பின்னால் வரக்கூடிய பட்டாளத்திற்கு - முன்னால் பாதை-பாலம் அமைத்துத் தருகின்ற தூசிப்படை - ‘சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்’ நாங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 26, 2022

பின்னால் வரக்கூடிய பட்டாளத்திற்கு - முன்னால் பாதை-பாலம் அமைத்துத் தருகின்ற தூசிப்படை - ‘சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்’ நாங்கள்!

சட்டம் கொண்டுவருவது அரசின் வேலை -அந்த இணைப்பை உருவாக்குவதுதான் பகுத்தறிவாளர் கழகம்

செஞ்சி ப.க. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை

செஞ்சி, ஜூன் 26   பகுத்தறிவு இயக்கம் - பின்னால் வரக்கூடிய பட்டாளத்திற்கு, முன்னால், பாதை - பாலம் அமைத்துத் தருகின்ற தூசிப் படை. சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ். முன்னால் நாங்கள் சென்று கொண்ட இருப்போம் - எங்கெங்கே என்ன இருக்கின்றன? எங்கெங்கே கண்ணி வெடி வைத்திருக்கிறார்கள்? என்று பார்த்து, அதை அகற்றிக் கொண்டு செல்வது எங்களுடைய வேலை.  பின்னால், சட்டம் கொண்டு வருவது அரசின் வேலை. இன்றைக்கு அந்த இணைப்பை உருவாக்குவதுதான், பகுத்தறிவாளர் கழகம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழக பொன்விழா 

நிறைவு மாநாடு

கடந்த 19.6.2022 அன்று மாலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரை யாற்றினார்.

அவரது தலைமையுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

உன் அறிவு என்ன சொல்லுகிறதோ, உன் பகுத்தறிவு என்ன சொல்லுகிறதோ, அதைக் கேள்!

உடனே, பெரியார் அவர்கள், நான் சொல்வதையும் நம்பாதே! என்றார்.

பிறகு யார் சொல்வதை நம்புவது என்று அந்த மாணவன் கேட்டார்.

உன் அறிவு என்ன சொல்லுகிறதோ, உன் பகுத்தறிவு என்ன சொல்லுகிறதோ, அதைக் கேள் என்றார்.

அந்த சிந்தனையினால்தான், இங்கே திருமாவளவன்,

அந்த சிந்தனையினால்தான், முத்தரசன்,

அந்த சிந்தனையினால்தான், மனிதநேயர் மஸ்தான்

அந்த சிந்தனையினால்தான் நாமெல்லாம் ஒன்று பட்டு வருகிறோம்.

ஏனென்று கேட்டதினால்தானே, ஒலிபெருக்கி -

ரிஷி முறைத்துப் பார்த்ததும், பொத்தென்று கீழே விழுந்ததா, இது?

இங்கே மாநாட்டு நிகழ்வுகளை வீடியோவில் பதிவு எடுக்கிறார்களே, இது எந்த முனிவர் கண்டுபிடித்தது?

கல்யாண மந்திரத்தில் சொல்வார்களே, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, கின்னரர்கள் சாட்சியாக என்று சமஸ்கிருத்ததில் சொல்வார்கள்.

வீடியோ சாட்சி ஏற்றுக்கொள்ளப்படும்

ஆனால், நீதிமன்றத்திற்குச் சென்றால், இந்த சாட்சி கள் கண்டிப்பாக நிற்காது. எந்த ரிஷியும் சாட்சிக்கு வரமாட்டார்.

வீடியோ சாட்சியாக என்று சொன்னால்,  அது கண்டிப்பாக  சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

காரணம், இது அறிவியல்; அது மூடநம்பிக்கை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவேதான், பகுத்தறிவு என்பது ஒவ்வொரு வருக்கும் வாழ்க்கையில் தேவை. 

பகுத்தறிவுதான் நம்மை வளர்ச்சியடைய செய்கிறது. பகுத்தறிவினால்தான், நாம் வேட்டிக் கட்டிக் கொண்டிருக்கின்றோம்.

யானை பெரிய உருவம்தான் - 

சிங்கம் பெரிய விலங்குதான் -

ஏன் யானை பிறந்த மேனியாக இருக்கிறது -

மனிதர்களாகிய நாம் ஏன் வேட்டிக் கட்டிக் கொண்டிருக்கிறோம். அம்மணமாக யாராவது வெளியே வருகிறார்களா? வருவதில்லை.

