தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம்

வேலூர், ஜூன் 23 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளதால் அவர்களது விவரங்களை அனுப்ப வேண்டும் என்று மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை 16.10.2008ன்படி தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி வரன்முறைப்படுத்திட கோரும் கோரிக்கை குறித்து கடந்த 8.4.2022 அன்று சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலனை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து தொகுப்பூதியத்தில் அரசால் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அனைத்து வகை பணியிடங்களிலும் தற்போது பணி புரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள் விவரங்களை தனியாக படிவத்தில் பூர்த்தி செய்து வரும் 24ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் தவறாமல் அனுப்ப வேண்டும். இதில் மாற்றுத்திறனாளி பெயர், முகவரி, மாற்றுத்திறன் தன்மை, தொகுப்பூதியத்தின் தன்மையில் நிரந்தரம், தற்காலிகம், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படை ஆகிய விவரங்களை அனுப்ப அனைத்து கூடுதல் முதன் மைக்கல்வி அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment