'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! -3 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 26, 2022

'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! -3

இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா?

சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே!

கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’

நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!

ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.

விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -

வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!

அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி  - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.

சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!

படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!

1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?

அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு! 

இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?

 விடுதலை ஆசிரியர் பதிப்பாளர் வழக்கு

இருவருக்கும் 6-மாத தண்டனை. ஜாமீனில் விடுதலை

‘விடுதலை’ ஆசிரியர் பண்டிதர் என். முத்துசாமி பிள்ளை அவர்கள் மீதும், பிரசுரகர்த்தாவும் 

வெளியிடுவோருமாயுமிருக்கும் தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மீதும் சர்க்காரால் 153 எ. செக்ஷன்களின்படி தொடரப்பட்ட வழக்கு 5-ந் தேதியன்று விசாரணைக்கு வந்தது. சிறை மந்திரி ராமன் மேனன் காலஞ்சென்றதை முன்னிட்டு அன்று வழக்கை ரத்து வைத்து விட்டு 6ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவை அடிஷனல் செஷன்ஸ் ஜட்ஜ் கனம் மொயிலோ அவர்கள் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது விசாரணையை கவனிக்க கோவை ஜில்லாவிலிருந்தும், வெளி ஜில்லாக் களிலிருந்தும் ஏராளமான ஜனங்கள் கோர்ட்டில் கூடியிருந்தார்கள்.

இந்த வழக்கில் சாட்சியம் கூறுவதற்காக அறிஞர்கள் பலர் விஜயம் செய்திருந்தார்கள். 

இவ்வழக்கிற்கு உதவி புரிய பல பிரபலஸ்தர்களும் வக்கீல்களும் விஜயம் செய்திருந்தார்கள்.

இவ்வழக்கிற்கு 4 அஸெஸர்கள் நியமிக்கப்பட்டிருந் தனர். எதிரிகளின் சார்பாக வாதாட கோவை - பிரபல வக்கீல் ராவ் சாஹிப் எம்.வேணுகோபால் பிள்ளை, பி எ. பி. எல். அவர்களும், சேலம் பிரபல அட்வ

கேட், சி. ஜி. கெட்டோ எம். எ. பி. எல், அவர்களும் 

ஆஜராயிருந்தார்கள், சர்க்கார் தரப்பில் திரவுன் பிராஸிகூட்டர் வி.என், எத்திராஜ் அவர்கள் ஆஜராகி இருந்தார். 

முதலில் டவுன் பாஸிடட் அஸெஸர்கள் நடந்து கொள்ளவேண்டியதைப் பற்றி ஒரு சொற்பொழிவாற்றினார்.

(குடி அரசு, 15.1.1939) 

பகுத்தறிவு தற்காலிகமாய் நிறுத்தப்பட்டது

நமது பகுத்தறிவு’ மாதப்பத்திரிகைக்கும், நமது தினசரிப் பத்திரிகையான “விடுதலை”க்கும், வாரப் பத்திரிகையான ‘குடிஅர'சிற்கும் இப்பத்திரிகைகளை பிரசுரிக்கும் உண்மை விளக்கம் பிரசிற்குமாக ஒவ்வொன்றிற்கும் 1000 ரூபாயாகச் சர்க்காரால் ஜாமீன் கேட்கப்பட்டிருக்கிறது. 

தினசரி ‘விடுதலை’க்கும், வாரப்பத்திரிகை ‘குடி அரசு’ க்கும் உண்மை விளக்கம் பிரசுக்குமாக தலா 1000 ரூபாய் வீதம் 3000 ரூபாய் தான் இது சமயம் பல தொல்லைகளுக்கிடையில் ஜாமீன் கட்ட முடிந்ததோடு பொருளாதார நிலைமையை உத்தேசித்து ‘பகுத்தறிவை’ தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம்.

மானேஜர், (‘குடி அரசு', ,29.1.1939)

‘விடுதலை’ அப்பீல் தள்ளப்பட்டது

‘பார்ப்பன ஆட்சி’ என்பதே குற்றமாம்!

