பி.ஜே.பி. ஆட்சி மாநிலங்களில் விலை போகும் கல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 23, 2022

பி.ஜே.பி. ஆட்சி மாநிலங்களில் விலை போகும் கல்வி

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ளது சர்வபள்ளி ராதாகிருஷ்ணா பல்கலைக்கழகம். இப்பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த மேனாள் துணைவேந்தர் மற்றும் தற்போதைய துணைவேந்தர் என இருவரும் போலிச் சான்றிதழ் வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை அய்தராபாத்தின் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் துணைவேந்தர்கள் மட்டுமல்லாமல் போலிச் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட 7 ஏஜெண்டுகள், 19 மாணவர்கள் மற்றும் 6 பெற்றோரை காவல் துறை சிறப்புக் குழு கைது செய்துள்ளது.

காவல்துறை விசாரணையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஏஜெண்டுகளிடமிருந்து மாண வர்கள் குறித்த தகவலைப் பெற்று, பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து போலிச் சான்றிதழ் வழங்கியது தெரியவந்துள்ளது. போலிச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் கூறினர். அய்தராபாத் சிஅய்டி கூடுதல் சிபி ஏஆர் சிறீனிவாஸ் கூறுகையில், போலிச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக 7 சிறப்பு விசாணைக் குழுக்கள் தற்போது நாட்டின் ஏழு மாநிலங்களில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் விசாரணை நடத்தி வருவதாக தெரி வித்தார். மேனாள் துணைவேந்தர் குஷ்வா (2017) சர்வபள்ளி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதில் இருந்தே 2017ஆம் ஆண்டு முதல் இந்த போலிச் சான்றிதழ் விவகாரம் நடந்து வருவதாகக் கூறப் படுகிறது.

இதே மத்தியப் பிரதேசத்தில் வியாபம் என்ற மாநில அரசின் வேலை வாய்ப்பிற்கான தேர்வு வாரியத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோர் போலிச் சான்றிதழ்கள் பெற்று வேலையில் சேர்ந்த விவகாரம் இன்றுவரை நீதிமன்றத்தில் உள்ளது. 

 மாநில அரசின் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிக்கான நுழைவுத்தேர்வை எழுத - ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடந் தேறியது, 10 ஆம் வகுப்பே தாண்டாத ஒருவர் மருத் துவக்கல்லூரி நுழைவுத்தேர்வு எழுதி மருத்துவக் கல்வியையே முடித்தார், அமெரிக்காவில் சுற்றுலாவில் இருந்த ஒருவர் பெயரில் போபால் நகரில் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார். இவ்வாறு அந்த மாநிலத்தை 20 ஆண்டுகளாக ஆண்டுவரும் சிவ்ராஜ்சிங் சவுகான் ஆட்சியில் மோசடிகள் நடந்துள்ளன. இந்த முறை கேட்டில் தொடர்புடையதாக அம்மாநில  (மேனாள்)ஆளுநர் மகன் பெயரும் குற்றவாளிப்பட்டியலில் வெளியானது. இதைத் தொடர்ந்து அம்மாநில (மேனாள்) ஆளுநர் ராம்நரேஷ் யாதவ் மகன் சைலேஷ் ராம் யாதவ் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆளுநர் மகன் மட்டுமல்ல - மேலும் பலரும் தற்கொலை செய்து கொண்டனர். ஆன்மிகம் ராமராஜ்யம் பற்றியெல்லாம் வாய் கிழியக் கத்தும் பிஜேபி ஆளும் மாநிலங்களின் யோக்கியதை இந்த இலட்சணத்தில்தான் பொங்கி வழிகிறது.

இவர்கள்தான் தகுதி - திறமை பேசுகிறார்கள் என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது.

மருத்துவக் கல்லூரியில் சேரத் தகுதி வேண்டும் என்பதற்காகத்தான் 'நுழைவுத் தேர்வு' என்று ஊரை ஏமாற்றும் கும்பல் ஆட்சி புரியும் மத்தியப் பிரதேசத்தில் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்த மாணவன் டாக்டர் ஆகி இருக்கிறான் என்றால் இதன் தன்மை என்ன?

நேர்மையாக 12ஆம் வகுப்பு வரை படித்து, தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெற்றால் அது தகுதியின் அளவுகோல் அல்லவாம்! ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழுந்தாலொழிய இதற்கு  விடிவு இல்லை - இல்லவே இல்லை.


No comments:

Post a Comment