும், பாராட்டு தலுக்கும் உரிய நம்முடைய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மனிதநேயர் மாண்புமிகு மானமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்களே,

தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து ஓர் அருமையான ஆய்வுரையை நிகழ்த்தி விடைபெற்றுச் சென்ற பொதுப்பணித் துறை அமைச்சர் சீரிய பண்பாளர், பகுத்தறிவாளர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்களே,

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய படத்தைத் திறந்து ஓர் அருமையான உரையை ஆற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்து, ஒரு சிறப்புமிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை நிகழ்த்தியுள்ள, திராவிட இயக்கத்தினுடைய மூன்றாவது குழல் என்று நம்மால் எப்பொழுதுமே அடையாளம் கண்டுகொண்டி ருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்பிற்குரிய அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர்  தொல்.திருமாவளவன் அவர்களே,

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

சாவித்திரி புலே அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,

கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்களே, ஜெயக்குமார் அவர்களே, அன்புராஜ் அவர்களே,

இந்த மாநாட்டினை சிறப்பாக நடத்துவதற்கு அரும்பாடுபட்டு, ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேலாக தன்னுடைய உழைப்பை அளித்திருக்கக்கூடிய பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர் அருமைத் தோழர் செயல் வீரர், சீரிய பகுத்தறிவாளர் இரா.தமிழ்ச்செல்வன் அவர்களே,

பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் அளிப்பு

அவரோடு ஒருங்கிணைந்து அருமையான நல் லிணக்கத்தோடு செயல்பட்டு, இன்றைக்கு இந்த மாநாட் டின் சார்பாக - முதல் கட்டமாக என்று சொல்லலாம் என நான் நினைக்கிறேன் - 3 லட்சம் ரூபாயை பெரியார் உலகத்திற்கு இங்கு அளித்திருக்கக்கூடிய அவருடைய கூட்டுத் தோழர்கள் பொதுச்செயலாளர்கள் வி.மோகன் அவர்களே, ஆ.வெங்கடேசன் அவர்களே,

செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் 

மொக்தியார் அலி

கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன் அவர்களே, அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் அவர்களே, மாவட்டப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் ரகுநாதன் அவர்களே, இணைப்புரை வழங் கியிருக்கக்கூடிய மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்குப் பெருவாரியான பணிகளை ஏற்று செயல்பட்ட நம்முடைய அமைச்சர் அவர்களைப்பற்றி ஏற்கெனவே சொன்னேன்; அது போலவே, பல மடங்கு பாராட்டுக்குரிய செஞ்சி பேரூ ராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் அலி அவர்களே, ஒரு சிறந்த இளைஞர், கொள்கையைப் புரிந்த இளைஞர், கொள்கைக்காக தன்னுடைய இளமையையும் சிறப் பாகக் கொடுத்து,

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது 

என்று வள்ளுவர் சொன்னதைப்போல, மிக அரு மையாக செயல்படக்கூடிய இளைஞர் அவர்.

செஞ்சி ஜமாத் தலைவர் சையத் மஜித் அவர்களே,

விழுப்புரம் மண்டல செயலாளர் இளம்பரிதி அவர் களே, விழுப்புரம் மாவட்ட செயலாளர் பரணிதரன் அவர்களே,

எல்லாவற்றையும்விட இந்த மாநாட்டிற்கு ஒரு தனிச் சிறப்பு என்னவென்றால், திருக்குவளையின் சார்பாக என்னை எடை போட்டு இருக்கிறார்கள்.

உங்களுக்கெல்லாம் தெரியும் திருக்குவளை கலைஞர் பிறந்த ஊர்; அந்த ஊரிலிருந்துதான் நம்மு டைய பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தோழர் மேகநாதன் அவர்கள் - இந்த மேகநாதன் என்ற பெயரே பல பேருக்குத் தெரியாது; அந்தப் பெயர் இராவ ணனுடைய மைந்தனின் பெயர். இந்திரஜித் என்று சொல்வார்கள்.

என்னை எடை போட்டுப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்

நம்முடைய இயக்கத்தில் தீவிரமாக இருக்கக் கூடிய மேகநாதன் அவர்கள், என்னை எடை போட்டுப் பார்க்கவேண்டும் என்று விரும்பினார்.

எடைக்கு எடை உங்களுக்கு நாணயம் கொடுக்கப் போகிறோம் என்று நம்முடைய பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர், அந்தச் செய்தியை என்னிடம் லேசாகக் கிசுகிசுத்தார்.

அப்பொழுது நான் ஒன்று சொன்னேன், என்னுடைய எடை மிகக் குறைவான எடையாகும். அமைச்சரையும் சேர்த்து அமர வைத்திருந்தால், எடை அதிமாக வந்திருக்கும். வெறும் உடலில் மட்டுமல்ல, உள்ள சரக்கிலும் எடை உள்ளவர்.

