செஞ்சி தீர்மானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

செஞ்சி தீர்மானங்கள்

செஞ்சியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற மாநிலப் பகுத்தறிவாளர் கழக பொன் விழா நிறைவு மாநாட்டில் 12 அரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல - மனிதனின் தனித்தன்மை அடையாளமான பகுத்தறிவை முன்னிறுத்தி, விஞ்ஞான மனப்பான்மைக்கு இடம் அளிக்கும் மானுடத்திற்குத் தேவையானவையாகும்.

இயக்கத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் திண்டிவனம் மானமிகு க.மு.தாஸ், ஆசிரியர் மானமிகு கெடார் நடராசன் ஆகியோர் நினைவு அரங்குகளில் நிறைவேற்றப்பட்ட - இத்தீர்மானங்கள் கணந்தோறும் கணந்தோறும் நெஞ்சில் நிறுத்தி வாழ்வின் வெற்றிகளை நோக்கி நடை போட வைக்கக் கூடியவை.

ஜாதி நோய்ப் பீடிக்கப்பட்ட வருணாசிரம தர்ம இந்தியத் துணைக் கண்டத்திற்கான தீர்மானங்களும் இதில் அடங்கும்.

ஜாதியைக் குறிப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும்!

இடஒதுக்கீட்டுக்காக சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஜாதி என்று கேட்கப்படும் படிவங்களில் ஜாதியைக் குறிப்பிடாமல் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. (பி.சி., எம்.பி.சி.), எஃப்.சி என்று பதிவு செய்யும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஜாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவு 

கட்டப்பட வேண்டும்!

ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் சமுதாய இயக்கங்கள் ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்தாலும், இதற்கென்று காவல்துறையில் ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தி, ஜாதி, மத மறுப்புத் திருமணங்களைச் செய்துகொள்வோர்க்குத் தக்க பாதுகாப்பினை அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தனி ஒதுக்கீடுக்கு (Inter-Caste Quota) வழி செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்பதற்குப் பதில் ஜாதியை ஒழிக்கத் திருத்தம் தேவை!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பிரிவு தீண்டாமை ஒழிக்கப்படுவதாகக் கூறுகிறது. தீண்டாமை எனப்படும் நோய், ஜாதியின் ஆணி வேரிலிருந்து பிறக்கிறது. ஆகையால், அப்பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கைகளில் ஜாதி வாரியாக வண்ணக் கயிறுகள் கட்டுவது தடுக்கப்பட வேண்டும்!

கல்விக் கூடங்களில் தத்தம் ஜாதியை அடையாளம் காட்டு வதற்காக தனித்தனி வண்ணத்தில் இருபால் மாணவர்களும் கைகளில் கயிறுகளைக் கட்டி வருவதைக் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மேற்கண்ட ஜாதி நோய் ஒழிக்கப்படாதவரை ஹிந்து மதம் வேர்ப்பிடித்து இருக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் மனித நேயம் மலர்வது முயற்கொம்பே!

மனித நேயமும், சகோதரத்துவமும் மலராத சமூக அமைப்பு என்றால் ஆங்கே பிளவுகளும், பகைமை உணர்வுகளும் மூர்க்கமாக முகாமிட்டு, கலவரங்களையும், மோதல்களையும் தூண்டிக் கொண்டே இருக்கும்.

இந்த நிலை நிலவும் ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச் சியோ, அறிவு வளர்ச்சியோ ஏற்படுவது என்பது பகற்கனவே.

அதனால்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறினார்.

"மதம் - மதத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கிறது" (தந்தை பெரியார், ‘விடுதலை', 14.10.1971)

தந்தை பெரியார் கூறும் இந்தப் பகுத்தறிவுச் சிந்தனை என்பது ஒரு வாழ்வியல் முறை!

மனிதன் தானாகப் பிறக்கவில்லை - எனவே தனக்காக வாழக் கூடாதவன் என்பதுதான் தந்தை பெரியார் நிலை.

அதனால்தான் தனது 95ஆம் வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராக அலைந்தார் - பட்டிதொட்டிகளில் எல்லாம் பகுத்தறிவு மாரி பொழிந்தார்.

திராவிடர் கழகமானாலும் சரி, பகுத்தறிவாளர் கழகமானா லும் சரி, தந்தை பெரியார் தம் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லுபவைதான்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு அமைதித் தென்றல் வீசும் பூங்காவாகவும், மூடநம்பிக்கைகள் குறைந்த பூமியாகவும் ஒளி விட்டுப் பிரகாசிப்பதற்குக் காரணம். முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக தந்தை பெரியார் பொழிந்த பகுத்தறிவுப் பிரச்சார மழையும், வெளியீடுகளும், தமக்குப் பிறகும் இந்தப் பணி தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என்று செய்து வைத்துச் சென்ற ஏற்பாடுகளும்தான்.

அதனுடைய  ஒரு பங்களிப்புதான் செஞ்சி மாநாடும், உரை வீச்சுகளும், மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் - நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுமாகும்.

"நெஞ்சில் நிறைந்த செஞ்சி" என்று வரலாறு கூறும்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


No comments:

Post a Comment