இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ''தேசிய மொழி'' என்ற ஒன்று இருக்கிறதா? அதிகம் பேர் பேசும் மொழி இந்தி என்பதே சுத்தப் புரட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ''தேசிய மொழி'' என்ற ஒன்று இருக்கிறதா? அதிகம் பேர் பேசும் மொழி இந்தி என்பதே சுத்தப் புரட்டு!

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை உரை

சென்னை, ஜூன் 6  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தேசிய மொழி என்று எங்கும் குறிப்பிடப்படவே இல்லை. பெரும்பான்மை யினர் பேசும் மொழி இந்தி என்று சொல்லப்படுவதும் பொய் - இந்தி எதிர்ப்புத் தீயை அணைய விடோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 4.6.2022 அன்று மாலை சென்னை சைதாப்பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.

அவரது தலைமையுரை வருமாறு:

தலைமை உரை என்ற இந்நிகழ்வு சடங்குபோல, சம்பிரதாயம்போல நடத்தவேண்டிய ஒரு நிகழ்வாக, எனக்கு முன்பு உரையாற்றிய அத்தனை அறிஞர் பெரு மக்களும், இந்நிகழ்வை அருமையாக ஆக்கியிருக் கிறார்கள்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சற்று முன்பாக உரையாற்றிய நம்முடைய மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாசற்ற மா.சு.,

அதேபோல, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர் பாளராக இருக்கக்கூடியவரும், சுயமரியாதை வீரருமான டி.கே.எஸ்.இளங்கோவன்,

மூன்றாவது குழலாக எப்பொழுதும் வெடித்துக் கொண்டிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்பிற்குரிய சகோதரர் தொல்.திருமாவளவன்,

திராவிட இயக்கத்தின் போர் வாளாக இருக்கக்கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செய லாளர் சகோதரர் வைகோ,

வரவேற்புரையாற்றிய தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா.வில்வநாதன்,

நன்றியுரையாற்றவிருக்கக்கூடிய செ.ர.பார்த்தசாரதி,

தீர்மானங்களை அருமையாக வடிவமைத்து இங்கே முன்மொழிந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் அன்புராஜ், பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகிய அனைத்துத் தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரே மாதிரியான குண்டுகள்

இங்கே உரையாற்றிய அறிஞர் பெருமக்களு டைய உரை என்பது வரலாற்றுப் பெருமைமிக்க உரையாக இருந்தன. அதிலும் குறிப்பாக பல கருத்துகள், நான் எதை வலியுறுத்தவேண்டும் என்று நினைத்துக் கொண் டிருந்தேனோ, அதனை எழுச்சித் தமிழர் அவர்கள் சிறப்பாக செய்தார்கள்.

இந்தக் குழலிலிருந்து குண்டுகள் வெடித்தாலும், ஒரே மாதிரியாகத்தான் வெடிக்குமே தவிர, வேறு விதமாக இருக்காது என்பதற்கு அடையாளமாக, யாருக்கு என்ன சொல்லவேண்டுமோ, அதனைச் சொன்னார். இறுதியில் வந்தாலும், முத்தாய்ப்பாக அழகாகச் சொன்னார்.

எனவே, இந்த மேடையில், சமஸ்கிருத ஆதிக்கம் என்பது எவ்வளவு கொடுமையானது என்று கொஞ்ச நேரம் கேட்பதற்கே சங்கடமாக இருந்தது. அதை இங்கே அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

ஹிந்தித் திணிப்பு என்பதை மய்யப்படுத்தி சொல்ல வேண்டுமானால், இது வெறும் மொழித் திணிப்புப் பிரச்சினையல்ல.

மொழித் திணிப்பு - ஒரு பண்பாட்டுத் திணிப்பே!

ஒரு மொழியைத் திணிக்கலாமா? வேண்டாமா? என்கிற பிரச்சினையல்ல. ஒரு பண்பாட்டுப் படை யெடுப்பு. அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை - மூளைக்குப் போட்ட விலங்கை - இங்கே சகோதரர் அவர்கள் சொன்னதைப்போல, அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, நண்பர்கள் சுட்டிக்காட்டி யதைப்போல, எந்த அளவிற்கு வந்தது?