அந்தக் குறைபாட்டை நீக்கக்கூடிய அளவிற்கு, என்னுடைய எடைக்கு கொடுத்தால், அது பாதித் தொகைதான் வந்திருக்கும். 50 ஆயிரம் ரூபாயை எடையாகக் கொடுத்தார்கள்.

இதுவரையில் எனக்கு எடைக்கு எடை நாண யம் கொடுத்திருக்கிறார்கள்; எதுவும் என்னு டைய வீட்டிற்குப் போகாது; விடுதலை அலுவலகத் திற்குத்தான் போகும்; பொது அமைப்புகளுக்குத் தான் போகும்; ‘விடுதலை’யின் சந்தாக்களுக் காகத்தான் பயன்பட்டது.

60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்கள் கொடுப்பதை இங்கேயே தொடங்கியிருக்கிறார்கள்!

60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்கள் கொடுப்பதை இங்கேயே தொடங்கி வைத்துவிட்டார்கள். எனவே, ஓராண்டு சந்தா 2000 ரூபாய்; அரையாண்டு சந்தா ரூ.1000.

25 ஆண்டு சந்தாவை இங்கேயே கொடுத்துத் தொடங்கி வைக்கிறேன் என்பதற்கு அடையாளமாக, உற்சாகப்படுத்துவதற்காக தராசைக் கொண்டு எடையிட்டுத் தந்தார்கள். 

மற்ற இடங்களில் எடைக்கு எடை கொடுத்தார்கள்; எடைக்கு அதிகமாகவே கொடுத்ததுதான் செஞ்சி மாநாடு என்று சொல்லக்கூடிய அளவில், தோழர் மேகநாதன் அவர்களுக்கு என்னுடைய அன்பை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டிற்காக எல்லா தோழர்களும் பாடு பட்டார்கள். நம்முடைய செந்தில்வேலன் அவர்கள், சுடரொளி சுந்தரம் அவர்கள், அதேபோல, நம்முடைய தென்னரசு, அண்ணாமலை, பாபு, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோர் எல்லோருமே அரும்பாடுபட் டா£ர்கள். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே உரையாற்றியவர்களின் உரைகள் எல்லாம் ஆய்வுரைகள். எனவே, அதற்குமேல் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கு நன்றியுரை சொல்வதுதான் என்னுடைய வேலை.

அரங்கத்திற்கு வராமல், திறந்தவெளியில் மாநாட் டினை நடத்தியிருந்தால் இன்னும் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.

மழையின் காரணமாக, இந்த மாநாட்டினை அரங் கத்தினுள் நடத்துவதற்கு மிகச் சிறப்பாக உடனடியாக செய்யக்கூடிய ஆற்றல் நம்முடைய அமைச்சருக்குத்தான் உண்டு; அவருடைய தோழர்களுக்குத்தான் உண்டு.

ஆகவே, எல்லோருடைய உரையும் மிக அற்புதமாக அமைந்தது.

என்னுடைய தலைதாழ்ந்த நன்றி!

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் என்ற முறையில், மாநாட்டிற்காக உழைத்தவர்களுக்கு, உரையாற்றிய பெருமக்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

இன்னும் கொஞ்சம் நேரம் நான் உரையைத் தொடர்ந்தால், 19 ஆம் தேதி மாநாடு - 20 ஆம் தேதி மாநாடாக மாற்றப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. நான் உங்களை அதிக நேரம் அமர வைக்க விரும்பவில்லை.

மூன்று செய்திகளை மட்டும் சுருக்கமாக சொல் கிறேன்.

‘திராவிட மாடல்’ - அழகாக சொன்னார் நம்முடைய சகோதரர் எழுச்சித் தமிழர் அவர்கள், எந்த இடத்தில் விட்டாரோ, அங்கே இருந்து கொஞ்சம் விளக்கமாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

திராவிடம் என்றால் என்ன?

பல பேர் நினைக்கிறார்கள், திராவிடம் என்றால் புரியாமல் சொல்கிறார்கள் என்று.

எங்களுக்கு ஒன்றும் புரியாமல் அந்த சொல்லை நாங்கள் பயன்படுத்தவில்லை.

கடவுள் மாதிரியான விஷயமல்ல திராவிடம். பகுத்தறிவாளர் இயக்கம் ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? எதனால்? என்று கேள்வி கேட்கக்கூடிய ஓர் இயக்கம்.

பகுத்தறிவைப்பற்றி தந்தை பெரியார்

இது ஒன்றும் கடவுள் பிரச்சினையல்ல. 

பகுத்தறிவைப்பற்றி சொல்லும்பொழுது, பெரியார் அவர்கள் மிக எளிமையாக பதில் சொன்னார்.

