திருமணங்களுக்கான சான்றுகளில் திருத்தம் செய்ய இணைய வழி வசதி: தமிழ்நாடு அரசு நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

திருமணங்களுக்கான சான்றுகளில் திருத்தம் செய்ய இணைய வழி வசதி: தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை, மே 26  பதிவுத்துறை செய லாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள  அரசாணையில் கூறியிருப்பதாது:

 2022- - 2023ஆம் ஆண்டிற்கான பதிவுத்துறை  தொடர்பான மானியக் கோரிக்கையின் போது, ​‘பதிவு செய்யப்பட்ட திருமணங்களுக்கான சான்றுகளில் திருத்தம் தேவைப்படின் பதிவுத்துறை அலுவலகங் களுக்கு நேரில் வராமல் இணையவழியாகவே விண்ணப்பித்து திருத்திய சான்றினை பெறும் வசதி ரூ.6 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்’ என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். 

இதை தெடர்ந்து, பதிவுத்துறை தலைவர் எழுதிய கடிதத்தில், தற்போது இத்துறை இந்து திருமணச் சட்டம், 1955, தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம், 2009, சிறப்பு திருமணச் சட்டம், 1954 மற்றும் இந்திய கிறிஸ்தவ திருமண சட்டம் 1872இன் கீழ் திருமணங்களைப் பதிவு செய்து வருகிறது.

இந்து திருமண சட்டம், 1955இன் கீழ் சார்பதிவாளரால் பதிவு செய்யப்படும் திருமணங்களில், ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட திருத்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட சார்பதிவாளரால் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பப்படுகின்றன. 

சரியான சரிபார்ப்புக்கு பிறகு, திருமண சான்றிதழில் தொடர்புடைய திருத்தங்களுடன் சேர்க்கப்படும். தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009 மற்றும் சிறப்பு திருமண சட்டம், 1954 ஆகியவற்றின் கீழ், திருமணங்கள் சார்பதிவாளரால் பதிவு செய்யப்பட்டு, திருத்தங்கள் ஏதேனும் இருந்தால், உரிய சரிபார்ப்புக்கு பிறகு சார்பதிவாளரால் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய நடைமுறையில், திருமண சான்றிதழில் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர்களிடமிருந்து நேரடியாக பெறப்படுகின்றன.

பதிவுத்துறை தலைவர், முன்மொழியப் பட்ட இணைய வழி திருத்தம் முறையில், இந்து திருமண சட்டம், 1955, தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்களை பொறுத்தவரை, பொதுமக்கள் இணைய வழி மூலம் தேவையான திருத்தங்களுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 

அனைத்து திருத்தங்களும் சரியாகப் பதிவு செய்யப்பட்டு, அதை பார்க்க மற்றும் பதிவிறக்கலாம். மேற்கண்ட இணைய செயல்முறை செயல்படுத்தப்பட்டவுடன்,  திருத்தங்களுக்கு பதிவுத்துறையின் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

இணைய திருமண சான்றிதழை திருத்தும் செயல்முறையை நடைமுறைப்படுத்த நிர்வாக அனுமதியை வழங்குமாறு பதிவுத்துறை தலைவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். பதிவுத்துறை தலைவரின் முன்மொழிவை கவனமாக ஆய்வு செய்த பின்னர், பல்வேறு சட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட திருமண சான்றிதழில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அவற்றை இணையத்தில் சமர்ப்பிக்க பதிவுத்துறையில் வசதியை அறிமுகப்படுத்த நிர்வாக அனுமதியை அரசு வழங்குகிறது. தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் சேர்க்கப்படவுள்ள மேற்கூறிய புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு பதிவுத்துறை தலைவருக்கு ஆணையிடப்படுகிறது.

No comments:

Post a Comment