அப்படி வடநாட்டில்  இருப்பார்கள்; யோகி, முனிவர், ரிஷி என்று சொல்லப்படுகின்றவர்கள். ஒருவர் அரை சட்டை போட்டிருப்பார்; இன்னும் டிகிரி உச்சத்தில் போன முனிவராக இருந்தால், கோவணம் மட்டும் கட்டிக் கொண்டிருப்பார். மகாபெரிய ரிஷி என்றால், அந்தக் கோவணமும் இருக்காது.

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து, மனிதனை நாகரிகப்படுத்துவதற்கு, வளர்ச்சியடைய வேண்டும் என்று சொல்வதுதான் பகுத்தறிவாளர் கழகம்.

மனிதகுலம் வளரவேண்டும்; அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்!

அதுதான் ‘திராவிட மாடல்.’

எனவே, மனிதகுலம் வளரவேண்டும். அனை வருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்.

எல்லாருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

என்று வள்ளுவர் சொன்னார்.

இதுதான் இந்த இயக்கம். இதுதான் பகுத்தறிவாளர் கழகம்.

நிறைய பேர் பசியோடு இருக்கிறார்கள்; சாப்பிட வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் பந்தியில் என்ன செய்வது? என்று கேட்டால், அதுதான் சமூகநீதி.

அதற்கும் பகுத்தறிவு அடிப்படையில் பதில் சொன் னார்கள்.

பசியேப்பக்காரனை முன்னால் உட்கார வை; புளியேப்பக்காரனை அப்புறம் சாப்பிடலாம் என்று வெளியில் நிறுத்து. அதுதான் இட ஒதுக்கீடு.

ஆகவே நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உள்ளூர் தோழர்களே -

இந்த இயக்கம் என்பது இருக்கிறதே, அது யாருக்காக?

இந்த இயக்கத்தை, இந்த ஆட்சியை, ‘திராவிட மாடல்’ ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்றவுடன் என்ன சொல்லுகிறார்கள் என்றால்,

பிரதமர் மோடியிலிருந்து இந்தத் தவறை செய்கிறார்கள்.

எங்கள் வாரிசுகள் எல்லாம், 

எங்கள் கொள்கையில் இருப்பது தவறா?

அது என்னவென்றால், வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்கிறார்கள்.

நான் சொல்கிறேன், எங்கள் வாரிசுகள் எல்லாம், எங்கள் கொள்கையில் இருப்பது தவறா?

நன்றாக நினைத்துப் பாருங்கள்,

அப்பா ஒரு கட்சி, மகன் இன்னொரு கட்சி, இன்னொரு கொள்கை என்று இருந்தால், வீட்டில் கலவரம்தான் ஏற்படும்.

இரணியன் - பிரகலாதன்

இராவணன் - விபீஷணன்

கும்பகர்ணன் போன்று இருந்தால், அவன் சாதாரணமான ஆள் என்று சொல்லிவிட்டான்.

கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன், இதோ என் னுடைய கைகளில் இருப்பது ‘ஜூனியர் விகடன்’ இதழ். தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்கின்ற பத்திரிகை.

‘‘பா.ஜ.க.வில் வாரிசு அரசியல்’’ 

ஜூனியர் விகடன் பட்டியல்

27.2.2022 அன்று வெளிவந்த ஜூனியர் விகடன் இதழில், ‘‘பா.ஜ.க.வில் வாரிசு அரசியல்’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தது.

பிரதமர் சொல்லியதால், அதற்கு நான் பதில் சொல் கிறேன். இங்கே அரைவேக்காடுகள் உளறிக் கொண் டிருக்கின்றன; அதற்கெல்லாம் நான் பதில் சொல்வது கிடையாது. நீங்களும் அவற்றைப் பொருட்படுத்தாதீர்கள்.

ஏனென்றால், ஒன்றுமில்லாமல், கடமுடவென்று கல்லைப் போட்டு உருட்டிக் கொண்டிருந்தால், சத்தம் மட்டும்தான் கேட்கும். அதற்கெல்லாம் உடனே பதில் சொல்லக்கூடாது.

நிறைய பேருக்கு வரலாறே தெரியாது. திராவிட இயக்கம் இல்லையென்றால், உன்னுடைய பெயருக்குப் பின்னால் போடுகிறாயே, அந்த மூன்று எழுத்தே மிஞ்சியிருக்காதே - இட ஒதுக்கீடு இருந்ததினால்தானே நாம் படித்திருக்கின்றோம்.