இந்த இயக்கம் மட்டும் இல்லையானால், திராவிடர் இயக்கம் இல்லையானால், தந்தை பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், இந்த இயக்கமும், திராவிட மாடல் ஆட்சியும் இல்லையானால், இந்த நேரத்தில் நம்முடைய வாயிலிருந்து வணக்கம் என்கிற வார்த்தை வருமா? 

தகுதிமிக்க தலைவர் அவர்களே என்று சொல்கி றோமே, அந்த சொல் வருமா?

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? என்று கேட் கின்ற அரைவேக்காடுகளுக்கு அற்புதமாக ஆணி அடித்தது போன்று பதில் சொன்னார்; வாயே திறக்கக் கூடாது அவர்கள்; அந்த அளவிற்கு, நாக்கில் ஆணி அடித்தது போன்று பதில் சொல்லிவிட்டார் மிகத் தெளிவாக.

மகாராஜ, மகாராஜ ராஜஸ்ரீ என்பார்கள் -

முன்பெல்லாம் கடிதம் எழுதினால், சிரஞ்சீவி என்பார்கள்-

சிரம் என்றால் தலை; சீவுவது என்றால், வெட்டுவது.

சிரஞ்சீவி என்றால், தலையை வெட்டுவது என்று அர்த்தம்.

இன்றைக்குத்தானே ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது வணக்கம் என்று சொல்கிறோம்.

ஆரியர் -திராவிடர் என்பதற்கு விளக்கம் சொன்னார்கள்.

ஆரியம் - திராவிடம் என்பது ரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பதல்ல.

ஆரியம் - திராவிடம் என்பது வெறும் இனத் தினுடைய அடையாளம் அல்ல.

தத்துவத்தின் அடையாளங்கள் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

வணக்கம் என்பது திராவிடம்

நமஸ்காரம் என்பது ஆரியம்.

வருணாசிரம தர்மம், ஜாதி, பூணூல் - முதுகிலே பூணூல் போட்டால், அது ஆரியம்.

வெறும் முதுகாக இருந்தால், அதுதான் திராவிடம்.

சிலர் நம்மாட்களே பூணூல் போட்டுக் கொண்டி ருக்கிறார்கள் என்றால், அது சூடு போட்டுக் கொள்வது போன்றது; அந்தப் பூணூலுக்கு எந்த மரியாதையும் கிடையாது - போலியானது; செல்லாத நாணயம் போன்றது - கவுண்டர் பிட் காயின் போன்றதுதான்.

மிகப்பெரிய அளவில், இன்றைக்கு வந்திருக்கின்ற பல செய்திகளுக்கு அற்புதமான விளக்கமாக இந்த மாநாடு இருந்தது.

ஒரு செய்தியை சொன்னார்கள் - இந்தி மெஜாரிட்டி, மெஜாரிட்டி  என்பதுபற்றி அழகாக சுப.வீ. அவர்கள் சொன்னார்கள்.

இந்தி பேசுபவர்களிலேயே பல பிரிவுகள் இருக்கிறார்கள் என்பதை அவர் சொன்னார்.

12 மாநிலங்களில் மட்டும்தான் இந்தி!

ஒரு செய்தியை உங்கள் கவனத்திற்குச் சொல்கிறேன்.

என்னுடைய கையில் இருப்பது கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி ஒரு செய்தியைப்பற்றி ஆய்வுக் கட்டுரை வந்திருக்கிறது.

அந்தச் செய்தியின் தலைப்பு என்ன தெரியுமா?

Is Hindi or English beneficial as the link language?

இணைப்பு மொழியாக இந்திதான் இருக்கவேண்டும்; ஆங்கிலத்தை எடுத்துவிடவேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா சொன்ன வுடன்,

ஓர் ஆய்வில் அதற்குப் பதில் சொல்கிறார்கள்:

Residents of only 12 of the 35 States and Union Territories (UTs) reported Hindi as their first choice of language for communication (Census 2011). But there is a caveat. “Hindi” is an umbrella term encompassing 56 languages (mother tongues) including Bhojpuri, Rajasthani, Hindi and Chhattisgarhi. While 43% of Indians speak “Hindi”, only 26% speak Hindi specifically as their mother tongue.

