பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

பிற இதழிலிருந்து...

 உணவுப் பாதுகாப்பில் முதலிடம் தொடரட்டும்! 

பெரிய மாநிலங்களுக்கு இடையிலான பணப் பாதுகாப்புக் குறியீட்டெண்ணில் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியிருப்பதும், குறியீட்டெண்ணைக் கணக்கிடுவதற்கான  அனைத்து அளவீடுகளிலும் முதன்மை இடத்தைப் பிடித்திருப் பதும் பாராட்டுக்குரியது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த குஜராத் இரண்டாம் இடத்துக்குப் போய் விட்டிருக்கிறது. உலக உணவுப் பாதுகாப்பு நாளான ஜூன் 7 அன்று டில்லியில் நடந்த விழாவில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 2021-2022-இல் முதலிடம் பெற்றிருக்கும் தமிழ்நாட்டுக்கு விருதளித்துப் பாராட்டியுள்ளார். மேலும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்ஏஅய்) ஒருங்கி ணைத்த 'சரியான உணவு' இயக்கத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்கள் பரிசுகளைப் பெற்றுள்ளன. இந்த இயக்கத்தில் நாடு முழுவதும் 150 மாவட்டங்கள் கலந்துகொண்டு, அவற்றில் பாதி மட்டுமே பரிசுக்குத் தேர்வாயின என்பதும் குறிப்பிடத்தக்கது.

உணவுப் பாதுகாப்புக் குறியீட்டெண்ணானது 2018-இல் தொடங்கப்பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு நிதியாண்டிலும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ் வொரு மாநிலமும் தமது எல்லைக்குள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைத் தீவிரமாக நடை முறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தக் குறியீட்டெண் வெளியிடப்படுவதன் நோக்கமாகும். பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்ற மூன்று பிரிவுகளில் இந்தக் குறியீட்டெண்கள் அறிவிக்கப்படுகின்றன. மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவுப் பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய அய்ந்து அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு கணக் கிடப்படுகிறது. இவற்றில் தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல் என்ற பிரிவே அதிமுக்கியமானதாகக் கருதப்படுகிறது. இப்பிரிவில் 30% புள்ளிகளும், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு 10% புள்ளிகளும் ஏனைய மூன்று பிரிவுகளுக்கும் தலா 20% புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. மொத்தமாக, 100 புள்ளிகள், அய்ந்து பிரிவுகளிலுமே தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.

கடந்த ஆண்டு முதலிடம் பிடித்து தற்போது இரண்டாம் இடத்துக்கு நகர்ந்துள்ள குஜராத்துடன் ஒப்பிடுகையில், மனிதவளம் மற்றும் நிறுவனங்கள் குறித்த தரவுகளிலும், நுகர்வோருக்கு அதிகார மளித்தலிலும் இரண்டு மாநிலங்களும் ஒரே நிலையிலேயே உள்ளன. பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் குஜராத்தைக் காட்டிலும் இண்டு புள்ளிகள் அதிக மாகப் பெற்றிருப்பதோடு முழுமையான புள்ளி களையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுவதில் மூன்று புள்ளிகள் முன்னால் இருக்கிறது தமிழ்நாடு, ஆனால், உணவுப் பரிசோதனைகளுக்கான பிரிவில் அரைப் புள்ளி குறைவாக இருக்கிறது. மொத்தத்தில், குஜராத்தைக் காட்டிலும் தமிழ்நாடு 4.5 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுள்ளது என்றபோதும் உணவுப் பரிசோத னைக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தி, தமிழ்நாடு தொடர்ந்து தன்னை முதலிடத்தில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

(நன்றி: 'இந்து தமிழ் திசை' தலையங்கம், 13.6.2022)


No comments:

Post a Comment