கடவுளுக்கு என்ன விளக்கம் சொல்கிறார்கள், பக்தர்கள், நம்பக்கூடியவர்கள்.

‘‘கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர்’’

என்று.

அதற்கு என்ன அர்த்தம்?

‘‘பார்த்தவன் சொன்னதில்லை; சொன்னவன் பார்த்ததில்லை’’ என்பதுதான்.

பார்த்தவன் சொன்னதில்லை; சொன்னவன் பார்த்ததில்லை என்றால், அதற்கு ஜீரோ என்று அர்த்தம்.

திராவிடம் அப்படிப்பட்டதல்ல. திராவிடம் என்பது, ஒரு இடத்தை மய்யப்படுத்துவது அல்ல. திராவிட தத்துவத்தைக் கொண்ட ஒரு நாட்டு அமைப்பு ஏற்படவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில்தான், திராவிட நாடு என்று வந்தது.

திராவிடம் என்பதன் அடையாளம் என்ன?

திராவிட நாடு என்பது அவர் சொன்னதுபோன்று, சென்னை ராஜதானியாக இருந்தபொழுது, ஒரிசா சேர்ந்திருந்தது. அதற்கடுத்து ஒரிசா போய்விட்டது. அப்பொழுதும் திராவிட நாடுதான் கேட்டோம். அதற்குப் பிறகு மற்றவை போயின - அப்பொழுதும் திராவிட நாடுதான் கேட்டோம்.

திராவிடம் என்பதன் அடையாளம் என்ன?

எல்லாருக்கும் எல்லாம் -

அனைவருக்கும் அனைத்தும்

என்பதுதான் திராவிடம்.

இன்னாருக்கு இதுதான் -

தலையெழுத்து -

இவர்கள் மட்டும்தான் படிக்கவேண்டும் என்பதுதான் ஆரியம்.

படிக்காதே என்று சொன்னது ‘ஆரிய மாடல்’

படி என்று சொன்னது ‘திராவிட மாடல்.’

இன்றைக்கு இந்த இயக்கம் இல்லையென்றால், நம் பெயருக்குப் பின் டிகிரியைப் போட்டுக் கொள்கிறோமே, அந்த டிகிரி இருக்குமா? நாமெல்லாம் படித்த பட்டதாரி களாக ஆகியிருப்போமா? சட்டக் கல்லூரிக்குப் போயி ருப்போமோ? அல்லது பொறியியல் கல்லூரிகளுக்குத் தான் போயிருப்போமோ? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

அனைவருக்கும் அனைத்தும் 

என்பதுதான் திராவிடம்

எனவே அனைவருக்கும் கல்வி.  கல்வி கற்ற அனை வருக்கும் உத்தியோகம் - இவை அத்தனையும் சொல் வதுதான் - அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் திராவிடம்.

இதை நடைமுறையில், மக்களாட்சியாக இருந்து - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஓர் ஆட்சி செய்வதற்குப் பெயர்தான் திராவிட மாடல்.

திராவிட மாடலுக்கு நூறாண்டு காலத்திற்குமேல் வரலாறு உண்டு - பின்னணி உண்டு.

அதைவிட்டுவிட்டு, நம்மூரில் என்ன சொல்கிறார்கள்? புதிதாக ஒன்று கிளம்பியிருக்கிறது - அது என்னவென் றால், இது ஆன்மிக பூமி - இது ஆன்மிகம் - இது பெரியார் பூமி இல்லை; திராவிட பூமி இல்லை - இது ஆன்மிக பூமி என்று சொல்கிறார்கள்.

ஆன்மிகம் என்ற சொல்

எப்படி வந்தது?

ஆன்மிகம் என்ற சொல் இருக்கிறதே, அது எப்படி வந்தது? என்று கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்.

ஆன்மிகம் என்றால், ஆன்மா - ஆன்மிகம். 

ஆன்மா என்பது என்ன சொல்? நம்முடைய தமிழ்ப் புலவர்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறு. புலவர்கள் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.

என்ன அந்தத் தவறு என்று சொன்னால், வடமொழிக் கருத்துதான் ஆத்மா - அந்த ஆத்மாவை ஆத்மா என்று எழுதித் தொலைத்தால், அது நம்முடைய சங்கதி இல்லை - அது வேற சங்கதி - நமக்கு சம்பந்தமில்லாதது - வேற ஆளுக்கு சம்பந்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந் திருக்கும்.

சனாதன தர்மம் என்று சொல்கிறார்களே, அப்படி சொல்லும்பொழுதே, அது நமக்கு சம்பந்தப்பட்டது அல்ல என்பது மிகத் தெளிவாக தெரியும்.

(தொடரும்)


No comments:

Post a Comment