இதன் மொழியாக்கம் வருமாறு:

35 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இருக் கின்றன. இவற்றை இணைத்ததில், உங்களுக்கு எது இணைப்பு மொழி என்றால், இந்திதான் இணைப்பு மொழி என்று வெறும் 12 மாநிலங்களில்தான் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

இதை அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் கேட்டார். அண்ணா அவர்களுக்கு நேரம் ஆயிற்று என்று  அன்று சபாநாயகராக இருந்த அம்மையார் அவர்கள், மணியை அடித்தார்கள்.

மாநிலங்களவையில் அண்ணா

உடனே அண்ணாவின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்கிற வேறுபாடில்லாமல், அண்ணா அவர்களுக்கு நேரம் கொடுங்கள்; அவர் பேசட்டும்; அவருடைய உரையை நாங்கள் கேட்கவேண்டும் என்று சொன்னார்கள்.

நேரமாயிற்றே என்று சபாநாயகர் அம்மையாராக இருந்தவர் சொன்னார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களையே அண்ணா அவர்கள் அவ்வளவு ஈர்த்துவிட்டார்; எங்கள் நேரத்தை அண்ணா அவர்களுக்குக் கொடுக்கிறோம். அவரைப் பேச அனுமதியுங்கள்,  அனுமதியுங்கள் என்று சொன்னார்.

அங்கே அண்ணா அவர்கள் உரையாற்றும்பொழுது ஓர் ஆழமான கருத்தைச் சொன்னார்.

இந்தி மொழியை 42 சதவிகிதத்தினர் பேசுகிறார்கள் மெஜாரிட்டியாகப் பேசுகிறார்கள் என்று காட்டியிருக் கிறார்கள். அந்த மெஜாரிட்டி உண்மையான மெஜாரிட் டியா? என்று கேள்வி கேட்டுவிட்டு சொன்னார்,

மூன்று மாநிலத்தில் உள்ளவர்கள்  எல்லோருடைய பெயரையும் சேர்த்து இந்தி பேசுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்.

இந்தி மொழி பேசுவோர் 

வெறும் 26 விழுக்காடுதான்!

அமித்ஷா சொல்வது எவ்வளவு பொருத்த மில்லாதது - அவருடைய துறையின் அறிக்கை யைக்கூட படிக்காத, பொறுப்பற்ற அமைச்சராக அமித்ஷா நடந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளம் இந்த செய்தியாகும்.

வெறும் 26 சதவிகிதம்தான் இந்தி மொழியைப் பேசக்கூடியவர்கள். 

எனவே, இந்தி மொழி பேசுபவர்களின் மெஜாரிட்டி இருக்கிறது என்கிற வாதமும், பொய் யான வாதமாகும்.

நம்மூரில் இருக்கின்ற அண்ணாமலை போன்றவர்கள், விஷயம் தெரியாதவர்கள் சொல்கிற வாதம் என்ன வென்றால், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் - இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

அதற்கு நம்முடைய அமைச்சர் பொன்முடி அவர்கள் அழகாக சொன்னார்,

இந்தி படித்தால் என்னாகும் என்றால், இங்கே வந்து பானி பூரிதான் விற்கவேண்டும்.

இந்தி படித்தவர்களுக்கு நாம்தான் வேலை கொடுக் கிறோம்; நம்மாட்களுக்கு அவர்கள் வேலை கொடுப்ப தில்லை; ஆங்கிலம் படித்திருந்தால் அமெரிக்காவில் வேலை கிடைக்குமே தவிர, இந்தி படித்தால் பீகாரில் வேலை கிடைக்காது.

ஆகவே,ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷா அவர்கள், தங்களுடைய துறையின் அறிக்கை என்ன என்பதுபற்றிகூட புரிந்துகொள்ளாமல் பேசு கிறார்கள்.

பிரதமர் உள்பட அமைச்சர்கள் வரை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வது நம்முடைய இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீதுதானே!

தலைசிறந்த வித்தைக்காரர் 

பிரதமர் மோடி

நம்முடைய பிரதமர் இருக்கிறாரே, அவரைவிட தலைசிறந்த வித்தைக்காரரை உலகத்தில் வேறு எங்கும் கண்டுபிடிக்க முடியாது.

அவருடைய வித்தைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பெயர் வைத்துவிட்டார்கள்.