124 எ. செக்ஷன்படியும் தண்டனை


சென்னை , மே.2. விடுதலைப் பத்திரிகையில் ராஜத்துவேஷமும் வகுப்புதுவேஷமும் ஊட்டத்தக்க கட்டுரையைப் பிரசுரித்ததாக மேற்படி பத்திரிகையின் ஆசிரியரான பண்டித முத்துசாமிப்பிள்ளை அவர்கள் மீதும் பிரசுரகர்த்தரான தோழர் ஈ. வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும் தொடரப்பட்ட வழக்கில் கோவை செஷன்ஸ் ஜட்ஜ் ராஜ துவேஷ குற்றத்தில் எதிரிகளுக்கு விடுதலையளித்து ஜாதித் துவேஷமூட்டிய குற்றத்திற்காக ஒவ்வொரு எதிரிக்கும் 6-மாதம் சிறைவாசமளித்தார்.

தங்களுக்கு தண்டனைக் கிடைத்ததை ஆட்சேபித்து எதிரிகளும் எதிரிகளை ராஜத்துவேஷ குற்றத்தில் விடுதலை செய்தது பற்றி சர்க்காரும் ஹைக்கோர்ட்டுக்கு அப்பீல் செய்து கொண்டார்கள். இவ்வப்பீல் நேற்று ஜஸ்டிஸ் பர்ன், ஜஸ்டிஸ் ஸ்டோடர்ட் இவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது.

எதிரிகள் சார்பில் ஆஜரான தோழர் சுப்பிரமணியம் செட்டியார் தமது கட்சியை எடுத்துப் பேசுகையில் எதிரிகள் மீது ராஜதுவேஷக் குற்றம் கற்பிக்க முடியாதென்றும், இந்த வழக்கில் குறிப்பிடப்படும் கட்டுரை கார்ப்பொரேஷன் தேர்தலை உத்தேசித்து எழுதப்பட்டதென்றும் திராவிட நாகரிகம் ஆரிய நாகரிகத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டதைத்தான். கட்டுரை குறிக்கிறதென்றும் கூறினார்.

இன்று காலை மீண்டும் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தோழர் சுப்பிரமண்யம் செட்டியார் எதிரிகள் கட்சியை மேலும் எடுத்துச் சொல்லுகையில் பிரஸ்தாப கட்டுரையில் கண்ட விஷயங்கள் சரித்திரபூர்வமான உண்மைகளென்று கூறி தமது கூற்றுக்கு ஆதாரமாக ‘ஹிந்துக்களின் பழக்கவழக்கங்கள்’ என்ற புத்தகத்திலிருந்து சில பகுதி வாசித்துக் காண்பித்தார். இம்மாதிரி சரித்திரபூர்வமான உண்மைகள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு பிடிக்காததாயிருந்தாலும் அவற்றை எடுத்து எழுதுவது சட்டப்படி குற்றமாகாதென்றும் தெரிவித்துக் கொண்டார். மலையாள உயர்வகுப்பு ஸ்திரீகளை பிராமணர்கள் வைப்பாட்டிகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்களென்று கட்டுரை கூறும் பாகத்தை வக்கீல் வாசித்துக் காட்டி இதுவும் சரித்திர பூர்வ உண்மையென்பதற்கு அத்தாட்சியாக மலையாளம் ஜில்லா மான்யுவலிலிருந்து சில பகுதிகளை வாசித்துக் காட்டினார். தமது தாய் பாஷையைக் காப்பதே மேற்படி கட்டுரையை எழுதியவரின் நோக்கமென்றும், ஹிந்தியைக் கட்டாயப்பாடமாக நுழைப்பதால் தமிழ் ஜனங்களின் நாகரிகம் கெட்டுவிடுமென்ற நம்பிக்கையுடன் அந்த உத்தரவைக் கண்டித்து பிரஸ்தாப கட்டுரை எழுதப்பட்டிருக்கிற தென்றும் தோழர் செட்டியார் வாதித்தார். 

சர்க்கார் தரப்பு வாதம்

சர்க்கார் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சர். அல்லாடி கிருஷ்ணஸ்வாமி அய்யர் பிறகு சர்க்கார் கட்சியை எடுத்து வாதித்து கட்டுரை வகுப்புணர்ச்சியை ஊட்டுவதாக இருப்பதாகக் கூறினார்.

(தொடரும்)


No comments:

Post a Comment