மறுசுழற்சிக்கும் ஏற்ற "ஸ்மார்ட்" நூல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 19, 2022

மறுசுழற்சிக்கும் ஏற்ற "ஸ்மார்ட்" நூல்

நெசவு செய்வதற்கும், அணிவதற்கும் ஏற்ற நூல்கள் தான் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. ஏன், ஆடை பழசான பின், மறுசுழற்சி செய்யும் வகையில் நூல் களை தயாரிக்கக்கூடாது? இந்த எண்ணத்தை செயல்படுத்தியிருக்கிறது பெல்ஜியத்தின் பிரசல்சைச் சேர்ந்த ரிசோர்டெக்ஸ்.பல்வேறு வெப்பநிலையில் உருகிக் கரையும் நூல்களையும், துணிகளை, மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தையும் ரிசோர்டெக்சின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆடை ஆலைகளில் கத்தரித்த துணித் துண்டுகள், பின் குப்பைக்குப் போகும் பழைய துணிகள் போன்றவற்றை மறுசுழற்சி செய்வதில் ஒரு சிக்கல் உண்டு. ஒவ்வொரு துணியும் ஒவ்வொரு வகை நூல் கலவைகளால் நெய்யப்பட்டவை.

இதை தவிர்க்க, ரிசோர்டெக்ஸ் விஞ்ஞானிகள், 150, 170 மற்றும் 200 டிகிரி செல்சியஸ் என்று மூன்று வேறு வெப்ப நிலைகளில் கரையும் தன்மைஉள்ள நூல்களை உருவாக்கியுள்ளனர். இந்த நூல்களுக்கு 'ஸ்மார்ட் ஸ்டிட்ச்' என பெயர். அதேபோல, பலவகை நூல் கலவைகளால் ஆன துணிகளை மறுசுழற்சி செய்ய ஒரு சிறப்பு கருவியையும் வடிவமைத்துள்ளனர். பல வகை வெப்பத்தில் இயங்கும் இந்த கருவியால் ஒரே நேரத்தில் 500 கிலோ துணியை மறு சுழற்சி செய்ய முடியும்.

ரிசோர்டெக்சின் கணக்குப்படி, இந்த புதிய முறைகள் வாயிலாக மறுசுழற்சி செய்தால், ஒரு ஜீன்ஸ் பேன்டுக்கு 40 ரூபாய் வரை மிச்சம் பிடிக்க முடியும். துணிகளை முதல் முறை நெய்யும்போது, ஏராளமான கார்பன் மாசு வெளியேறும். தண்ணீர் கண்ட விதத்தில் செலவாகும். ஆனால், அதே துணியை பிற்பாடு மறுசுழற்சி செய்தால், அத்தகைய சூழல் பாதிப்புகளை வெகுவாக குறைத்து, புதிய துணியை உருவாக்க முடியும். இந்த நுட்பம் வேகமாக பரவுமா?


No comments:

Post a Comment