இரண்டாம் முறை அவர் பிரதமராக பதவி யேற்கும்பொழுது, அவருடைய பெயரை முதலில் அழைக்கிறார் குடியரசுத் தலைவர் பதவி பிரமாணத்தின்போது.

மோடி அவர்கள் பதவியேற்பதற்கு முன்பாக, மேடையை விட்டு கீழே இறங்கி, நடந்து செல்கிறார்; யாருக்கோ மரியாதை தருவதற்காக அவர் செல்கி றார் என்று இந்தியாவிலுள்ள அனைவரும் தொலைக்காட்சியின் வழியே பார்த்துக் கொண்டி ருந்தார்கள்.

அவர் நேரே நடந்து சென்று, அரசமைப்புச் சட்டக் கல்வெட்டு இருக்கும் இடத்திற்குச் சென்று, அதைத் தொட்டுக் கும்பிட்டு வருகிறார்.

அரசமைப்புச் சட்டத்தை அந்த அளவிற்கு மதிக்கின்றவரா அவர்?

அருமையான வித்தை - வித்தையிலேயே உச்சக்கட்டம்!

அதற்குப் பிறகுதான் பதவிப் பிரமாணம் எடுக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தை 

நீக்கி - மனுதர்மமா?

அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை வைக்க வேண்டும் என்கிற உறுதியில் இருக்கிறார்கள் அவர்கள்.

ஏனென்றால், அந்த அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற மூன்று வார்த்தைகள் அவர்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. பிரியாம்பிள் என்று சொல்லக்கூடிய முகவுரையில்.

Liberty - Equality - Fraternity

சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்கிற வார்த்தைகள்தான்.

இதற்குக்கூட அழகாக விளக்கம் சொன்னார் டாக்டர் அம்பேத்கர்.

இந்த வார்த்தைகள் பிரெஞ்சு புரட்சி வார்த்தைகள் என்று நினைப்பீர்கள். ஆனால், இதை அங்கே இருந்து எடுக்கவில்லை. இந்த வார்த்தைகள் மூன்றும் கவுதமப் புத்தரின் வார்த்தைகளாகும்.

பவுத்தம்! பவுத்தம்!! பவுத்தம்!!! என்று சொல்லி, யாருக்கும் தெரியாத வெளிச்சத்தைக் காட்டினார்!

அதுதான் திராவிடம்!

வருணாசிரம தர்மம் என்றால், அது ஆரியம்.

ஆரியம் என்றால், ரத்தப் பரிசோதனை செய்வதல்ல - அது கலந்து போயிற்று என்பது எல்லோருக்கும் தெரியும். அதைப்பற்றி கவலையில்லை.

எப்படி கலந்தது என்பதைப்பற்றி அந்தக் காலத்தில் அண்ணா அவர்கள் மேடையில் சொல்லியிருக்கிறார். அதை இப்பொழுது ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.

நம்மைப் பொறுத்தவரையில், அந்தத் தத்துவங்கள் கூடாது என்பதுதான்.

இன்றைக்கு எந்த அளவிற்கு அந்தக் கொடுமைகள் வந்து இருக்கிறது தெரியுமா?

நம்முடைய மூளைக்கு விலங்கு போட்டு, ‘நமஸ்காரம்‘ என்று சொல்ல வைத்தார்கள். நம்முடைய இயக்கம் வந்த பிறகுதான் வணக்கம் என்று சொல்கிறார்கள்.

நம் குழந்தைகளுக்குத் தமிழில் 

பெயர் சூட்டவேண்டாமா?

ஒரு கொடுமை என்னவென்றால், இங்கேகூட 

12 ஆவது தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம்.

ஒரு தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது, இமான் அண்ணாச்சி அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற  குழந்தைகளின் பெயரைக் கேட்கிறார் - அந்தப் பெயர்கள் எல்லாம் வாயிலேயே நுழையவில்லை.

எல்லாக் குழந்தைகளும் நம்முடைய குழந்தைகள் தான் - கருப்பு, கருப்பாக இருக்கின்ற குழந்தைகள் - சிவப்பாக இருக்கும் குழந்தைகள்கூட இல்லை.

எந்த அளவிற்கு நம்மாட்களின் மூளைக்கு விலங்கு போட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

மக்களிடையே பிரிவை உண்டாக்கி வைத்தார்கள். பிரித்து வைப்பதுதான் ஆரியம்.