மண்டல் கமிசன் இருந்ததினால்தானே, அய்.பி.எஸ்., களாக, அய்.ஏ.எஸ்.களாக வர முடிந்தது.

அனுராக் தாகூர் - ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தந்தை: பிரேம் குமார் துமால் - மேனாள் முதலமைச்சர், ஹிமாச்சல் பிரதேசம்

தர்மேந்திர பிரதான் - ஒன்றிய கல்வித்துறை அமைச்சர், தந்தை: தேபேந்திர பிரதான் - மேனாள் ஒன்றிய அமைச்சர்

ஜோதிராதித்ய சிந்தியா - ஒன்றிய விமானப் போக்கு வரத்துத்துறை அமைச்சர், தந்தை: மாதவராவ் சிந்தியா - மேனாள் ஒன்றிய அமைச்சர்

ராஜ்நாத் சிங் - ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர், மகன்: பங்கஜ் சிங் - சட்டமன்ற உறுப்பினர், உத்தரப்பிரதேசம்

கருநாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தந்தை: எஸ்.ஆர்.பொம்மை - மேனாள் முதலமைச்சர், கரு நாடகா

துஷ்யந்த் சிங் - மக்களவை எம்.பி, தாய்: வசுந்தரா ராஜே - மேனாள் முதலமைச்சர் ராஜஸ்தான்

வருண்காந்தி - மக்களவை எம்.பி, தாய்: மேனகா காந்தி - மக்களவை எம்.பி

நீரஜ் சேகர் - மாநிலங்களவை எம்.பி, தந்தை: சந்திரசேகர் - மேனாள் பிரதமர்

ராஜ்வீர் சிங் - மக்களவை எம்.பி, தந்தை: கல்யாண் சிங் - மேனாள் முதலமைச்சர், உத்தரப்பிரதேசம்.

இப்படி ஒரு பக்க அளவிற்குப் படத்தோடு செய்தி போட்டு இருக்கிறார்கள்.

நான் அவ்வளவையும் படித்தால் உங்களுக்கு சலிப்பாக இருக்கும்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், எங்களுக் குக் கூச்ச நாச்சம் இல்லை. தி.மு.க.விற்கும் சொல்கிறேன்,

தி.மு.க.வை அண்ணா தொடங்கிய வரலாறையெல் லாம் திருமா அவர்கள் இங்கே சொன்னார்.

பெரியாருடைய கொள்கையில் 

என்றைக்கும் மாற்றம் இல்லை

இது பகுத்தறிவாளர் இயக்கம் - அடிப்படையில் திராவிட கலாச்சாரம், பண்பாட்டை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த இயக்கம். பெரியாருடைய கொள்கையில் என்றைக்கும் மாற்றம் இல்லை.

அரசியலில் வந்து பார்க்க முடியுமா? என்று சிலர் சவால் விட்டார்கள்.

சரி, அரசியலுக்கும் வரலாம் என்று வந்தார்.

தி.மு.க.விற்கும், மற்ற அரசியல் கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு என்றால்,

அடிப்படையில் தி.மு.க. சமுதாய சீர்திருத்தத்தை மய்யப்படுத்தி இருக்கின்ற அரசியல் கட்சி.

முதல் நாள் சமுதாய சீர்திருத்த மாநாடு போடுவார்கள்; இரண்டாம் நாள் அரசியல் மாநாடு போடுவார்கள்.

நம்முடைய மாவட்டத்திலேயே உண்டு. ஏன் இன் றைக்கு இரண்டையும் சேர்த்திருக்கிறார்கள் என்றால், இரண்டையும் சேர்த்ததுதான் ‘திராவிட மாடல்.’

இன்றைக்கு இரட்டைக் குழல், மூன்றாவது குழலும் இருக்கின்றது. நாங்கள் எல்லாம் வித்தியாசம் பார்ப்ப தில்லை.

‘திராவிட மாடல்’ ஆட்சி நடப்பதினால்தான், அமைதி இருக்கிறது

ஆகவே நண்பர்களே, பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா நிறைவு மாநில மாநாடு, ஓர் அற்புதமானது. அதுமட்டுமல்ல, நல்ல ‘திராவிட மாடல்’ ஆட்சி நடப்ப தினால்தான், இங்கே அமைதி இருக்கிறது.