மக்களை மட்டுமா பிரித்தான்? மாட்டையும் பிரித்து விட்டான்.

கொஞ்சம் வெள்ளையாக இருக்கின்ற மாட்டிற்குப் பசு மாடு - கோமாதா.

கோவுக்குப் பெரியம்மா ஒன்று இருக்கிறதே? எருமை மாடு.

எது கெட்டியான பால்?

எருமைப் பால்.

தயிர்கூட எருமைப் பால் என்றால், அருமையாக இருக்கும் - தாய்மார்களாகிய உங்களுக்குத் தெரியும்.

எருமை மாடு கருப்பாக இருக்கிறது என்பதால், அதனை ஆரியர்கள் பிரித்தார்கள்.

மாட்டைப் பிரித்தான் - மனிதனைப் பிரித்தான் - பிறகு மனிதன் காலையே பிரித்தான்.

வலது காலை எடுத்து முன்னால் வைத்து வா என்று மணப்பெண்ணைப் பார்த்து சொல்வார்கள்.

பெரியார்தான் கேட்டார், ''ஏண்டா, இடது கால் உன்னுடைய கால் இல்லையா? அது என்ன இரவல் காலா? நொண்டி காலா?'' என்று கேட்டார்.

‘நொண்டி’ என்ற வார்த்தையை நான் சொல்வதற்குக் காரணம், புரிவதற்காகச் சொல்கிறேன் - யாரும் தவறாக நினைக்கவேண்டாம்.

இரண்டு காலும் நம்முடைய கால்கள்தானே!

இடதுகால் இரவல் காலா?

அதுமட்டுமல்ல, பெரியார் இன்னொரு கேள்வி யையும் கேட்டார் - பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் அதனைத் தொடர்ந்து கேட்கிறோம்.

நாட்டையே காப்பாற்றுகின்றவர்கள் யார்?

இராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

‘‘மணமகளே, மணமகளே வா! வா!

உன் வலது காலை எடுத்து வைத்து வா! வா!’’

என்று பாடலே இருக்கிறது.

வலது காலை எடுத்து வைப்பதற்கு முன்பாக - பெரியார்தான் கேட்டார்.

ஏண்டா, இந்த நாட்டைக் காப்பாற்றுவது இராணுவம்; ஊரைக் காப்பாற்றுவது காவல்துறை.

இந்த இரண்டு துறைக்கும் பயிற்சி கொடுக்கும் பொழுது என்ன சொல்வார்கள்?

‘‘லெப்ட், ரைட் - லெப்ட், ரைட்’’ என்றுதானே மார்ச் பயிற்சி கொடுக்கிறார்கள்.

முதலில் இடது காலைத்தானே எடுத்து வைக்கச் சொல்கிறார்கள். அந்தப் பயிற்சியின்பொழுது, இல்லீங்க, நாங்கள் அர்த்தமுள்ள இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் - ஆகவே, வலது காலை எடுத்து வைத்துதான் எங்களுக்குப் பழக்கம் என்று சொன்னால்,

பயிற்சி கொடுப்பவர்கள், அவர்களுடைய காதைத் திருகி தூக்கி வெளியே எறிவார்கள் அல்லவா!

அறிவிற்கு வேலை கொடுக்காமல் ஆக்கிவிட் டார்களே!

மூடத்தனத்தின் முடநாற்றம்

எனவே நண்பர்களே, நாம் வெறும் மொழித் திணிப்பை மட்டும் எதிர்க்கவில்லை.

பண்பாட்டுத் திணிப்பை எதிர்க்கிறோம்.

அறிவுக்கு விலங்கு -

பகுத்தறிவுக்கு விலங்கு போட்டார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒரு செய்தியை எடுத்துச் சொல்கிறேன்.

இந்தியா முழுக்க ஒரே மொழி இருந்தால்தான், இந்தியாவினுடைய அடையாளமாம்.

என்ன அடையாளம்?

அண்ணா கேட்டார் - அன்றைக்கு அவர் கேட்ட கேள்விக்கு  யாராவது பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

இங்கே பேசிய இளங்கோவன் அவர்களும், மற்ற நண்பர்களும்  சொன்னார்கள்.

Unity in Diversity

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதானே  நம்முடைய அடையாளம் - இந்தியாவினுடைய சிறப்பு.

அய்க்கியம் என்பதும் 

சீர்மை என்பதும் உண்மையா?

ஆனால், அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்டார்.

இன்னும் அண்ணா அவர்களும், கலைஞர் அவர் களும் ஏன் நிலைத்தவர்களாக இருக்கிறார்கள்?

நம்மைப் பொறுத்தவரையில் என்றைக்கும் அவர்கள் வாழுகிறவர்கள் - வழிகாட்டக் கூடியவர்கள் - தந்தை பெரியாருடைய தொண்டர்கள்.

அண்ணா கேட்டார்,

நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள் - 

Unity is different from Uniformity

என்று சொன்னார்.

ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று சொல்வது சீர்மை - யூனிட்டி என்பது அய்க்கியம்.

எல்லோரும் ஒரே அளவுதான் இருக்கவேண்டும் என்று சொல்வதா யூனிட்டி?

இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றவர்கள் எல் லோரும் ஒரே கருத்துள்ளவர்கள்தான்.

ஆனால், ஒருவர் வெள்ளை சட்டை அணிந்திருக் கிறார்; நான் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறேன். ஒருவருக்கு தலை நரைத்திருக்கிறது; இன்னொருவருக்கு தலைமுடி கருப்பாக இருக்கிறது.

இல்லை, இல்லை எல்லோருக்கும் கருப்பாகத்தான் தலைமுடி இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?

எல்லோரும் ஒரே உயரத்தில்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல முடியுமா?

சீர்மை என்பதற்காக, எல்லோரும் கோதுமை உணவைத்தான் சாப்பிடவேண்டும்; அரிசி உணவே இருக்கக்கூடாது என்று சொல்ல முடியுமா?

எனவே, Unity is different from Uniformity  

என்று அண்ணா அவர்கள் சொன்னார்.

இதுதான் திராவிடம் - இதுதான் அறிவு.

ஆகவே இந்தி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய அடையாளம் என்று சொல்வது இருக் கிறதே - அவர்கள் இந்த நாட்டையே கொச்சைப்படுத்து கிறார்கள்.

தேசிய மொழி என்று ஒன்று இருக்கிறதா?

அரசமைப்புச் சட்டத்திலே 22 மொழிகள் என்று எட்டாவது அட்டவணையில் இருக்கிறதே - அது என்ன தலைப்பில் இருக்கிறது தெரியுமா?

லாங்வேஜஸ் என்றுதான் இருக்கிறது.

அதிலே நேஷனல் லாங்வேஜ்  என்கிற வார்த்தை கிடையாது.

அரசமைப்புச் சட்டத்தில், Official Language  என்பதைத் தவிர, வேறு எங்காவது தேசியம் என்கிற வார்த்தை இருக்கிறதா?

தயவு செய்து இந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லட்டும்.

சொல்ல முடியாது.

காரணம் என்னவென்றால், எல்லா மொழிகளுக்கும் சமத்துவம் இருக்கும்பொழுது, பிறகு என்ன ஒரு மொழி? ஒரே மொழி? இணைப்பு மொழி?

அந்த இணைப்பு மொழியை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று சொன்னோம்.

காமராஜர் அவர்கள் எவ்வளவு பொது அறிவு உள்ளவர் என்பதற்கு உதாரணம்,

கலைஞர் அவர்கள் ஒருமுறை எங்களிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு செய்தியை சொன்னார்-

இரண்டு மொழிகள் வரப் போகிற தீர்மானத்தை அண்ணா அவர்கள் சொல்வதற்கு முன்பாக, அந்தக் கருத்துகளைப்பற்றி பேசுகிறார்கள்.

முதலமைச்சர் காமராசர் 

சொன்னது!

இந்தி எதிர்ப்பு - ஆங்கிலத்தைக்கூட நாம் விட்டு விட்டு, ஒரு மொழிதான் இருக்கவேண்டும் என்று வேகமாகப் பேசியபொழுது,

அப்பொழுது முதலமைச்சராக இருக்கின்ற காமராஜர் அவர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த கலைஞரை அழைக்கிறார்.