இஸ்லாமிய பெருமக்கள் எல்லாம் இங்கே வந்து நமக்கு சிறப்பு செய்தார்கள். நம்முடைய கொள்கை என்னவென்று அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், அவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல், இங்கே வந்து சிறப்பு செய்தார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்?

மதத்தால் மாறுபட்டு இருந்தாலும், மனதால் ஒன்று பட்டவர்கள்தான் இந்த நாட்டில் உள்ளவர்கள்.

இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்களோ, கிறித்தவர் களோ - அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வர்களோ அல்லது இசுரேலிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டவர்களோ அல்ல.

எட்டு தலைமுறைக்கு முன்பு, 10 தலைமுறைக்கு முன்பு  அவர்கள் யார் என்றால், நீ சொல்கின்ற அர்த்த முள்ள இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான். ஏன் இந்து மதத்தை விட்டு, மற்ற மதத்திற்குச் சென்றார்கள்?

கடலூரில், இஸ்லாமானவர் தெரு!

எங்கள் ஊரில் உள்ள தெருவுக்கு இஸ்லாமானவர் தெரு என்று சொல்வார்கள். இஸ்லாம் ஆனவர் தெரு.

ஏன் அவர்கள் அந்த மதத்திற்குப் போனார்கள்?

‘‘தொடதே, நெருங்காதே, கிட்டே வராதே, படிக் காதே!’’ என்று நீ சொன்னாய்.

‘‘வா, நெருங்கு, அணைத்துக் கொள்ளலாம், படி!’’ என்று அவர்கள் சொன்னார்கள், உடனே அங்கே போய்விட்டார்கள்.

குறை உன்னிடம் இருக்கிறதா, அவர்களிடம் இருக்கிறதா?

அவரவர்களுக்கு என்று ஒரு உணவு முறை இருக்கிறது. இங்கே வரும்பொழுது பார்த்தேன், பீப் பிரியாணி கிடைக்கும் என்று பெரிய போர்டு வைத்திருக்கிறார்கள்.

டில்லியில் இதுபோன்ற நிலை உண்டா? அல்லது வடநாட்டில், உத்தரப்பிரதேசத்தில் இப்படி போர்டு வைத்தால், அவர் வெளியில் இருப்பாரா?

பகுத்தறிவு சிந்தனை என்பது பெரியார் மண் என்பதற்கு அடையாளம்தான்!

அந்த உரிமை, பகுத்தறிவு சிந்தனை என்பது பெரியார் மண் என்பதற்கு அடையாளம்தான் - திராவிட பூமி என்பதற்கு அடையாளம்தான்.

எண்ணுவதற்குத் தடை இல்லை -

உண்ணுவதற்கும் தடையில்லை.

இதுதான் திராவிட மாடல் ஆட்சி!

எல்லாருக்கும் எல்லாமும்!

எனவேதான்,

அறிவுச்சுதந்திரம், மனித உரிமைகள், சமத் துவம் இவை அத்தனையையும் உருவாக்கித் தருவதுதான் நம்முடைய வேலை.

சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்

பகுத்தறிவு இயக்கம் - பின்னால் வரக்கூடிய பட்டா ளத்திற்கு, முன்னால், பாதை - பாலம் அமைத்துத் தருகின்ற தூசிப் படை. சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்.

முன்னால் நாங்கள் சென்று கொண்ட இருப்போம் - எங்கெங்கே என்ன இருக்கின்றன? எங்கெங்கே கண்ணி வெடி வைத்திருக்கிறார்கள்? என்று பார்த்து, அதை அகற்றிக் கொண்டு செல்வது எங்களுடைய வேலை. 

பின்னால், ஆட்சி அமைப்பது, சட்டம் கொண்டு வருவது அவர்களின் - அரசின் வேலை.

இன்றைக்கு அந்த இணைப்பை உருவாக்குவதுதான், பகுத்தறிவாளர் கழகம்.

எனவே, சிறப்பாக இந்த மாநாட்டினை நடத்திய அமைச்சருக்கும், ஒத்துழைத்த அத்துணை பேருக்கும், இறுதி வரையில் இருந்தவர்களுக்கும், மாநாட்டில் பங்கேற்று அற்புதமாக உரையாற்றிய அறிஞர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.

மீண்டும் சந்திப்போம்!

பகுத்தறிவு என்பது ஒரு பொது காரியம் -

பொதுப் பண்பு - அதைப் பயன்படுத்தத் தவறாதீர்கள் என்று கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.

No comments:

Post a Comment