அவரிடம் மெதுவாக சொல்கிறார், ''அவசரப்பட்டு ஆங்கிலம் வேண்டாம் என்று பேசிவிடாதீர்கள். ஏனென்று சொன்னால், ஆங்கிலத்தை விட்டுவிட்டால் என்னாகும் தெரியுமா? இந்தி வந்து குந்திக்கும்; ஆகவே, எச்சரிக்கையாக இருங்கள்;  இருமொழிக் கொள்கைதான்'' என்றார்.

காமராஜர் சொன்ன அந்த வார்த்தையை அப்படியே கலைஞர் அவர்கள் சொன்னார்.

அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றினார்.

இதுதான் திராவிட மாடல் - திராவிட மாடல் என்பது அனைவருக்கும் அனைத்தும்!

யாருடைய உரிமையையும் பறிப்பதல்ல! அந்த வகையிலே சொல்லும்பொழுது நண்பர்களே,

அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக நடப்பது யார்?

ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று பேசுகிறீர் களே, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாகப் பேசக்கூடியவர்கள் அல்லவா நீங்கள்!

நாங்கள் அரசமைப்புச் சட்டத்திற்காக வாதாடு கிறோம் - நீங்கள் அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் - இன்றைக்கு நேர் விரோத மாகப் பேசுகிறீர்கள் என்பதற்கு அடையாளம் -

அடிக்கட்டுமானத்தில் இருக்கக்கூடிய அடிப் படைக் கருத்துகளில் ஒன்றான,

Cultural and Educational Rights 

(1) Any section of the citizens residing in the territory of India or any part there of having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same.

ஒரு தனியான மொழி, எழுத்து, பண்பாடு இவை இருக்கக்கூடிய எந்தப் பகுதியாக இருந் தாலும், அவர்கள் அந்த மொழியைப் பாதுகாக்க, அந்தக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது அடிப்படை உரிமை - அதைப் பறிக்கக்கூடிய உரிமை யாருக் கும் கிடையாது என்பது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய உரிமையாகும்.

இதைத்தான் இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

மீண்டும் களத்தில் சந்திப்போம்!

அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதை செய்யுங்கள் என்று ஆளுங்கட்சியைப் பார்த்து கேட்கின்ற பரிதாபம், விசித்திரம் உலகத்திலேயே நம் நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் கிடையாது.

இந்த மாநாடு ஒரு நல்ல தொடக்கம். நம்முடைய தலைவர்கள் இங்கே வந்து சிறப்பாக உரையாற்றினார்கள்.

அதுபோலவே, எவ்வளவு பெரிய கடமைகள் இருந்தாலும், இது மிக முக்கியமானது என்பதற்காக, இந்தத் தொகுதியினுடைய உறுப்பினரும், ஒப்பற்ற முறையில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அகில உலகமும் வியக்கத்தகுந்த அளவிற்கு சிறப்பாக செயல்படக்கூடிய நம்முடைய மாசற்ற அமைச்சர் மா.சு. அவர்கள் சிறப்பான வகையில் வந்து நம்மை ஊக்கப்படுத்தியதற்கும், உங்களுக்கும் நன்றி கூறி,

மீண்டும் இந்தி எதிர்ப்புக் களத்தில் சந்திப்போம்!

தேவைப்படுகின்ற நேரத்தில் இந்தக் களம் என்றைக்கும் இருக்கும்.

நீறுபூத்த நெருப்பு எச்சரிக்கை!

அன்றைக்கு மூட்டப்பட்ட தீ இருக்கிறதே, அந்தத் தீ பொறியாக இருந்தாலும், அது வெறும் நீறு பூத்ததுபோல இருந்தாலும் - நீறு   பூத்ததைத் தள்ளி வைக்கக்கூடிய மிகப்பெரிய பணியை அமித்ஷாக்களும், வடநாட்டிலே இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் செய்கிற காரணத்தால்,

நாங்கள் எதற்கும் தயார்! தயார்!! தயார்!!! மிக முக்கியமான பிரகடனம் என்று கூறி,

வாய்ப்பளித்த உங்களுக்கும், சிறப்பாக ஏற்பாடு செய்த தென்சென்னை மாவட்டத் தோழர்களுக்கும், இறுதிவரையில்  இருந்த உங்களுக்கும், காவல் துறைக்கும், ஊடகத் துறைக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!! என்று கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.

No comments:

Post a Comment